சித்தரிக்கப்பட்டது 
தினமணி கதிர்

கர்ணா!

கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும், வழக்கமாக நிகழும் அந்தக் காட்சியைக் காண முடியாமல், வாசல் பக்கம் வெறுமையாக இருப்பது கண்டு, சக்தி துணுக்குற்றாள்.

தமிழில்: எஸ்.ராமன்

கல்லூரியிலிருந்து வீடு திரும்பியதும், வழக்கமாக நிகழும் அந்தக் காட்சியைக் காண முடியாமல், வாசல் பக்கம் வெறுமையாக இருப்பது கண்டு, சக்தி துணுக்குற்றாள். கல்லூரியிலிருந்து திரும்பும் நேரத்தை சரியாகக் கணக்கிட்டு, அவளுக்காக வீட்டு வாசலில் காத்து நிற்கும் அம்மா கெளசல்யா, இன்று அங்கு இல்லாதது, அவளுடைய மனதை நெருடியது.

அந்த நெருடல் தருணத்தில், அம்மாவைப் பற்றிய எண்ணங்கள், அவளது மனத் திரையில் வேகமாக ஓட ஆரம்பித்தது. 'ஏதாவது மன வருத்தமாக இருக்குமோ?' என்ற ஐயம் தலை தூக்கியது. 'அம்மாவுக்கு ஏதாவது வருத்தம் என்றால், அது அப்பாவின் உடல் நலம் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும்' என்பது அவள் எண்ணம்.

குடும்பத்தினருக்கு சுவையான உணவைச் சமைத்து, அவர்கள் ருசித்து உண்பதை கண்டு களிப்பவள், விரதம் என்ற பெயரில், உடலை வருத்தி, அடிக்கடி பட்டினியாக இருப்பதற்கு தான் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததை நினைவு கூர்ந்தாள்.

பெரும்பாலும், அம்மாவின் அனைத்து விரதங்களும் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தை வேண்டிதான் என்பதை அவள் நன்கு அறிவாள்.

அண்மைக்காலமாக, அப்பாவுக்கு கிட்னி சம்பந்தமான பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்திருந்தது. ரத்தத்தில் கிரியாட்டின் அளவு, சற்று கூடுதலாக இருப்பதால், உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி, மருத்துவ அறிவுரை வழங்கப்பட்டது. அவருக்குப் பொருத்தமான, பிரத்யேக உணவு வகைகளைப் பட்டியலிட்டு, அதையே தயாரிக்க, அம்மா நேரம் செலவழிப்பாள். ஆனால், அப்பாவுக்கு அதுபோன்ற பத்திய உணவு பிடிக்காது. உணவு விஷயத்தில், இருவருக்கும் அடிக்கடி மனஸ்தாபம் எழும். தான் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவே அப்பா வாதிடுவார்.

ஆனால், அடிக்கடி சோர்ந்து படுப்பார். எப்பொழுதும் உற்சாகமாக இருக்கும் அம்மாவுக்கு, அப்பாவின் ஆரோக்கியக் குறைவு அந்த உற்சாகத்தை இறுக்கிப் பிடித்ததை சக்தி கவனித்து வந்தாள். தன் அன்றாட ஷெட்யூல்களை விட்டு விலகி பழக்கமில்லாத அம்மாவுக்கு இன்று என்ன ஆயிற்று என்ற கேள்வி, அவள் மனதினுள் தலை தூக்க ஆரம்பித்தது.

'அம்மா..எங்கே இருக்கே?' என்று உள்பக்கமாக கைவிட்டு, வீட்டு வாசலின் க்ரில் கேட்டை திறந்து, அவசரமாக சமையல் அறையை நோக்கி போனவளுக்கு, ஏமாற்றம் காத்திருந்தது. வழக்கமாக, கல்லூரி முடிந்து , உள்ளே நுழையும்போதே, டபரா, டம்பளரில் சுடச் சுட காப்பியுடன் காத்திருக்கும் அம்மாவுக்கு இன்று என்ன ஆயிற்று?சூடான காப்பியை, மகள் சொட்டு சொட்டாக சுவைத்து, குடித்துகொண்டிருக்கும்போது, கல்லூரிக்கு கொண்டுபோன நோட்டுகளை வாங்கி, பக்கம் பக்கமாகப் புரட்டுவாள்.

