தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தைராய்டு உபாதை நீங்க...

எஸ். சுவாமிநாதன்

ஆசிரியையாக பணிபுரிகிறேன். தைராய்டு, ஈரல்குலைக்கட்டி, இடது மார்பகக்கட்டி, சூல்பை நீர்கட்டி , உடல் பருமன் போன்ற உபாதைகளால் கஷ்டப்படுகிறேன். இடது பக்க இடுப்பிலிருந்து தொடை முட்டி வரை கடும் வலி வேறு. இவற்றிற்கு ஆயுர்வேத நிவாரண மருந்துகள் உள்ளதா...?

ராஜலெட்சுமி, வில்லியனூர்

மனிதர்களுடைய உணவு செயல் மருந்து ஆகிய மூன்றும் இருபது வகையான குணங்களின் ஏற்றத்தாழ்வுகளால் சமநிலைப்படுத்த முற்படுகின்றன. ஆனால் அவற்றின் சில குணங்களின் உடல் உட்புற வரவானது கூடும் போது, அவற்றை எதிர்க்கும் உணவும் செயலும் இல்லாத நிலையில், அவை அபரிமிதமாக வளர்ந்து நீங்கள் குறிப்பிடும் அனைத்து உபாதைகளுக்கும் காரணமாகி விடுகின்றன. எதனால் எது உருவாகிறது என்பதை கீழ்காணும் வகையில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

1. கனமானது x லேசனாது
2. மந்தமானது x ஊடுருவும் தன்மையுடையது
3. குளிர்ச்சியானது x சூடானது
4. நெய்ப்பானது x வறட்சியானது
5. வழுவழுப்பானது x சொரசொரப்பானது
6. கெட்டியானது x திரவமானது
7. மிருதுவானது x கடினமானது
8. நிலைத்தது x அசைவது
9. நுண்ணியது x பெருத்தது
10.பிசுபிசுப்பானது x கொசகொசப்பானது எதிரும் புதிருமான இந்த குணங்களில் கனம் மந்தம் குளிர்ச்சி நெய்ப்பு வழுவழுப்பு கெட்டி மிருது நிலைத்தது பெருத்தது கொசகொசப்பானது ஆகியவற்றால் தைராய்டு, ஈரல் குலைக்கட்டி, மார்பகக்கட்டி, சூல்பை நீர்க்கட்டி, உடல் பருமன் போன்ற உபாதைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.

இவற்றின் எதிரிடையான குணங்களைப் பிரயோகித்தால் அவை குறைந்து போவதுடன், நோய்களின் தாக்கமும் மட்டுப்படுகின்றன.

இனிப்பும், புளிப்புமிக்க உணவுகளின் மீதுள்ள விருப்பம், சோம்பலான வாழ்க்கை உடற்பயிற்சியே இல்லாத ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் தொழில் அல்லது வேலை, மன மகிழ்ச்சியுடன் கூடிய நிறைவான வாழ்வு, அதிக புலால் உணவு, பேக்கரி வகை உணவுகள், நெய் மற்றும் எண்ணெய் பலகாரங்களின் மீது அதிக மோகம் போன்றவற்றால் மேற்குறிப்பிட்ட குணங்கள், உடலில் வளர்ந்து நோய்களை ஏற்படுத்துவதால், நீங்கள் இவற்றிக்கு முழுக்குப் போட்டு விட்டு, காரம், கசப்பு, துவர்ப்பு மிக்க உணவுகள், சுறுசுறுப்பான வாழ்க்கை, உடற்பயிற்சி, ஓரிடத்தில் அமராது நடப்பது, பின் சிறிது ஓய்வு எடுப்பது, நிறைய சிந்தனையுடன் கூடிய பிறருக்கு நன்மை தரும் செயல்களில் அதிக ஈடுபாடு, புலால் உணவை முழுவதுமாக நிறுத்துதல், பேக்கரி உணவு நெய் எண்ணெய் பலகாரங்களைச் சாப்பிடாதிருத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் லேசு ஊடுருவும் தன்மை சூடு வறட்சி சொரசொரப்பு திரவம் கடினம் அசைவது நுண்ணியது போன்ற குணங்களை உடலின் உட்புறத்தில் வளரச் செய்து, அவற்றிக்கு எதிரான குணங்களுடன் கடும் சண்டையை ஏற்படுத்தி வெற்றி பெறலாம்.

அந்த வகையில் எண்ணெய்யாகவே இருந்தாலும் கடுகெண்ணெய் சிறப்பானது. சுமார் பத்து மில்லி கடுகெண்ணெய்யை, காலை இரவு உணவிற்கு அரை மணி முன் சாப்பிடலாம். தன்னுடைய சூடான வீர்யத்தினாலும், நுண்ணியத் தன்மையாலும், கட்டிகளின் உள்ளே ஆவேசத்துடன் புகுந்து உடைத்தெறியும் சக்தி உடையதான அதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

வரணாதிகஷாயம், சுகுமாரம்கஷாயம், குக்குலு திக்தகம் கஷாயம், சிலாசத்து பற்பம், அதி மதுரம், திரிகடுகம், திரிபலை போன்றவற்றின் சூரணம், மூலகாத்யாரிஷ்டம், நிம்பாமி ருதாஸவம், லோத்ராஸவம், அயஸ்கிருதி, காஞ்சநார குக்குலு மாத்திரை என பல மருந்துகள் ஆயுர்வேத்திலுள்ளன. உங்களுடைய உடல் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துச் சாப்பிட, ஏற்பட்டுள்ள உபாதைகள் குணமடைய உதவக் கூடியவை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT