ஒன்றுக்கும் உதவாது என தூக்கி எறியப்படும் தேங்காய் சிரட்டைகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருள்கள் செய்து அசத்தி வருகின்றனர் சகோதரிகள் அக்ஷயா, யுவஸ்ரீ.
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்ள தரங்கம்பாடி அருகே ஆக்கூர் கிராமத்தில்ஆக்கூரைச் சேர்ந்த ராமமூர்த்தி, அருள்மங்கை தம்பதியின் மகள்கள்தான் இவர்கள்.
அக்ஷயா முதுகலை இரண்டாம் ஆண்டும், யுவஸ்ரீ பதினோராம் வகுப்பு படித்து வருகின்றனர்.
யுவஸ்ரீக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தின் மீது அதீத ஆர்வம். முறையான பயிற்சி இல்லாமலே காண்பதை அப்படியே வரையக்கூடிய திறமை படைத்தவர். கரோனா காலத்தில் அக்ஷயாவும் ஓவியம் வரையத் தொடங்கினார். இப்போது இருவரும் ஒன்றுசேர்ந்து தேங்காய் சிரட்டைகளில் கைவினைப் பொருள்களைச் செய்து அசத்தியும் வருகின்னர்.
அவர்களிடம் பேசியபோது:
'ஓவியத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. தூக்கி எறியும் தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு கைவினைப் பொருள்களைத் தயாரிக்க முடிவு செய்தோம்.
முட்டை ஓடுகள், கண்ணாடி பாட்டில் களில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தோம். பின்னர் மேஜையில் அலங்காரத்துக்கு வைக்கக் கூடிய பொருள் , தண்ணீர் அருந்துவதற்கான கிண்ணம் உள்ளிட்டவற்றை தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தயாரித்தோம்.
சிறிய ரக ஆக்ஷா பிளேடு மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தி எந்தவித இயந்திரமும் இன்றி தேங்காய் சிரட்டையில் பல்வேறு பொருள்களைச் செய்யத் தொடங்கினோம்.
தூக்கி எறியும் தேங்காய் சிரட்டைகளை எரித்து அதில் வரும் கறித் துகள்களை பயன்படுத்தி தத்ரூபமாக வரைகிறோம். இதைப் பலரும் பாராட்டுகிறோம்.
படித்து முடித்தவுடன் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி தேநீர் கோப்பை , அழகு சாதனப் பொருள்கள், தண்ணீர் கப், கிண்ணம் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறோம். அதனை பலருக்கும் விற்பனை செய்து குறிப்பிட்ட அளவிலான தொகையை படிக்கும் வயதிலேயே ஈட்டி வருகிறோம். அந்தத் தொகையை இருவரும் வீட்டை எதிர்பார்க்காமல் தங்களது கல்விச் செலவுக்கு ஓவியங்கள் வரைவதற்கும் கைவினைப் பொருள்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தனித் திறமைகளை காட்சிப்படுத்தியும் வருகிறோம். பலரும் ஆர்வமுடன் முன் வருகின்றனர்.
எங்களது முயற்சிக்கு பெற்றோரும், சகோதரி ரஞ்சனியும் உதவியாக இருக்கின்றனர்.
நெகிழிக்கு மாற்றாக இயற்கையுடன் இணைந்த தென்னை பொருள்களைக் கொண்டு அதிக உற்பத்தியைத் தொடங்க அரசு உதவ வேண்டும்'' என்கின்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.