'நீயோ அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. என் நோட்டை பார்த்து உனக்கென்ன புரியப்போவுது?' என்று மகள் அம்மாவை சீண்டுவாள்.

'ஆமா...யாராவது உனக்கு லவ் லெட்டர் கொடுத்திருக்காங்களான்னு பார்க்கத்தான்' என்று எடக்குமடக்காகப் பேசி, அம்மா ஷாக் கொடுப்பாள். குடும்பத்தில் எவரும், என்னை மீறி எந்த தப்பும் செய்து விட முடியாது என்ற எச்சரிக்கை மணி அவள் செய்கைகளில், தன்னிச்சையாக ஒலிக்கும்.

'காதலிச்சா என்னம்மா தப்பு?' என்று வேண்டுமென்றே, மகள் அம்மாவை வம்புக்கு இழுப்பாள்.

'காதலிக்கறது தப்பு இல்லை. அதை நெருக்கமானவங்களிடமிருந்து ஒளிப்பதுதான் தப்பு!' என்று அம்மாவின் பதிலில், முள் குத்தியது போல் ஒரு நறுக் இருக்கும்.

நோட்டுகளில், கையெழுத்து கிறுக்கலாக இருந்தால், 'என்னடி உடம்பு சரியில்லையா?' என்று சரியாகக் கணித்து கேட்பாள். உபாதை விவரங்களைக் கேட்டு, அதற்கான நிவாரணம் அளிக்கும் வரை ஓயமாட்டாள். விதம் விதமான ஓவியக் கிறுக்கல்கள் காணப்பட்டால், 'இன்னைக்கு எகனாமிக்ஸ் கிளாஸ் செம்ம அறுவை போலிருக்கு?' என்று நேரில் பார்த்தது போல் தீர்ப்பு சொல்லுவாள். ஆனால், அவளுடைய ஒவ்வொரு செய்கையிலும், அபரிமிதமான உற்சாகம் கலந்த அக்கறை பொதிந்திருக்கும். அந்த உற்சாக ஊற்றால், எவ்வளவு களைப்பாக உள்ளே நுழைந்தாலும், அம்மாவை பார்த்த நிமிடத்தில் அத்தனை களைப்பும் மறைந்துவிடும். கலகலப்புக்கு மறுபெயர் அம்மாதான்.

அவள் கொடுக்கும் காப்பியை குடித்துவிட்டு, கன்னத்தில் ஒரு செல்ல கிள்ளை பெறாமல், அந்த இடத்தை விட்டு மகள் நகர முடியாது. அப்படி நகர்ந்தால், தேடி வந்து கிள்ளுவாள். பாசமுள்ள அம்மா, மகளுக்கு நெருங்கிய தோழியாகவும் இருக்க முடியும் என்பதற்கு அவள் ஒரு சிறந்த உதாரணம். ஆனால், அம்மா இல்லாமல், இன்று ஹால் வெறிச்சோடி கிடந்தது.

'என் மீது அம்மாவுக்கு ஏதாவது கோபமா...நான் ஒன்றும் தப்பு செய்ததாக ஞாபகம் இல்லையே' என்று சக்தி கலங்கி போனாள்.

ஹாலில் ஓர் ஓரமாகப் போடப்பட்டிருந்த டைனிங் மேஜையின் மீது இருந்த சாக்பீஸ் கிறுக்கல்கள் அவள் கண்ணில் பட்டதும் அதை அவசரமாகப் படித்தாள்.

'கா..பி ..ளாஸ்க்கில் இருக்கு' என்று அம்மாவின் முத்து முத்தான கையெழுத்தை கண்ணில் எடுத்து ஒற்றிக் கொண்டாள். அதில் சில எழுத்துகள் தண்ணீர் பட்டு அழிந்திருந்தன.

'இப்பொழுது காப்பியா தேவை...அம்மாவை பார்க்க வேண்டும்' என்ற வேகத்தில், வீடு முழுவதும் தேடினாள். மூச்சிரைக்க, கடைசியாக மொட்டை மாடிக்கு ஓடினாள்.

