என் வயது நாற்பத்து ஒன்று. அரசு அலுவலகத்தில் பணிபுரிகிறேன். பல மணி நேரம் அமர்ந்தே வேலை செய்ய வேண்டியிருப்பதால், பசியும் செரிக்கும் தன்மையும் மந்தமாக இருக்கிறது. உணவின் சத்து சரிவர உறிஞ்சப்படாமல் போகிறதோ? என்ற சந்தேகம் வருகிறது. சீராக மலக்கழிவும் ஏற்படுவதில்லை. இது எதனால்? என்ன மருந்து
சாப்பிடலாம்?
-செல்வகுமார், நீடாமங்கலம்.
நீங்கள் குறிப்பிடும் இந்த உபாதைக்கு 'க்ரஹணி' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. மூலநோய், வயிற்றுப் போக்கு, க்ரஹணி உபாதைகளுக்கு பசித்தீ கெடுவதன் காரணமாகவே ஏற்படுகிறது. பசித்தீ வாயுவினால் தாக்கப்படும்போது, உணவு சில நேரம் செரிக்கப்படுவதும், சில நேரம் சீரணிக்கப்படாமலும் போகிறது.
கபத்தின் தொடர்பு ஏற்படும்போது மந்தமான தன்மையை அடைந்து, செரிமானத் தன்மை குறைகிறது. பித்தத்தின் தாக்கம் அதிகம் ஏற்படும்போது, வயிறு எரிச்சல், காந்தல், விரைவான செரிமானம் போன்றவை ஏற்படுகின்றன. உணவை ஈர்ப்பதும், செரிக்க வைக்க உதவி செய்வதிலும் 'ஸ்மானன்' என்ற வாயு பெரும் பங்காற்றுகிறது.
க்ரஹணி என்பது உடலின் பித்த தோஷத்தின் இருப்பிடமாகிய சிறுகுடலையும், அந்த உறுப்பில் ஏற்படும் நோயையும் குறிக்கும் ஒரு சொல்லாகும். இந்த உறுப்பானது உணவுச் செரிமானத்தில் நான்கு செயல்களை அன்றாடம் செய்துவருகிறது.
-உணவை கிரகித்தல் என்ற உணவை ஏற்றுகொள்ளும் செயல்.
-உணவை பாகம் செய்தல் என்ற உணவை செரிக்கச் செய்யும் செயல்.
-விவேசனம் என்ற சத்தையும், மலத்தையும் பிரிக்கும் செயல்.
-முஞ்சனம் என்ற மலத்தை வெளியேற்றும் செயல்.
இந்த நான்கு நிலைகளிலும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்தத் தொகுப்புக்கு க்ரஹணி என்று பெயர். இந்த நோய்க்கும் கொடுக்கும் மருந்தானது பசியைத் தூண்டி செரிக்கும் தன்மையை அதிகரித்து, க்ரஹணம் எனும் ஈர்ப்புச் சக்தியைத் தூண்டச் செய்து, சீரான மல வெளியேற்றலை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். கறிவேப்பிலை, சுக்கு, கடுக்காய் போன்றவை இந்தச் செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
உங்களுக்கு கீழ்காணும் மூலிகை மருந்துகளின் சேர்க்கையானது மிகவும் உதவியாக இருக்கும்.
சுக்கு, கோரைக்கிழங்கு, அதிவிடயம், சீந்தில்கொடி என ஒவ்வொன்றும் சம அளவு எடுத்து உண்டாக்கிய கஷாயம் சாப்பிட, பசி மந்தம் தீரும். உணவின் சத்து உட்புற வரவானது உறுதிபடும். பெருங்குடல் பகுதியில் ஏற்படும் மலத் தேக்கத்தின் வெளியேற்றம் எளிதாக நிறைவேற்றித் தரும்.
கொத்தமல்லி விதை, ஓமம் மற்றும் சுக்கு ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து கொதிக்கவிட்டு, அரை லிட்டராக வற்றியதும் வடிகட்ட வேண்டும். இதை அலுவலகத்தில் வேலை செய்யும் நேரத்தில், இடைஇடையே சிறிது சிறிதாகக் குடிப்பதை நீங்கள் வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் உபாதைகள் அனைத்தும் விரைவில் நீங்கிவிடும்.
விற்பனையிலுள்ள கந்தர்வஹஸ்தாதி கஷாயம், காலசாகாதி கஷாயம், வில்வாதி லேஹியம், கல்யாண குலம், ஹிங்கு வசாதி சூரணம், அக்னிகுமார ரஸம் மாத்திரை, பிப்பல்யாவலம், முஸ்தாரிஷ்டம் போன்றவை சாப்பிட உகந்தவை. மருத்துவரின் ஆலோசனையின்படி, மருந்துகளைத் தேர்ந்தெடுத்தும் சாப்பிடவும்.
சோம்பு, ஏலக்காய் விதை, கிராம்பு ஆகியவற்றை வேலையின்போதும் உணவை உண்ட பிறகும் சிறிய அளவில் வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.