அற்றகுளத்து...
மாலை நேரம். காப்பியைத் திண்ணையில் உட்கார்ந்திருந்த சம்பங்கியின் பக்கத்தில் வைத்துவிட்டு, அவருடைய மனைவி காவேரி, தம்பு மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்திருப்பதாகச் சொன்னாள்.
தினமணி கதிர்அற்றகுளத்து...
மாலை நேரம். காப்பியைத் திண்ணையில் உட்கார்ந்திருந்த சம்பங்கியின் பக்கத்தில் வைத்துவிட்டு, அவருடைய மனைவி காவேரி, தம்பு மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்திருப்பதாகச் சொன்னாள்.
மாலை நேரம். காப்பியைத் திண்ணையில் உட்கார்ந்திருந்த சம்பங்கியின் பக்கத்தில் வைத்துவிட்டு, அவருடைய மனைவி காவேரி, தம்பு மதுரையிலிருந்து பெங்களூருக்கு வந்திருப்பதாகச் சொன்னாள். அதைக் கேட்டதும் சம்பங்கி, " எப்படி தனக்கு முன்னாலேயே சொல்லாமல் தம்பு இங்கு வந்திருக்கிறான்' என்றுநினைத்தார்.
காவேரிக்கும் சொர்ணாக்கா சொல்லித்தான் தெரிய வந்ததாம். சொர்ணாக்கா தம்புவின் பெரியம்மாவின் பெண். அவன் இங்கே வந்து நாலைந்து நாளாகி விட்டது என்றும் அவள் காவேரியிடம் சொன்னாளாம். இந்தக் கேட்டதும் சம்பங்கி ஆச்சரியப்பட்டார்.
ஊருக்குக் கிளம்பியவன் ஒருவேளை அவசரமாகக் கிளம்பியிருக்கலாம் என்று ஒரு சமாதானம் முதலில் அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் வந்து நான்கு நாள்கள் ஆகியும் தன்னிடம் பேசவில்லை என்றால்? அது சற்று நிரடலான சமாச்சாரம் என்று அவருக்குப் பட்டது.
கணவன் மனதில் ஓடுவதைப் படித்து விட்டவள் போல காவேரி, "எனக்கும் ஆச்சரியமாதான் இருக்குங்க. உடம்புல போட்டுக்கற சட்டை மாதிரி உங்களோடயே ஒட்டிக்கிட்டு இருக்கறவருக்கு திடீர்னு இப்ப என்ன ஆச்சுன்னு. நாம எவ்வளவோ தடவை இங்க வந்து கொஞ்ச நாள் தங்கினா பெங்களூரு, மைசூரு, உடுப்பி, சிருங்கேரின்னு போய்ப் பார்க்கலாமேன்னு சொல்றப்பல்லாம் பிள்ளையையும் மருமகளையும் மட்டுமில்லாம பேரனையும் பார்த்துக்கணும்னு ஏதோ கட்டிப் போட்டுக் கிடக்கறாப்பிலே இல்லே சொல்லி வரமாட்டேம்பாரு"' என்றாள்.
காவேரியின் சட்டை உதாரணம் சம்பங்கிக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனால், அப்படித்தான் தம்பு அவரிடம் கட்டுண்டு கிடப்பான். இருவரும் ஒரே வயதுக்காரர்கள். மதுரையில் பக்கத்துப் பக்கத்து வீடு மாத்திரம் இல்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து காலேஜ் படிப்பு முடியும் வரை ஒரே வகுப்பறை. காலேஜில் சம்பங்கிக்கு பி.எஸ்ஸியில் இடம் கிடைத்தது. ஆனால் அப்போது எல்லோரும் அடித்துப் பிடித்துச் சேர முயன்ற பி.காம். தம்புவுக்குக் கிடைத்த போது, அவன் சம்பங்கியுடன் இருக்க வேண்டும் என்று அதை மறுத்துவிட்டு பி.எஸ்ஸிக்கு ஓடி வந்தான்.
சம்பங்கியின்அப்பாவே இதற்காக அவனைத் திட்டித் தீர்த்து விட்டார். ஆனால் அவன் கேட்கிறவனாக இல்லை. என்னவோ கண்ணுக்குத் தெரியாத சக்தியின் செயல் போல படிப்பு முடிந்த பின் பெங்களூரில் ஒரே கம்பனியில் வேலை! பிரம்மச்சாரிகளாக ஒரே அறையில் வாசம்!
