தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப் படங்களில் செம பிஸியாக இருக்கும் சத்யராஜ், வெப் சீரீஸ்களையும் கையில் எடுக்கத் தொடங்கிவிட்டார். ஒரே நேரத்தில் நான்கு வெப் சீரீஸ்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சத்யராஜ். நான்கு மொழிகளுக்கான பிசினஸ் இருப்பதால், வெப் சீரீஸூக்கு சத்யராஜ் அவசியம் என நினைக்கின்றன ஓடிடி நிறுவனங்கள். சம்பளம், தேதி என எந்தக் குளறுபடியும் செய்யாதவர் என்கிற நற்பெயரும் இவருக்குக் கைகொடுக்கிறது.
சமீப காலமாக "ராமாயணம்', "மகாபாரதம்' போன்ற இந்து புராணங்களை மையப்படுத்திய கதைகளைப் படமாக்குவதில் பாலிவுட் இயக்குநர்கள் தீவிரம் காட்டி வருகின்றன.அந்த வகையில் கடந்த வாரம் ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட "ஆதிபுருஷ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அதிகப் பொருட்செலவில் உருவான இப்படம் பல்வேறு கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வட இந்தியத் திரையரங்குகளில் நல்ல வசூலைக் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், "தங்கல்' திரைப்படத்தை இயக்கி பெயர்பெற்ற இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணத்தை மீண்டும் திரைப்படமாக எடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் நடிக்க ரன்பீர் கபூர், ஆலியா பட் ஜோடியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
----------------------------------------
சூர்யா, திஷா பதானி நடிக்கும் "கங்குவா' படத்தின் புரொமோ விடியோவிற்கான கிராபிக்ஸ் வேலைகள் சென்னையில் மும்முரமாக நடக்கின்றன. சூர்யாவின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஜூலை 23ஆம் தேதி அதனை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் 10 மொழிகளில் தயாராகிறது. அத்தனை மொழிகளிலும் அந்த புரொமோ விடியோ வெளியிடப்பட இருப்பதால், மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் சூர்யாவின் ரசிகர்கள். இந்தப் படத்துக்குப் பின் வெற்றிமாறனின் "வாடிவாசல்' படத்துக்கு தயாராகிறார் சூர்யா.
----------------------------------------
தெலுங்கில் கவனம் ஈர்க்கும் இயக்குநர்களில் ஒருவரான அனில் ரவிபுடி, பாலய்யாவின் 108ஆவது படத்தை இயக்குகிறார். "பகவந்த் கேசரி' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பாலய்யாவின் ரசிகர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது. இது நம்மூர் ரஜினிகாந்துக்காக எழுதப்பட்ட கதை என்பதுதான் எவரும் அறியாதது. ரஜினியை வைத்துப் படம் இயக்குவதைக் கனவாக வைத்திருக்கும் அனில் ரவிபுடி, சில மாதங்களுக்கு முன்னர் "சூப்பர் குட்' ஆர்.பி.செளத்ரி மூலமாக ரஜினியிடம் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார். பரிசீலித்துச் சொல்வதாக ரஜினி சொல்லியிருந்த நிலையில், அனில் ரவிபுடியை அழைத்து "ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையை எனக்குப் பண்ணுங்க' என பாலய்யா சொல்ல, படம் ஸ்டார்ட்.
----------------------------------------
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் மறைந்த விவசாயி நெல் ஜெயராமன். அவர் நடத்திய நெல் திருவிழாவை இப்போது அவர் பெயரிலான அமைப்பினர் நடத்திவருகிறார்கள். அதில் கலந்துகொள்ள இயக்குநர் ஹெச்.வினோத்தை விவசாயிகள் அழைக்க, அவர்களை கமலிடம் அழைத்துப்போய் நிறுத்தினாராம். மூன்று மணி நேரம் விவசாயிகளுடன் பேசிய கமல், "பாரம்பரிய நெல் ரகங்களைக் காக்க என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்கிறேன்' என உறுதி கொடுத்திருக்கிறாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.