மரங்களின் காவலர் 
தினமணி கதிர்

மரங்களுக்கும் காவலர்..!

சாலையோரங்களில் இருக்கும் மரங்களில் ஆணிகள் அடித்து பொருத்தப்பட்டிருக்கும் விளம்பர அட்டைகளை அகற்றும் சமூகப் பணியை ஏழு ஆண்டுகளாகச் செய்து வருகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாற்பத்து எட்டு வயதான சுபாஷ் சீனிவாசன்.

DIN

சக்கரவர்த்தி

சாலையோரங்களில் இருக்கும் மரங்களில் ஆணிகள் அடித்து பொருத்தப்பட்டிருக்கும் விளம்பர அட்டைகளை அகற்றும் சமூகப் பணியை ஏழு ஆண்டுகளாகச் செய்து வருகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாற்பத்து எட்டு வயதான சுபாஷ் சீனிவாசன்.

காவல் துறையில் பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கும் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் சீனிவாசன் இதுவரை சுமார் 400 கிலோ ஆணிகளை அகற்றி, மரங்களுக்கு மருத்துவமும் பார்த்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'மனிதன் பல பிறப்புகளில் மரமாகவும் பிறக்கிறான் என்கிறது திருவாசகம். 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலார் வரிகள்தான் மரங்களைக் காக்கும் பணியில் என்னை ஈடுபடவைத்தன.

செடிகள், கொடிகள், மரங்களுக்கும் உயிர், உணர்வு அனைத்தும் உண்டு என்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. இசையைக் கேட்டு வளர்ந்தால் பயிர்கள் அதிக விளைச்சலைத் தரும். மரத்தில் ஆணிகளை அடிக்கும்போது மரத்துக்கு நிச்சயமாக வலிக்கும்.

மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகள் சீக்கிரமே துரு பிடிக்கும். துரு மரத்தைப் பாதிக்கும். குறிப்பாக, மண்ணிலிருந்து வேர் உறிஞ்சும் தண்ணீரை இலைக்குக் கொண்டு சென்று, பிறகு ஒளிச் சேர்க்கை நடந்து உருவாக்கப்படும் சத்துகளை மீண்டும் தண்டுப் பகுதிக்கும், கொண்டு செல்லும் நுண்ணிய திசுக்களான சைலேம், பிளோயெம் பாதிக்கப்படும். இதனால், மரம் விரைவில் பட்டுப் போகும். மரத்தைச் சுற்றி விளம்பர அட்டைகளைத் தங்குவதற்காக மரங்களில் பல ஆணிகள் அடிக்கப்பட்டால், பாதிப்பு வெகுவிரைவில் உண்டாகும்.

ஒரு மரம் தனது வாழ்நாளில் சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பயன்களை மனித குலத்துக்கு அன்பளிப்பை செய்கிறது. பல ஏ.சி.க்கள் 24 மணி இயங்கி ஒரு குறிப்பிட்ட பரப்பளவை குளுமையாக வைக்கமுடியும். அதே குளிர்ச்சியை ஒரு மரம் தன் நிழலால் வழங்குகிறது.

மனிதர்கள் உயிர் வாழ மிக முக்கியமான ஆக்சிஜனை மரங்கள் வெளியிடுகின்றன. அதே சமயம் காற்றில் உள்ள பலவகை கார்பன் வாயுக்களை மரங்கள் கிரகித்து சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துகின்றன. மரத்தின் வேர்கள் மண் வளத்தை மேம்படுத்துகிறது. காய்கனிகள், பூக்கள் என்று பலவகைகளில் மரங்கள் பங்களிப்பைச் செய்கின்றன. இதனால்தான் மரங்களில் ஆணிகளை அகற்றும் பணியை மேற்கொள்கிறேன்.

மரங்களில் ஐந்து அடிக்கும் மேலான உயரத்தில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை தரையில் நின்று கொண்டு அகற்ற முடியாது. அதனால் காரில் ஏணியைக் கொண்டு செல்வேன். ஆணியை அகற்ற அதற்கு ஏற்ற சுத்தியல், நெம்புகோலுடன் செல்வேன். ஆணிகளை அகற்றியதும் , விளம்பர அட்டையில் இருக்கும் கைப்பேசி எண்ணை அழைத்து மரத்தின் முக்கியத்துவத்தைச் சொல்வதுடன், ஆணி அடிப்பதால் மரத்திற்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும் கூறுவேன். 'இனி மரங்களில் விளம்பரங்களை வைக்க ஆணி அடிக்காதீர்கள்' என்று கேட்டுக் கொள்வேன்.

இப்படியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான விளம்பர அட்டைகளை, ஆணிகளையும் மரங்களிலிருந்து அகற்றி உள்ளேன். ஆணி மரத்திலிருந்து அகற்றப்பட்டதும் ஆணி இருந்தஇடத்தில் குழி ஏற்பட்டிருக்கும். அதில் மஞ்சள் பொடியுடன் கொஞ்சம் நல்லெண்ணெய், வேப்பெண்ணெய் கலந்து குழியை அடைப்பேன். மரத்துக்கு உள்காயம் குணமாக இந்தக் கலவை உதவும்.

பணி நிமித்தம் பல நகரங்களுக்குச் செல்லும் போதும், ஓய்வு நேரங்களில் மரங்களிலிருந்து விளம்பரங்கள், ஆணிகளை அகற்றுவேன்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கும் மரங்களில் விளம்பரங்கள் வைப்பதற்காக ஆணிகளை மரங்களில் அடித்துள்ளார்கள் என்பதை அறிந்து, விடுப்பு எடுத்துகொண்டு அங்கு சென்று ஆணிகளை அகற்றிவிட்டு வந்தேன்.

இதுதவிர, பொதுஇடங்களில் பொதுமக்கள், பள்ளி மாணவர்களை இணைத்து மரக்கன்றுகளை நட்டுவருகிறேன்.

ராமநாதபுரம் சேதுபதி குளத்தில் சீமைக் கருவேல மரங்கள், முள்மரங்களை அகற்றி, வேலியை அமைத்து பனை மரங்கள் உட்பட பல வகை மரங்களை நட்டு பூங்காவாக மாற்றியுள்ளேன். பள்ளிகளுக்குச் சென்று பசுமை குறித்தும், மரங்களின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்.

கர்நாடகம், கேரள மாநிலங்களில் மரங்களில் ஆணி அடிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என சென்னை பெருமாநகராட்சி அறிவித்துள்ளது. 'மரங்களில் விளம்பர போர்டுகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கலாம் என திருப்பூர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, தமிழகம் முழுவதும் நடைப்படுத்தும்விதமாக மரங்களில் விளம்பரங்களை வைக்க ஆணி அடிப்பதைத் தடை செய்து சட்டம் கொண்டுவர வேண்டும்' என்கிறார் சுபாஷ் சீனிவாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

குஜராத்தில் உருவானது வாக்குத்திருட்டு; 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல்

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT