முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரப்பான் நோயைக் குணப்படுத்த...

எனக்கு வயது 53. கசிவுடன்கூடிய கரப்பான் நோய்-வீபிங் எக்ஸிமா எனும் உபாதையால் கடந்த மூன்று வருடங்களாகக் கஷ்டப்படுகிறேன்.

Updated On : 28 ஜூன் 2026, 4:02 am IST
பகிர்:

எனக்கு வயது 53. கசிவுடன்கூடிய கரப்பான் நோய்-வீபிங் எக்ஸிமா எனும் உபாதையால் கடந்த மூன்று வருடங்களாகக் கஷ்டப்படுகிறேன். தோல் கறுத்துவிட்டது. இதை எப்படிக் குணப்படுத்துவது?

முஸ்தபா, காரைக்கால்.

பூவரசு இலை ஐந்து - ஆறு எடுத்து அந்தக் கரப்பானிருக்குமிடத்தில் அப்படியே வைத்துக் கட்டினால் அரிப்பு, வீக்கம், வலி, நீர்க்கசிவுப் புண் ஏழு, எட்டு நாள்களுக்குள் குறையும். களிம்பு மருந்துகள் தற்காலிகமாகக் கசிவைக் குறைக்கும். ஆனால், சூழ உள்ள திசுக்கள் அவற்றின் உபயோகத்தால் உணர்விழக்கும். தோல் கறுத்துவிடும். அதனால் களிம்பு தரும் குணத்தைவிட இதில் குணம் அதிகம் தெரியும். கரப்பானைச் சுற்றியுள்ள தோல் நல்லுணர்வு பெறுவதை உணரமுடியும்.

Advertisement

Advertisement

முதலில் புண் மேல் வைத்துக் கட்டின பூவரச இலைகளின் இடையே கரப்பான் இருப்பதைக் காணமுடியும். இந்த வேதனைக் குறைவு தற்காலிகமாக இருந்தாலும் செலவில்லை; பின்விளைவில்லை. நோய் நீங்கும் தகுதிபெறத் தோலுக்கு இயற்கை வலிவு கிட்டும்.

தோல் உபாதைகளுக்கான பொதுக்காரணங்களாகிய குளிர்ச்சி, சூடான வீர்யம் கொண்ட பொருள்களை உடனுக்குடன் சாப்பிடுதல் அல்லது அவற்றை தோலின்மீது பயன்படுத்துதல், அதுபோல வறண்ட, நெய்ப்புடைய பொருள்களை மாறிமாறி தோலில் பூசுதல், உள்ளுக்குப் பயன்படுத்தல், செரிமானக்கோளாறு உள்ள நிலையில் அடிக்கடியும் அதிகமாகவும், தேன், முள்ளங்கி, மீன், மணத்தக்காளி சாப்பிடுதல், செம்மீனை பாலுடன் சாப்பிடுதல், தயிர், நல்லெண்ணெய் அதிகம் சாப்பிடுதல், அவற்றைப் பயன்படுத்திய உடன் சிற்றின்ப சுகம் அனுபவித்தல், பயம், உடன் குளிர்ந்த நீரில் மூழ்குதல் அல்லது குளித்தல், வாந்தியை அடக்குதல், பகல் தூக்கம் (உணவு உண்டபிறகு) போன்றவற்றை நீங்கள் தவிர்க்கவேண்டும்.

அரிசி மாவை கரப்பான் நீரால் கொதகொதத்து அரிப்பு சினப்புள்ள இடங்களில் தூவ அரிப்பு அடங்கும். புண்ணில் நீர்க்கசிவு நிற்கும். அரிப்பு, சொறி முதலிய தோல் நோயுள்ளவர்கள் சோப்பு வகையைத் தவிர்த்து அரிசிமாவைத் தயிரிலோ மோரிலோ தண்ணீரிலோ குழப்பித் தேய்த்துக் கொள்ள இதமாய் இருக்கும். கிராமங்களில் ஒரு வழக்கமுண்டு. அவரை இலையின் பழுப்பு, சீமை அகத்தி இலையின் பழுப்பு, குப்பை மேனியிலை, பூவரசம் பழுப்பு ஆகியவற்றை இடித்துப் பிழிந்து சாறு, இதற்கு சம அளவு வேப்பெண்ணெய் இவற்றைக் கூட்டி வெயிலில் வைக்க வேண்டும். இரண்டு மூன்று நாள்களில் இலை, சாறு எல்லாம் உலர்ந்து எண்ணெய் மட்டும் நிற்கும். இந்த எண்ணெய்யை இரு வகை எக்ஸிமாக்களுக்கும் மேற்பூச்சாகப் பயன்படுத்துவார்கள். இது பயன்தரக்கூடியதாக இருக்கும் என்று தோன்றுகிறது. பேதிக்கும் மருந்து சாப்பிடுவது வழக்கத்தில் இருந்தது. அதன் விவரம்:

பூவரச மரத்தின் உள்பட்டையைப் பஞ்சு போல் இடித்துப் பிழிந்து சாறு ஒரு அவன்ஸ் (25- 30 மில்லி) இத்துடன் பசுவின் பால் இருநூறு மில்லி இரண்டையுமாகச் சாப்பிட நன்றாகப் பேதியாகும். அதிகமாகி விடுமோ என்று தோன்றும் போது, மோரில் சிறிது சாதம் கலந்து கஞ்சி போல் பிசைந்துக் குடித்தால் பேதி நின்று விடுகிறது. அன்றைய தினமே அழுமூஞ்சி எக்ஸிமாவின் அழுகை நின்று விடுகிறது. வீக்கம், வலி முதலியவை குறைகின்றன. ஆனால், நமைச்சல் குறைவதாகக் காணோம். அதற்கு முன் குறிப்பிட்ட வேப்பெண்ணெய் பயன்படுத்தலாம்.

ஆல், அத்தி, அரசு, இத்தி, பூவரசம்பட்டையில் இருந்து பஞ்சவல்கலம் என்ற கஷாயம் தயாரிக்கப்படுகிறது. இதைத் தாரையாக மேல் ஊற்ற, எரிச்சலும் நமைச்சலும் குறைந்து அழுமூஞ்சியான நிலை மாறி, புண்உலரும். கருங்காலிக்கட்டை போட்டு காய்ச்சிய வெந்நீரைக் குடிக்கப் பயன்படுத்தவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments