தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்த வெடிப்பு குணமாக....

என் மகனுக்கு 47 வயதாகிறது. பாதத்தில் பித்த வெடிப்பு பாலம் பாலமாக வெடித்து நடக்கமுடியவில்லை. இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்து உள்ளதா?

எஸ். சுவாமிநாதன்

என் மகனுக்கு 47 வயதாகிறது. பாதத்தில் பித்த வெடிப்பு பாலம் பாலமாக வெடித்து நடக்கமுடியவில்லை. இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்து உள்ளதா?

-கே.ஜெயமணி, திருவாடானை.

குடல் உள்புற வறட்சியினாலும், நடை காரணத்தாலும் வாயுவின் குணங்களாகிய வறட்சி, லேசான தன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு, நுண்ணியத் தன்மை, நகரும் தன்மை ஆகியவற்றால் சீற்றமடைந்து தோல் அதன் இருப்பிடமாகையாலும் எளிதில் வெடிப்புகளை ஏற்படுத்தி, நடப்பதற்கே துன்பமளிக்கிறது.

வறட்சிக்கு எதிரான நெய்ப்பையும், லேசான தன்மைக்கு எதிரான கனமான தன்மையும், குளிர்ச்சிக்கு எதிரான சூடும், சொரசொரப்புக்கு எதிரான வழவழப்பும், நுண்ணியதுக்கு எதிரான ஸ்தூலத்தையும், நகரும் தன்மைக்கு எதிரான நிற்றலை உருவாக்கும் உணவும், செயலும், மருந்தும் பிரயோகப்படுத்தும் நிலையில் அவர் குணமடையலாம்.

உணவில் தாராளமாக உருக்கிய பசுநெய்யை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடும்போது, அதில் உள்ள நெய்ப்புத் தன்மையானது, குடலுக்கு மிருதுவான தன்மையை ஏற்படுத்துவதுடன், பாதத்தில் உள்ள தோலும் மென்மையடைய வழிவகுக்கிறது. வெடிப்புகளின் ஓரங்களில் உள்ள வறண்ட தோல் பகுதியை ஒன்றோடு ஒன்று இணையச் செய்கிறது.

வெறும் பசு நெய்யினாலேயே இத்தனை பலன்கள் கிடைக்கும்போது, இதற்கென்றே மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சி எடுத்த ஆயுர்வேத மருந்துகள் மேலும் விரைவாக வேலை செய்யும் அல்லவா? விதார்யாதி கிருதம், க்ஷீரபலா 101, தாடிமாதி கிருதம், கல்யாண கிருதம் போன்ற மருந்துகளைக் குறிப்பிடலாம்.

வெடிப்பினுள்ளேயும் அதைச் சுற்றியுள்ள தோல் பகுதிகளிலும் உள்ள நரம்புகள், நடக்கும்போது ஏற்படுத்தும் கடுமையான வலியைக் குறைக்க, குக்குலுவை முக்கியப் பொருளாகக் கொண்டு காய்ச்சப்படும் ஓர் ஆயுர்வேத மூலிகை நெய் மருந்து இருக்கிறது. அதை காலை, இரவு உணவுக்கு அரை மணி நேரம் முன் சாப்பிட்டுவர, வலி குறைந்து, வெடிப்புகளும் விரைவாக மறைந்துவிடும்.

சததௌத கிருதம், ஜாத்யாதி கிருதம், சிந்துராதி லேபம், ஜீவன் தியாதி யமகம் போன்ற வெளிப்பூச்சு மருந்துகளால் அவர் குணமடையலாம். பிண்டதைலம், முரிவெண்ணெய் போன்ற தைலங்களையும் இங்குப் பயன்படுத்திக் குணமடையலாம். இளஞ் சூடான உப்பு கரைத்த வெந்நீரில் களிம்புகளைத் தடவிய பிறகு கால்களை அதில் முக்கி வைக்கலாம்.

உணவில் கனமான, அதாவது செரிமான தாமதத்தை ஏற்படுத்துவதும், சூடான வீரியம் கொண்டதும், குடல் முழுவதும் வழுவழுப்பை உருவாக்குவதும், உருவத்தில் பெரிதானதும், நகர்வதில் தாமதமாவதுமாகிய பொருள்களைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால், இந்தக் குணங்களின் வரவை, ரத்தத்தின் சுழற்சியால் கால் பாதங்களில் உள்ள தோல் மற்றும் நரம்புகள் தம் ஊட்டத்துக்காகப் பெறும் நிலையில், வெடிப்புகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்து, தோல் மென்மையாவதை உறுதிப்படுத்தலாம்.

இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை நிறைந்த உணவுகளால் மட்டுமே இதைச் சாதிக்க இயலும். அந்த வகையில், இனிப்புக் கொழுக்கட்டை , ஜவ்வரிசிப் பாயசம், உளுந்தையும் கோதுமையையும் சேர்த்துத் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள், புளித்த தயிர் சாதம், வெண்ணெய், வெந்தயம், கறுப்பு எள் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தல் வேண்டும்.

பிண்ட தைலம், முரிவெண்ணெய் போன்ற ஆயுர்வேத மூலிகைத் தைலங்களை, இளம் சூடாக பஞ்சில் முக்கி எடுத்து, கால் பாதங்களில் வெடிப்புள்ள வலி நிறைந்த பகுதிகளில் கட்டி வைத்து, குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்கும் சிகிச்சையும் நல்ல பலனைத் தரக்கூடியது. இதையே பாதங்களில் தாரையாக ஊற்றும் முறையும் சிறந்ததே.

ரத்தத்தினுள்ளே வாயுவின் சீற்றம் ஏற்பட்டு, பாதத்தை வெடிப்புறச் செய்திருப்பதன் வாயிலாக, ரத்தத்தையும் சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அட்டைப் பூச்சியை வைத்து கடிக்கச் செய்து, கெட்ட ரத்தத்தை வெளியேற்றுதல், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் நன்னாரி வேர்ப்பட்டை, கடுக்காய், சுக்கு ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் செய்து பருகுதல் போன்றவை நல்லது.

ஆயுர்வேத மருத்துவமனையில் செய்யப்படும் எண்ணெய் தேய்ப்பு, வியர்வை சிகிச்சை, ஆஸனவாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகை எண்ணெய் மற்றும் கஷாய வஸ்தி சிகிச்சை, ஞவரகிழி போன்றவை மூலம் வாயுவின் சீற்றத்தை அடக்கி, வெடிப்புகளைக் குணப்படுத்தும் சிகிச்சை முறைகளால் நிரந்தர தீர்வினைப் பெறலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

கல்லூரி மாணவி தற்கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மீது வழக்கு

உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை சிற்பியின் கவிதைகள்! - குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்!

அறநெறி கொண்ட சமுதாயத்தை இளைஞா்கள் உருவாக்க வேண்டும்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

கால்நடை பல்கலை.களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு: அஸ்ஸாம் பல்கலை. துணைவேந்தா் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT