தில்லியில் தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரும், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சீதாராம் கேசரியும் சந்தித்துப் பேசியதில் இருந்தே, பிரதமர் தேவே கெளடா - மூப்பனார் உறவில் விரிசல் விழத் தொடங்கிவிட்டது. அதற்கு அந்த சந்திப்பு மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. இன்னொரு காரணமும் இருந்தது.
மூன்று வாரங்களுக்கு முன்பு (அக்டோபர் 24) சென்னையில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் - நிர்வாக இயக்குநராக இருந்த எம். கோபாலகிருஷ்ணன், மத்திய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மட்டுமல்ல, இந்தியன் வங்கியின் உதவி மேலாளர்கள் சிலர்கூடக் கைது செய்யப்பட்டனர். 'பாமக்ஸ் ஸ்டீல்ஸ் லிமிடெட்' என்கிற ஒடிஸ்ஸô மாநில அரசுடன் கூட்டாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்துக்கு விதிமுறைகளை மீறி ஒரு கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.
பலர் தொழில் தொடங்குவதற்கு இந்தியன் வங்கித் தலைவராக இருந்த எம். கோபாலகிருஷ்ணன் கடனுதவி வழங்கினார் என்பது உண்மை. நான் நடத்திவந்த 'நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்துக்காக இந்தியன் வங்கித் தலைவரைப் பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது அவர் எனக்குத் தந்த விளக்கம், அவர் மீதான மரியாதையை அதிகரித்ததே தவிர, அவர் மீது தவறு காணத் தோன்றவில்லை.
''பம்பாய், தில்லி, கல்கத்தாவில் இருக்கும் தொழில்நிறுவனங்களை வடநாட்டு வங்கிகள் ஆதரிக்கின்றன. அவர்களுக்கு எல்லா விதத்திலும், விதிமுறைகளைத் தளர்த்தி உதவுகின்றன. அண்டை மாநிலங்களான கர்நாடகத்திலும், கேரளத்திலும், ஆந்திரத்திலும் உள்ள வங்கிகள் அதேபோல உதவுகின்றன. நமது தமிழகத்தில்தான் நாம் நூறாயிரம் கேள்விகளை எழுப்பி, உதவி செய்யாமல் இருப்பதற்குக் காரணம் தேடுகிறோம். தமிழகத்தில் பல தொழிலதிபர்கள் தோன்ற இந்தியன் வங்கி வழிகோல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால் திறமைசாலிகள், கடனைத் திருப்பி அடைப்பவர்கள் என்று கருதினால், அவர்களுக்கு உதவுகிறேன்'' - எனக்கு அளித்த பேட்டியில் எம். கோபாலகிருஷ்ணன் தெரிவித்த கருத்து இது.
இந்தியன் வங்கியின் தலைவராக எம். கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்ட தற்கும், அந்தப் பதவியில் தொடர்ந்ததற்கும் ஜி.கே. மூப்பனாரின் ஆதரவு இருந்தது என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது. அதுமட்டுமல்ல, மூப்பனாருக்கு நெருக்கமான பலருக்கும் இந்தியன் வங்கி கடனுதவி வழங்கியது என்றும் கூறப்பட்டது. ஜி.கே. மூப்பனார் மட்டுமல்ல, பல முக்கியக் காங்கிரஸ் தலைவர்களும் எம். கோபாலகிருஷ்ணன் மூலம் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இந்தியன் வங்கி மூலம் கடனுதவி பெற்றுத் தந்தனர்.
எம். கோபாலகிருஷ்ணனின் நிர்வாகத்தின் கீழ் இந்தியன் வங்கிக்கு, வரவேண்டிய ரூ.1,336 கோடி வரவில்லை என்பதுதான் புகார். அதில் பெரும்பாலான தொகை வசூலாகிவிட்டன என்பது குறித்து இப்போது யாரும் பேசுவதில்லை. வசூலாகாத பணம் பெரும்பாலும் அரசியல் தலைவர்களின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டவை என்பதுதான் உண்மை.
மத்திய புலனாய்வுத் துறையின் சோதனைகளைத் தொடர்ந்து எம். கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதும், சிறைத் தண்டனை பெற்றதும் வரலாற்று சோகங்கள். எம். கோபாலகிருஷ்ணனின் கைதும், சிபிஐ-யின் நடவடிக்கையும் ஜி.கே. மூப்பனாருக்கும், தமிழ் மாநில காங்கிரஸýக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.
தேவே கெளடா அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் தமாகா-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம். கோபாலகிருஷ்ணனையும், இந்தியன் வங்கியின் பொது மேலாளராக இருந்து பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக இருந்த கருணாநந்தனையும் சிபிஐ கைது செய்தது, நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்கே தெரியாது என்பது தமாகா-வை ஆத்திரப்படுத்தியது.
