பிரிட்டனின் ராணி எலிசபெத்தைவிட, அவருக்குப் பின்னர் மன்னர் பொறுப்பேற்றுள்ள சார்லஸ் பணக்காரர் என்பது டைம்ஸ் பத்திரிகை அண்மையில் வெளியிட்டிருக்கும் பிரிட்டனின் செல்வந்தர்கள் பட்டியல் மூலமாகத் தெரிய வந்துள்ளது. சார்லஸின் தற்பொதைய சொத்து மதிப்பு 6,400 கோடி ரூபாய். இவர் பிரிட்டனின் 258-ஆவது பணக்காரர் என்கிறது அந்தப் பட்டியல். மரணம் அடைந்தபோது ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பு 3,900 கோடி ரூபாயாக இருந்தது.
அமெரிக்காவில் வசித்தாலும் கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சைக்கு பிடித்த இந்திய உணவுகள் குறித்து அவர் கூறுகையில், 'பெங்களூரில் இருந்தால் கண்டிப்பாக தோசை சாப்பிடுவேன். தில்லி என்றால் எனக்குப் பிடித்தது சோலா படூரா. மும்பை போனால் வடா பாவ்' என்கிறார்.
இந்தியாவின் நிறைய படித்த அரசியல் தலைவர்களில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர். அவர் வரலாற்றில் இளங்கலை பட்டமும், இஸ்லாமிய வரலாற்றில் முது கலைப் பட்டமும் பெற்றவர். இதைத் தவிர கல்வியியல், சட்டம் படித்துப் பட்டம் பெற்றவர். உடல் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்ட மம்தா பானர்ஜி தினமும் வீட்டிலேயே டிரெட் மில்லில் ஆறு கிலோ மீட்டர் தூரத்துக்கும் நடைப்பயிற்சி செய்பவர்.
கேரள முதல்வர் பினராய் விஜயனின் பெற்றோர்களுக்கு 15 குழந்தைகள். ஆனால் அவர்களில் 4 பேர் மட்டுமே உயிர் பிழைத்தவர்கள். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஒரு வருட காலம் கைத்தறி நெசவாளராகப் பணிபுரிந்த பின்னர், அவர் தலைச்சேரியில் அரசுக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி. ஏ. பட்டம் பெற்றார். தனது 25-ஆம் வயதில் 1970-இல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மிகக் குறைந்த வயதில் எம்.எல்.ஏ.ஆனார்.
இந்தியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு வங்கி, குஜராத்தில் உள்ள அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கிதான். 1999-ஆம் வரை அந்த வங்கி 36 கோடிரூபாய் அளவுக்கு நஷ்டத்தில் இயங்கி வந்தது. அப்போது அதன் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர் தான் பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் வங்கியின் நெருக்கடியான நிதி நிலைமையை மாற்றி 27 கோடி ரூபாய் லாபம் ஈட்ட வழி செய்தார். 2014-இல் அந்த வங்கியின் லாபம் ரூ.250 கோடியைத் தாண்டியது. இதனை சாதித்தவர் அமித் ஷா.
-எஸ்.சந்திரமௌலி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்காக, பெங்களூருக்கு அண்மையில் வந்திருந்தார். அவர் பேசும்போது, 'சிலர் பஸ் ஸ்டாண்ட் செல்வர். பஸ் வரும் ஏறி போய்க் கொண்டே இருப்பர். அதேபோல், ஜெயித்தேன். முதல்வர் பதவி வந்தது. நான் ஏறி பயணித்துகொண்டிருக்கிறேன்' என்று நகைச்சுவையுடன் கூறியதை கூட்டத்தில் இருந்தோர் மிகவும் ரசித்தனர்.
சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் இளைய மகன் தேஜாயின் பொழுதுபோக்கு வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதும், புதிய உயிரினங்களைக் கண்டுபிடிப்பதும்தான். இதுகுறித்து அவர் கூறுகையில், 'எனது தந்தை உத்தவ் தாக்கரேவைப் பின்பற்றியே இந்த ஆர்வம் எனக்கு வந்தது. எனது தந்தைக்கு வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தது. அதுவே என்னையும் தொற்றிக் கொண்டது' என்கிறார்.
-ராஜி ராதா, பெங்களூரு.
