இரண்டு நாள் முன்புதான், மாநிலங்கள் இடைமன்றக் கூட்டத்தில், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 356 திருத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி இருந்தார். அந்தக் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான முதல்வர்களும் ஒருமித்த குரலில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்படி இருக்கும்போதுதான், உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவை தேவே கெளடா அரசு எடுத்தது. மத்திய அமைச்சரவை கூடி, ஆளுநர் ரோமேஷ் பண்டாரி அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில், உத்தர பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்தது.
இன்னும் இரண்டு, மூன்று நாள்கள் தாமதித்திருந்தால், பாஜகவின் ஆதரவுடனோ அல்லது காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகளின் ஆதரவிலோ மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைத்திருக்கும் என்கிற நிலையில்தான் அவசர அவசரமாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பது என்னவோ உண்மை.
அந்த அறிவிப்பு வெளியாகும்போது, நான் முன்னாள் பிரதமர் சந்திரசேகர்ஜியின் 'போன்சி' பண்ணை வீட்டில் இருந்தேன். தில்லியிலிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் குருகிராமுக்கு அருகில் ஹரியாணா மாநிலத்தில் அமைந்திருந்தது சந்திரசேகர்ஜியின் 'போன்சி' பண்ணை வீடு. அவரை சந்திக்க கான்ஷிராம் வந்திருந்தார். காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரியும், முலாயம் சிங் யாதவின் சார்பில் அமர் சிங்கும் வந்திருந்தார்கள். அவர்கள் மூவரும் சந்திரசேகர்ஜியுடன் ஆட்சி அமைப்பது குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட செய்தி வந்தது.
சட்டென்று கிளம்பி வெளியே வந்தார் கான்ஷிராம். வராந்தாவில் நின்று கொண்டிருந்த என்னைத் தாண்டிச் சென்றுவிட்டவர், சற்று தூரம் போன பிறகு என்னைத் திரும்பிப் பார்த்தார். என்னவோ சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொண்ட நான் அவர் அருகில் விரைந்தேன்.
''இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் உங்கள் முதல்வர் கருணாநிதி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிராக மாநிலங்கள் இடைமன்றக் கூட்டத்தில் பேசினார். திமுகவும்தானே ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இருக்கிறது. நாங்கள் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக இப்படியொரு முடிவு எடுக்கப்படுவதை அவரது கட்சி ஆதரித்திருக்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம் என்று நான் கேட்டதாக நீங்கள் தமிழ் பத்திரிகைகளில் செய்தி போடுங்கள்...'' என்று கோபமாகக் கூறியபடி நகர்ந்துவிட்டார்.
அவர் போன பிறகும், அமர் சிங்கும் பிரமோத் திவாரியும் நீண்ட நேரம் சந்திரசேகர்ஜியிடம் பேசிக் கொண்டிருந்தனர். அங்கேயே காத்திருக்காமல் நான் தில்லிக்குத் திரும்பிவிட்டேன்.
கான்ஷிராமையும், பகுஜன் சமாஜ் கட்சியையும்விடக் கடுமையான ஆத்திரத்தில் இருந்தது பாரதிய ஜனதா கட்சி. அசோகா சாலையில் அமைந்த அந்தக் கட்சியின் தலைமையகத்தில் அத்தனை பத்திரிகையாளர்களும் கூடியிருந்தனர். வாஜ்பாயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மூத்த தலைவர்களும், ஜனா. கிருஷ்ணமூர்த்தி, சுந்தர்சிங் பண்டாரி, ஜே.பி. மாத்தூர், மதன்லால் குரானா, வி.கே. மல்ஹோத்ரா, கே.ஆர். மல்கானி, சிக்கந்தர் பகத், சுஷ்மா ஸ்வராஜ், ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட அத்தனை முன்னணித் தலைவர்களும் அங்கே குழுமி இருந்தனர்.
அவர்கள் அனைவரும் கட்சித் தலைவர் எல்.கே. அத்வானியின் அறையில் நடந்து கொண்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்தகட்ட நகர்வு குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பங்கு பெறாமல், இன்னொரு அறையில் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான நரேந்திர மோடி, கோவிந்தாச்சார்யாவுடன் பேசிக் கொண்டிருந்ததையும் நான் பார்த்தேன்.
சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியின் மத்தியக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. நாங்கள் (பத்திரிகையாளர்கள்) பொறுமையாக வெளியே காத்திருந்தோம். கூட்டம் முடிந்ததும் தலைவர்களில் பலரும் எதுவும் கருத்துத் தெரிவிக்காமல் கிளம்பி விட்டனர். சற்று நேரம் கழித்து, அங்கே பாஜகவின் பத்திரிகைத் தொடர்பாளராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
''எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், மத்திய அரசு அமைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா இரண்டு வாய்ப்புகள் வழங்கினார். உத்தர பிரதேசத்தில் மட்டும் அந்த வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது? அரசியல் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் முரணாக நடக்கும் இந்த ஐக்கிய முன்னணி அரசை அகற்றுவதுதான் எங்கள் குறிக்கோளாக இருக்கும்'' என்று எழுதி வைத்திருந்த அறிக்கையைப் படித்துத் தனது சந்திப்பை முடித்துக் கொண்டார் சுஷ்மா ஸ்வராஜ்.
வாஜ்பாயி உள்பட எல்லா மூத்த தலைவர்களும் கிளம்பிச் சென்றுவிட்டனர். கட்சித் தலைவர் என்கிற முறையில் அத்வானிஜி மட்டும் ஒரு சிலருடன் தனது அறையில் ஆலோசனையில் இருந்தார். அந்த ஒரு சிலரில் நரேந்திர மோடியும், அப்போது மக்களவை உறுப்பினராக இருந்த பிரமோத் மஹாஜனும், உமா பாரதியும் இருந்ததாக என் நினைவு. அதை நான் குறித்து வைக்கவில்லை.
பெரும்பாலான பத்திரிகை நிருபர்களும் கிளம்பிச் சென்றுவிட்டார்கள். எப்படியாவது அத்வானியிடம் கருத்துக் கேட்டுவிட வேண்டும் என்கிற முடிவுடன் நான் காத்திருந்தேன். அத்வானிஜியின் அறைக்குச் சென்று கொண்டிருந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தியிடம் எனது விருப்பத்தைத் தெரிவித்தபோது, சிரித்தபடியே, 'முடிந்தால் பார்க்கலாம்' என்றபடி நகர்ந்தார்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு, வீட்டிற்குக் கிளம்பும் வேளையில் நான் அத்வானிஜியின் அறைக்கு அழைக்கப்பட்டேன்.
''சுஷ்மாதான் அறிக்கை தந்துவிட்டாரே... அதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?'' என்றபடி என்னை எதிர்கொண்டார் அத்வானிஜி.
''யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. எந்த அணியும் மற்றொரு அணியை ஆதரிக்கத் தயாராக இல்லை. அப்படி இருக்கும்போது, ஆளுநர் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைத்திருப்பதில் எப்படி தவறு காண முடியும்?''
''நீங்கள் அவர்களைப் போலவே உங்கள் மனசாட்சிக்கு விரோதமாகக் கேள்வி கேட்கிறீர்கள். எல்லாவிதமான வாய்ப்புகளும் மேற்கொள்ளப்பட்டு, அப்படியும் நிலையான, பெரும்பான்மை ஆதரவு ஆட்சி அமையாவிட்டால்தான் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்கிறது சர்க்காரியா கமிஷன் அறிக்கை.''
''அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் ஆளுநர் பண்டாரி...''
''யார் சொன்னது வாய்ப்பில்லை என்று? அது அவருக்கு எப்படித் தெரியும்? 1991-இல் காங்கிரஸூக்கு மக்களவையில் பெரும்பான்மை இருந்ததா? அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் அதன் தலைவர் நரசிம்ம ராவ் ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லையா? தேவே கெளடா பிரதமராவதற்கு முன்னர், ஜனதா தளம், இடதுசாரிகள், காங்கிரஸ் எல்லாம் எதிர்ப்புத் தெரிவித்தபோதும், அதிக இடங்களில் வென்ற கட்சி என்பதால் அடல்ஜி (வாஜ்பாயி) ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லையா?''
''அதேபோல, உத்தர பிரதேசத்திலும் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும் என்கிறீர்களா?''
''ஆமாம். நாடாளுமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் மரபு, ஏன் உத்தர பிரதேசத்தில் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி.''
''பெரும்பான்மையை உங்களால் நிரூபிக்க முடியாது என்று ஆளுநருக்குத் தெரிந்திருக்கிறது. அதனால்தான் சட்டப்பேரவையைக் கலைக்காமல், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி இருக்கிறார்.''
எனது பதிலைக் கேட்ட அத்வானிஜிக்குக் கோபம் வந்துவிட்டது. நான் சற்று அதிக பிரசங்கித் தனமாகக் கேட்டுவிட்டேன் என்று எனக்கே தோன்றியது. தனது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ''சரி, பிறகு சந்திப்போம்'' என்றபடி அவர் இருக்கையில் இருந்து எழுந்து கிளம்பித் தயாரானார்.
