'வாழ்வின் வெம்மைகளில் தத்தளிக்கும்போதெல்லாம் இசை மருந்தாகும்' என்கிறது ஒரு ஜென் தத்துவம். எந்த எல்லைகளுக்கும் கட்டுப்படாத வானம்போல, எல்லா சுவாசத் துளிகளிலும் நிறைந்திருக்கிறது இசை.
இந்தியத் திரைத்துறையில் எத்தனையோ பெண் பாடகிகள் தங்களது குரல்களால் உயிர் கொடுத்துப் பல பாடல்களுக்கு சாகாவரம் பெற்றுத் தந்திருக்கிறார்கள். ஆனால், நடிகையரைப் போலவே பாடகிகளின் திரையுலக ஆண்டுகளும் குறைவாகவே உள்ளது. விதிவிலக்காகவே சிலர் உண்டு. அப்படிப்பட்ட சாதனைப் பாடகிகளில் ஒருவர்தான் சித்ரா. அவர் தனது 60 -ஆவது பிறந்த நாளை அண்மையில் நிறைவு செய்திருக்கிறார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த சித்ரா முறைப்படி, கர்நாடக சங்கீதத்தைக் கற்றவர். 1978-ஆம் ஆண்டு முதல் 1984 வரை தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமையானவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய கல்வி உதவித்தொகையை பெற்றவர். தன்னுடைய ஐந்தாம் வயதிலேயே வானொலியில் சங்கீதத்தில் சில வரிகளைப் பாடினார்.
கவனத்துடன் தேவையான பயிற்சிகளைப் பெற்று, இசை பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார், எம்.ஏ. பட்டமும் பெற்றார்.
பள்ளியில் படிக்கும்பொழுதே கே. ஜே. யேசுதாசுடன் இணைத்து பல பாடல்களைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ரவீந்திரனின் ஆலோசனையில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்.
பின்னர், அவருக்கு இளையராஜாவின் இசையில், 'நீ தானா அந்தக் குயில்' எனும் திரைப்படத்தில் 'பூஜைக்கேத்த பூவிது', 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட' ஆகிய பாடல்கள் மூலம் அறிமுகம் ஆனார்.
1979-இல் மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணனும் தனது படங்களில் தனி இசைப் பாடல்களில் சித்ராவை பயன்படுத்தினார். 1980- களின் தொடக்க ஆண்டுகளில் வெளியான 'அட்டஹாசம்', 'ஸ்னேஹபூர்வம் மீரா', 'ஞான் ஏகனானு' போன்ற படங்களில் சித்ராவின் முதல் பாடல்கள் அமைந்தன. அதேநேரம் கே.ஜே.யேசுதாஸ் போன்ற மூத்த பாடகர்களுடன் இசை நிகழ்ச்சிகளிலும் பாடிவந்தார் சித்ரா.
1985-இல் ஃபாசில் இயக்கத்தில் வெளியான 'பூவே பூச்சூடவா' படத்தின் அசல் மலையாள வடிவம் 1984-இல் வெளியாகியிருந்தது. ஜெர்ரி அமல்தேவ் இசையில் அந்தப் படத்தில் சித்ரா பாடிய பாடல்களால் ஈர்க்கப்பட்ட இளையராஜா, தமிழுக்கு அழைத்து வந்தார். ஆனால் தமிழில் சித்ரா குரலில் இளையராஜா இசையில் பதிவுசெய்யப்பட்டது 'நீதானா அந்தக் குயில்' படத்தில் இடம்பெற்ற 'பூஜைக்கேத்த பூவிது' பாடல்தான். அந்தப் படமும் பாடல்களும் வெளியாவதற்கு ஒரு ஆண்டு முன்பாகவே 'பூவே பூச்சூடவா' படம் வெளியாகி, அதில் சித்ரா பாடிய 'சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா' பாடல் மிகவும் பிரபலமடைந்துவிட்டது. அந்தப் பாடலே சித்ராவின் அடையாளமாகி 'சின்னக்குயில்' என்ற முன்னொட்டு பெயருடன் இணைந்துகொண்டது.
கங்கை அமரன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்களைப் பாடியிருக்கிறார் சித்ரா.
சில இசையமைப்பாளர்கள் சித்ராவுக்காகவே, காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். அடுத்து பத்தாண்டுகளில் இசையரங்கில் ஏ. ஆர். ரகுமான், மரகதமணி, வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின இவரால்.
இருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி, பி. லீலாவுக்குப் பிறகு கேரளத்திலிருந்து வந்து, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் பாடியிருக்கிறார்.
ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், எஸ். பி. பி, மனோ, ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி, வைரமுத்து, பழனி பாரதி, பா. விஜய் போன்றவர்களின் வரிகளை தம் குரலால் உயிர்ப்பித்திருக்கிறார்.
1980-களில் தமிழ் ரசிகர்களை ஆட்கொண்டிருந்த பாடகியான ஜென்சியும் மலையாள மண்ணிலிருந்து வந்தவர்தான். அவரைத் தொடர்ந்து சித்ராவும் கேரளத்திலிருந்து வந்து தமிழில் பெரும் சாதனைகளை நிகழ்த்தினார். டி.எம்.எஸ்.-பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-எஸ்.ஜானகி வரிசையில் மனோ-சித்ராவும் தமிழ்த் திரையுலகில் மிக அதிக எண்ணிக்கையில் மறக்க முடியாத வெற்றிப் பாடல்களைப் பாடிய பாடகர்கள் இணையாக நிலைபெற்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல்வேறு மொழித் திரைப்படங்களில் 115-க்கும் மேற்பட்ட பாடல்களை சித்ரா பாடியுள்ளார். இதுதவிர ரஹ்மான் இசையமைத்த தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.
மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணிப் பாடகியாக கடந்த 35 வருடங்களாகத் திகழ்கிறார் சித்ரா.
வங்கம், ஒரியா, பஞ்சாபி, குஜராத்தி, துளு, ராஜஸ்தானி, உருது, சம்ஸ்கிருதம், படுகா எனப் பல்வேறு இந்திய மொழிப் படங்களிலும் தனிப் பாடல்களையும் பாடியுள்ளார். மொத்தமாக 25,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் சித்ரா. இன்னும் பல ஆயிரம் பாடல்களைப் பாடும் அளவு குரல் வளத்துடனும் உத்வேகத்துடனும் இருக்கிறார்.
1985-இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'சிந்து பைரவி' படத்தில் 'பாடறியேன் படிப்பறியேன்...', 'நானொரு சிந்து' ஆகிய பாடல்களைப் பாடியதற்காகச் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை முதன்முதலில் வென்றார் சித்ரா. இதுதவிர 'மின்சார கனவு' படத்தில் 'மானா மதுரை மாமரக் கிளையிலே' பாடலுக்காகவும் 'ஆட்டோகிராப்' படத்தில் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலுக்காகவும் தேசிய விருதுகளை வென்றார் சித்ரா.
ஆறு தேசிய விருதுகளை வென்று, இந்தியாவில் மிக அதிக முறை தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமைக்குரியவர். அவற்றில் சரிபாதி தமிழ்ப்பாடல்கள்தான். 'பத்மஸ்ரீ' விருதையும் பெற்றிருக்கிறார்.
எட்டு ஃபிலிம்ஃபேர் விருதுகள் 36 மாநில அரசு விருதுகள், எண்ணற்ற சர்வதேச அங்கீகாரங்கள் சித்ராவின் சாதனை மகுடத்தை அலங்கரிக்கின்றன.
வயது மூப்பால் ஓய்வு பெற்றுவிட்ட இசைக் கலைஞர்கள் பாடகர்களின் மருத்துவம், இதர முக்கிய செலவுகளுக்கு நிதி திரட்டுவதற்காக கேரளத்தைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் சேர்ந்து ஓர் அமைப்பைத் தொடங்கி நடத்திவருகிறார். இவர் தனது முன்னோடிகளான எம்.எஸ்.சுப்புலட்சுமி, லதா மங்கேஷ்கர் ஆகியோரை கெளரவப்படுத்தும் வகையில் சிறப்பு இசை ஆல்பங்களை வெளியிட்டார்.
நாற்பது ஆண்டுகளாக, எந்த ஒரு சிடுக்கும் இன்றி புன்னகையைப் பரிசளிக்கும் பேரன்புக்காரி , குடியரசுத் தலைவரால் கெளரவிக்கப்பட்ட இசைதேவதை என்று போற்றுதலுக்கு உரியவர்.
அவருடன் மினி பேட்டி:
முதல் அறிமுகம் குறித்து சொல்லுங்களேன்?
என்னுடைய குரு டாக்டர் ஓமணக்குட்டியின்அண்ணன் எம்.ஜி. ராதாகிருஷ்ணன்தான் என்னை மலையாளப் படத்தில் பாட வைத்தார்.
முதல் பாடலே யேசுதாஸூடன் பாடியபோது பயமாக இருந்தது. ஆனால் அந்தப் பயத்தைப் போக்கி, அவர்தான் ஊக்கம் தந்தார். பின்னர், பாசில்தான் இளையராஜாவின் இசையில் பாட வைத்தார். சில இடங்களில் தவறாகப் பாடினேன். அதில், திருத்தம் சொல்லி இளையராஜாவே பாட வைத்தார். 'நீதானா அந்த குயில்' எனும் படத்தில், 'பூஜைக்கு ஏத்த பூவிது..' என்ற பாடல்தான் முதல் பாடல்.
பாடியதில் பிடித்தவை என்ன?
இளையராஜாவின் இசையில் 'நானொரு சிந்து...', தேவா இசையில் 'புல்வெளி புல்வெளி...'. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'கண்ணாளனே...,', வித்யாசாகர் இசையில் 'அன்பே அன்பே...' இன்னும் நிறைய பாடல்கள் பிடித்தவை இருக்கின்றன.
ஏமாற்றம் அடைய செய்த நிகழ்வு என்ன?
மலையாள இசையமைப்பாளர் பாபுராஜனின் இசையில் பாட முடியவில்லை என்பது பெரியவருத்தம்.
மொழி தெரியாமல் பாடியது எப்படி இருந்தது?
தமிழில் வைரமுத்து மிகப் பெரிய உதவியாக இருந்தார். அதுபோல், இளையராஜாவுடன் இருந்த சௌந்தர்ராஜன்தான் நிறைய சொல்லிக் கொடுத்தார். தெலுங்கு படிப்பேன். ஹிந்தியும் தெரியும். மற்ற மொழிப்பாடல்கள் மலையாளத்தில் எழுதி பாடுவேன்.
மிகவும் பிடித்த துள்ளல் பாடல்?
மின்சார கனவு படத்தில் வரும் 'மானாமதுரை மாமரக்கிளையிலே....' என்ற பாடல் தனக்குப் பிடிக்கும்' என்கிறார் சித்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.