நானும், என் அண்ணனும் சர்க்கரை உபாதையால் அவதிப்படுகிறோம். ஆனால், அவர் பார்ப்பதற்கு ஒல்லியாகவும், நான் குண்டாகவும் இருக்கிறேன். எங்கள் இருவருக்கும் ஒரே வகையான மருந்து எப்படி வேலை செய்யும். இதற்கு ஆயுர்வேதத்தில் விளக்கமுள்ளதா?
ஜெயப்பிரகாஷ், சென்னை.
சர்க்கரை உபாதைக்கான சிகிச்சையானது நோயாளியின் தன்மையைப் பொறுத்து இருமுறைகளில் கையாளப்படுகிறது. நோயாளி பலம் உள்ளவரா அல்லது பலம் குன்றியவரா என்பதை அறிய வேண்டும். உடல் மெலிந்து பாலம் குன்றியவராக இருப்பின் லேசான தன்மையுடைய அதாவது எளிதில் செரிப்பதும், உடல் ஊட்டத்தை வளர்ப்பதுமாகிய உணவைக் கொடுக்க வேண்டும். அவருடைய உடல் வாட்டத்தைப் போக்கி, சர்க்கரையின் அளவும் கூடாதவாறு கவனித்து, மருத்துவம் செய்வது என்ற முறையில் குணப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.
இதற்கு உதாரணமாக அவலைக் குறிப்பிடலாம். அவல் கஞ்சி, அவல் உப்புமா, குழைய வேகவைத்த அவலைத் தயிருடன் சாப்பிடலாம். சர்க்கரை உபாதையில் ஏற்படும் சீதபேதி, வயிற்றுக்கடுப்பு,போன்றவையும் நன்கு குறையும். களைப்பு அகல, அவலை வேக வைத்து வடித்த நீரைக் குடிக்கலாம். அவலுடன் சிறிது பாலும் நெய்யும் சேர்த்துச் சாப்பிட பலம் உண்டாகும்.
சர்க்கரை உபாதையில் ஏற்படும் அகோரப் பசி தணிய, அவலைத் தயிருடன் கலந்து உண்ணலாம். வீக்கமும், உடல் எரிவும் அகல, மோரில் அவலை கரைத்து உண்ணலாம். பித்த, சீற்றத்தால் ஏற்படும் சர்க்கரை உபாதையில் புளிப்புச்சாறுடன் அவலைக் கலந்து உண்ணலாம். அரிசி அன்னத்தைவிட, அவலால் உடல் வலு அதிகம் உண்டாகும்.
உடல் பருமனாகவோ அல்லது பலம் உடையவராகவோ இருப்பின், செரிப்பதில் கனமானதும் அதே சமயத்தில் உடல்வாகு மேற்கொண்டு பருமனாகாத வகையிலும் அமைய வேண்டும். இதற்கு சிறந்த உதாரணமாக தேனைக் குறிப்பிடலாம்.
வரட்சி, ஈரப்பசையை உறிஞ்சும் தன்மையுடையது தேன். ஆனால் நடைமுறையில் கிடைக்கும் தேனானது சூடாக்கப்பட்டு பதப்படுத்தப்படுவதால் அவை ஆயுர்வேத புத்தகத்தில் கூறிய தேனின் குணத்தோடு ஒப்பிட முடியாததன் காரணமாக, அதைத் தவிர்த்து வருகிறோம்.
தேனடையில் இருந்து நேரிடையாகப் பிழிந்து எடுக்கப்படும் தேன் நல்லது. சீரகம், சோம்பு, மிளகு, திப்பிலி, நெல்லி முதலியவற்றைத் தேனில் ஊற வைத்துப் பாதுகாத்து, அவ்வப்போது ஒவ்வொன்றாக மென்று சாப்பிடலாம்.
மிளகு, உடல் வாயு வலியைக் கண்டிக்கும். திப்பிலி சளியை அகற்றும். சோம்பு வயிற்று வாயுவை நீக்கும். சீரகம் செரிக்கச் செய்யும். நெல்லிக்காய் வலுவைத் தரும்.
பயிறு, பழைய நெல், எள், விளாம்பழம், நாவல் பழம், மஞ்சள், நெல்லிக்காய், திரிபலை, வேங்கை, மரப்பட்டைக் கஷாயம் போன்றவை சர்க்கரை உபாதையின் தாக்கத்தைக் குறைக்க பொதுவான உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வலுவூட்ட சிலாசத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
காலை நேரத்தில் உணவு உண்பதற்கு முக்கால் மணி நேரம் முன்பாக, சர்க்கரை நோய்க்கான மருந்துகளைச் சாப்பிட ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. வாயுவிடங்கம், மஞ்சள், அதிமதுரம், சுக்கு, நெஞ்சில் கஷாயத்தில் சிலாசத்து, தேன்மேம்பொடி சேர்த்துக் குடிக்க மேற்குறிப்பிட்ட இரு நபர்களுக்கும் நல்லது.
தொடரும்
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.