பதவியில் இருக்கும் வங்கியின் உயர் அதிகாரி ஒருவரை விசாரிக்கவோ, கைது செய்யவோ முற்படுவதற்கு முன்னர் சிபிஐ நிதியமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், சிபிஐ அனுமதி பெறவில்லை என்பது நிதியமைச்சர் ப. சிதம்பரத்துக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
''தனக்கு சிபிஐ நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது'' என்று பிரதமர் தேவே கெளடா தெரிவித்ததை நிதியமைச்சர் ப. சிதம்பரமோ, தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரோ, தமாகா-வின் 20 எம்.பி.க்களோ நம்பத் தயாராக இல்லை. ஐக்கிய முன்னணி அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளவும் அவர்களுக்கு வழியில்லை. காங்கிரஸýடன், குறிப்பாக சீதாராம் கேசரியுடன் தமாகா தலைவர்கள் ரகசியத் தொடர்பில் இருந்தனர் என்பது மட்டுமல்ல, பிரதமர் தேவே கெளடாவின் செயல்பாடுகளுக்குக் கடிவாளம் போடுவதற்கான வழிகளையும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
ஒருபுறம் இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனின் கைது தமாகா-வை ஆத்திரப்படுத்தியது என்றால், இன்னொருபுறம் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது குறித்து சிபிஐ விசாரிக்கத் தொடங்கியது, பிரதமர் தேவே கெளடாவை அகற்ற வேண்டும் என்கிற காங்கிரஸின் கோரிக்கைக்கு வலு சேர்த்தது.
நரசிம்ம ராவுக்கு எல்லா வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்திருப்பதும், நேரடியாக அவர் விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதும் அவர் நாடாளுமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பதற்கு இருந்த தடையை அகற்றி இருந்தது. நாடாளுமன்றம் விரைவில் கூடப்பட இருந்த நிலையில், நரசிம்ம ராவை பிரதமர் தேவே கெளடா இரண்டுமுறை நேரில் சென்று சந்தித்தார். அந்த சந்திப்புகள், காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியையும், அவரது ஆதரவாளர்களையும் கோபப்படுத்தின.
தனக்கு எதிராகப் பிரதமர் தேவே கெளடா மூலம் நரசிம்ம ராவ் சதி செய்கிறார் என்று கேசரி நம்பத் தலைப்பட்டார். நரசிம்ம ராவின் செல்வாக்கைக் குறைப்பது என்று முடிவெடுத்து அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இறங்கினார் சீதாராம் கேசரி.
நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட ஜனார்த்தன் பூஜாரி, பி.பி. மெüரியா, தேவேந்திர துவிவேதி மூவரும் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டனர். அதனால் அவர்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பதவியையும் இழந்தனர். அவர்களுக்கு பதிலாக சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட ஆஸ்கர் பெர்னான்டஸýம், மீரா குமாரும் பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
நரசிம்ம ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸில் இருந்து விலகிச் சென்றவர்களை சோனியா காந்தியின் வழிகாட்டுதல்படி, மீண்டும் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் முழு மூச்சாக இறங்கி இருந்தார் சீதாராம் கேசரி. அதன் மூலம் நரசிம்ம ராவின் செல்வாக்கை படிப்படியாகக்
குறைப்பதும், இறுதியில் நாடாளுமன்ற கட்சித் தலைவர் பதவியில் இருந்தே அவரை அகற்றுவதும்தான் சீதாராம் கேசரியின் திட்டமாக இருந்தது.
நரசிம்ம ராவைக் கடுமையாக எதிர்த்த வாழப்பாடி ராமமூர்த்தி, சிவசரண் மாத்தூர், நட்வர் சிங் மூவரும் மீண்டும் காங்கிரஸில் இணைந்தனர். மாதவராவ் சிந்தியாவைத் தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா, அர்ஜுன் சிங், என்.டி. திவாரி ஆகியோரும் பழையபடி கட்சிக்குத் திரும்ப அழைப்பு விடுக்கப்பட்டது.
அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்கள் கூட்டத்திற்குப் போய்விட்டு அங்கிருந்த சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மூத்த காங்கிரஸ் தலைவரும் மகாராஷ்டிர மாநிலம் ராம்டெக் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தத்தா மாகே யாரையோ சந்தித்துவிட்டுக் கிளம்ப இருப்பது தெரிந்தது. அவரை நோக்கி விரைந்து, என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன்.
பி.வி. நரசிம்ம ராவ் இரண்டு முறை எம்.பி.யாக இருந்த மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் என்பதால், முன்னாள் பிரதமருக்கு தத்தா மாகே மிகவும் நெருக்கம். அவரிடம் கேட்டால், புதிதாக ஏதாவது செய்தி கிடைக்கும் என்பதால்தான் அவரை அணுகினேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை.
