பிரதமர் சந்திரசேகரைச் சந்திக்கக் கிளம்பிய நான், நேராக அவரது வீட்டுக்குப் போகாமல், துக்ளக் ரோடிலுள்ள அஜித் சிங்கின் வீட்டுக்குப் போனதுதான் தவறாகிவிட்டது. சமர்பால் சிங்கை சந்தித்து உத்தர பிரதேச நிலவரம் குறித்து விசாரித்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தேன்.
நான் துக்ளக் ரோடிலுள்ள அஜித் சிங் வீட்டுக்குள் போனபோது, சமர்பால் சிங் இன்னும் வரவில்லை. வீட்டை ஒட்டி இருக்கும் புல்வெளியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார் அஜித் சிங். பார்வையாளர்கள் யாரும் வந்திருக்கவில்லை. என்னைப் பார்த்துவிட்ட அஜித் சிங் அழைத்த
போது, நானும் அவருடன் சற்று பேசிக் கொண்டிருக்கலாம் என்று போய் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.
தேநீர் அருந்தியபடி அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்
களுக்கு லஞ்சம் அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் அஜித் சிங்கின் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அது குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு உத்தர பிரதேச நிலவரம் குறித்துத் திரும்பியது.
'பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை பலம் இருக்கிறது. ஆனால், அந்தக் கட்சிகளுக்கிடையில் யார் முதல்வராவது என்பதில் ஒற்றுமை இல்லை.
அதனால், ஆட்சி அமைவது சாத்தியமில்லை' என்றார் அஜித் சிங்.
'உங்களை ஏன் முதல்வர் பதவிக்கான பொது வேட்பாளராக அவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது?'
'வி.பி. சிங்கின் ஜனதா தளம் ஏற்றுக் கொள்ளாது. முலாயம் சிங்கும், மாயாவதியும் வேறொருவர் முதல்வராவதை விரும்ப மாட்டார்கள். காங்கிரஸிலிருந்து விலகியதால், அந்தக் கட்சியும் என்னை ஆதரிக்காது.'
'அப்படியானால், ஏன் காங்கிரஸை மற்ற கட்சிகள் ஆதரிக்கக் கூடாது?'
'முதலில் காங்கிரஸூக்கே அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சி அமைப்பதை வி.பி. சிங், முலாயம், மாயாவதி மட்டுமல்ல, முதலில் எதிர்க்கும் கட்சியாக திவாரி காங்கிரஸ் இருக்கும். தன்னை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று எல்லா கட்சியினரிடமும் 'லாபி' செய்து கொண்டிருக்கிறார் நாராயண் தத் திவாரி, தெரியுமா?'
'சந்திசேகர்ஜி தலையிட்டால், காங்கிரஸ் தலைமையில் பாஜக அல்லாத ஆட்சியை உத்தர பிரதேசத்தில் அமைக்க முடியுமா?'
என்னையே உற்றுப் பார்த்தார் அஜித் சிங். தேர்ந்த அரசியல்வாதி முகக் குறிப்பிலிருந்தே எண்ண ஓட்டத்தை கிரகித்துவிட முடியும் என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.
'இப்போது நீங்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்? சந்திரசேகர்ஜியை சந்திக்கவா?' அவரது கேள்வியில் நான் அதிர்ந்தேன். என்னால் பொய் சொல்லவோ, உண்மையை மறைக்கவோ முடியவில்லை (தெரியவில்லை).
'ஆமாம்...!'
'முயற்சி செய்து பார்க்கச் சொல்லுங்கள். ஒருவேளை அவரால் முலாயாமையும், கன்ஷிராமையும் ஒருங்கிணைக்க முடியும்...'
'உங்கள் பெயரைச் சந்திரசேகர்ஜி முன்மொழிந்தால்...?'
'அவர் முன்மொழிய மாட்டார் என்பது இருக்கட்டும். வெறும் 8 எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்திருக்கும் எனது கட்சியை அவர்கள் ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள். நான் செல்வாக்குப் பெறுவதை முலாயம், மாயாவதி மட்டுமல்ல, வி.பி. சிங் நிச்சயமாக விரும்ப மாட்டார். காங்கிரஸ்காரர்களும்தான்!'