அங்கு ஓர் மூலையில் முனகல் சத்தம் கேட்டு, திரும்பினாள். இரு கால்களுக்கு நடுவில் முகத்தைப் புதைத்து, அம்மா அழுது கொண்டிருந்தாள். அம்மாவை அந்த கோலத்தில் அவள் பார்த்ததே கிடையாது என்பதால், பதைத்துப் போனாள் சக்தி.

'என்னம்மா ஆச்சு... யார் என்ன சொன்னாங்க?'

புதைந்த முகத்தை அம்மா வெளியே எடுக்க மறுத்தாள். வலுக்கட்டாயமாக கால்களைப் பிரித்து, முகத்தை தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்து, துப்பட்டாவால் துடைத்து விட்டாள். ஆனால், கண்ணீர் வற்றியதாகத் தெரியவில்லை. துப்பட்டா மீண்டும் நனைந்தது. அம்மா வெகு நேரமாக அழுது கொண்டிருக்கிறாள் என்பதை முக வீக்கம் காட்டிக் கொடுத்தது. திடீரென்று, வானம் கருத்து, வெப்ப சலன மழைத் தூரல்கள், கண்ணாடி கிண்ணங்களாக கீழ் நோக்கி பயணம் செய்து, தரையை தொட்டு உடைந்து சிதறின.

'மழையில் நனைவது உனக்கு பிடிக்காதே.. திடீர் மழையில் நனைந்தால், உடம்புக்கு வந்துடும்னு கூச்சல் போடுவியே... வாம்மா...உள்ளே போயிடுவோம்' என்று அம்மாவின் கன்னத்தை தொட்டு கெஞ்சினாள் சக்தி.

'ஆமா...இங்கே எனக்கு பிடிச்சதுதான் நடக்குதோ? இனிமேல், இந்த பாழாய் போன உடம்பு இருந்தால் என்ன.. போனால் என்ன?' என்று அம்மாவின் வார்த்தைகள், கோபக் கனலாக வெடித்து சிதறின. சுற்றியிருப்பவர்களுக்கு, தன் வார்த்தைகளால் ஆனந்தத்தை அள்ளி வீசும் அம்மாவா இப்படி பேசுகிறாள். சக்தி அதிர்ந்து போனாள்.

'என்னம்மா ஆச்சு?'

'இன்னும் என்ன ஆகணும்?'

'பிரச்னை என்னன்னு எனக்கு புரியலைம்மா...அப்பாவுக்கு போன் பண்ணட்டுமா?'

'அவருக்கு போன் பண்ணி என்ன ஆகபோகுது...பிரச்னையே அவர்தான்!'

'அவருடைய கிட்னி பிரச்னை பற்றிய கவலையா?'

'உயிருக்கு எந்தவித ஆபத்தும் வந்துடக் கூடாதுன்னு ஆண்டவனை வேண்டி, அவருக்காக பல விரதங்கள் இருக்கிறேன். ஆனா, இது வேற?'

சக்திக்கு தூக்கி வாரிப் போட்டது. அம்மாவும், அப்பாவும் லட்சிய தம்பதிகள் என்று பெயர் எடுத்தவர்கள். ஆனால், இப்ப அப்பாதான் பிரச்னை என்கிறாள். என்ன பிரச்னையாக இருக்கும் என்று அவளால் நிச்சயமாக ஊகிக்க முடியவில்லை.

'என்னம்மா. எங்களுக்கு என்ன பிரச்னையாக இருந்தாலும், அதை அலசி ஆராய்ந்து, தீர்த்து வைக்கிற உனக்கே பிரச்னையா?

'அந்த கடவுள் என்னை மட்டும் எப்படி விட்டு வைப்பான்?'

'பிரச்னையை பார்த்து நாம பயப்படக் கூடாது. நம்மை பார்த்து பிரச்னை பயந்து ஓடணும்னு கமென்ட் அடிப்பாய். பிரச்னைகள் உருவாக, பெரும்பாலும் பிரச்னைக்கு உள்ளானவங்கதான் காரணமா இருப்பாங்க. பிரச்னை எப்படி உருவாச்சுன்னு சம்பந்தப்பட்டவங்க யோசிச்சு பார்த்தாலே, தீர்வுக்கான விடை ஓரளவு கிடைச்சுடும்னு அறிவுரை கூறுவாய்.

