ராஜீவ் காந்தி படுகொலையில் முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு இருக்கிறது என்று ஜெயின் கமிஷன் விசாரணையில் நிருபிக்கப்போவதாக வாழப்பாடி ராமமூர்த்தி என்னிடம் தெரிவித்தார். அதற்கான பல சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாகவும், குறுக்கு விசாரணையில் முதல்வர் கருணாநிதி தனது பங்களிப்பை ஒத்துக்கொள்வார் என்றும் அவர் கூறினார்.
வாழப்பாடியார் ஏன் இந்த அளவுக்கு முதல்வர் கருணாநிதியிடம் பகைமை பாராட்டுகிறார் என்று எனக்குத் தெரியும். அதற்கு அவரது அதிமுகவுடனான தொடர்பு மட்டுமே காரணமில்லை. 1996 பொதுத் தேர்தலில் தனது திவாரி காங்கிரஸூடன் கூட்டணி வைப்பதாக உறுதி அளித்து, பிறகு 'தமிழ் மாநில காங்கிரஸ்' என்று ஜி.கே. மூப்பனார் காங்கிரஸிலிருந்து பிரிந்தபோது, தன்னைக்
கூட்டணியில் சேர்த்துக்கொள்ளாமல் தவிர்த் ததை, மிகப் பெரிய நம்பிக்கை துரோகமாக வாழப்பாடி ராமமூர்த்தி கருதினார்.
தலைநகர் தில்லி பரபரப்பாக இருந்தது. ஜெயின் கமிஷன் விசாரணை மட்டுமல்லாமல், ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழு கூட்டமும், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டமும் நடைபெற இருந்ததால் மாநில முதல்வர்கள், ஐக்கிய முன்னணியின் கூட்டணித் தலைவர்கள் என்று இந்தியாவின் குறிப்பிடத்தக்க அரசியல் ஆளுமைகள் அனைவரும் தில்லியில் குவிந்திருந்தனர்.
போஃபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பான ரகசிய சுவிஸ் ஆவணங்கள் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. சீல் இட்ட பெட்டிகளில் அடைக்கப்பட்ட ஆவணங்களை, சுவிஸ் நாட்டின் சட்ட அமைச்சக அதிகாரிகள் இந்தியத் தூதரிடம் ஒப்படைப்பார்கள் என்று கூறப்பட்டிருந்தது. அதை இந்தியப் புலனாய்வுத் துறையால் மட்டுமே திறந்து பார்க்க முடியும் என்றும் கூறப்பட்டது.
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் வின் சட்டா, ஹிந்துஜா சகோதரர்கள் மட்டுமல்லாமல் சோனியா காந்தியின் உறவினரான ஒட்டாவா குவாத்ரோச்சிக்கும் தொடர்பு இருக்கிறது என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு.
ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது முதலே போஃபர்ஸ் தொடர்பான ஆவணங்களைப் பெறுவதில் முனைப்புக்காட்டி வருகிறது என்பது என்னவோ உண்மை. முந்தைய நரசிம்ம ராவ் அரசில், ஆவணங்களைப் பெறுவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்று குற்றம் சாட்டிய கட்சிகள்தான், இப்போது ஐக்கிய முன்னணி அரசில் பங்கு பெற்றிருக்கின்றன என்பதால் காங்கிரஸ் சற்று அதிருப்தியில் இருந்தது.
'காங்கிரஸ் தனது ஆதரவை விலக்கிக்கொண்டால் ஐக்கிய முன்னணி அரசு கவிழும்'' என்று பாதுகாப்பு அமைச்சரும் சமாஜவாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் தெரிவித்தது விவாதத்தை மேலும் அதிகரித்திருந்தது. அந்தப் பின்னணியில்தான் ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுக் குழு கூட்டம் நடைபெற இருந்தது.
முதல்வர் கருணாநிதி வந்திருந்ததால் தமிழ் நாடு இல்லம் பரபரப்பாக காட்சி யளித்ததில் வியப்பில்லை. மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமல்லாமல் ஐக்கிய முன்னணியின் தலைவர்களும் அவரை நேரில் சந்திக்க வருகை தந்த வண்ணம் இருந்தனர்.தமிழ்நாடு இல்லம் மட்டுமல்லாமல், அநேகமாக எல்லா மாநில விருந்தினர் மாளிகைகளும் தலைவர்களின் வருகையால்விழாக்கோலம் பூண்டிருந்தன.
ஐக்கிய முன்னணியின் வழிக்காட்டுக் குழு கூட்டம் ஆந்திர பவனில் கூடுவதாக இருந்தது. அதனால் நான் தமிழ்நாடு இல்லத்துக்குப் போகாமல், ஆந்திர பவனுக்கு நேராகச் சென்றுவிட்டேன்.
