பேல் பூரி
"என்னடா.. பையன் அழகா உன்னை மாதிரியே இருக்கானே ?''"அடேய் ...! குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதேடா. இது பக்கத்து வீட்டு பையன். சும்மா எங்க கூட வந்திருக்கான் .அவ்வளவுதான்!''
தினமணி கதிர்பேல் பூரி
"என்னடா.. பையன் அழகா உன்னை மாதிரியே இருக்கானே ?''"அடேய் ...! குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதேடா. இது பக்கத்து வீட்டு பையன். சும்மா எங்க கூட வந்திருக்கான் .அவ்வளவுதான்!''
கண்டது
(திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த வாடகை கார் ஒன்றில்)
கிடைத்ததை அனுபவி; கிடைக்காததை ரசி.
-பத்மாவதி,
திருப்பத்தூர்.
(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
"அளப்பன்கோடு''
-கே.பிரபாவதி,
மேலகிருஷ்ணன்புதூர்.
(வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
"பூப்பெட்டி''
-சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.
கேட்டது
(கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் சந்தையில் சிறுவனுடன் நின்றுகொண்டிருந்த இளம் தம்பதியினரிடம் ஒருவர் )
"என்னடா.. பையன் அழகா உன்னை மாதிரியே இருக்கானே ?''
"அடேய் ...! குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதேடா. இது பக்கத்து வீட்டு பையன். சும்மா எங்க கூட வந்திருக்கான் .அவ்வளவுதான்!''
-கோ. ராஜேஷ் கோபால்,
மணவாளக்குறிச்சி.
(சிதம்பரம் வ.உ.சி. தெருவில் தம்பதி பேசியது)
"ஏம்மா. காலையில வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்ப பத்தாதுன்னு சொன்னே. இப்போ பியூட்டி பார்லர் போயிட்டு வர்றே!''
"ஏங்க. யோசிச்சுதான் பேசறீங்களா? இத வச்சி மேக்கப் பண்ணிக்கோன்னு நீங்கதானே சொன்னீங்க?''
-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
(தஞ்சாவூர் திருமண மண்டபம் ஒன்றில் இருவர் பேசியது)
"நீங்க பொண்ணு வீடா? பிள்ளை வீடா?''
" "நீங்க யார் வீடோ அதுக்கு மாற்று வீடு!''
-கி.வாசுதேவன்,
தஞ்சை.
யோசிக்கிறாங்கப்பா!
விற்பனை அங்காடியில் இன்னும் விலை போகாமல் இருப்பது
அன்பு ஒன்று மட்டுமே.
-ப.சரவணன்,
ஸ்ரீரங்கம்.
மைக்ரோ கதை
கணவனும், மனைவியும் ஒரு ஆற்றைக் கடக்கையில் எதிர்பாராதவிதமாக கணவன் ஆற்றில் விழுந்து விட்டார்.
மனைவியோ, "ஐயோ. என் கணவர் ஆற்றில் விழுந்து விட்டார் யாராவது வந்து காப்பாற்றுங்க, அய்யா காப்பாற்றுங்க..?'' என்று கதறினார். எவரும் கண்டுகொள்ளவில்லை.
"யாராவது என் கணவரை காப்பாற்றினால் அவருக்குக் கூட காண்பிக்காத ஒன்றை உங்களுக்கு காண்பிக்கிறேன்'' என்றாள் மனைவி.
இதைக் கேட்டவுடன் அடித்து பிடித்து சில ஆண்கள் ஆற்றில் குறித்து கணவரை காப்பாற்றி
விட்டு, அந்தப் பெண்ணிடம் வந்தனர்.
"உன் கணவர் கூட பார்க்காத ஒன்றை காட்டு'' என்று அந்த ஆண்கள் கேட்டனர். உடனே அந்த பெண் கர்சீப்பை எடுத்து கணவரின் கண்களை கட்டி விட்டு, மரத்துக்குப் பின்னாடி போய் வெள்ளை ஆடையை உடுத்திக் கொண்டு வந்தார்.