''கேசரிக்குப் பிரதமர் ஆசை வந்துவிட்டது. தேவே கெளடா தன்னை பலப்படுத்திக் கொள்வதற்காகக் காங்கிரûஸ பலவீனப்படுத்துகிறார் என்று நினைக்கிறார். நரசிம்ம ராவ்ஜியை அகற்றிவிட்டுத் தானே நாடாளுமன்றக் கட்சித் தலைவராக வேண்டும் என்று விரும்புகிறார் என்று தோன்றுகிறது...''
''அவர் மக்களவை உறுப்பினரல்லவே, மாநிலங்களவையில் அல்லவா
இருக்கிறார்.''
''அதனால் என்ன, நாடாளுமன்ற உறுப்பினர்தானே? பிரதமர் தேவே கெளடாவும்தான் ராஜ்ய சபா உறுப்பினர். நரசிம்ம ராவ்ஜியை பலவீனப்படுத்த நினைத்து கேசரிஜி தன்னைத்தானே பலவீனப்படுத்திக் கொள்கிறார். இதுவே அவருக்கு எதிராகப் போகப் போகிறது, பார்த்துக் கொண்டிருங்கள். நான் சொல்வதாக எழுத வேண்டாம். நீங்கள், கேட்பதற்காகச் சொல்கிறேன்...''
''எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''
''அவர் நரசிம்ம ராவ்ஜி ஆதரவாளர்களை அகற்றிவிட்டு, சோனியாஜியின் ஆதரவாளர்களை இணைக்கிறார். சோனியாஜி அரசியலுக்கு வராமல் இருக்கலாம். ஆனால், கேசரிஜி கட்சியில் இணைக்கும் சோனியாஜியின் ஆதரவாளர்கள் இவரைப்போலவே மூத்த தலைவர்கள். கட்சித் தலைவராக ஆசைப்பட்டவர்கள். அர்ஜுன் சிங் ஏற்கெனவே கட்சியின் துணைத் தலைவராக இருந்தவர். பலவீனமாக இருக்கும் நரசிம்ம ராவ்ஜி மீதிருக்கும் பயத்தால், சோனியாஜிக்கு நெருக்கமானவர்களை உள்ளே கொண்டுவந்து வலியப்போய் ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறார்.''
''அடுத்து என்ன நடக்கும்?''
''இவரும் அதிகநாள் காங்கிரஸ் தலைவராகத் தொடர மாட்டார். தேவே கெளடாவும் பிரதமராகத் தாக்குப்பிடிக்க மாட்டார். இதற்கு மேல் நான் எதுவும் சொல்வதற்கில்லை...''
அவர் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.
நான் எனது அலுவலகத்துக்குச் சென்றபோது, ராஜேஷ் பைலட் வீட்டிலிருந்து இரண்டு முறை என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றதாகச் சொன்னார்கள். என்னவென்று விசாரிக்க அவரை அழைத்தேன். நேரில் வரும்படி சொன்னார். மாலையில் அவரது வீட்டுக்குப் போனேன்.
''நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் பிரதமருக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக விரைவில் சிபிஐ இயக்குநர் ஜோகிந்தர் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்ய இருக்கிறார். வெளிநாடு சென்றிருக்கும் பிரதமர் நாடு திரும்பியதும் தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுக்க இருப்பதாக என்னிடம் தெரிவித்தார்'' என்று ராஜேஷ் பைலட் சொன்னபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
''அடுத்து என்ன நடக்கும்?''
''எதுவும் நடக்காது. ஜோகிந்தர் சிங் ராஜிநாமா செய்தால், தமாகா தலைவர்கள் மீதான சந்தேகம் அதிகரிக்கும். அதனால், அவர்கள் ராஜிநாமாவை வற்புறுத்த மாட்டார்கள். நான் உங்களை நேரில் வரச் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் எனக்காக ஓர் உதவி செய்ய வேண்டும்.''
''நான் என்ன உதவி செய்துவிட முடியும்?''
''இந்தக் கடிதத்தை நான் கொடுத்தனுப்பியதாகக் கூறி மூப்பனார்ஜியிடம் நீங்கள் நேரில் சேர்ப்பிக்க வேண்டும். நான் கடிதம் கொடுத்தனுப்பியது யாருக்கும் தெரிய வேண்டாம்.''
''உங்களுக்கும் மூப்பனாருக்கும் இடையே போஸ்ட் மேனாக இருப்பதில்
எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. கட்டாயம் செய்கிறேன். அந்தக் கடிதத்தில் நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள் என்பதை என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். தெரிந்து கொள்வேன்...''
சிரித்தபடியே, தனது மேஜையில் பத்திரப்படுத்தி இருந்த கடிதத்தின் நகலை எடுத்து என்னிடம் நீட்டினார்...
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.