'இளைய தலைமுறையினர் முதலில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கல்வி ஒன்றுதான் உங்களை உயர்த்தும் என்பதை உணர்ந்து பயிலுங்கள். அடுத்து கடின உழைப்பும் விடா முயற்சியும் அவசியம். கல்வி மூலம் சுய காலில் நிற்கும் நிலை வந்தவுடன் அரசியலுக்கு வாருங்கள். அரசியலில் நேர்மையான தலைமையைத் தேர்ந்தெடுத்து அந்த கட்சியில் இணையுங்கள்'' என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்.
தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு 'தகைசால் தமிழர்' என்ற விருதை தமிழ்நாடு அரசு வழங்கி, கௌரவிக்கிறது.
நிகழாண்டு முதுபெரும் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை கோட்டையில் ஆகஸ்ட் 15இல் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அவருக்கு விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட குடியாத்தம் அருகேயுள்ள காக்காதோப்பு கிராமத்தில், பிரபல சிறுநீரகவியல் நிபுணர் பி.சௌந்திரராஜன் தலைவராக இருந்து நடத்திவரும் அத்தி கல்விக் குழுமத்தின் இயற்கை மருத்துவக் கல்லூரியில் கடந்த சில மாதங்களாக குமரி அனந்தன் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருடன் ஓர் சந்திப்பு:
கே: விருது கிடைத்தது குறித்து?
எனது தமிழ்ப் பற்றுக்கும், தமிழுக்கு நான் ஆற்றிய தொண்டுக்கும் கிடைத்த அங்கீகாரம்தான் இந்த விருது. எனக்கு விருது கிடைத்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்.
கடுமையான நிதி நெருக்கடியிலும் தமிழக சிறுவர்களின் 'கல்வி ஒன்றே குறி' என்ற எண்ணத்தில் உணவு கொடுத்தாலாவது அவர்கள் பள்ளிக்கு வர மாட்டார்களா? என்ற எண்ணத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி தமிழகத்தில் காமராஜர் கல்விப் புரட்சி செய்தார். அவரது வழியை பின்பற்றி இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அவர் கையில் விருது பெறுவதை நான் பெருமையாக கருதுகிறேன்.
குடியாத்தத்தில் மருத்துவச் சிகிச்சை பெற தங்கியுள்ளதன் காரணம்?
இக்கட்டான காலகட்டத்தில் தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட காமராஜரை, இடைத் தேர்தலில் வெற்றிபெற வைத்து, முதல்வராக தொடர வாய்ப்பு அளித்த குடியாத்தம் தொகுதி மக்களை, 'காமராஜரின் தொண்டன்' என்ற முறையில் வணங்கி, பாராட்டுகிறேன். காமராஜருக்கு பெருமை சேர்த்த இந்த குடியாத்தம் மண்ணில் இன்று நான் ஓய்வெடுக்கவும், சிகிச்சை பெறவும் தங்கியுள்ளது எனக்கு பெருமையாக உள்ளது.
இளமைக்காலம், அரசியல் வாழ்க்கை குறித்து?
19.3.1933இல் கன்னியாகுமரியில் பிறந்த நான் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் ஏற்பட்ட அவமானத்தால் நான் சென்னைக்கு சென்று விட்டேன். கையில் இருந்த பணம் எல்லாம் தீர்ந்த பிறகு ஊருக்குச் சென்றேன். பின்னர் கல்வியைத் தொடர்ந்த நான் பி.ஏ, பொருளாதாரம், எம்.ஏ. தமிழ், எம்.ஏ. அரசியல் பயின்றேன். எனது குடும்பம் காங்கிரஸ் குடும்பம் என்பதாலும், காமராஜர் மீதான பற்று காரணமாகவும் நான் கல்லூரிக் காலத்திலேயே காங்கிரஸில் என்னை இணைத்துக் கொண்டேன்.
வாழ்க்கையில் மறக்க முடியாத உங்களின் சாதனைகள் என்ன?
நாடாளுமன்றத்தில் ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் கேள்விகேட்கும் நடைமுறை 1977ஆம் ஆண்டு வரையில் இல்லை. நான் காமராஜர் தொகுதியான நாகர்கோவிலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டேன். அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான அமைச்சரவையில் நான் தமிழ் மொழியில் கேள்வி கேட்கும் உரிமையை கோரிக்கையாக வைத்தேன். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 'தனி மரம் தோப்பாகாது' என்ற பழ
மொழியை தோல்வியுறச்செய்து தமிழில் கேள்வி கேட்கும் உரிமையை பெற்றுத்தந்து, தமிழுக்கு பெருமை சேர்த்தேன்.
ஹிந்தி, ஆங்கில மொழிகளில் மட்டும் தான் யுபிஎஸ்சி தேர்வு எழுதப்பட்டு வந்தது. மக்களவையில் பலமுறை போராடி, தமிழ் உள்ளிட்ட நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வு எழுதும் அனுமதியை பெற்றுத் தந்தேன்.
அந்த காலத்தில் மணியார்டர் மூலம் தான் வெளியூர்களுக்கு பணம் அனுப்பும் வசதி இருந்தது. அந்த மணியார்டர் பாரம் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே இருந்தது. தமிழில் மணியார்டர் பாத்தை பூர்த்தி செய்து பணம் அனுப்பும் உரிமையை மக்களவையில் போராடி பெற்றுத் தந்தேன்.
'நீங்களும் பேச்சாளராகலாம்' என்று நான் எழுதிய நூல் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று, 13 பதிப்புகள் அச்சிடப்பட்டு, விற்கப்பட்டது. 'சொற்பொழிவுக் கலை' என்ற தலைப்பில் நான்கு நூல்களையும், பாரதியாரின் 100 ஆவது ஆண்டில் 'சிந்தனை பண்ணையில் பாரதி' என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளேன்.
மூத்த அரசியல் தலைவரான நீங்கள் இளைய தலைமுறையினருக்கு தங்களின் அறிவுரை என்ன?
இன்றைய இளம் தலைமுறையினருக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், முதலில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவசியம். கல்வி ஒன்று தான் உங்களை உயர்த்தும் என்பதை உணர்ந்து பயிலுங்கள். கல்வி மூலம் சுய காலில் நிற்கும் நிலை வந்த பிறகு அரசியலுக்கு வாருங்கள். அரசியலில் நேர்மையான தலைமையை தேர்ந்தெடுத்து அந்தத் கட்சியில் இணையுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.