தினமணி கதிர்

வீடு தேடி வந்தவள்

சுகன்யாவின் காதல் முடிவு: பெற்றோர் எதிர்ப்பு

DIN

'சுகன்யா இந்த மாப்பிள்ளையும் வேண்டாம்' என்று மறுத்தபோதுதான் சிவராமனுக்கும் செந்தாமரைக்கும் உடனே புரிந்தது.

வழக்கமாகக் கேட்கும் கேள்வியான, 'இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறை?' என்று கேட்கவில்லை.

''யாரைக் காதலிக்கிறே சுகன்யா?'' என்று செந்தாமரை நேரடியாகக் கேட்டாள். சுகன்யா இருவரையும் ஒருபார்வை பார்த்துவிட்டு, ''ஆமா.. நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன். அவர் என்னோட கல்லூரியில் படிச்சவரு. படிக்கிற காலத்திலேர்ந்து பழக்கம்'' என்றாள்.

''பழக்கம்னா?'' என்று ஆதங்கமும் கோபமும் ஒருசேர அடக்கியபடியே சிவராமன் கேட்டான்.

''பேசுவோம்.. ஒன்னா வருவோம்.. பழைய பேருந்து நிலையம் வரைக்கும். வேற கிடையாது. சமயங்களில் ஒன்னா போய் ஓட்டல்ல காபி குடிப்போம். அவ்வளவுதான்.''

''அடி.. நாயே'' என்று எழுந்துபோய் அவளை அடிப்பதற்குக் கையை ஓங்கினான் சிவராமன். சுகன்யாவோ துளிகூட அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

அந்த அசைவின்மை செந்தாமரைக்குள் புளியைக் கரைத்தது. மிக உறுதியாக இருக்கிறாள்.

'' யாரு அந்தப் பையன்?''

''அதான் சொன்னேனே என்னோட காலேஜ்ல படிச்சவருன்னு.. இப்போ தனியார் கம்பெனியில் மாசம் ஐம்பதாயிரம் நல்ல சம்பளத்துலே வேலை பார்க்கிறாரு..''

''என்ன சாதி அவன்?''

''எனக்குத் தெரியாது? ஆனா ரொம்ப நல்லவரு..''

''காதலிக்கிற கழுதைகள் எல்லாம் இப்படித்தான் சொல்லுதுங்க.. கல்யாணம் பண்ணிக் கொஞ்சநாள்லே பிச்சிக்கிட்டு.. பித்துக்குளியா அலையுதுங்க..''

''அப்படி இல்ல அவரு.. நானும் அவரும் ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்கோம்.''

''கிழிச்சீங்க.. உங்களோட புரிஞ்சுக்கற லட்சணம் தெரியும்.''

''இதுநாள் வரைக்கும் உங்களோட சம்மதத்தோடுதான் கல்யாணம் பண்ணிக்கணும்னு காத்திக்கிட்டிருக்கோம்.''

''பண்ண முடியாதுன்னா என்னடி பண்ணுவே?'' என்றான் சிவராமன்.

''பேசாம இருந்துடுவேன். ஆனா வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் கடைசிவரைக்கும். இது நம்ப குலதெய்வம் மேல சத்தியம்.''

ரொம்பத் துணிச்சலும் தெளிவும் சுகன்யாவிடம் இருப்பதைக் கண்டு சிவராமனும் செந்தாமரையும் அதிர்ந்துபோயினர்.

தனியார் பள்ளியொன்றின் அலுவலகத்தில் உதவியாளராக சுகன்யா பணிபுரிகிறாள். அவள் வேலைக்குப் போனபிறகு அவள்தான் குடும்பப் பொறுப்பை எடுத்துகொண்டு எல்லாச் செலவுகளையும் பார்க்கிறாள். 'பொறுப்பான பெண்' என்று எண்ணிய இருவரின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. மிகவும் சுயநலமாக இருக்கிறாள்.

