முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நிம்மதியாக உறங்க...

மூத்த குடிமக்களில் பலர் மனக்கவலை, தனிமை உணர்வு, உடல்நல பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 4:11 AM
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:29 PM

மூத்த குடிமக்களில் பலர் மனக்கவலை, தனிமை உணர்வு, உடல்நல பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கான காரணங்கள் என்ன? மேலும், எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாமல் இயற்கையாக நன்றாகத் தூங்க உதவும் மருந்துகள் அல்லது சிகிச்சைகள் உள்ளனவா?

-ராம்ஜி, ஹோசூர்.

வயது முதிர்வது என்பது வெறும் முடி வெள்ளையாவது அல்ல. உடலும், மனமும், மூளையும் மெதுவாக மாற்றங்களைச் சந்திக்கிறது. அந்த மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்று தூக்கத்தின் தரம் குறைவது. இளம் வயதில் நம் மூளையில் 'மெலட்டோனின்' எனப்படும் தூக்க ஹார்மோன் இரவு நேரத்தில் சீராகச் சுரந்து, 'இப்போது ஓய்வு எடு' என்று உடலுக்கு இயற்கையான அறிவிப்பை வழங்குகிறது. அதனால், தூக்கம் ஆழமாகவும் தொடர்ச்சியாகவும் அமைகிறது.

Advertisement

ஆனால், வயது முதிரும்போது மெலட்டோனின் சுரப்பு மெதுவாகக் குறையத் தொடங்குகிறது. உடலின் உயிர்க்கடிகாரம் (சர்க்காடியன் ரிதம்) மாறுகிறது. இரவின் ஆழ்ந்த தூக்கநிலை சுருங்கி, லேசான தூக்கம் அதிகரிக்கிறது. இடையே பலமுறை விழித்துக் கொள்ளும் நிலையும் உருவாகிறது. இதனால் பல முதியவர்கள் முழு இரவும் சரியாகத் தூங்கவே இல்லை என்ற உணர்வுடன் காலையை எதிர்கொள்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேதம் இதை தனது தனித்துவமான முறையில் விளக்கியுள்ளது. பிள்ளைப்பருவமானது கப காலம், இளமை பித்த காலம், முதுமை வாத காலம் என மூன்று பருவங்களாகப் பார்க்கப்படுகிறது. முதுமையில் வாதம் இயல்பாக அதிகரிக்கும்போது, மனம் அமைதியின்றி அலைபாயும்; உடலில் உலர்ச்சி கூடும்; நரம்புத் தளர்ச்சி தோன்றும். இந்த வாதப் பெருக்கமே தூக்கத்தை மெலிதாக்கி, இடையிடையே கலைந்து போகச் செய்கிறது என்று கூறுகிறது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 7:32 PM

ஆயுர்வேதத்தின் பார்வையில் மனித உடல் மூன்று முக்கியத் தூண்களால் தாங்கப்படுகிறது. அவை ஆகாரம் (உணவு), நித்ரா (தூக்கம்), பிரம்மச்சரியம் (ஒழுங்கான வாழ்க்கை முறை) ஆகும். இந்த மூன்றையும் சேர்த்து 'திரயோபஸ்தம்பம்' என்று 'அஷ்டாங்கசங்கிரகம்' எனும் கிரந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தூக்கம் குறைந்துவிட்டால், உடல் சக்தி சோர்ந்து போகும்; நினைவாற்றல் மங்கும்; மனஅழுத்தம் அதிகரிக்கும்; நோய் எதிர்ப்புத் திறன் தளர்ந்து, பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும்.

வயதான காலத்தில் நல்ல தூக்கம் கிடைப்பது அவசியமானது. அந்தத் தூக்கம் சரியாக இருந்தால் நினைவாற்றல் தெளிவாக இருக்கும், மனம் அமைதியாக இருக்கும், உடல் சக்தியும் சீராகத் தங்கும். ஆனால், இந்த வயதில் தூக்கம் குறைந்துவிட்டால், உடனே மயக்க மாத்திரைகளை நாடுவது சரியான தீர்வாக இருக்காது. பல சமயங்களில் அவை காலை நேர மயக்கம், மறதி, உடல் சோர்வு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ஆயுர்வேதத்தில் நித்ராஜனக - தூக்கத்தை வரவழைத்தல் தன்மை கொண்ட சில மூலிகைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதிக்காயை சிறிய அளவில் பாலைச் சேர்த்து எடுத்தால் மனஅழுத்தத்தைத் தணித்து, தூக்கத்தை மெதுவாக ஏற்படுத்தும். அஷ்வகந்தா உடலின் நரம்புத் தளர்ச்சியைக் குறைத்து, மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, வயது முதிர்வில் காணப்படும் பலவீனத்தையும் சரிசெய்ய உதவுகிறது. இது இயற்கையாக மெலட்டோனின் சுழற்சியை ஆதரிக்கும் வகையில் உடலின் உள் கடிகாரத்தை சமநிலைப்படுத்துகிறது.

கசகசா பாரம்பரியமாக நரம்பு அமைதிக்காகப் பயன்படுத்தப்பட்டது. உடல் உலர்ச்சியைக் குறைத்து மென்மையான தூக்கத்தைத் தரும். ஜடாமாம்சி மனதை சாந்தப்படுத்தும் முக்கிய மூலிகையாகக் கருதப்படுகிறது. பிரஹ்மி தைலத்தை தலையில் தேய்த்து வர நினைவாற்றலை மேம்படுத்துவதோடு மனதைத் தெளிவாக்கி அமைதியை ஏற்படுத்துகிறது.

படுக்கும் முன் வெந்நீரில் கால்களைக் கழுவுதல், பாதங்களில் சிறிது எண்ணெய் தடவுதல், மெதுவான பிராணாயாமம் அல்லது தியானம் செய்வது பயனளிக்கும்.

தேவையானவர்களுக்கு அப்யங்கம் (எண்ணெய் மசாஜ்), நஸ்யம், குறிப்பாக சிரோதாரா போன்ற ஆயுர்வேத சிகிச்சைகள் மனஅழுத்தத்தைக் குறைத்து நரம்பு அமைதியை ஏற்படுத்தி, தூக்கத்தின் தரத்தை உயர்த்த உதவுகின்றன.

முதியவர்களில் தூக்கமின்மை அனைவருக்கும் ஒரே காரணத்தால் ஏற்படாது. ஒவ்வொருவரின் உடல் தன்மையும், உள்ளுறை மாற்றங்களும் வேறுபடும். எனவே சரியான காரணத்தை அறிந்து, மருத்துவரின் ஆலோசனையுடன் உணவு, பழக்கவழக்கம், சிகிச்சை ஆகியவற்றை தேர்வு செய்தால்தான் பாதுகாப்பான, இயற்கையான நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தூக்கத்தைத் திணிக்காமல், தூக்கம் தானாக வந்து சேரும் சூழலை உருவாக்குவதே உண்மையான தீர்வு.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.