தம்புவின் அப்பா ஒருநாள் தாங்க முடியாமல் சம்பங்கியின் அப்பாவிடம் பேசும்போது, "கல்யாணம் கூட ரெண்டு பயல்களும் சேர்ந்து ஒருத்தியைக் கட்டிக்கிடற மாதிரி கடவுள் செஞ்சுருவானோ?" என்றார்.
சம்பங்கியின் அப்பா அவரைச்சற்றுக் கோபமாகப் பார்த்து , "இவனுங்களுக்கு நீயே சொல்லிக் குடுத்திடுவே போலிருக்கே!'' என்று திட்டினார்.
நல்ல வேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாறாக இரு நண்பர்களும் திருமணத்துக்குப் பிறகு பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தம்புவின் மனைவி வேணி சென்னையில் வேலை பார்த்தாள். அது ஒரு தனியார் நிறுவனம் அதன் கிளைகள் மும்பை, தில்லி, கொல்கத்தா என்ற மூன்று இடங்களில் மட்டும்தான் இருந்தன. அதனால் தம்பு அவன் வேலை பார்த்த இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலேயே மாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு சென்னை செல்ல வேண்டியதாயிற்று. சம்பங்கியும் வேலைக்குப் போகாத அவர் மனைவியும் பெங்களூரிலேயே தங்கி விட்டார்கள்.
"காப்பியை குடிங்க!'' என்ற மனைவியின் குரல் சம்பங்கியை எழுப்பிற்று.
"அவன் வராட்டா என்ன? நாம போயி பாத்திட்டு வந்துடுவமா? நீயும் வா. சொர்ணாக்கா வீட்டுக்குப் போய்ப் பாப்போம்'' என்றார்.
அப்போது காவேரி "அட தம்பு அண்ணன் வராரு! வாங்க, வாங்க. இப்பதான் உங்களைப் பத்திப் பேசிகிட்டிருந்தோம்'' என்று வரவேற்றாள். தெருவிலிருந்து அவர்களை நோக்கி வந்தவரைப் பார்த்து. அருகே வந்த தம்புவைப் பார்த்து சம்பங்கி திடுக்கிட்டார். பாதியாகி விட்ட உடம்பு. சலூனைப் பார்த்து மாதங்களாகிவிட்டது போல, திருத்தப்படாத தலை முடி. முகத்தில் ஒரு மாச வெள்ளை தாடியென நின்றது. கண்கள் ஏன் இப்படி இடுங்கிக்கிடக்கின்றன? உடம்பில் ஒரு கசங்கிய சட்டை. அதோடு போட்டி போடுவது போலக் கசங்கிய வேஷ்டி. என்ன கோலம் இது? மரத்திலிருந்து பிய்ந்து ஆனால் கீழே விழாமல் தொங்கிக்கொண்டிருக்கும் காய்ந்த இலை போலிருந்தார்.
தாங்க முடியாமல் வாயை விட்டுக் கேட்டு விட்டார் சம்பங்கி.
"என்னடா தம்பு, நீதானா வந்திருக்கிறது?''
தம்பு சம்பங்கிக்கு எதிரே இருந்த திண்ணையில் உட்கார்ந்து நண்பனைப் பார்த்து அரைப் புன்னகை புரிந்தார்.
"சரி, நீங்களும் ஒரு வாய்க் காப்பி தண்ணி குடிங்க!'' என்று எடுத்துக் கொண்டு வர காவேரி உள்ளே சென்றாள்.
"தம்பு என்னடா ஆச்சு உனக்கு? இப்படி இளைச்சுப் போயிட்டே? ஆறு மாசத்துக்கு முன்னாலே உங்க வீட்டு கிரகப் பிரவேசத்திலே பார்த்ததுக்கு இப்ப ஏண்டா இந்த மாதிரி ஆயிட்டே? நடுவுலே ஏதாவது உடம்புக்கு சரியில்லாமப் போச்சா?'' என்று கேள்விகளாகப் பொழிந்து தள்ளினார் சம்பங்கி.
"இரு. இரு. அதெல்லாம் அப்புறமாசொல்றேன். நீ எப்படிஇருக்கே?''
"நீதான் பார்க்கிறியே!'' என்று சிரித்தவர் , "நீ மட்டும்தான் வந்திருக்கியா? இல்லை. சரவணன், காமாட்சி, ராஜாப்பயல் எல்லாருமா வந்திருக்கீங்களா?''
"நான் மட்டும்தான்.''
