முகப்பு
தினமணி கதிர்

கதையல்ல.. நிஜம்..!

ஆவடியில்  சாலை ஓரத்தில் மனநலம் குன்றிய நிலையில் காணப்பட்ட இளைஞரை மீட்டு,  குணமடைய செய்து  ஒடிஸ்ஸாவில் வசிக்கும் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருக்கின்றனர் திருவேற்காடு அமைப்பினர்.

Updated On : 12 மார்ச், 2023 at 6:00 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:13 PM

ஆவடியில் சாலை ஓரத்தில் மனநலம் குன்றிய நிலையில் காணப்பட்ட இளைஞரை மீட்டு, குணமடைய செய்து ஒடிஸ்ஸாவில் வசிக்கும் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருக்கின்றனர் திருவேற்காடு "உதவும் கரங்கள்' அமைப்பினர். கடந்த ஜனவரி ஐந்தாம் தேதி ஆவடியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்தான் ஓர் இளைஞர்.

இதன்பின்னர் நடைபெற்ற சம்பவத்தை அமைப்பின் நிறுவனர் வித்யாகர் விவரித்து கூறியதாவது:

""இளைஞரை குளிப்பாட்டி, உடையும், உணவும் அளித்து தங்க வைத்தோம். காப்பகத்தின் மன நல மருத்துவர் பரிசோதித்து, மருந்துகளைக் கொடுத்தார். சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தொடங்கிய சில வாரங்களில் சகஜ நிலைமைக்கு வந்ததும் அவர் பேசத் தொடங்கினார்.

Advertisement

தனது பெயர் மனோரஞ்சன் என்றும், சொந்த ஊர், ஒடிஸ்ஸா மாநிலத்திலுள்ள பெஹரவட்டா கிராமம் என்றும், தனது தந்தை பெயர் ஹரிகிருஷ்ணா என்றும் சொன்னார்.

பின்னர், எங்கள் சமூக சேவகர் ஜாகப் இணையத்தில் தனது தேடுதல் பணியைத் துவக்கினார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல் போனாலும், பக்கத்து கிராமத்தில் இருக்கும் "ஸ்ரீகிருஷ்ணா கம்ப்யூட்டர்ஸ்' என்ற நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள முடிந்தது. அவர்களோடு பேசி, ஹரிகிருஷ்ணனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.

எங்களிடம் இருக்கும் மனோரஞ்சனின் படத்தை, வாட்ஸ் ஆஃப்பில் அனுப்பிவைத்தோம். கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர்கள் சிரமம் பார்க்காமல், மனோரஞ்சனின் குடும்பத்தினரைச் சந்தித்தனர். அவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மனோரஞ்சன் தெரிவித்தது உண்மைதான். உடனே மனோரஞ்சனின் அண்ணன் பரமானந்தா எங்களோடு தொடர்பு கொண்டார்.

"மும்பைக்குச் சென்ற மனோரஞ்சன், அங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவனிடமிருந்து ஒரு தகவலுமில்லை. ஏதாவது தகவல் வராதா? என்று காத்துக்கொண்டிருந்தோம்' என்று பரமானந்தா கூறினார். அவரை உடனே புறப்பட்டு வரச் சொன்னோம்.

இதற்கிடையில், மருத்துவ உதவி, ஆரோக்கியமான சூழ்நிலை, பரிவான கவனிப்பு போன்றவை காரணமாக மனோரஞ்சனின் மன நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும், அவருக்கு மும்பையில் இருந்து எப்படி சென்னை வந்தோம் என்பது தெரியவில்லை.

எங்களது அனுபவத்தில் மனநலம் குன்றியவர்களை யாரேனும் நெடும்தூர ரயில்களில் ஏற்றி அனுப்பிவிடுவார்கள். சிலர் தாங்களே ஏதாவது ஒரு ரயிலில் ஏறி விடுவார்கள்.

கடைசி ரயில் நிலையத்திலோ அல்லது வழியிலோ எங்காவது ரயில் நிற்கும்போது இறங்கி விடுவார்கள். அல்லது மற்ற பயணிகள் இவர்களை இறக்கிவிடுவார்கள். அவர்கள் அங்கேயே தெரு ஓரத்தில் தங்கி,, கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படி ஏதோ ஒரு வகையில் மனோரஞ்சனும் வந்துவிட்டார்.

சென்னை வந்திறங்கிய பரமானந்தாவை திருவேற்காடு உதவும் கரங்கள் காப்பகத்துக்குஅழைத்து வந்தோம். அண்ணனைக் கண்டதும் மனோரஞ்சன் முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி. இருவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். கட்டியணைத்துக் கொண்டனர்.

மனோரஞ்சனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை அறிக்கையையும், அடுத்த ஒரு மாதத்துக்கான மருந்துகளையும் கொடுத்து வழியனுப்பி வைத்தோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.