சிவராமன் ஓர் அச்சகத்தில் பைண்டர் பணி. செந்தாமரை ஒரு புகையிலைக் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். ஏழைக் குடும்பமாக இருந்தாலும் மானத்தோடும் கெளரவத்தோடும் வாழவேண்டும் என்கிற கொள்கையோடு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். செந்தாமரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலைக்குப் போகிறாள். கூடுதல் பணம் கிடைக்குமென்று. இருவரின் பிறந்த இடங்களிலும் எதற்கும் வழியில்லை.

சுகன்யாவோடு பிறந்தவள் சாரதா. 'இருவரையும் நன்றாகப் படிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்பி நல்ல வாழ்க்கையை அமைத்துகொடுக்கவேண்டும்' என்கிற செந்தாமரையின் சராசரியான கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டாள் சுகன்யா. இயல்பிலேயே, தான் என்கிற அகந்தையுடையவள் சுகன்யா. அக்கம்பக்கம் யாரிடமும் பேச மாட்டாள். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வாள். இத்தனைக்கும் சிவராமன் வேலை பார்க்கும் அச்சக உரிமையாளர்தான் இந்த வேலையை அவளுக்கு வாங்கிக் கொடுத்தவர். முதல் மாதம் சம்பளம் வாங்கும்போது, அது தீபாவளி மாதம் என்பதால் கணக்கில் எடுத்துகொள்ளாமல் சுகன்யாவுக்கும் தீபாவளி அன்பளிக்காக ஒரு விலையுயர்ந்த பயணப் பையைத் தந்தார்கள். அதை வீட்டுக்கு எடுத்து வந்தபோது எதேச்சையாகச் சிவராமனைப் பார்க்க வந்திருந்த அச்சக உரிமையாளர் வாசலில் நின்று கொண்டிருக்கப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பயணப் பையை மறைத்தபடி எடுத்துப் போனவள் சுகன்யா. இதுதான் சுகன்யாவின் இயல்பான குணம்.

எல்லாமும் தெரியும் என்பதான அறியாமையில் விளைந்த திமிரில் இருந்துகொண்டிருக்கிறாள். ஆகவே சிவராமனும் செந்தாமரையும் தன்னை என்ன செய்துவிடமுடியும் என்று அலட்சியங்காட்டி நின்றாள்.

'' அந்தப் பையனை நாங்க பார்க்கணும்.''

''அவங்களே ஒரு நாளைக்கு இங்க பெண் வீடு பார்க்க வரேன்னு சொல்லியிருக்காங்க..''

'' யாரு என்னன்னு தெரியாமலேயே எல்லாமும் செய்வியா நீ?'' என்று மேலும் கோபப்பட்டான் சிவராமன்.

''அதான் சொல்லிட்டேன்னே. எனக்குப் பிடிச்சிருக்கு. நல்ல பையன். ஒண்ணா காலேஜ்ல படிச்சதுலேர்ந்து பழக்கம்னு.. அவங்க குடும்பத்துலேயும் ஒத்துக்கிட்டாங்க.. அதனால சொன்னேன்.''

''அவங்க ஒத்துக்கிட்டாங்கன்னா நாங்களும் ஒத்துக்கணுமா?'' என்று கேட்டான் சிவராமன்.

''அதான் சொல்றா அவ?'' என்றாள் செந்தாமரை.

''குடும்பம் இருக்கற நிலைமை தெரியாம.. உன் விருப்பத்துக்கு எதைப் பத்தியும் கவலைப்படாம திமிரெடுத்து அலையறே இல்லை?'' என்றான் சிவராமன்.

''குடும்பம் இருக்கற நிலைமையில அப்புறம் எதுக்கு எனக்குக் கல்யாணம் பண்ணனும்னு நினைக்கறீங்க?''

''எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டே இல்ல.. அதான் இவங்க என்ன பண்ணமுடியும்? நாம பாத்துக்கலாம்னு.. இத்தனை திமிரு எங்கேர்ந்து வந்துச்சி..''

