முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து...

'சிலாஜித்' என்ற ஆயுர்வேத மருந்து உடலுக்கு மிகவும் நல்லது என்று கேள்விப்படுகிறேன். அது பற்றிய விவரங்களை அறிய விரும்புகிறேன்.

Updated On : 28 மார்ச், 2026 at 10:33 PM
சிலாஜித்
பகிர்:

'சிலாஜித்' என்ற ஆயுர்வேத மருந்து உடலுக்கு மிகவும் நல்லது என்று கேள்விப்படுகிறேன். அது பற்றிய விவரங்களை அறிய விரும்புகிறேன்.

-மாசிலாமணி, திருநெல்வேலி.

'சர்வாமயே சிலாஜது' என்கிறது ஆயுர்வேதம். அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்தது என்று சிலாஜித்தைக் குறிப்பிடலாம். அது மிகவும் முக்கியமான ஓர் இயற்கை மருந்துப்பொருள். மலைப்பாறைகளின் இடைவெளிகளில் இருந்து வெளியேறும் கருமையான, பிசுபிசுப்பான கனிமச்சத்து கொண்ட பொருளாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மூலிகைகள், தாவரங்கள், பாசி போன்றவை மலைகளில் அழிந்து கனிமங்களுடன் கலந்து உருவாகும் இயற்கைச் சுரப்பாக இது கருதப்படுகிறது.

சிலாஜித் முக்கியமாக இமயமலைப் பகுதிகளில் காணப்படுகிறது. அதே போல் திபெத், நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற உயரமான மலைப்பகுதிகளைக் கொண்ட நாடுகளிலும் கிடைக்கிறது. ஆயுர்வேதத்தில் 'சிலாஜித்' மிகவும் மதிப்பு மிக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உடலின் சக்தியை அதிகரித்து, முதுமையைத் தாமதப்படுத்தி பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. அதன் கனிமச் சத்துகளின் அடிப்படையில் நான்கு முக்கிய வகைகளாகக் காணப்படுகிறது.

1. ஸ்வர்ண சிலாஜித் (தங்கம் சார்ந்த கனிமச் சத்து) - உடல் சக்தி அதிகரிக்கும், நரம்பு சக்தி மேம்படும், நினைவாற்றல் அதிகரிக்கும், முதுமையைத் தாமதப்படுத்தும். கேப்ஸ்யூலாக தற்சமயம் விற்பனையில் உள்ளது. ஒரு கேப்ஸ்சூலை இரவில் படுக்கும் முன் சிறிது சூடான பாலுடன் சாப்பிடலாம்.

2. ரஜக சிலாஜித் (வெள்ளி சார்ந்தது) - மன அழுத்தம் குறைக்கும், நரம்பு மண்டலத்துக்கு நல்லது.

3. தாம்ர சிலாஜித் (செம்பு சார்ந்தது) - ஜீரண சக்தி மேம்படும், கல்லீரல் செயல்பாடு சீராகும், உடல் சுத்திகரிப்பு செய்ய உதவும்.

4. லௌஹ சிலாஜித் (இரும்பு சார்ந்தது) - ரத்த சோகை குறைக்கும், உடல் பலம் அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். இது மருத்துவப் பயன்பாட்டில் அதிகம் உள்ளது.

வேங்கை மரப் பட்டை மற்றும் கருங்காலி கட்டையைக் கொண்டு கஷாயம் தயாரித்து, அதில் சாதம் வடித்து, புலால் உணவுடன் சூப்பாகக் கலந்து, அதில் சிலாஜித் சேர்த்து சாப்பிட்டால் நீரிழிவு உபாதை, அதனால் ஏற்படும் பக்கவிளைவு உபாதைகள், நிணநீர் கிரந்தி வீக்கம், கேன்சர் கட்டிகள், உடல் பருமன், குஷ்டம், பௌத்திரம், குடல் கிருமிகள், யானைக்கால் நோய், வீக்கம் போன்றவைகளுக்கு நல்லதொரு தீர்வைத் தரும் என்று ஆயுர்வேத நூல் ஒன்று குறிப்பிடுகிறது.

சிலாஜித்துக்கு கண்மதம் என்ற ஒரு பெயரும் உள்ளது. தற்சமயம் கேப்ஸ்யூலாகக் கிடைக்கிறது. திரிபலா கஷாயத்துடன் இதைச் சாப்பிட, சிறுநீரகங்களின் உள்புற ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடல் வீக்கத்தை வற்றச் செய்கிறது.

சிலாஜித்தைப் பாலுடன் இரவில் சாப்பிட, பாலியல் சக்தி மேம்படும். ஆண் - பெண் இருபாலருக்கும் நல்லது. அதையே சிறிது தேன் கலந்து சாப்பிட, சளி, இருமல் குறையும். நாள்பட்ட தோல் உபாதைகளில், கருங்காலி மற்றும் சரக்கொன்னைப் பட்டை கஷாயத்துடன் சாப்பிட, ரத்தம் சுத்தமாகி, தோலில் ஏற்படும் அரிப்பு, சொறி, சிரங்கு, படை போன்றவை குணமாகும். சந்தையில் பல போலியான சிலாஜித் பொருள்கள் இருக்கலாம். அதனால் நம்பகமான நிறுவனங்களின் பொருள்களை மட்டுமே வாங்க வேண்டும். தூய்மைப்படுத்தப்பட்ட சிலாஜித் பயன்படுத்த வேண்டும்.

கர்ப்பிணிகள், குழந்தைகள், தீவிர கல்லீரல் நோயாளிகள், அதிக யூரிக் ஆசிட் உள்ளவர்கள் - மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சிலாஜித்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. அது போலவே கற்பூர சிலாஜித் எனும் மருந்தும் மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட, பல உபாதைகளுக்குத் தீர்வு ஏற்படும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.