ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குஷ்ட நோய் ஏற்படுவது எப்படி?
குஷ்ட நோய் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? ஆயுர்வேத மருந்துகள் என்ன சாப்பிடலாம்?
குஷ்ட நோய் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? ஆயுர்வேத மருந்துகள் என்ன சாப்பிடலாம்?
-முத்துமணி, தொண்டாமுத்தூர், கோவை.
குஷ்டம் என்ற சொல்லுக்கு உடலை அழிப்பது என்று பொருள். பிறரை துன்புறுத்தல், தவறான வாழ்க்கை, அதர்மச் செயல்கள் பாதிக்கப்பட்டு கர்ம நோயாக வரும் நோய்களில் குஷ்டம் முக்கியமானதாகும். மூன்று தோஷங்களாகிய வாத, பித்த, கபங்கள், ஏழு தாதுக்களாகிய ரஸ- ரக்த -மாம்ஸ- மேத- அஸ்தி (எலும்பு)- மஜ்ஜா- விந்து ஆகியவை இந்த நோயில் கெட்டுப் போகின்றன. இந்த நோய் உடல் முழுவதையும் சிதைக்கும் தன்மையை உடையது.
குஷ்டம் என்றாலே சிதைபடுதல் என்று அர்த்தம். ஏழு மஹா குஷ்டங்கள், பதினொன்று அல்பகுஷ்டங்கள் என பதினெட்டு விதமான குஷ்டங்கள் பிரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. தோல் என்பது வாத- பித்த தோஷங்களின் இருப்பிடமாகவும், கப தோஷத்தைப் பொருத்தவரை வெளியிலிருந்து வரும் காரணங்களின் சீற்றமாகவும் உள்ளது.
காய்ச்சல், எரிச்சல், தோலில் சிவந்த நிறமிருத்தல் போன்றவை பித்த தோஷம் இருக்கிறது என்பதையும், சொறி, பழுத்து வருதல், அரிப்பு போன்றவை இருந்தால் கபம் இருக்கிறது என்பதையும், உணர்ச்சி குறைவு, வெடித்தல் போன்றவற்றால் வாதத்தின் தன்மையையும் உணரலாம்.
தோல் நோய்களுக்கு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதுபோல், பெயர் கொடுத்தல் என்பது நடைமுறையில் சிரமமே. எனவே தோல் நோய்களை தோஷ ரீதியாக சிந்தனை செய்து கண்டுபிடிக்க முயல வேண்டும். ஒரு தோல் நோயைக் காணும்போது, அது தோல் நோய்தானா என்பதையும், வேறு நோயினால் உண்டான தோல் நோயின் வெளிப்பாடா என்பதையும் அறிய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் தோல் தொழு நோயையோ, புற்றுநோயையோ தவறவிடக் கூடாது.
தோல் நோய்களை பொதுவாக வறட்சியான கடுகரோஹிணி, பேய்புடல் போன்ற மூலிகைகளால் பேதி செய்ய வேண்டும். குஷ்டம் பலமுறை குடல் சுத்தம் செய்யப்பட வேண்டிய ஒரு நோயாகும். உள்ளே நன்கு சுத்தம் செய்தவுடன்தான் வெளியில் பூச்சி மருந்துகள், மூலிகைத் தைலங்களைப் பயன்படுத்த வேண்டும்.
குஷ்டநோய்க்கு பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வாந்தியும், மாதத்துக்கு ஒருமுறை பேதியும், மூன்று நாள்களுக்கு ஒருமுறை மலக்கழிவை தலையிலிருந்து அகற்றும் மூக்கினுள்ளே விடும் மருந்துகளாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தக் குழாயைக் கீறி ரத்தத்தை வெளியேற்றும் சிகிச்சையும் செய்ய வேண்டும்.
பித்த குஷ்டத்தில் திக்தகம், மஹாதிக்தகம், நிம்பாதி போன்ற மூலிகை நெய் மருந்துகள், ஆரக்வதம், பல்லாதகம், துவரகம் போன்றவை கப குஷ்டத்திலும் பிரயோஜனப்படுகின்றன. வஜ்ரகம் நெய் மருந்து, பித்த சீற்றத்துக்கும், மஹாவஜ்ரம் நெய் மருந்து கப சீற்றத்துக்கும், குக்குலு திக்தகம் என்ற நெய் மருந்து மூன்று தோஷங்களின் சீற்றத்துக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நிம்பாதி எனும் சூரண மருந்தை மோரில் கலந்து உடலில் தேய்ப்பதற்காகப் பயன்படுத்துவதுண்டு.
கதிராரிஷ்டம், ஆரக்வதாரிஷ்டம் போன்ற அரிஷ்ட மருந்துகள் கபஜகுஷ்டங்களில் மட்டுமே பயன்படுத்துவது மரபு. குழந்தைகளுக்கு ஏற்படும் தோல்உபாதைகயில் இவை நன்கு பயன்படுகின்றன.
மஞ்ஜிஷ்டாதி கஷாயம், படோலகடுரோஹிண்யாதி கஷாயம், ஆரக்வாதி கஷாயம், படோலமூலாதி கஷாயம், மாணிபத்ரம் லேஹியம், நால்பாமராதி, தினேவல்யாதி தைலம் போன்றவை விற்பனையிலுள்ள தரமான குஷ்ட நோய்க்கான மருந்துகளாகும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்