எங்க பிரச்னைகளை உன்னிடம் சொல்லும்போது, மனச் சோர்வை விரட்டும் வார்த்தைகளை பேசி, எங்களை குஷிப்படுத்தற நீ இப்படி விரக்தியா பேசக் கூடாது. ஒரு பிரச்னை பிறக்கும்போதே, அதற்கான தீர்வும் பிறந்துடும். அதை தேடி கண்டுபிடிப்பதில்தான் நம்ம சாமர்த்தியம் அடங்கியிருக்குன்னு பல சந்தர்ப்பங்களில் சொன்னது எனக்கு நினைவுக்கு வருது. உன் பிரச்னைக்கும் அந்த மாதிரி ஒரு தீர்வு இருந்தாகணும். பிரச்னை என்னன்னு சொல்லு. தீர்வை நாம ஒன்னா உட்கார்ந்து யோசிப்போம்.'

'உட்கார்ந்து யோசிக்கிற நேரம் எல்லாம் நம்ம கையை விட்டு போயிடுச்சு. தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சு...' என்று கூறியஅம்மா மறுபடியும் கேவி, கேவி அழுது, இடுப்பில் செருகியிருந்த தன் புடவை தலைப்பை வெளியே இழுத்து, கண்ணீரை துடைக்க முற்பட்டாள்.

அந்தச் சமயத்தில், புடவை தலைப்பிற்குள்ளிருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது. அதில், கழுத்தில், வெளியில் தெரியும்படியான தாலியுடன் இருந்த இன்னொரு பெண்ணின் தோளை அரவணைத்து, அப்பா புன்னகையுடன் நின்றிருந்தார்.

'என்னம்மா இது?'

'அதான் எனக்கும் புரியலை. அவருடைய டைரியிலிருந்து கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன்.வீட்டை பெருக்கும்போது கிடைத்தது. இந்த பூனையும் பால் குடிக்குமா? என்றிருந்தவர், இப்படி பண்ணிட்டாரே. என்னை மீறி எதுவும் நடந்துடக்கூடாதுன்னு, எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்தவள், இப்படி கோட்டை விடுவேன்னு எதிர்பார்க்கலை.'

சக்திக்கு, புகைப் படத்தில் இருந்த பெண்ணின் முகத்தை எங்கேயோ பார்த்த ஞாபகம். யோசித்தபோது, ஒரு வருடத்துக்கு முன்பு, அப்பாவின் ஆபீஸிக்கு விஜயம் செய்த சமயத்தில், பார்த்த முகம் என்பது நினைவுக்கு வந்தது. குறுகிய சந்திப்பு என்றாலும், அதன் பின்னோட்ட நிகழ்வுகள், மனதில் ஆழமாக பதிந்திருந்தன. அந்த நிகழ்வுகள், மனத் திரையில் ஓட ஆரம்பித்தன

அன்றைய தினம், வரவேற்புப் பதிவேட்டில் அப்பாவின் பெயரை குறிப்பிட்டு காத்திருந்தபோது, 'வெயிட் பண்ணுங்க...சிபி சார், பத்து நிமிடத்தில் வந்து விடுவார்' என்று பேப்பரில் எழுதி, சைகை மொழியில் சொல்லிவிட்டு, உள்ளே சென்றுவிட்டாள். 'சி.பாலு' என்ற பெயரை சுருக்கி, 'சிபி' என்று ஆபீஸில் அழைப்பதை அப்பா வீட்டில் சொல்லியிருந்தது நினைவில் ஓடியது. அந்த சமயத்தில், அங்கு வந்த வரவேற்பாளரிடம் பேச்சு கொடுத்தாள் சக்தி.

'சைகையிலேயே சொல்லிட்டு போறாங்களே...அவுங்க இன்றைக்கு மெளன விரதமா?'