"அது எப்பிடிடா? அவங்களையெல்லாம் எப்படி விட்டுட்டு வரதுன்னு தானே எப்பவும் சொல்லிட்டுக் கிடப்பே!''
"ஆமா. அது ஒரு காலம். இப்ப மூணு மாசமா கோயில் குளம்னு ஊரை விட்டு வந்து வெளியிலே சுத்திக்கிட்டு இருந்தேன். அலைச்சல்லேதான் நான் காய்ந்து கிடக்கிற மாதிரி உங்களுக்கெல்லாம் தோணிடிச்சு போல. நான் நல்லாத்தான்இருக்கேன்'' என்று தம்பு புன்னகை புரிந்தார். அதில் உயிரில்லாதது போல சம்பங்கிக்குத் தோன்றிற்று.
"கோயில் குளமா? மூணு மாசமாவா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டார் சம்பங்கி. என்ன ஆயிற்று இவனுக்கு? அவர்கள் இருவரும் எந்தக் கோயிலுக்குப் போனாலும் வாசலோடு நின்று விடுவான் தம்பு. இந்தக் கூட்டத்திலே சாமி எப்பிடிடா நம்மைக் கவனிப்பாரு? பாவம்!" என்று சிரித்து விட்டு வெளியில்தான் நிற்பான்.
"ஆமா. நம்பின மனுஷங்கதான் காப்பாத்தலே. இதுவரைக்கும் நம்பாத சாமிகிட்டயாவது போய் ஆத்திக்கலாம்னுதான்'' என்றார் தம்பு. அவர் குரலில் விரக்தி இழையோடுகிறதா என்று சம்பங்கி உற்றுக் கவனித்தார். குரலில் ஒரு வித உணர்ச்சியும் தெரியாதபடிதான் தம்பு பேசினார்.
"என்ன ஆச்சு? மகனோட தகராறா?''
தம்பு பதிலளிக்காது சில விநாடிகளை ஓட விட்டார். இருவரும் வீட்டினுள் வந்து ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டனர்.
காவேரி காப்பி எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவளும் எதிரே கிடந்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
தம்பு ஒரு வாய் பருகிவிட்டு, "அப்பாடா! என்னா டேஸ்ட்டு? டிகாக்ஷன் காபி! நல்ல காப்பி சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு?'' என்றார்.
"சும்மா கிண்டல் பண்ணாதீங்க அண்ணே. காமாட்சி போடுற காப்பி மாதிரி வருமா? எவ்வளவு தடவை நீங்களே சொல்லியிருக்கீங்க?'' என்று காவேரி சிரித்தாள்.
தம்பு அவளை உற்றுப் பார்த்து விட்டுத்தலையைக் குனிந்து கொண்டார்.
தம்புவின் மனைவி வேணி இரண்டு ஆண்டுக்கு முன்பு இறந்த பிறகு வீட்டுப் பொறுப்பெல்லாம் மருமகள் காமாட்சி மீது விழுந்தது.
"அது எங்க வயற்றில் பிறக்காத மகள்'' என்றுதான் தம்புவும் அவர் மனைவியும் சொல்லி மாய்ந்து போவார்கள். அவள் பொறுப்பாகக் குடும்பத்தை நடத்தி வருகிறாள் என்று எப்போதும் தம்பு அவர்களிடம் சொல்லுவார். காமாட்சியும் தம்புவைப் பார்த்து, "அப்பா அப்பா' என்று உயிரை விடுவாள். சாப்பாடு, துணிமணி, வேளாவேளைக்கு மருந்துகள் கொடுப்பது, வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது என்று பார்த்துப்பார்த்துச் செய்வாள்.
ஆறு மாசத்துக்கு முன்னால் சரவணன் புது வீடு கட்டிக்கிரகப் பிரவேசம் செய்தான். சம்பங்கி, காவேரி, அவர்களின் பெண், மாப்பிள்ளை, பேத்தி என்று எல்லோரும் இரண்டு நாள் முன்னாலேயே வந்துவிட வேண்டும் என்று காமாட்சி உத்தரவு போட்டு விட்டாள். அவர்கள் சென்னையில் இருந்த நான்கு நாள்களிலும் காமாட்சி அவர்களை அழைத்தது பற்றிப் பூரிப்பும் சந்தோஷமும் பொங்க தம்பு விம்மிக் கொண்டே இருந்தார். பெரியவர்கள் நான்கு பேருக்கும் விலை உயர்ந்த உடைகளையும் குழந்தைக்குக் கால் பவுனில் சங்கிலியும் போட்டார் தம்பு.
