முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சிறுநீரில் ரத்தம் வருவதைத் தடுக்க...

என் வயது 74. மூத்திரப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், நவம்பர் 25- இல் கதிர்வீச்சு சிகிச்சை பெற்று குணமடைந்தேன்.

Updated On : 17 மே 2026, 4:08 am IST
பகிர்:

என் வயது 74. மூத்திரப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், நவம்பர் 25- இல் கதிர்வீச்சு சிகிச்சை பெற்று குணமடைந்தேன். பிப்ரவரி 26 முதல் சிறுநீரில் ரத்தம் கலந்து வந்தது. கீமோதெரபி டைப் -02 ஊசி சிகிச்சை பெறுகிறேன். மூத்திரப்பையை அகற்றவேண்டும் - அறுவைச்சிகிச்சையைத் தாங்கும் வலிமை உடலுக்கு இல்லை என்று கூறிவிட்டனர். ஆயுர்வேதத்தில் சிறுநீரில் ரத்தம் வெளிவருவதைத் தடுக்க என்ன மருந்து சாப்பிடலாம்?

-வாசகர், திருச்சி.

மூத்திரப்பை புற்றுநோயில் சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது பொதுவான அறிகுறி. இதற்குக் காரணங்கள் பல இருக்கலாம்.

Advertisement

புற்றுநோய்க் கட்டி மீண்டும் ரத்தக்கசிவை ஏற்படுத்துதல்.

கீமோதெரபி காரணமாக மூத்திரப்பை உள் சவ்வு எரிச்சல் அடைதல்.

தொற்று (இன்பக்ஷன்).

உடல் ரத்த அணுக்கள் குறைதல்.

ரத்த உறைவு குறைபாடு.

பலவீனமான ரத்த நாளங்கள்.

கதிர்வீச்சு சிகிச்சையின் பிந்தைய விளைவுகள்.

சில நேரங்களில் சிறிய அளவு ரத்தம் மட்டும் இருக்கும். சிலருக்கு சிவப்பு நிற சிறுநீர், ரத்தக் கட்டிகள், எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், வலி போன்றவை ஏற்படலாம்.

ஆயுர்வேத பார்வையில் இதற்கு 'அதோகத ரக்தபித்தம்', 'மூத்ரகத ரக்தபித்தம்' என்று குறிப்பிடப்படுகிறது. ஆடோதோடை இலைச் சாற்றினால் உடலில் இருந்து வெளியேறும் எந்த வகை ரத்தத்தையும் தடுத்து நிறுத்த முடியும்.

நீங்கள் இந்த இலைகளை மண் சட்டியில் தண்ணீருடன் கலந்து, நன்கு வேகவைத்து, இடித்துப் பிழிந்த இலைச் சாறை சூடாறிய நிலையில் சுமார் 15 - 20 மில்லி எடுத்து, 5 மில்லி தேன்கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் பருகவும். இதனால் ரத்தக் கசிவு நிற்பதுடன், சிறுநீரகப் பாதையில் ஏற்பட்டுள்ள குழாய்ப் புண்களும் ஆறிவிடும்.

குடகப் பாலை, சிறு நாகப்பூ, வெள்ளிலோத்திப்பட்டை, சந்தனம், நெருஞ்சில் விதை, வெட்டிவேர், இலவம் பஞ்சு மரப் பிசின், கோலரக்கு போன்ற ஆயுர்வேத மருந்துகளால் நீங்கள் மேலும் பயன் அடையலாம்.

ரத்தக் கசிவை நிறுத்திட அத்திக்காயை இடித்துப் பிழிந்தெடுத்த சாறை, தேனுடன் கலந்து சாப்பிடுவதை பண்டைய கிராமங்களில் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதுபோலவே பேயத்திக் காயையும் பயன்படுத்தலாம்.

3 கிராம் கடுக்காய்த்தூளை 6 மில்லி தேனுடன் குழைத்து, உணவுக்கு முன் இருவேளை சாப்பிட ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம். பசியை நன்றாகத் தூண்டிவிட்டு, செரிமானத்துக்கும் நன்கு உதவும்.

3 கிராம் கடுக்காயை, 15 மில்லி ஆடாதோடை இலைச் சாறுடன் அரைக்க வேண்டும். சாறு வற்றும் வரை அரைக்கவும். ஏழுமுறை சாற்றை விட்டு அரைத்து, அந்த விழுதை உள்ளுக்குச் சாப்பிட அனைத்துவித ரத்தக் கசிவையும் கட்டுப்படுத்தலாம் என்று சக்ர தத்தர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார்.

வாஸாக்ருதம் அல்லது விருஷ கிருதம் என்ற பெயரில் ஒரு மூலிகை மருந்து விற்பனையில் உள்ளது. ஆடாதோடையின் வேர், இலைகள், கிளை, பூக்கள் மற்றும் பசுநெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் இந்த மூலிகை நெய் மருந்தை 5 கிராம் அளவில் எடுத்து (ஒரு தேக்கரண்டி) அதில் சமம் அல்லாத அளவில் 5 முதல் 10 கிராம் வரை தேனும் சர்க்கரையும் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு, அதன் மேல் 100 மில்லி வெதுவெதுப்பான பசும்பால் சாப்பிட்டு வர, சிறுநீரில் வெளியேறும் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.

இருமல், ஆஸ்துமா, பித்தக் காய்ச்சல், வயிற்று வலி, குல்மம், கல்லீரல் - மண்ணீரல் வீக்கம், இதய உபாதைகள், சோகை, கண்புரை, தோல் உபாதை மற்றும் குரல்வளை உடைப்பு போன்ற உபாதைகளையும் இம்மருந்து குணப்படுத்தும் என்று சரக முனிவர் கூறுகிறார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.