'ஊஹும்...வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. உதவின்னா, முதல் ஆளா ஓடி வந்துடுவாங்க. ஆபீஸில், எல்லோருடைய வேலையையும், இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாங்க. தேவைப்பட்டவங்களுக்கு, அடிக்கடி ரத்த தானம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. தனக்கு இருக்கும் குறையை ஒரு பொருட்டாக கருதாமல், இன்னும் என்னென்ன உதவிகளை, யார் யாருக்கு செய்யறாங்கன்னு பயனாளிகள் சொன்னால்தான் தெரியும். தான் சொல்ல நினைப்பதை சைகை மொழி அல்லது எழுத்து மூலமாக மற்றவர்களிடம் தெரிவித்து விடுவாங்க..?'

'வாவ்... கேட்கவே சந்தோஷமா இருக்கு. அவுங்க பெயர் என்ன?'

'கர்ணா'

'வித்தியாசமான பெயரா இருக்கே...புதுசா சேர்ந்திருக்காங்களா?'

'டெல்லியில் வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அங்கே, அவுங்களோட அம்மாவும், அப்பாவும் இரண்டு வருடங்களுக்கு முன்னால், ஒரு ரோடு

ஆக்ஸிடெண்ட்டில் அடிபட்டு, கோமா நிலைக்கு போய், இறந்துட்டாங்க? அவங்களோட அனைத்து உடல் உறுப்புகளையும், தானமாக கொடுத்துட்டு, அந்த சோக நிகழ்வின் நினைவுகளிலிருந்து விலகி இருக்க, இங்கே டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டாங்க. அவுங்களுக்கு வேற யாரும் உறவு இல்லை.

அவங்களால், வாய் பேச முடியாது. ஆனால், அவங்களுடைய நல்ல செய்கைகளை பற்றி நாங்கள் எப்பொழுதும் பேசிக்கிட்டு இருப்போம். 'கர்ணா'ன்னு பெயருக்கு ஏற்ப பரோபகார சிந்தனையுள்ள அவங்களை, அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தால், ஆண்டவன் நிச்சயம் நல்லபடியா வைப்பார்ங்கற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இருக்கு!' என்று கர்ணாவை பற்றிய விவரங்களை சொல்லி முடித்த வரவேற்பாளரின் கண்களில் கண்ணீர் தளும்பி நின்றது.

அன்றைய தேதியில் நடந்த நினைவுகளை சக்தி, மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தபோது, அம்மாவின் விசும்பல் வெடித்தது.

'நான் மோசம் போயிட்டேன். பெண்ணாய் பிறந்த எவளும், வாழ்க்கையில் இந்த மாதிரி நிலைமையை விரும்ப மாட்டாள்' என்று விசும்பல்களுக்கிடையே, அம்மாவின் குரல் வெளிப்பட்டது. பிரச்னை புரிந்த சக்தி, அதன் காலகட்டம் மற்றும் காரணத்தைப் பற்றி யோசித்தாள். வீட்டு நிர்வாகத்தை பட்டியலிட்டு கவனித்த அம்மா, தன் கணவனின் நடவடிக்கைகளை கவனிக்க தவறிவிட்டாள் என்பது சக்திக்கு ஓரளவு புரிந்தது.

'சென்ற வருட இறுதியில், ஒரு மாத லீவில், அலுவலக நண்பர்களுடன் டூர் போவதாக அப்பா சொன்னது, உனக்கு ஞாபகம் இருக்கிறதா?'

'ஆமா...அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?'

'அவரோடு நீ ஏன் போகலை?'

'ஆமா... அவருடைய ஆயுளுக்கு எந்தப் பங்கமும் வராமல், என் மாங்கல்யம் வலுப்பெற, ஒரு மாதம் விரதம். ஆகையால் அவருடன் போவது பற்றி யோசிக்கலை.'

'அந்த வாய்ப்பில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்கணும்னு நான் யூகிக்கிறேன்.'

'ஆமா...அதற்குப் பிறகு அவர் நடவடிக்கையே கொஞ்சம் மாறி வந்தது நினைவுக்கு வருது. திரும்பி வந்ததும், உடம்பு முடியலைன்னு, லீவு கூட போட்டார்.'