''என்ன திமிரு திமிருன்னு இதையே சொல்றீங்க? கல்யாணம் பண்ணனும்னு சொன்னபிறகுதான் சொன்னேன். இல்லாட்டிப் பேசாம இருந்திருப்பேன். நேரம் வரும்போது அவரே வந்து பேசறேன்னு சொன்னாரு.. காத்திருக்கலாம்னு சொன்னாரு.. காத்திருந்தோம்.. நீங்க அவசரமா எடுத்த முடிவால நான் என்னோட விருப்பத்தை சொல்ற மாதிரி ஆயிடிச்சி.. இதுலே எங்க திமிரு இருக்கு?''

''பெத்தவங்களுக்குப் புள்ளங்களுக்கு எப்படி வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கணும்னு தெரியாதா? இத்தனை காலம் வளர்த்தெடுத்தவங்களுக்குப் புரியாதா? நம்பிக்கை இல்லையா? நீங்களா ஒரு முடிவெடுத்து செய்வீங்களா? அப்படி எங்களவிட ஒசத்தியா உங்களுக்கு உங்க காரியம் முக்கியமா படுது.. எத்தனை சுயநலம் இது?'' என்று கொட்டித் தீர்த்தான் சிவராமன். செந்தாமரை பேசாமல் இருந்தாள். சுகன்யாவைப் பார்த்தபடியே இருந்தாள்.

''விடுங்க.. கை மீறிப் போயிடிச்சு.. தலைக்குமேல வெள்ளம்னு ஆயிடிச்சி.. இனி ஆகிற வேலைய பாருங்க'' என்றாள் செந்தாமரை.

''என்னத்த பார்க்கச் சொல்றே?'' என்றான் சிவராமன்.

''வேற என்ன? எவனைப் பாத்திருக்காளோ அவன் குடும்பத்துக்கிட்டப் பேசுங்க?'' என்று இயல்பாகச் சொன்னாள் செந்தாமரை.

செந்தாமரையை ஒருமுறை பார்த்த சிவராமனுக்கு, அவள் கூட்டுக் களவாணியாக இருக்குமோ என்கிற ஐயமும் வந்தது.

''பேசறேன்.. பேசிட்டு முடிவு கட்டறேன்.''

''என்ன முடிவு கட்டப்போறீங்க?''

''சொல்றேன்.. சொல்றேன்.''

தான் வேலை பார்க்கும் அச்சக உரிமையாளரிடம் பேசி அழுதான் சிவராமன்.

''என்னோட மானமே போச்சு சார். இப்படியொரு காரியத்தைப் பண்ணியிருக்கா? ரொம்பப் பொறுப்பானவ.. எல்லாத்தையும் பார்த்துக்குவான்னு நினைச்சேன்.. நான் என்னை மட்டும்தான் பாத்துக்குவேன்னு சுயநல மிருகமா இருக்கா?''

