முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தலைசுற்றல் குணமாக வழி என்ன?

என் கணவருக்கு வயது முப்பத்து ஏழு. பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார். பாடம் நடத்தும்போது, அவ்வப்போது தலைசுற்றல் ஏற்பட்டு அமர்ந்து சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார்.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 12:00 AM
இஞ்சி
பகிர்:
Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 8:15 PM

என் கணவருக்கு வயது முப்பத்து ஏழு. பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார். பாடம் நடத்தும்போது, அவ்வப்போது தலைசுற்றல் ஏற்பட்டு அமர்ந்து சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர், அவர் பாடம் நடத்துகிறார். அவருடைய உடல் உபாதை குணமாக ஆயுர்வேத மருந்து உள்ளதா?

முத்துகுமாரி, ஆத்தூர்.

உடல், மன தோஷங்களாகிய வாதம் பித்தம் ரஜஸின் சேர்க்கையால் ஏற்படுவது தலைசுற்றல் உபாதையாகும். உணவின் ஆரம்பச் செரிமானத்தில் இருந்து வெளிப்படும் உணவுச் சத்தை ஏந்திச் செல்லும் குழாய்கள், ரத்த வகை நாளங்கள் ஆகியவற்றில் ஏற்படும் கெடுதிகளால் இந்த உபாதையானது தோன்றக் கூடும். விஷத்தினாலோ, மதுபானம் அருந்துவதாலோ, சில வாசனைப் பொருள்களாலோ, அதிக நேரம் வெயிலில் நிற்பதாலோ, ரத்தக் குறைவினாலோ, உடலில் சர்க்கரை அளவு குறைந்தாலோ, தலைசுற்றல் ஏற்படலாம்.

Advertisement

மேலும், கழுத்தெலும்பு தேய்வினாலோ, மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் இறுக்கம் ஏற்பட்டாலோ, ரத்த நாளங்களில் கொழுப்புப் படிவதாலோ, உள்காதுப் பிரச்னையாலோ, மனதில் ஏற்படும் சஞ்சலங்களாலோ தலைசுற்றல் ஏற்படலாம்.

அதனால் வாத, பித்த தோஷங்களில் சீற்றத்தை சமநிலைப்படுத்துதல், ரத்தத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிப்பது என்ற வகையில் சிகிச்சை செய்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

நெல்லி, இஞ்சி, ஏலக்காய் போன்றவை இந்த நோய்களில் மிக்க பலன் அளிக்கின்றன. கொத்தமல்லி, விதை, சந்தனத் தூள், நெல்லி வற்றல் ஆகிய மூன்றையும் கஷாயமாக்கி அல்லது வென்னீரில் டீ போல் தயாரித்துச் சாப்பிடப் பித்தத்தால் ஏற்படும் தலைசுற்றல் நீங்கும். இஞ்சியைச் சாறு பிழிந்து இருநூறு மில்லி அளவு எடுத்துச் சிறிதுநேரம் வைக்கச் சாறு தெளியும்.

Updated On : 24 ஆகஸ்ட், 2024 at 8:15 PM

அடியில் படிந்துள்ள சுண்ணாம்பு போன்ற மாச்சத்தை அகற்றி தெளிந்த சாறை இருநூறு மில்லி தேனுடன் கலந்து இளந்தீயில் காய்ச்சி பானகமாக்கி வடிகட்டி குங்குமப்பூ, ஏலம், ஜாதிக்காய், கிராம்பு வகைக்கு ஒரு கிராம், பச்சைக் கற்பூரம் அரை கிராம் கலந்து வைத்திருந்து உணவுக்கு முன் சாப்பிட்டு வர பசி, செரிமானச் சக்தி அதிகமாகும். வயிற்றுக் கனம், உண்டவுடன் அசதி, தலைசுற்றல் நீங்கும்.

ஐந்து அல்லது ஆறு ஏலக்காய்களைக் கஷாயமிட்டுப் பனை வெல்லம் சேர்த்துச் சாப்பிடத் தலைசுற்றுதல், மயக்கம் நீங்கும்.

தலைக்கு வாதபித்தங்களைக் குறைக்கும் சந்தனாதி, அமிருதாதி போன்ற தைலங்களை இளஞ்சூடாக, பஞ்சில் முக்கி சிறிது வைத்திருத்தல், க்ஷீரபலா, நாராயணதைலம், மதுயஷ்டியாதி தைலம், மஞ்சிஷ்டாதி தைலம், முறிவெண்ணெய் போன்றவற்றால் உடலில் தேய்த்துக் குளித்தல், க்ஷீரபலா, அனுதைலம் போன்றவை மூக்கினுள் ஊற்றி உறிஞ்சுதல், கார்ப்பாஸாஸ்யாதி தைலத்தை இளஞ்சூடாக, காதினுள் ஊற்றி நிரப்பி வைத்தல் ஆகிய சிகிச்சை முறைகள் பலனுள்ளவை.

ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்காக, சில நேரங்கள் அர்ஜீனாரிஷ்டம், தசமூலாரிஷ்டம், கஸ்தூர்யாதி குளிகை போன்றவையும் கொடுப்பதுண்டு. சில சந்தர்ப்பங்களில் சிரோதாரை எனும் தலையில் எண்ணெய் ஊற்றும் சிகிச்சை, சிரோவஸ்தி எனும் தலையில் தைலங்களை வைத்து நிறுத்திவைத்தல் போன்ற சிகிச்சை முறைகளும் நல்ல பலனை விரைவில் அளிக்கின்றன.

பொதுவாக, திரிபலாசூரணத்தை (ஐந்து கிராம்) சூடான நூற்று ஐம்பது மில்லி பாலுடன் இரவில் படுக்குமுன் சாப்பிட நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.