'இப்ப வந்து என்ன பிரயோஜனம்? இப்படி, பூஜை, விரதம், அமாவாசை, பெளர்ணமின்னு காரணம் சொல்லிக்கிட்டு, கணவனிடமிருந்து தள்ளியே இருந்தால், இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும்.'

'அம்மாவிடம் ஒரு மகள் பேசற பேச்சா இது..?' அப்பாவுக்கு சப்போர்ட்டா?'

'இல்லைம்மா...சைக்காலஜி என் விருப்பப் பாடம். அதை வச்சுதான் சொல்றேன். பிரச்னையின் பிறப்பிடத்தை அலசி ஆராயும்போது, அம்மா பொண்ணுங்கற கோடு கிழிக்கக் கூடாது. வெளியில், அப்பாவும், நீயும், லட்சிய தம்பதிகளா தெரிஞ்சாலும், நீங்க தாம்பத்தியம் நடத்தி, பல வருடங்கள் ஆகிவிட்டதுன்னு, உங்களுடைய நடவடிக்கைகளை வச்சு என்னால் ஊகிக்க முடியும். உங்கள் 'விலகி இருத்தல்' கொள்கையால், நீயே அப்பாவுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி, அவர் மீதிருந்த கட்டுப்பாட்டை இழந்துட்டீங்க?'

'எனக்குதான் புத்தி இல்லைன்னா, அந்த மனுஷனுக்கு புத்தி எங்கே போச்சு. ஒரு ஆம்பிளைக்கு சுய கட்டுபாடு வேண்டாம்...என்னம்மோ பேசறா?'

'பிரச்னையை நாமே உருவாக்கிட்டு இன்னொருத்தரை குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. எனவே, தீர்வு உன்னிடம்தான் இருக்கு..'

'என்னடி சொல்றே?'

'இந்த பிரச்னை உருவாவதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது நீதானே?'

'நீண்ட யோசனைக்கு பிறகு அம்மா, 'ஆமா.' என்றாள்.

'அப்ப அதற்கான தீர்வையும் நீதான் முடிவு செய்யணும். ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகள் இருக்கும். பிரச்னை முளைக்கும்போது இருந்த தீர்வு, அது வளர, வளர உருமாறிடும்னு எனக்கு அட்வைஸ் பண்ணது ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்.'

'நமக்குன்னு வரும்போது, எல்லாமே மறந்துடும். இப்ப நீ என்ன சொல்ல வர்றே?'

'சில பிரச்னைகளின் தீர்வு, பழைய நிலைக்கு திரும்புவதால் கிடைக்கும். ஆனால், இந்த பிரச்னையின் தீர்வை இங்கிருந்துதான் துவங்க வேண்டும். அப்பாவுடன் அந்த போட்டாவில் இருக்கிற 'கர்ணா'ங்கற பெண்ணை ஏற்கனவே நான், அவருடைய ஆபீஸில் ஒரு முறை சந்தித்து இருக்கிறேன். வேறு மாநிலத்தை சேர்ந்தவங்க. நம்ம தமிழ் பண்பாடு என்னன்னு நாம அவங்களுக்கு காட்ட வேண்டாமா..? அதில்தான், இந்த பிரச்னைக்கான ஒட்டு மொத்த தீர்வே அடங்கி இருக்கிறதுன்னு நான் நினைக்கிறேன்.'

'நீ என்னைவிட அதிகம் படிச்சவ. கொஞ்சம் புரியும் படியாத்தான் சொல்லேன்' - தீர்வு என்ற வார்த்தையை கேட்டதும் அம்மா சற்று கீழே இறங்கி வந்தாள்.

தமிழ் பண்பாட்டு படி நாம் யாரையும் மோசம் செய்ய மாட்டோம். அடாவடியாக பேச மாட்டோம். ஒரு பெண், இன்னொரு பெண்ணின் உணர்வுகளை மதித்து நடப்பாள்.

'ஆமா...அதில் என்ன சந்தேகம்?'

'உன்னுடைய கணவனை நம்பியவளிடம், அடாவடியாகப் பேசி, பெயர் கட்டி, அவள் வாழ்க்கையை மோசம் செய்ய முயற்சிக்கக் கூடாது. நம் தமிழ் பண்பாட்டை மதித்து, அப்பா கையால் தாலி கட்டிக் கொண்ட அவங்களும் அவருக்கு மனைவிதான். அதை துணைவின்னு சொல்லி, அவங்க உணர்வுகளை கொச்சைப் படுத்தக் கூடாது. ஆனால், உனக்கும், அவங்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கு.' என்ற சஸ்பென்úஸாடு தொடர்ந்தாள்.

'நீ எப்பவும் பேசிக்கிட்டே இருப்ப. அவுங்க, வாய் பேச முடியாத ஊமை!'

அதை கேட்டவுடன், அம்மா நெகிழ்ந்து போனது, வேகமாக மாறிய முக சலனங்கள் மூலம் அறிய முடிந்தது. அவருக்கு ரொம்ப இளகிய மனசு. இரக்கப்பட்டுதான் இப்படி செய்திருப்பார். மன்னிக்க முடியாத குற்றம் என்று அம்மாவால் சற்று முன் வரை வர்ணிக்கப்பட்ட செயல், மனிதாபிமான அடிப்படை செயலாக தற்போது மாறி, பிரச்னை என்ற இறுகிய பாறை உடைந்து சிதற ஆரம்பித்தது.

'உலகம் இதை எப்படி பேசும்?' என்று தன்னைப் பற்றி கவலைப்பட்ட அம்மா, இப்பொழுது உலகத்தை பற்றி கவலைப்பட ஆரம்பித்தாள்.

'உலகம் நம்ம பிரச்னையை ஊதி பெரிது பண்ண நாம் அனுமதிக்கக் கூடாது. நீங்களும், அவங்களும் தனித் தனியாக இருந்தால்தான், ஊது குழல் உலகத்தின் கையில். அப்பத்தான் உலகம் ஒரு மாதிரியா பேசும். இரண்டு பேரும் ஒன்றாக இருந்துட்டா, ஊர் உலகத்துக்கு எந்த விளக்கமும் தர வேண்டியதில்லை.'

நிதர்சனத்தைப் புரிந்துகொண்ட அம்மா, கண்களை துடைத்துக் கொண்டு, யோசிக்க ஆரம்பித்தாள். அந்த யோசிப்பில், அவளுக்கு தெளிவு பிறந்திருக்க வேண்டும்.

'நாமளே பேசிக்கிட்டு இருக்கறதைவிட, அவர் வரட்டும்.. பேசுவோம்' என்றாள்.

'நான் வந்தது கூட தெரியாமல் நீங்க பேசிக்கிட்டு இருந்ததை கேட்டுக்கிட்டுதான் இருக்கேன். நீயா கேட்பதற்கு முன்னால், நானே இன்றைக்கு உன்னிடம் சொல்லிடலாம்னுதான், ஆபீஸிலிருந்து சீக்கிரமாக வந்தேன்' என்று சற்றும் எதிர்பாராத நேரத்தில் உள்ளே நுழைந்த கணவனிடம் என்ன பேசுவதென்று தெரியாமல், அம்மா தலையை கவிழ்த்துக் கொண்டாள்.

'நான் டூர் போவதாக சொல்லிவிட்டு, ஆஸ்பத்திரியில் இருந்தேன்.'

'என்ன சொல்றீங்க...எதுக்கு ஆஸ்பத்திரி?' என்று அம்மாவின் குரலில் அதிர்ச்சி வெளிப்பட்டது.

'நீ எவ்வளவு எடுத்து சொல்லியும், என் உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக, அசட்டையாக இருந்து விட்டேன். ஒரு நாள் ஆபீஸில் மயக்கம் போட்டு விழுந்தபோது, என்னை வலுக்கட்டாயமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போன கர்ணா, டாக்டரிடம் சைகை மொழியில் பேசி இருக்கிறாள். கிட்னி முழுவதும் பழுதடைந்துவிட்டதால், டயாலிஸிஸ் அல்லது டிரான்ஸ்ப்ளான்ட் சிகிச்சைதான் என் உயிரைத் தக்க வைக்கும் என்ற அறிவுரையைக் கேட்டு, தன் கிட்னியில் ஒன்றை கொடுப்பதாக எழுதிக் காட்டியிருக்கிறாள். பலவிதமான டெஸ்ட்டுகளுக்கு பிறகு, அவளுடைய ஒரு கிட்னியை எனக்கு தானமாக கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, என்னிடம் தெரிவித்தாள்.

