நித்யா மேனன் 
தினமணி கதிர்

கோலிவுட் ஸ்டூடியோ!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் செப்டம்பர் 5இல் வெளியாகிறது.

அசோக்

டீ ஏஜிங் விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் செப்டம்பர் 5இல் வெளியாகிறது. பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மோகன் வில்லனாக கம்பேக் கொடுத்திருக்கிறார்.

யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் எபிக், ஐமேக்ஸ் ஆகிய ஸ்கிரீன்களிலும் வெளியாகும் என்பதை ஸ்பெஷல் போஸ்டர்களோடு படக்குழு அறிவித்திருந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு டிரெய்லர் ரிலீஸ் ஆனது.

டிரெய்லரின் ஆரம்பத்தில் "அண்ணா வர்றார் வழிவிடு' என்ற பஞ்ச் இடம் பெற்றிருக்கிறது. மாஸான ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. அதேசமயம் தந்தை மகன், கணவன் மனைவி தொடர்பான சென்டிமென்ட் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஹைலைட்டாக இதில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய்.

இளமையான விஜய்க்கு டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் சில காட்சிகள் சற்று செயற்கையாக இருப்பதாக கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

மொத்தம் 2 நிமிடம் 52 விநாடிகள் இருக்கும் இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. படம் மீதான எதிர்பார்ப்பை டிரெய்லரில் எகிறச் செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இளையராஜா பயோபிக்!

தனுஷின் 51ஆவது படமான "குபேரா' தெலுங்கு, தமிழ் இரண்டிலும் வெளியாகிறது. தெலுங்கில் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். இதற்கு முன் அங்கே அவர் "ஹேப்பி டேஸ்', "கோதாவரி', "ஃபிடா', "லவ் ஸ்டோரி', "லீடர்' எனப் பல ஹிட் படங்களின் இயக்குநர் என்பதால் அவரது இயக்கத்தில் நடிக்க தெலுங்கின் முன்னணி நாயகர்களே விரும்புவார்கள். இப்போது தனுஷை வைத்து அவர் இயக்கிவரும் "குபேரா'வில் நாகார்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர்.

ஹைதராபாத், பாங்காக் எனப் பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிட்டது. தனுஷின் போர்ஷன் மட்டும் இன்னும் 10 நாள்கள் படமாக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள். அதோடு முழுப் படப்பிடிப்பும் நிறைவு பெறுகிறது. அதைப் போல "ராயன்' படத்துக்குப் பின்னர் தனுஷ் இயக்கி வரும் படம் "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'.

இதில் தனுஷின் அக்கா மகன் பவிஷ், ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ரம்யா எனப் பலரும் நடித்து வருகின்றனர். தயாரிப்பும் தனுஷ்தான். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். "ராயன்', "குபேரா' இரண்டு படப்பிடிப்புகளுக்கிடையே இந்த படத்தின் ஷூட்டிங்கையும் அவ்வப்போது நடத்தி வந்தார் தனுஷ். இதில் அவர் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடிக்கிறார் என்றும் தகவல். இன்னும் 30 சதவீதப் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. அதோடு மொத்த படப்பிடிப்பும் முடிவடைகிறது.

கடந்த பிப்ரவரியில் காதலர் தின ஸ்பெஷலாக படத்தின் அறிவிப்பு வெளியானது. அதைப் போல வரும் காதலர் தினத்துக்குப் இந்தப் படத்தைக் கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இளையராஜாவின் பயோபிக்குக்கு தனுஷ் செல்வார் என்று தெரிகிறது. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் தனுஷுக்குக் கட்டுப்பாடுகள் இருப்பாதால், அந்தப் பிரச்னைக்கு தீர்வு எட்டிய பிறகே அவர் அடுத்த படத்துக்குச் செல்ல முடியும் என்கின்றனர்.

இதற்கிடையே "இளையராஜா' பயோபிக் பட வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன. படப்பிடிப்பிற்கான லொக்கேஷன்களை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பார்த்து வருகிறார். இளையராஜா தான் பிறந்து வளர்ந்த இடங்களுக்கு இயக்குநரை அழைத்துகொண்டு சுற்றிக் காண்பித்ததோடு, தான் வளர்ந்த ஊர்களை எல்லாம் சொல்லி, அங்கும் லொக்கேஷன் பார்க்கச் சொல்லியிருக்கிறார். படத்தின் புரொடக்ஷன் டிசைனரும், கலை இயக்குநருமான முத்துராஜிடம் அந்தக் காலத்தில் தன் கிராமத்தில் உள்ள இடங்கள், வீடுகள் எப்படியிருந்தன, எப்படி செட்கள் அமைய வேண்டும் என தனது இன்புட்ஸ்களைக் கொடுத்துள்ளார். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

சிறந்த நடிப்பு? - நித்யா மேனன்

2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 70-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த நடிகையாக நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுதவிர "திருச்சிற்றம்பலம்' படத்தின் "மேகம் கருக்காதா' பாடலுக்குச் சிறந்த நடன இயக்கத்துக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நித்யா மேனனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஆனால், சிலர் "இது வழக்கமான கதாபாத்திரம்தானே? சாதாரணமாக நடித்ததெற்கெல்லம் விருதா?' என்று நித்யா மேனன் விருது வென்றது குறித்து விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நித்யா மேனன், 'திருச்சிற்றம்பலம்' படத்தில் எனது நடிப்பு சாதாரணமாகத் தெரியும். ஆனால் அதன் பின்னுள்ள உழைப்பைப் புரிந்துகொண்ட தேர்வுக் குழுவுக்கு நன்றி. சிறந்த நடிப்பு என்பது எடைக்குறைப்போ அல்லது அதிகரிப்போ அல்லது செயற்கையாக உடலை மாற்றிக் கொள்வதோ கிடையாது. அதெல்லாம் நடிப்பின் ஒரு பகுதிதான். அதுவே முழுமை கிடையாது.இதற்காக எவ்வளவு உழைத்திருக்கிறேன் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த விருது எனக்கு, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், மற்றும் தனுஷ் ஆகிய நால்வருக்குமானது. ஏனென்றால் எந்தப் படத்திலும் நடிகருக்கு இணையான வேடத்தில் நான் இதுவரை நடித்ததில்லை'' என்று கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT