ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உமிழ் நீர் சுத்தம் ?
உமிழ்நீர் சுத்திகரிப்பில் ஆயுர்வேத அறிவுரைகள்
எனது வயது 76. 2020-ஆண்டிலிருந்து உமிழ் நீர் உப்பு கலந்து கெட்டியாக களியாக வந்து கொண்டிருக்கிறது. அந்த உமிழ் நீர் வாய் வழியாக வயிற்றுக்குள் செல்வதால் காலை, மதியம் மற்றும் இரவு உணவு ஆகியவற்றைச் சாப்பிட முடிவதில்லை. மிகக் குறைவாக சாப்பிடுவதால் நான் மெலிந்து போய் எலும்பும் தோலுமாய் ஆகிவிட்டேன். நடக்க முடியவில்லை. எனது ஒரே மகன் இதயச் செயலிழப்பால் 2020- ஆம் ஆண்டில் காலமாகிவிட்டார். அதனால் இந்த நோய் எனக்கு வந்து விட்டதோ என்ற அச்சமும் உள்ளது. எப்படிகுணப்படுத்துவது?
-ஜி.சௌந்தரவல்லி, சிவகங்கை
சுவையை உணர்த்தக் கூடிய 'போதகம்' என்ற ஒரு கபம் வாயின் உட்பகுதியிலிருந்து உற்பத்தியாகி வேலை செய்கிறது. நெய்ப்பு - குளிர்ச்சி - கனம் - மந்தம் - வழுவழுப்பு - கொழுகொழுப்பு - நிலைப்பு ஆகிய குணங்களைக் கொண்டு செயலாற்றும் இந்த கப தோஷத்தின் வரவானது உங்களுக்கு வாயில் எச்சில் சுரப்பிகளில் கூடியுள்ளதாகத் தெரிகிறது. நீர் மற்றும் நெருப்பின் ஆதிக்ய பூதங்களைக் கொண்ட உப்புச் சுவை இந்த போதக கபத்துடன் கை கோர்த்துக் கொண்டு வயிற்றுக்குள் செல்வதால் வயிற்றிலுள்ள செரிமான சுரப்பிகள் நீர்த்துப் போய் பசியின்மையை ஏற்படுத்துகின்றன.
Advertisement
Advertisement
வாயின் உட்பகுதியில் சுரக்கும் கிரந்திகள் சுத்தமாக இருப்பதற்கும், அங்கிருந்து சுரக்கும் உமிழ் நீர் அப்பழுக்கற்ற நிலையில் இருப்பதற்கும், வாயின் உட்புறப் படிவங்களை அகற்றி வாய் உட்புற சவ்வுகளின் சுத்தமான தன்மைக்கும், ஆயுர்வேதம் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச்சுவை கொண்ட மரக்குச்சிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அறிவுரை உங்களுக்கு மிகவும் பொருத்தமாகும். இனிப்பு - புளிப்பு - உப்புச்சுவை கொண்ட பற்பசைகளால் , வாயில் படிந்துள்ள அழுக்குகள் நீங்காமல் இருப்பதற்குக் காரணம், இந்த மூன்று சுவைகளும் 'போதக' கபத்தை மேலும் மேலும் தூண்டி விடுபûவாக இருப்பதால்தான். எருக்கின் வேர், ஆலம் விழுது, புங்கை மரப்பட்டை, மருதம் பட்டை ஆகியவற்றில் ஒன்றை மட்டும் பல் துலக்கப் பயன்படுத்தவும். ஒவ்வொரு வேளையும் உணவை உண்ட பிறகு, பல் துலக்குவதை வழக்கமாகிக் கொள்ளவும். வேர், பட்டை போன்றவை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லையே என்று நீங்கள் வருந்தினால், தயாரித்து விற்கப்படும் ஆயுர்வேத பல்பொடிகளாகிய, ' தந்த சூரணம்', 'தசனகாந்தி' போன்றவற்றைப் பயன்படுத்தி பலனடையலாம்.
மூக்கின் உட்புற மேல் கூரையிலிருந்து செயலாற்றும் அடினாய்டு சுரப்பி, மூளையினுள் சுரக்கும் சுரப்பிகள் போன்றவை மூலமாகவும் நீங்கள் குறிப்பிடும் பிரச்னையானது உருவாகலாம். அவற்றின் சுத்தத்திற்காக, நீங்கள் இரு சொட்டுகள், ' அனுதைலம்' எனும் மூலிகைத் தைலத்தை காலை, மதியம், இரவு உணவிற்குப் பிறகு மூக்கினுள் விட்டு உறிஞ்சிய பிறகு, தொண்டைக்கு வரும் அதனை காறித் துப்பி விடலாம்.
உமிழ் நீர் சுத்தத்திற்காக நம் முன்னோர் கிராமங்களில் கருங்காலிக் கட்டை, நால்பாமரம் எனும் நான்கு பால் வடியும் பட்டைகள், வேலம் பட்டை ஆகியவற்றைக் கொண்டு மூலிகைத் தண்ணீர் காய்ச்சி, வாயில் விட்டு நன்கு கொப்பளித்துத் துப்பினார்கள். வாய் சுத்தம், வயிற்று சுத்தம் என இதன் மூலம் பயனடைந்த அவர்களின் சிகிச்சை முறை, நிச்சயம் உங்களுக்கு நிவாரணத்தை அளிக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
(தொடரும்)