"எதுக்கு இதெல்லாம்?'' என்றாள் காவேரி.
"இவ்வளவு வீட்டுச் செலவு இருக்குறப்போ?''
"அதெல்லாம் காமாட்சியம்மா செஞ்சிருக்கறது. நீங்க அவங்களைத் தான் கேக்கணும்'' என்று மருமகளைப் பெருமையுடன் பார்த்துச் சிரித்தார் தம்பு.
சம்பங்கி ஊருக்குத் திரும்பும்போது பிள்ளையிடம் காமாட்சியின் பெருந்தன்மை பற்றியும் அவள் அவர்கள் மீது வைத்திருந்த மரியாதை பற்றியும் பேசிக் கொண்டே வந்தார்.
"பையனோட எதாச்சும் தகராறா?'' என்று சம்பங்கி மறுபடியும் கேட்டார்.
"இரண்டு பேரும்தான்'' என்றார் தம்பு.
"என்னது காமாட்சியுமா?'' என்று அதிர்ந்து போய்க் கேட்டாள் காவேரி.
"பிரச்னையே அவதான்'' என்றார் தம்பு.
"சரி, விஷயத்தை முழுக்கச் சொல்லு'' என்றார் சம்பங்கி.
"இந்த ஆறு மாசமா என்கிட்டே அவ மரியாதை இல்லாம பேசறா, நடந்துக்கறா. ஏம்மா இப்படி இருக்கேன்னு கேட்டா அவ்வளவுதான் அப்படி ஒரு கத்து கத்துவா. பக்கத்திலே யாராச்சும் இருக்காங்களேன்னு கூட நினைக்க மாட்டா. ஒரு வேளை அவங்க கேக்கனும்னே அப்படி மரியாதைக் குறைவா பேசறாளோன்னு இருக்கும். நேரத்துக்கு சாப்பாடு போட மாட்டா? சாப்பிடறதுக்குப் போனா அப்பதான் சிநேகிதியோட போனில் மணிக்கணக்குலே பேசிக்கிட்டே இருப்பா. ஓரக்கண்ணாலே பார்த்துகிட்டே பொழுதைக் கடத்துவா? சரி அவளுக்கு நேரம் கிடைக்கிறப்போ கூப்புடுவா இல்லே, அப்பப் போய் சாப்பிடலாம்னு ஹால்லே உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இருப்பேன். இல்லேன்னா டி. வி. பார்ப்பேன். யார்கிட்டயோபேசற மாதிரி நேரத்தோட வந்து சாப்பிட்டு விட்டுப் போனா நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்லே. நமக்குன்னு எல்லாம் வாச்சிருக்கு'ன்னு நிஷ்டூரமா பேசுவா. இதிலே பெரிய ஆச்சரியம் என்னான்னா சரவணன் இந்தக் கூத்தையெல்லாம் பாத்துகிட்டே காது கேக்காதவனா நின்னுகிட்டு இருப்பான். ரெண்டு தடவை நான் வீட்டை விட்டு வெளியே வந்திடலாம்னு கிளம்பிட்டேன். ஆனா அதுக்கு மட்டும் அவன் ஒத்துக்காம தடுத்து நிறுத்திட்டான். அதனாலேதான் இந்தத் தடவை சொர்ணக்காவைப் பாத்துட்டு பத்து பதினஞ்சு நாள் கழிச்சு வரேன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன்.''
சம்பங்கிக்கு இந்தக் கதையைக் கேட்கவே பெரும் துயரமாய் இருந்தது. எதற்காக இப்படி ஒரு நிலை இவனுக்கு வர வேண்டும்? எல்லோரிடமும் அனுசரணையாகப் போகும் குணம் உள்ளவன் அல்லவா? அதுவும் மருமகளை மகளுக்கும் மேலாகக் கொண்டாடிக் கொண்டிருந்தவனுக்கு எதற்கு இத்தகைய பரிசு? வணங்கின முள் பிழைக்கும் என்பதை தம்பு முற்றாக அறிந்தவன் ஆயிற்றே!
"இந்தக் காமாட்சிக்கு என்ன பேய் வந்து பிடிச்சு திடீர்னுஆட்டுது?'' என்றாள் காவேரி கோபமாக.