1930-ஆம் ஆண்டு தண்டியில் காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகத்தை நடத்தினார். அப்போது, வேதாரண்யத்தில் நடத்தியவர் ராஜாஜி. இதற்காக அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்தபோது, அதை சிரிப்புக் கூடமாகவும், சிந்தனைக் கூடமாகவும் மாற்றியவர் ராஜாஜி. அதேநேரத்தில், எஸ்.என்.வரதாச்சாரி, முனுசாமிப் பிள்ளை, அனந்தசயனம் உள்ளிட்ட தேசப் பக்தர்களுடன் ராஜாஜி இணைந்து வால்மீகி ராமாயண விவாதத்தில் ஈடுபட்டார்.
'பரதன் வந்து அழைத்ததும் ராமர் அயோத்தி திரும்பியிருந்தால் இவ்வளவு துன்பம் வந்திருக்காது' என்றார் ஒருவர். 'இல்லை..இல்லை.. ராமனின் தலைவிதி' என்றார் ஒருவர். அப்போது ராஜாஜி குறுக்கிட்டு, 'ராவணன் தலைகளின் விதி' என்று கூற, அனைவரும் சிரித்துவிட்டனர்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
வானொலியில் பணியாற்றிய சுகி.சுப்பிரமணியத்தின் மகனும், அவரைப் போலவே வானொலியில் பணியாற்றியவருமான எம்.எஸ். பெருமாள் எழுதிய 'வாழ்க்கை அழைக்கிறது' எனும் குறுநாவல்தான் 'அவள் ஒரு தொடர்கதை' எனும் பெயரில் திரைப்படமானது. இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் கே.பாலசந்தர்.
பிரிட்டன் பிரதமர் அட்லி எழுதிய நூலில்இருந்த வாசகங்களை முன்னாள் மத்திய அமைச்சர் மது தண்டவதே கூறியிருந்ததாவது:
'எப்போது ஓர் அமைச்சர் ஒரு துறையின் பொறுப்பை ஏற்கிறாரோ, அப்போதே அந்த ஆளும் வர்க்கத்தின் அதிகாரி உடனே கூடி 24 மணி நேரத்தில் அமைச்சரைப் பற்றி முடிவு செய்துவிடுவார்.
அந்த அமைச்சரின் அடிப்படை அணுகுமுறை எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வார்.
ஒவ்வொரு குறிப்பிலும் அமைச்சரின் தனிப் பார்வையும் அதன் நுணுக்கத்தையும் உணர்ந்திடாதவர் என்றால் அந்த அமைச்சர் அக்கணமே சாக்கடையில் தூக்கி எறியத்தக்கவர் என்பது அவருடைய முழு இலாகாவும் புரிந்துகொள்ளும். அவர் எழுதியதும் ஜெகஜீவன்ராமின் அறிவுரையும் எனக்கு ஒன்றாகத் தெரிந்தது' என்றாராம்.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை செட்டிநாட்டில் நாடகம் ஒன்றை நடித்துகொண்டிருந்தார். அப்போது ஒருநாள் அவர் நடித்த 'சம்பூர்ண ராமாயணம்' நாடகம் நடந்தது.
இதைப் பார்த்து சக நடிகர் ஒருவர் நவாப்பிடம், 'நீங்கள் கொடுத்து வைத்தவர். ராமதூதனான அனுமன் வேடம் போடுகிறீர்கள். உண்மையான பக்தியும், பணிவும் உங்களுக்குத் துணை நிற்கின்றன' என்று பாராட்டினார்.
இதற்கு நவாப் புன்சிரிப்புடன், 'இந்த நாடகத்தில் நடிக்கும் ஒருவர் கடிகாரத்தைத் திருடியதால், அவனை நேற்று அடித்து நொறுக்கிவிட்டேன். அவன்தான் இன்று ராமராக நடிக்கிறான். அவனிடம் நான் பணிந்து துதித்து வணங்க வேண்டியிருக்கிறது. எல்லாம் காலநேரம்' என்றாராம்.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஒருசமயம் எழுத்தாளர்கள் சிலர் வெளியூர் நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தனர். பாதிவழியில் கார் பழுதடைந்தது. காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி
தள்ளினர்.
காரில் இருந்த பெரியவர் கி.வா.ஜா.வும் தானும் இறங்கித் தள்ளுவதாகக் கூறினார். இதற்கு மற்ற எழுத்தாளர்கள் மறுக்கவே, 'நான் என்ன தள்ளாதவனா?' என்று சொல்ல, அனைவரும் சிரித்துவிட்டனர்.
-முக்கிமலை நஞ்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.