தனது கணவரை காப்பாற்றிய ஆண்கள் முன்னர் வந்து நின்று, "நீங்கள் என் கணவரை காப்பாற்றாமல் இருந்திருந்தால் என் இந்தக் கோலத்தை அவர் பார்த்திருக்க மாட்டார். கணவரிடம் காட்டாத ஒன்று இந்தக் கோலம்தான்' என்றார்.
இதையடுத்து, அந்த ஆண்கள் கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றனர்.
-எம் அசோக் ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.
எஸ்எம்எஸ்
செல்வந்தர் செல்வதற்கு முன்பே
பணத்தின் ஒலி செல்லும்.
-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.
அப்படீங்களா!
விரல் நுனியில் அனைத்துத் தேடல்களையும் கண்முன் கொண்டு வரும் கூகுள் தேடலுக்கு பதிலாக அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உருவாக்கம்தான் இந்த சாட்ஜிபிடி.
கணினி மென்பொருளின் தந்தையான மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த சாட்ஜிபிடி இணைய உலகை பரபரப்பாக்கி உள்ளது.
கூகுள் தேடலில் தகவலைப் பதிவிட்டால் பல்வேறு இணையத்தில் உள்ள தொடர்புடைய விவரங்களை காண்பிக்கும். அதில் இருந்து நாம் தேடி தகவல்களை ஒருங்கிணைத்து கொள்ள வேண்டும். ஆனால் சாட்டிஜிபிடியில் நாம் தேடும் தகவலை கேள்வியின் வடிவிலோ அல்லது நமக்கு தேவையான வடிவிலோ பதிவிட்டால் போதும், அதுதொடர்பான தகவலை வாக்கியத்தின் அடிப்படையில் தொடர்ந்து அளித்துவிடும்.
இணைய தகவல்களை ஒன்றிணைத்து நொடிப் பொழுதில் ஆராய்ச்சி செய்து செயற்கை நுண்ணிறிவு ரோபோவைப் போல் இது செயல்படுகிறது. குறிப்பிட்ட இரு நாடுகளுக்கு போர் மூள வாய்ப்புள்ளதா. கரோனாவின் பிறப்பிடம் எது போன்ற இக்கட்டான கேள்விகளுக்கும் இது பதிலளிக்கிறது.
வணிகம், சட்ட தேர்வுகளையும் இந்த சாட்ஜிபிடி சிறப்பிடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளி மாணவர்களின் படிப்பு தொடர்பான தேடல்களை நொடியில் அளித்துவிடுவதால் சில பள்ளிகள் சாட்ஜிபிடியை தடை செய்துள்ளன.
சட்ட நுணுக்கங்களை தேவைக்கேற்ப எடுத்து அளிப்பது, யூடியூப் சேனல்களுக்கு தேவையான 30 நொடி ஸ்கிரிப்ட் அதை காட்சிப்டுத்தும் விதம், தேவையான விடியோ மென்பொருள் என அனைத்தையும் இது ஒருசேர அளித்துவிடுகிறது.
தனது தவறை சரி செய்து கொள்ளும் இந்த மென்பொருள் மனிதர்களின் உணர்வுகளுக்கு ஏற்ற பதிலையும் அளித்து அசத்துகிறது. சாப்ஜிபிடிக்கு மாற்றாக கூகுள் நிறுவனமும் பல கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய மென்பொருளை வேகமாக உருவாக்கி வருகிறது.
எதைக் கேட்டாலும் தகுந்த பதிலளிக்கிறது சாட்ஜிபிடி. பெரு நிறுவனங்கள், பல்வேறு துறைகளில் ஏராளமான தரவு தகவல் தொடர்பான பணிகளை கையாள இந்த சாட்ஜிபிடி உதவும் என்பதால் வருங்காலத்தில் மனித உழைப்பை குறைத்து வேலையிழப்பை அதிகரிக்கும் என்பதே மனிதர்களின் அச்சம்.
-அ.சர்ப்ராஸ்