"தெரியலையே. அவளைப் பத்தி ஒரு நாளும் யாருகிட்டேயும் நான் தப்பா பேசினதில்லே. அவளுக்குப் பிடிக்காத காரியம்னு ஏதாச்சும் இருந்தா அதன் பக்கம் நான் திரும்பிப் பார்த்ததில்லே. ஏம்மா என்னைக் கண்டா உனக்கு திடீர்னு பிடிக்காம போயிருச்சின்னு அவள் கிட்டே வாயை விட்டுக் கேக்க எனக்கு வெக்கமா இருந்திச்சு. அப்படியும் பொறுக்க முடியாம ஒரு நா அதைக் கேக்கப் போயி என்னை உங்கப்பா மூளை கலங்கினவளாப் பாக்கறாருன்னு பெரிசா கலாட்டா பண்ணிட்டா சரவணன்கிட்டே. அந்தக் கேனைப் பயலும் என்னைப் பாத்து கொஞ்சம் சும்மா இருக்க மாட்டிங்களாப்பான்னு கோவிச்சுகிறான். நான் கடைசியாஅவளோட பேசி மூணு மாசத்துக்கு மேலே ஆகப்போகுது'' என்றார் தம்பு.
"சரி, நீ இங்கே வந்து கொஞ்ச நாள் சொர்ணாக்கா வீட்டிலே இருக்கறதுனால பிரச்னை எப்படித் தீரப் போகுது?'' என்று கேட்டார் சம்பங்கி. அவர் மனதில் காமாட்சியின் திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம் என்று எப்படி யோசித்தும் விடை கிடைக்கவில்லை. எதையோ மறைக்கும் திரை முன்னால் நிற்பது போல உணர்ந்தார்.
"கொஞ்ச நாளா?'' என்று தம்பு சிரித்தார். "நான் உப்பு போட்டு சாப்பிடறதை இன்னும் நிறுத்தலே. இனிமே அந்தப் பக்கம் தலை எடுத்து வைக்கிறதாவது?''
"அப்ப வேறே என்ன பண்ணப்போறே? சென்னையிலேயே தனிக் குடித்தனம் போடப் போறியா?''
"ஆமா. தனியாத்தான் இருக்கப் போறேன். ஆனா அங்கே எதுக்கு? அந்தப் பனாதைங்க மூஞ்சியிலே விழுந்து வைக்கவா? இங்கதான் இனிமே இருக்கப் போறேன். சொர்ணாக்காகிட்டே சின்னதா ஒரு வீடு பார்க்கச் சொல்லியிருக்கேன்.''
சம்பங்கி திகைப்புடன் நண்பனைப் பார்த்தார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தம்புவின் குரலில் தென்பட்டஉறுதியும்கண்டிப்பும்அவரைக் கட்டிப் போட்டன.
"எனக்கு மாசா மாசம் பென்ஷன்னு ஏதோ வருது. அதான் சின்ன வீடாப்பாத்தா வாடகை குறைச்சு இருக்கும். வீட்டு வாடகை, சாப்பாட்டுச்செலவுக்கு எல்லாம் இந்த பென்ஷனை வச்சு ஒட்டிரலாமுன்னு இருக்கேன். வேறஅவசரத்துக்கு ஏதாவது பணம் வேணுமின்னா, கடன் கொடுக்கறதுக்கு நீ இருக்கே. அப்புறம் என்ன கவலை எனக்கு? என்னா நான் சொல்லுறது?'' என்றார் தம்பு.
"நீ எதுக்கு கடன் வாங்கணும்? அதான் சென்னையிலேயே உன்னோட சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு அந்தப் பணம் வேற வருமே?'' என்று சிரித்தார் சம்பங்கி.
"பிள்ளை மருமக மூஞ்சிங்கள்லே முழிக்க வேண்டாம்னுதானே நீ இங்க வர்றே?. இல்லாட்டா இந்த ஊரில் வாடகையெல்லாம் கொடுத்திட்டு இருக்கறதுக்கு உன் சொந்த வீட்டையே கீழே வாடகைக்கு விட்டுட்டு மேலே மாடியிலே நீ வசதியாஇருக்கலாமே!''
தம்பு ஒரு நிமிஷம் ஒன்றும் பேசாமல் நண்பனை உற்றுப் பார்த்தார். பிறகு, "சரவணன் அவன் வீட்டைக் கட்டுறதுக்கு ஜாஸ்தியா பேங்க்லே கடன் வாங்காம இருக்கட்டும்னு என் சென்னை வீட்டை வித்து வந்த பணத்தை அவங்கிட்டே கொடுத்தேன்'' என்றார்.