''நீங்க எதுவும் செய்ய முடியாது சிவராமன். இந்தக் காலத்துலே எது இருக்கோ, இல்லியோ எங்கப் பார்த்தாலும் இந்தக் காதல் தலைவிரிச்சாடுது. எதிர்காலத்தைப் பற்றிய அக்கறை.. பெற்றோர்களைப் பற்றிய கவனம்.. வாழ்க்கை பற்றிய பயம்.. பொருளாதார நிலை எதையும் யோசிக்காத காதல்தான் இப்போ. சொன்னா இதையெல்லாம் யோசிச்சுப் பண்றது குடும்பம்.. நாங்க பண்றது காதல்.. காதல் எதையும் பாக்காதும்பாங்க.. ஆனா பாக்கணும்.. காதலிக்கறது தப்பில்லே.. ஆனால அந்தக் காதலை மரியாதையோடும் மதிப்போடும் வச்சுக்கற அளவுக்கு சூழலை உருவாக்கணும். அப்படியான சூழல் இங்க இல்ல.. காதலிச்சுக் கல்யாணம் பண்ணி.. அல்லது ஓடிப்போய் கல்யாணம் பண்ணி.. நாங்க ஜெயிச்சுட்டோங்கறாங்க.. எனக்குத் தெரிஞ்சு.. நூத்துக்குப் பத்து விழுக்காடுதான் காதல் வாழ்விருக்கு.. மத்ததுல ஒவ்வொண்ணும் ஒரு பிரச்சினையை உருவாக்கிடுது.. அன்னிலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் இதுதான் காதலின் நிஜம்.. எத்தனையோ செய்தித்தாள்ல வருது.. சுகன்யாவைப் பொருத்தவரைக்கும் உறுதியா இருக்கா.. வேற வழியில்ல.. அவளோட உறுதியை உங்க நம்பிக்கையா எடுத்துக்கிட்டு அவ நினைச்ச வாழ்க்கையை உருவாக்கித் தந்துடவேண்டியதுதான். எல்லாக் காதலும் இப்படின்னும் முடிவு பண்ண முடியாது. அதுக்காக அம்போன்னு எப்படியோ போன்னும் விட்டுடமுடியாது.. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எங்கப் பொண்ணுக்கு ஒண்ணா நாங்க பெத்தவங்க வந்து நிற்போங்கற அச்சத்தை பையன் வீட்டுக்கு உணர்த்தணும்.. அதுக்காவது நீங்க போய் பையன் வீட்டுல பாருங்க.. '' என்றார்.

மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து பெண் வீடு பார்க்க வந்தார்கள். அப்போதுதான் அந்தப் பெண்ணைப் பார்த்து, அதிர்ந்துபோனான். 'அந்தப் பெண் எதற்கு வந்திருக்கிறாள். மாப்பிள்ளை வீட்டுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு?' என குழம்பினான். அந்தப் பெண்ணும் வந்ததிலிருந்து சிவராமனையே பார்ப்பதும் உதட்டில் ஒரு கேலிப் புன்னகையை வீசுவதுமாக இருந்தாள்.

''நான் வந்துட்டேன் உன்னைப் பாத்துக்கறேன்'' என்று சிவராமனை நோக்கிச் சவால் விடுவதுபோலிருந்தாள்.

சிவராமன் அதிர்ச்சியடைந்து செந்தாமரையை அழைத்து, ''எனக்குப் பயமாயிருக்கு.. சுகன்யா வாழ்க்கை வீணாப் போவப்போது.. சரியா மாட்டிக்கிட்டோம்.'' என்றான்.

''என்ன சொல்றீங்க? எனக்குப் புரியலை'' என்றாள்.

அப்போதுதான் அந்தப் பெண்ணைச் செந்தாமரையிடம் காட்டி, ''அது யாருன்னு தெரியுதா?'' என்றான்.

செந்தாமரையும் பார்த்து, ''எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறது'' என்றாள்.

சற்றுநேரத்தில் அந்தப் பெண் செந்தாமரையை பார்த்துச் சிரித்தபடி, ''நீங்கதான் பெண்ணோட அம்மாவா?'' என்றாள்.

சற்று தடுமாறிய செந்தாமரை, ''ஆ..மாம்.. நாந்தான்'' என்று சொல்லிவிட்டு அவளைப் பார்ப்பதை விட்டுத் திரும்பிக் கொண்டாள்.

மறுபடியும் சிவராமன் பார்த்தான். அந்தப் பெண் உதட்டில் மறுபடியும் கேலிச் சிரிப்பு.

''மாட்டிக்கிட்டியா.. இதுக்குத்தான் காத்திருந்தேன்.. பாரு.. இனிமே என் விளையாட்டை'' என்று பேசுவது போல தோன்றியது.