நான் பலத்த மறுப்பு சொன்னபோதும், அவள் கேட்கவில்லை. 'இரண்டு கிட்னிகளும் பழுதடைந்த உங்களுக்கு, என்னுடைய ஒரு கிட்னியை தானமாக கொடுப்பதால், எனக்கு ஒரு பாதகமும் ஏற்படாது. ஒரு கிட்னியுடன் நீண்ட நாள்கள் வாழலாம்னு டாக்டர் சொல்லிட்டார். நீங்க உயிர் பிழைச்சா அதுவே எனக்கு சந்தோஷம்' என்று எழுதி காட்டியவளிடம், மேற்கொண்டு மறுப்பு சொல்ல மனமில்லை. உன்னிடம் சொன்னால், பதறிவிடுவாய் என்ற பயத்தில்தான், சில நாட்களுக்கு பிறகு, டூர் போவதாக சொல்லிவிட்டு, ஆபரேஷனுக்கு ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன்.

'உடல்நிலை தேறியதும், எனக்கு மறுவாழ்வு அளித்த அவளுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். விபத்தில் ஏற்பட்ட பாதிப்பால், குழந்தை பெற்றுக் கொள்ளும் சக்தியை இழந்தவள் என்பதை டாக்டர் சொல்லி கேள்விப்பட்டேன்.

உறவினர்கள் என்று வேறு யாரும் இல்லாத அவளுக்கு, பாதுகாப்பான வாழ்வு கொடுக்க வேண்டும் என்று முடிவில், அவளுடைய மறுப்பை நிராகரித்து, கோயிலில் அவள் கழுத்தில் தாலி கட்டினேன். அந்தச் செய்கையில், வேறு எந்த உணர்வுகளுக்கும் இடமில்லை. என்னுடைய செய்கைகை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது உன் கையில்தான் உள்ளது' என்று சொல்லி முடித்துவிட்டு, என்ன பதில் வரப்போகிறதோ என்ற அச்சத்தில், தலை குனிந்து நின்றார் அப்பா.

அவர்கள் மத்தியில், சிறிது நேரம், பலத்த மெளனம் நிலவியது. அந்த மெளனத்தை உடைத்து வெளிப்பட்டன அம்மாவின் அழுத்தமான வார்த்தைகள்.

'கணவனுக்கு ஒரு கிட்னியை கொடுக்க நான் கூட கொஞ்சம் யோசித்திருப்பேன். தன்னை நாடி வந்த புறாவை காப்பாற்ற, பருந்துக்கு எடைக்கு எடை தன் சதையை வெட்டி கொடுத்த சிபி சக்கரவர்த்தி போல, தன் கிட்னியை இந்த 'சிபி'க்கு கொடுத்து, உயிரை காப்பாற்றிய 'கர்ணா' நம்ம குடும்பத்தில் ஒருவளாகிவிட்டாள். ஒரு நல்ல நாளாக பார்த்து, அவளை நம்ம வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்துடுங்க? வலுவான மாங்கல்யத்துக்கு அவளையும் விரதம் இருக்க சொல்லப் போகிறேன்' என்று சொன்ன அம்மாவை, அப்பா ஆச்சரியத்துடன் பார்த்தார்.

அப்பாவை பற்றிய தவறான எண்ணங்களை சக்தி, உடனடியாக மனதை விட்டு அகற்றினாள்.

அம்மாவின் செய்கையை நினைத்து பெருமைப்படுவதை தவிர, சக்திக்கு வேறொன்றும் தோன்றவில்லை. அதை வெளிக்காட்டும் விதமாக, அம்மாவின் எதிரில் நின்று, அவளுக்கு ஒரு ராயல் சல்யூட் அடித்து, பாதங்களைத் தொட்டு வணங்கினாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT