முகப்பு
தினமணி கதிர்

இலவச ரயில்..!

ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டாம். ஒரு பைசாவும் செலவு செய்யாமல், 365 நாள்களும் இலவசப் பயணம் செய்யலாம்.

Updated On : 8 டிசம்பர், 2024 at 12:00 AM
ரயில்
பகிர்:
Updated On : 7 டிசம்பர், 2024 at 6:58 PM

ரயிலில் பயணிக்க டிக்கெட் வாங்க வேண்டாம். ஒரு பைசாவும் செலவு செய்யாமல், 365 நாள்களும் இலவசப் பயணம் செய்யலாம்.

பயணத்தின் இடையில் 'டிக்கெட்...சார் டிக்கெட்' என்று பயணச் சீட்டு பரிசோதகர் வரமாட்டார். பயணம் செய்ய முன்பதிவோ, முன் அனுமதி பெறவோ அவசியமும் இல்லை. இப்படி ஒரு ரயில் வண்டி இந்தியாவில் ஓடுகிறது. ஆம்! அதன் பெயர் 'பக்ரா- நங்கல் ரயில்'.

எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, பிரமிக்க வைக்கும் பக்ரா-நங்கல் அணைக்கு வருகை தரும் உள்ளூர்வாசிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த இலவசப் பயணம் ஆச்சரியம் தரும் பயணமாக அமைந்துள்ளது. பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் இடையே இயக்கப்படுகிறது.

Advertisement

1948-இல் பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்கும் வாய்ப்பை வழங்க இந்திய ரயில்வே வழங்க ஆரம்பித்தது. டிக்கெட் வாங்காமல் தினமும் ஆயிரம் பயணிகள் வரையில் பயணம் செய்யலாம்.

இந்திய ரயில்வேயால் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான ரயில்களைப் போல் அல்லாமல், இந்த இலவச ரயில், 'பக்ரா பியாஸ் மேலாண்மை வாரிய'த்தால் இயக்கப்படுகிறது. இதன் முதன்மை நோக்கம் பக்ரா, நங்கல் நகரங்களுக்கு இடையே போக்குவரத்தை எளிதாக்குவதாகும்.

Updated On : 7 டிசம்பர், 2024 at 6:58 PM

பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்துக்கான தொழிலாளர்கள், இயந்திரங்கள், பொருள்களைக் கொண்டு செல்வதற்காக ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட இந்த ரயில், மக்களுக்கும் சேவை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

புகழ்பெற்ற பக்ரா-நங்கல் அணையின் பிரம்மாண்டத்தை, பொறியியல் அதிசயத்தைக் காண வரும் பார்வையாளர்களுக்கு இலவச ரயில் பயணம் திகைப்பை எக்கச்சக்கமாக வாரி வழங்கி வருகிறது.

முதலில் நீராவி என்ஜின்களால் இயக்கப்பட்ட ரயில் இப்போது டீசல் என்ஜின்களுடன் இயங்குகிறது. என்ஜினுடன் அன்றையக் கால மரப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பயணிகள் பெட்டிகள் 1923-இல் கராச்சியில் உருவாக்கப்பட்டது. அது அந்த காலகட்டத்தின் நினைவுச் சின்னமாகவும் மாறியுள்ளது.

இந்த வழித்தடத்தின் பயண தூரமான 13 கிலோ மீட்டரில் இயற்கை எழில் கொஞ்சும் சிவாலிக் மலைத் தொடரை தொட்டுச் செல்கிறது. மூன்று சுரங்கங்கள், ஆறு ரயில் நிலையங்கள் உள்ளன. இயற்கை ஆர்வலர்களுக்கு இந்தப் பயணம் திருப்தி அளிக்கும்.

2011-இல் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பாகமாக இலவச பயணம் நிறுத்தப்பட்டது. இருந்தாலும், ரயில் நிர்வாகக் குழு ரயிலின் இயக்கத்தை பாரம்பரிய பக்ரா, நங்கல் அணை கட்டப்பட்டதை நினைவு கூறும் விதமாக ரயிலைத் தொடர்ந்து இயக்கப் பரிந்துரை செய்ததினால் மீண்டும் ஓட ஆரம்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.