''என்ன சிவராமா பாரு மாப்பிள்ளை வீட்டுலே கேக்கறாங்க.. நீ என்னமோ யோசனையில இருக்கே?'' என்று யாரோ சிவராமனை உலுக்கிவிட்டனர்.

நினைவுக்கு வந்து, ''எ..எ..என்ன'' என்றான்.

''என்ன சிவராமன்? எந்த உலகத்துலே இருக்கீங்க? இது உங்க பொண்ணோட வாழ்க்கை .. வேற ஏதோ பலமா யோசிக்கிறீங்க போலிருக்கு..'' என்று யாரோ நெருங்கிய உறவினர் சத்தமாய் கேட்டார்.

''இல்லை. சட்டுன்னு இப்படியொரு ஏற்பாடு முடிஞ்சதால அடுத்தடுத்து வேலைகள் நிறைய இருக்கு. அதை எப்படிச் செய்யறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன். நிச்சயம், கல்யாணம், மண்டபம், சமையல்.. இப்படி நிறைய இருக்குல்லை அதான்'' என்று இயல்பாய் பேசி சமாளித்தான்.

''சரிதான்.. சிவராமா தெளிவாத்தான் இருக்கே.. நல்லதுதான்'' என்றார் இன்னொரு உறவினர்.

ஆனால் மறுபடியும் அந்தப் பெண்ணைப் பார்த்தான். 'எல்லாத்தையும் எப்படி நீ செய்யறேன்னு நான்னுதான் பார்க்கறேன்' என்று சொல்வதுபோல இருப்பதாய் சிவராமன் உணர்ந்தான்.

அவள் முதன்முதலாக வாயைத் திறந்து, ''பெண்ணோட அப்பா எல்லாத்தையும் தெளிவா செய்வாரு போலிருக்கு.. ரொம்ப திறமைசாலிதான்'' என்று புகழாரம் சூட்டுவதுபோலப் பேசியது சிவராமனுக்குள் பயபாம்பொன்றை இழைய வைத்தது.

'மாப்பிள்ளை வீட்டில் கல்யாணத்தை வைத்து

கொள்வதாகவும் பெண் வீட்டில் நிச்சயதார்த்தத்தைச் சிறப்பாகச் செய்துவிடுங்கள்' என்றும் முடிவு செய்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மையமாகத் தலையை ஆட்டி வைத்தார்கள். ஆனாலும் சிவராமனுக்குள் கண்டபடி அந்த பயப்பாம்பு ஊர்ந்துகொண்டிருந்தது.

அந்தப் பெண் எல்லாவற்றையும் முன் வந்து செய்துகொண்டிருந்தாள். அதுவேறு பயத்தைத் தூண்டிப் பெருக்கியது.

செந்தாமரை ''யாரு அந்தப் பெண்?'' என்று ரகசியமாய் கேட்க, சிவராமன் தயங்கினான். அவன் பக்கத்தில் சிவராமன் தங்கை மாலதியின் கணவர் லோகேஷ் நின்று கொண்டிருந்தான்.

''சொல்லுங்க..''

'' எனக்குப் பார்த்தப் பொண்ணு அதான்'' என்று லோகேஷ் சாதாரணமாக சொன்னான். ஆனால் அதற்காக சிவராமன் பட்டபாடு சிவராமனுக்குதான் தெரியும்.

மாலதி லோகேஷை காதலித்தாள். ஆனால் லோகேஷுக்கு வேறு இடத்தில் நல்ல வசதியோடு பெண் வரவும் அதை ஏற்பாடு செய்தார்கள். சிவராமன் நேரில் போய் சொல்லிப் பார்த்தான். ''என்னோட தங்கச்சி வாழ்க்கை என்னாவறது? பதில் சொல்லுங்க'' என்று அவனை அடிக்காத குறையாக அவர்கள் விரட்டினார்கள்.

சிவராமன் கடுங்கோபம் கொண்டான்.