அஜித் சிங்கிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு நான் 3, செளத் அவென்யூ சந்திரசேகர்ஜி வீட்டுக்கு வருவதற்கு முன், எங்களது உரையாடல் குறித்து அஜித் சிங் பலரிடம் தொலைபேசியில் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சந்திரசேகர்ஜி மூலம் காங்கிரஸ் உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முயல்கிறது என்பது வரை, மின்னல் வேகத்தில் அந்த செய்தி பரவியிருந்தது.
முலாயம்சிங்கும் சரி, கன்ஷிராமும் சரி சுதாரித்துக் கொண்டுவிட்டார்கள். அவர்களைவிட, அதிவேகமாக செயல்பட்டது ஜனதா தளம்தான். ஆட்சியில் அமர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் வளர்ந்துவிடும் என்கிற அச்சம் எல்லோருக்குமே இருந்தது.
சந்திரசேகர்ஜியின் வீட்டுக்கு நான் சென்றபோது அவரது சகோதரர் கிருபாசங்கர்ஜிதான் இருந்தார். சந்திரசேகர்ஜி 'போன்சி' பண்ணையில் இருப்பதாகவும், இன்னும் சில மணி நேரத்தில்
வந்துவிடுவார் என்றும் சொன்னார்கள். உதவியாளர் கெளதம், சந்திரசேகர்ஜியின் சமாஜவாதி ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவரான திரிபாதி உள்ளிட்டவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
உத்தர பிரதேச சட்டப்பேரவையில் 425 இடங்களில், பாஜக சமதா கட்சிக் கூட்டணி 177 இடங்களில் வென்றிருந்தது. முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ், அஜித் சிங்கின் பி.கே.கே.பி., கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய கூட்டணி 133 இடங்களைப் பிடித்திருந்தது. அதில் 109 இடங்கள் சமாஜவாதி கட்சியுடையவை. பகுஜன் சமாஜ் கட்சியும் (67), காங்கிரஸூம் (33) அமைந்த கூட்டணி 100 இடங்களைப் பெற்றிருந்தது. 14 இடங்களை சுயேச்சைகளும், சில சிறிய கட்சிகளும் பெற்றிருந்தன.
சமாஜவாதி கட்சியின் கூட்டணியும், பகுஜன் சமாஜ் காங்கிரஸ் கூட்டணியும் சேர்த்தால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும் என்பதுதான் நிலைமை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில், கட்சிகள் ஏன் தயக்கம் காட்டுகின்றன என்று எனக்குப் புரியவில்லை. இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கும்போது, அறைக்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது.
தடதடவென்று பூட்ஸ் காலடிச் சத்தம் கேட்டதிலிருந்து, முன்னாள் பிரதமர் என்பதால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படையினர் புடைசூழ சந்திரசேகர்ஜி வந்துவிட்டார் என்று ஊகித்துக் கொண்டேன். நான் அவருக்காகக் காத்திருக்கும் தகவலை உதவியாளர் கெளதம் தெரிவித்திருக்க வேண்டும். எனக்கு அழைப்பு வந்தது. அவரது அறைக்குப் போனேன்.
நான் உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அவர் பேசத் தொடங்கினார்
'நீங்கள் என்னிடம் என்ன கேட்கப் போகிறீர்கள் என்பது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இப்போது தெரிந்திருக்கும்.'
'அஜித் சிங் உங்களுடன் பேசினாரா?'
'ஓ... அஜித் சிங்கிடம் இதைப்பற்றி நீங்கள் தெரிவித்தீர்களா?'
'அப்படியானால் உங்களிடம் தெரிவித்தது யார்?'
'ஒருத்தர் இரண்டு பேர் என்றால் சொல்லலாம். பத்திரிகை நண்பர்கள் சிலரை இங்கே வருவதற்கு முன்னால் கட்சி அலுவலகத்தில் சந்தித்தேன். அவர்கள் உங்கள் பெயரைச் சொல்லி, நீங்கள் என் மூலம் உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைய முயற்சிப்பதாகச் சொன்னபோது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வைத்தியநாதன் எப்போது இதுபோன்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார் என்று நினைத்துக் கொண்டேன்.'
'அஜித் சிங்கை சந்திக்காமல் நான் நேராக உங்களை சந்தித்திருக்க வேண்டும். இப்படி மின்னல் வேகத்தில் தகவல் பரவும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.'
'சரி, உங்களை யார் என்னை சந்தித்து உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைய முயற்சி எடுக்க வேண்டும் என்று சொன்னது..?'