''நான் ஏதாவது தவறாகக் கேட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்...''
''நோ.., நோ.., நோ... நீங்கள் கேட்டதில் எந்தத் தவறும் இல்லை. ஆளுநர் ரோமேஷ் பண்டாரியும், தேவே கெளடா அரசும் நடந்து கொண்டதுதான் தவறு...'' என்றபடி நகர்ந்தார் அவர்.
இதுபோலப் பல சந்தர்ப்பங்களில், அத்வானிஜியின் பெருந்தன்மையைப் பார்த்து வியந்திருக்கிறேன் நான்.
காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்த சீதாராம் கேசரி, கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அந்தப் பதவிக்கு இன்னொருவரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பிரணாப் முகர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், அவர் பரிந்துரைத்தாரா என்று தெரியாது, அகமது படேல் பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதனால், அவர் வகித்த பொதுச் செயலாளர் பதவி காலியானது.
அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டிருந்தார் குலாம்நபி ஆசாத். அவரை சந்திப்பதற்காக 24, அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு நான் சென்றபோது, அங்கே பிரணாப் முகர்ஜி வந்திருப்பதாகச் சொன்னார்கள். சீதாராம் கேசரி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன், காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவின் தலைவராகப் பிரணாப் முகர்ஜியை நியமித்து, கட்சித் தலைமையகத்தில் அவருக்கென்று தனியாக ஓர் அலுவலக அறையும் ஒதுக்கித் தந்திருந்தார்.
தலைமையகக் கட்டடத்துக்குப் பின்புறத்தில் அமைந்திருந்தது பிரணாப் முகர்ஜிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது அறை. இதற்கு முன்பும், இந்த அறைக்கு அருகில் அவருக்கு இன்னொரு அறை தரப்பட்டிருந்தது. அதைவிட இந்த அறை சற்றுப் பெரிதாகவும், கூடுதல் வசதிகள் உடையதாகவும் காணப்பட்டது.
வழக்கத்துக்கு மாறாக, அந்த அறையில் பிரணாப் முகர்ஜி மட்டும் தனியாக அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்த என்னை உட்காரச் சொன்னார் பிரணாப்தா. ''என்ன நடக்கிறது?'' என்பதுபோலப் புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்தார்.
''பாஜகவினருக்குத்தான் கட்டுக்கடங்காத ஆத்திரம். ஆட்சி அமைக்க அழைக்காதது தவறு என்று அத்வானிஜி எனக்குப் பேட்டி அளித்திருக்கிறார்...''
''பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது என்று பண்டாரிக்குத் தெரியும். மாயாவதி ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு முடிவு...'' என்று விளக்கினார் பிரணாப் முகர்ஜி.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, பிரமோத் திவாரி உள்ளே வந்தார். அவர் ஆத்திரமாகப் பேசிக் கொண்டே போனபோது, அதை அமைதியாகக் கேட்டபடி அமர்ந்திருந்தார் பிரணாப்தா. உத்தர பிரதேச சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரான பிரமோத் திவாரி, முன்வைத்த கோரிக்கை என்ன தெரியுமா?
''ஐக்கிய முன்னணி அரசுக்கு நாம் ஆதரவு அளிப்பதுபோல, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைய ஐக்கிய முன்னணியில் உள்ள கட்சிகள், குறிப்பாக சமாஜவாதி கட்சி, ஆதரவு அளிக்க வேண்டும். இல்லையென்றால், ஐக்கிய முன்னணிக்குக் காங்கிரஸ் அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும்'' என்றார் திவாரி.
''இனிமேல்தான் ஆறுமாத அவகாசம் கிடைத்திருக்கிறதே, அவசரப்படுவானேன்...'' என்கிற பதிலில் அவர் சமாதானப்படவில்லை. பிரமோத் திவாரி கிளம்பிய பிறகு, என்னை அருகில் அழைத்தார் பிரணாப்தா.
''அத்வானிஜியைப் பேட்டி கண்டதுபோல, கான்ஷிராமைப் பேட்டி எடுத்தால் சுவாரஸ்யமான பல செய்திகள் கிடைக்கும். எல்லா பத்திரிகைகளும் அதை விரும்பிப் பிரசுரிக்கும். போய்ப் பாருங்கள்'' என்று அவர் சொன்னபோது, என் மீதான அக்கறை தெரிந்தது.
அவர் சொன்னபடி நான் கான்ஷிராமைப் பேட்டி எடுக்கப் போன நேரம்தான் தவறாக இருந்தது. தேவையில்லாமல் நான் தாக்குதலுக்கு உள்ளாவேன் என்று அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.