கல்யாணத்துக்கு முதல்நாள் சில நண்பர்களுடன் போய் லோகேஷை தூக்கிக் கொண்டு வந்து மாலதி கழுத்தில் தாலி கட்டவைத்துவிட்டான். அதற்கு முன்பு உள்ளூர் கோயிலில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தான்.

அந்தப் பெண் வீட்டார் வந்தபோது மாலையும் கழுத்துமாக இருவரையும் பார்க்க பெரிய சண்டை போட்டு ஓய்ந்துபோய் சாபம் இட்டுவிட்டுப் போனார்கள்.

''என் பொண்ணோட வாழ்க்கையை கெடுத்த நீ ஒரு நாள் அனுபவிப்பே'' என்றார்கள்.

அதுதான் இப்போ சுகன்யா காதலித்த பையன் வீட்டில் இருந்து வந்து துருத்திக் கொண்டிருக்கிறது. 'தான் கொத்தி இறந்துபோன பிணம் சுடுகாட்டுக்குப் போகிறதா? என்று பச்சைப் பாம்பு பார்க்கும்' என்று சொல்லும் கதையாக இருக்கிறது. அந்தப் பெண் எதுவும் பேசாமல் சிவராமனைப் பார்த்து ஏதோ கண் சாடையாய் உணர்த்திக் கொண்டேயிருந்தாள்.

'எப்படி என் வாழ்க்கையை கெடுத்தேல்லை.. இப்போ உன் பொண்ணோட வாழ்க்கை என் கையிலதான்.. பாரு என்ன நடக்குதுன்னு சொல்றமாதிரி' என்று சொல்வதாய் உணர்ந்தான்.

சிவராமனுள் ஊர்ந்துகிடந்த பாம்பு கொத்தத் தொடங்கியது. தன்னுடைய மகள் வாழ்வு என்றதும் துடிக்க ஆரம்பித்தான் சிவராமன். அந்தப் பெண்ணை எப்படி அகற்றுவது? என்று ஆயிரம் யோசனைகளை யோசிக்க ஆரம்பித்தான்.

நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்து முடிவு செய்வதற்குள், அவளிடம் பேசிவிடவேண்டும். மனசுக்குள்ளேயே வைத்திருந்தால் சுகன்யா வாழ்க்கை வீணாகிவிடும். கடைசிவரைக்கும் கவலையிலேயே வாழ்க்கையை நடத்தி சாகமுடியாது. செந்தாமரையிடம் பேசினான்.

''நான் பேசட்டுமா?'' என்றாள்.

''வேண்டாம். நானே பேசிவிடுகிறேன்'' என்றான்.

'எப்படிப் பேசுவது? அவளை எங்கே வரவழைத்துப் பேசுவது? மாப்பிள்ளை வீட்டாருக்குத் தெரியாமல் வேறு பேச வேண்டும். மீண்டும் குழப்பமே மிஞ்சியது. நல்ல பசியிருந்தும் சாப்பிடமுடியவில்லை. மனசும் வயிறும் மரத்துப்போய் கிடந்தது. மாப்பிள்ளை வீட்டுக்கு அவள் என்ன சொந்தம் என்றும் தெரியவில்லை. நெருங்கிய சொந்தம்போல அவள் நடந்துகொண்டாள். மாப்பிள்ளை வீட்டில் எல்லா வேலையையும் அவள் ஓடிஓடிச் செய்தாள்' என்று சிவராமன் யோசிக்கும்போதே நெஞ்சடைத்து வாந்தி வருவதுபோல குமட்டியது.

போய் கொல்லைப்புறம் குமட்டினான். ஆனால் வாந்தி வரவில்லை. அவளே வந்து நின்றாள். மீண்டும் பாம்பு படமெடுத்துக் கொத்த ஆரம்பித்தது. தவித்தான். தவித்தான்.

செந்தாமரை வந்து அவன் தவிப்பைக் கண்டு

பதறினாள்.