நான் நடந்ததை எல்லாம் அவரிடம் மறைக்காமல் தெரிவித்தேன். அமைதியாகக் கேட்டுக் கொண்டார். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, உதவியாளர் 'இன்டர்காமில்' அழைத்துப் பேசினார். 'வரச்சொல்' என்று சந்திரசேகர்ஜி தெரிவித்தது புரிந்தது. அவர் யாராக இருக்கும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, கதவு திறந்தது. வந்தவர் தமிழக முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்.
நான் எழுந்து வெளியே செல்லத் தயாரானேன். போக வேண்டாம் என்று சைகை செய்தார் சந்திரசேகர்ஜி. அவருக்கு எதிரில் சோபாவில் அமர்ந்திருந்த நான் ஓரமாகப் போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தேன். பீஷ்ம நாராயண் சிங்கை எனக்கு ஏற்கெனவே தெரியும் என்பதால் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டோம்.
'உத்தர பிரதேசத்தில் என்ன நடக்கிறது?' என்று சந்திரசேகர்ஜியிடம் கேட்டபடி அமர்ந்தார் பீஷ்ம நாராயண் சிங்.
'நீங்கள்தான் எல்லா கேம்புகளுடனும் தொடர்பில் இருக்கிறீர்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல் என்ன?'
'முலாயம் தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு, மாயாவதியை முதல்வராக ஏற்றுக் கொள்ளாவிட்டால், மாயாவதிக்கு பாஜக வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கத் தயங்காது என்பதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் தகவல்.'
'உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னாரா இல்லை வேறு யாராவது சொன்னார்களா?'
'நான் அத்வானிஜியிடம் பேசவில்லை. அவரைப் பார்க்கக்கூட இல்லை. அந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.'
சந்திரசேகர்ஜி எதுவும் சொல்லவில்லை. என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். 'இதுதான் நிலைமை' என்பதை அந்தப் புன்னகை தெரிவித்தது. பெரிய தலைவர்களுக்கு நடுவில் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை, கிளம்பி விட்டேன்.
தமிழக முதல்வர் கருணாநிதி தில்லி வந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததும் நான் தமிழ்நாடு இல்லத்துக்கு விரைந்தேன். மாநிலங்கள் இடைமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். நான் சென்றிருந்தபோது அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.
மாநிலங்கள் இடைமன்றக் கூட்டம் முடிந்து முதல்வர் கருணாநிதியும், அவருடன் வந்திருந்த அமைச்சர்களும் திரும்பியபோது மாலை வெகுநேரமாகிவிட்டது. அடுத்த
நாள், ஐக்கிய முன்னணி வழிகாட்டு குழுக் கூட்டமும், கர்நாடக முதல்வர் ஜே.எச். பாட்டீலுடனான காவிரிப் பிரச்னை குறித்த பேச்சுவார்த்தையும் இருந்ததால், முதல்வர் நிருபர்களைச் சந்திக்கவில்லை. மாநிலங்கள் இடைமன்றக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் நகல் மட்டும் தரப்பட்டது.
'மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, ஆளுநர் நியமனம் மற்றும் அவர்களது நடவடிக்கைகள், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ரத்து செய்யும் மத்திய அரசின் அதிகாரம் போன்றவை தொடர்பாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்பதுதான் முதல்வர் உரையின் சாராம்சம்.
அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசு அந்தப் பிரிவை பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைப்பதற்கும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் நடைமுறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதும்தான் முதல்வர் கருணாநிதி மாநிலங்கள் இடைமன்றக் கூட்டத்தில் முன்வைத்த முக்கியமான கருத்துகள்.
உத்தர பிரதேச நிலவரம் உச்சகட்ட பரபரப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த மாநிலத்தின் தலைநகர் லக்னெளவில் பாஜக தலைவர்களும், சமாஜவாதி கட்சித் தலைவர்களும் ஆளுநர் ரோமேஷ் பண்டாரியை சந்தித்துத் தங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கினால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று சொன்னாலும், அவர் அதை ஏற்பதாக இல்லை. காங்கிரஸ் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மாயாவதியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தியதையும், அவர் சட்டை செய்வதாக இல்லை.
ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு வகையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கும்போது, சற்றும் எதிர்பாராமல் ஒரு தடாலடி முடிவை எடுத்தது தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு. அந்த முடிவால், அந்தக் கூட்டணியின் சூத்திரதாரியான திமுக தலைவர் முதல்வர் மு. கருணாநிதி தர்மசங்கடத்தை எதிர்கொண்டார்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.