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, அஸ்ஸாம் முதல்வர் பிரஃபுல்ல குமார் மகந்தா, காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.மூப்பனார் உள்ளிட்டோர் ஒருவர் பின் ஒருவராக வழிகாட்டுதல் குழுக் கூட்டத்துக்கு வந்தனர்.
பிரதமர் தேவே கெளடாவும் வந்த பிறகுதான் தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டத்துக்கு வந்தார். அவர் வரும்வரை எந்தவித விவாதத்திலும் ஈடுபடாமல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர் என்பதிலிருந்து, எந்த அளவுக்கு அவர் முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். கூட்டம் சுமார் ஒருமணி நேரம் தொடர்ந்தது. கூட்டத்துக்குப் பிறகு எந்தவித அறிக்கையோ, தகவலோ செய்தியாளர்களுக்குத் தரப்படவில்லை.
முக்கியமான சில தலைவர்களை நான் தனியாக சந்தித்துப் பேசினேன். அவர்களிடமிருந்து கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். 'எந்தப் பிரச்னையாக இருந்தாலும் கூட்டணித் தலைவர்கள் வெளியில் தெரியாத வண்ணம் தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்; மத்திய அரசில் இடம்பெற்றிருப்பதால் மாநில ஆட்சிகளில் இருக்கும் கட்சிகள் மத்திய அரசின் திட்டங்களையும், கொள்கை முடிவுகளையும் விமர்சிக்கக் கூடாது'' என்பவைதான் விவாதித்து முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.
போஃபர்ஸ் குறித்தும், காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும் ஐக்கிய முன்னணியில் உள்ள கட்சிகள் பொதுவெளியில் பேச வேண்டாம் என்பது பிரதமர் தேவே கெளடாவின் வேண்டுகோளாக இருந்தது. அதை ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும், ஏ.பி.பரதனும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆரம்பம் முதலே போஃபர்ஸ்
பிரச்னையை முன்வைத்து பிரசாரம் செய்துவிட்டு, இப்போது மெளனம் காப்பது அரசியல் தர்மமாகாது என்பது அவர்கள் வாதம்.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் யாருமே வெளியில் தெரிவிக்காத ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால், பிரதமர் தேவே கெளடா ஐக்கிய முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினார் என்பதும், தனக்குப் பதிலாக சுர்ஜித்தோ, மூப்பனாரோ தலைவராக இருந்து ஐக்கிய முன்னணியை வழிநடத்தலாம் என்றும் சொன்னதாகத் தெரிகிறது. இவர்கள் இரண்டு பேருமே அதற்குத் தயாராக இல்லையென்றால் ஜோதி பாசு தலைவராகட்டும் என்றும் யோசனை கூறியிருக்கிறார்.
தேவே கெளடா ஐக்கிய முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள விரும்பியதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க முடியாமலும், காங்கிரஸூடனும், அதன் தலைவர் சீதாராம் கேசரியுடனும் அன்றாட அரசியல் தொடர்பில் இருப்பது சாத்தியமில்லை என்பதும்கூட அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.
தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இருவரும் அந்தக் கூட்டத்துக்குப் பிறகு தனிமையில் கலந்தாலோசனை நடத்தினார்கள். அந்தக் கலந்தாலோசனையில் மூப்பனார் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதும், இடதுசாரி தலைவர்கள் இருவரும் உடனடியாக கிளம்பிவிட்டதும் ஏதோ பிரச்னை நிலவுகிறது என்பதை எனக்கு உணர்த்தியது.
அதைத் தெளிவு செய்துக்கொள்ள நான் விரைந்த இடம் அஸ்ஸாம் பவன். அஸ்ஸாம் முதல்வர் மகந்தா வழக்கம்போல என்னை வரவேற்றார். அஸ்ஸாமில் மாணவர் போரட்டம் நடந்தபோது பல தடைகளையும் மீறி நான் அங்கே சென்று அவரைப் பேட்டி எடுத்ததை அவர் மறக்கவில்லை. அஸ்ஸாம் மாணவர் போராட்டத்தின்போது, தலைமறைவாக இருந்தபடி போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த மகந்தாவுடன் இரண்டு நாள்கள் தங்கியிருந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.
அவர் முதல்முறையாக 1985இல் அஸ்ஸாம் முதல்வரானபோது பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். தென்னிந்தியாவில் இருந்து சென்றிருந்த பத்திரிகையாளன் நான் ஒருவன் என்பதைவிட, அவர் என்னைத் தனது நண்பர் என்று சக அமைச்சர்களுக்கு அறிமுகப்படுத்தியதை எப்படி என்னால் மறக்க முடியும்?
'வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் என்ன நடந்தது?''
'சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லை. பிரதமர் தேவே கெளடா ஐக்கிய முன்னணிக்குத் தலைமை வகிக்க விரும்பவில்லை. ஒரு தர்மசங்கடமான நிலைமையை ஐக்கிய முன்னணி எதிர்கொள்கிறது. போஃபர்ஸ் ஆவணங்கள் விரைவில் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. அந்த ஆவணங்களை நாம் கேட்டுப் பெறுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அந்த ஆவணங்களை எப்படியும் கொண்டுவர வேண்டும் என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிடிவாதமாக இருக்கின்றன. தோழர் இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராக இருப்பதால் அவர் அதில்
முனைப்புக்காட்டுகிறார். அதனால்தான் தலைமைப் பொறுப்பிலிருந்து நழுவ விரும்புகிறார் பிரதமர்.''
'அப்படியானால் ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழுமா?''
'காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரிக்குப் பிரதமர் ஆசை ஏற்பட்டிருக்கிறது. அது சாத்தியம் இல்லை. ஆட்சி கவிழ்ந்தால் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பதால் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க விரும்பாது.
போஃபர்ஸ் பிரச்னையை ஒத்திப்போட அழுத்தம் கொடுப்பதுடன் நிறுத்திக்கொள்ளும் என்றுதான் நினைக்கிறேன்.''
அதற்குப் பிறகு சில நிமிடங்கள்தான் அவருடன் பேச முடிந்தது. அவரை சந்திக்க அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சில அதிகாரிகளும், எம்.பி.க்களும் வந்துவிட்டனர். அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.
அடுத்த நாள் காலையில் ஜெயின் கமிஷன் விசாரணைக்கு விஞ்ஞான் பவனுக்கு நான் சென்றேன். எனக்கு முன்பே வாழப்பாடி ராமமூர்த்தி அங்கே வந்திருந்தார். நான் பார்வையாளர்கள் பகுதியில் சென்று அமர்ந்துகொண்டேன்.
சற்று நேரத்தில் முதல்வர் கருணாநிதி சில வழக்குரைஞர்கள் புடைசூழ நுழைந்தார். அவர் நுழைந்ததும் விசாரணை நீதிமன்றமே கலகலப்பானது. நீதிபதி ஜெயின் அடுத்த சில நிமிடங்களில் உள்ளே நுழைந்ததும் நிசப்தம் ஏற்பட்டது. முன்பு விசாரணையின்போது விட்ட இடத்திலிருந்து இப்போது தொடர்கிறது கேள்விகள்.
'பல்வேறு போராளிக் குழுக்களுடன் நீங்கள் பேச்சுவார்த்தையிலும், ஆலோசனையிலும் ஈடுபட்டது ஏன்?'' என்பதுதான் முதல்வர் கருணாநிதியிடம் தொடுக்கப்பட்ட முதல் கேள்வி.
'பிரதமர் ராஜீவ் காந்தியும், அதற்குப் பிறகு பிரதமரான வி.பி.சிங்கும் கேட்டுக் கொண்டதன் பேரிலும், அவர்களது ஆலோசனையின் அடிப்படையிலும்தான் பல்வேறு குழுக்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தினேனே தவிர, தனிப்பட்ட முறையில் அவர்களை அழைத்துப் பேசியதில்லை.''
'அப்படி பேச்சுவார்த்தை நடத்தும்போது நீங்கள் ஏன் எந்த அதிகாரியையும் உடன் வைத்துக்கொள்ளவில்லை? அதற்கு ஏதாவது காரணம் இருந்ததா?''
'இருந்தது.''
'என்ன காரணம்?''
'அரசியல் ரீதியிலான அந்தப் பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் கலந்துகொள்ளத் தேவையில்லை என்று நான் கருதினேன். நான்கைந்து நாள்கள் பேச்சுவார்த்தை நடந்தது. அவர்கள் கலந்துகொண்டால் நிர்வாகத்தை யார் கவனிப்பது? அதனால் நானே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அதற்கு வேறு எந்தக் காரணமும் கிடையாது.''
அப்போது அதிமுக சார்பில் கலந்துகொண்ட வழக்குரைஞர் ஒருவர் சற்றும் எதிர்பாராமல் ஒரு கேள்வியை எழுப்பினார்.
'1980இல் நீங்கள் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டபோது, உங்களுக்காக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும், அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பிரசாரம் செய்தனர் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?''
அந்தக் கேள்வி எழுப்பப்பட்டவுடன் முதல்வர் கருணாநிதியின் சற்று திடுக்கிட்டார். அந்த வழக்குரைஞரை நிமிர்ந்து பார்த்தார். நீதிபதி ஜெயின் மட்டுமல்ல, அந்த விசாரணை நீதிமன்றத்தில் இருந்த அனைவருமே, அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
நான் வாழப்பாடி ராமமூர்த்தியின் முகத்தைப் பார்த்தேன். அவர் உதட்டில் புன்முறுவல் தோன்றி மறைந்தது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.