''ஏங்க.. இப்படிப் பண்ணறீங்க? நான் போய் அவள் கிட்டப் பேசிட்டு வரேன்.''

''நானும் வரேன்.''

''வேண்டாம்.. நான் மட்டும் போய் பேசிட்டு வரேன்..''

''இல்லை. நானும் வரேன். நானும் பேசணும் அவகிட்ட..''

அதற்குள் வாசலில் யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. சிவராமன் சட்டென்று எட்டிப் பார்த்தான்.

வாசலில் நின்றது அவள்தான். மயக்கம் வருவதுபோல அப்படியே தலை சுற்றுவதுபோல உணர்ந்து உட்கார்ந்துவிட்டான்.

''நான் உள்ளே வரலாமா?''

செந்தாமரை ''வாங்க'' என்று கூப்பிட்டாள்.

உள்ளே வந்து உட்கார்ந்தாள். சிவராமன் தலையை குனிந்தபடியே உட்கார்ந்திருந்தான்.

''என்ன சாப்பிடுறீங்க?'' என்று கேட்டாள்.

''ஒண்ணும் வேண்டாம். தண்ணீர் மட்டும் கொடுங்க போதும்'' என்று வாங்கிக் குடித்தாள்.

''எங்களை மன்னிச்சிடுங்க.. எங்க பொண்ணோட வாழ்க்கை இது'' என்று செந்தாமரை நேரடியாகக் கெஞ்சினாள்.

''நீங்க எதுவும் கெஞ்ச வேண்டாம். உங்க புருஷனால என்னோட வாழ்க்கை சீரழிஞ்சிப் போச்சி.. அதற்கப்புறம் யாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க தயாரா இல்லை. அந்த வருத்தத்திலேயே என்னோட அப்பா இறந்துபோயிட்டாரு.. நடக்கறது நடக்கட்டும்னு அரசாங்கத் தேர்வு எழுதி இப்போ நல்ல வேலையிலிருக்கேன். என் வாழ்க்கை இனிமே இப்படித்தான். நீங்க உங்க பொண்ணுக்குப் பாத்திருக்கிற மாப்பிள்ளை என்னோட சித்தப்பா பையன். எனக்கு தம்பி முறைதான். நான் உங்கப் பெண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க மாட்டேன்.. நீங்க என்னோட வாழ்க்கையைக் கெடுத்தாலும் நான் அப்படிச் செய்யமாட்டேன். ஆனா இப்படி ஒரு கேடு பெண்ணுக்கு வந்தா அவ வாழ்க்கை எப்படியாகும்னு இன்னொரு பெண்ணுக்குதான் தெரியும். அதனாலதான் மனசு கேக்காம ஒரு உண்மையைச் சொல்லலாம்னு வந்திருக்கேன். நான் சொல்லப் போறது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். ஆனா உண்மை. உங்க பெண்ணோட செலக்ஷன் ரொம்ப தப்பு. என்னோட தம்பி ஏற்கெனவே ஒரு பெண்ணோட வாழ்க்கையை சீரழிச்சி அவ வயித்துல ஒரு குழந்தை உண்டாகி, பெரிய பஞ்சாயத்து நடந்துச்சி. அதைப் பணம் கொடுத்து வெட்டி விட்டுட்டாங்க? ஆனா என்னோட தம்பி இதுவரைக்கும் திருந்தலை. இன்னமும் பல பெண்களோட தொடர்பில இருக்கான். அதையும் மீறி அவனுக்குன்னு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டா மாறிடுவான்னு எங்க சித்தப்பாவும் சித்தியும் நினைக்கறாங்க? அதனால உங்க பெண்ணோட வாழ்க்கையைப் பத்தி அவங்க கவலைப்படலை. இதுதான் உண்மை. நீங்க எப்படியாவது அவனைப் பத்தி விசாரிச்சு அப்புறமா ஒரு முடிவெடுங்க.. நான் சொன்னேன்னு எதையும் காட்டிக்காதீங்க?'' என்றாள் அவள். சிவராமனும் செந்தாமரையும் அதிர்ச்சியானார்கள்.

''நான் வரேன்.. சீக்கிரம் விசாரிச்சு நல்ல முடிவா எடுங்க?'' என்றபடி வெளியே வந்து தெருவில் நடக்க ஆரம்பித்தாள்.

''செந்தாமரை இந்தப் பொண்ணு பொய் சொல்லுதா?'' இல்லே... என்னைப் பழிவாங்கறதுக்காக இப்படி நல்லது செய்யுற மாதிரி நடிக்குதா?'' என்று சிவராமன் சந்தேகமாய் கேட்டான்.

செந்தாமரையோ, ''எனக்கும் அப்படித்தாங்க தெரியுது? ஆனா அந்தப் பொண்ணு பேச்சுல பொய் இருக்கற மாதிரி தெரியலை'' என்றாள்.

சிவராமன் தன் அச்சக உரிமையாளரைப் போய்ப் பார்த்து நடந்ததைச் சொன்னான். அவர் தெளிவாகச் சொன்னார்.

''இருக்காது சிவராமன். நாம ஆம்பளங்க எப்படிவேணாலும் மாறுவோம். பொண்ணுங்க அப்படி இல்லை. ஒரு பெண்ணோட துன்பம் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுவாங்க? இந்தப் பொண்ணு சொன்ன பொய் கல்யாணத்த நிறுத்திடற மாதிரில்ல இருக்கு. ஆனாலும் தன்னோட சித்தப்பா பையன்னும் தெரிஞ்சும் இப்படி துணிஞ்சி வந்து பேசிட்டுப்போறாங்கன்னா நாளைக்கு இந்த விஷயம் வெளியில தெரிஞ்சா என்னா ஆகும்னு தெரிஞ்சுதான் பயப்படாம வந்து சொல்லிட்டுப்போறாங்க? ஒரு அரசாங்க வேலையில வேற இருக்காங்க? நீங்க கெட்டது செஞ்சாலும் உங்களுக்கு அந்தப் பெண் நல்லதுதான் செஞ்சிருக்கு. இப்படியும் மனுஷங்க இருக்கத்தான் செய்யுறாங்க? இப்போதைக்கு நீங்களும் உங்க மனைவியும் யார்கிட்டயும் இதைப் பேசாதீங்க? அந்தப் பொண்ணயும் காட்டிக் கொடுத்திடாதிங்க? சத்தம் போடாம எல்லாத்தையும் நிறுத்திப் போடுங்க? இப்போ பொண்ணுக்குக் கல்யாணம் நடந்தா உடனே கெட்ட காரியம் பெத்தவங்களுக்குச் செய்யவேண்டியிருக்குன்னு ஏதாச்சும் ஒரு அழுத்தமான பொய்யைச் சொல்லி, ஆறு மாசத்துக்குத் தள்ளிப்போடுங்க.. அதுக்குள்ள விசாரிச்சு உண்மைன்னா உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க.. அப்போ அவ என்ன முடிவு எடுத்தாலும் சரிதான்'' என்றார்.

சிவராமன் மன நிம்மதியோடு வந்தான். உள்ளுக்குள் அந்தப் பெண்ணை நினைத்து கொஞ்சம் வருத்தமும் உறுத்தலும் எழுந்தது.

- ஹரணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதகையில் பரவலாக கனமழை

சந்திர கிரகணம்: சென்னிமலை முருகன் கோயில் நடை சாத்தப்படுகிறது

மொடக்குறிச்சியில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்கம்

பெண்ணிடம் நகைப் பறிப்பு: இரு இளைஞா்கள் கைது

ஆவின் பால் கலப்பட வழக்கு: அதிமுக நிா்வாகி உள்பட 28 போ் மீதான வழக்கு ரத்து

SCROLL FOR NEXT