பிரணாப் முகர்ஜி  
தினமணி கதிர்

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 217

ஒருபுறம் பட்ஜெட் கூட்டத்தொடர், நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று தில்லி அரசியல் சூடுபிடித்திருந்தாலும், விஞ்ஞான் பவன் வளாகத்தில் ஜெயின் கமிஷன் விசாரணையும் பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

கி. வைத்தியநாதன்

ஒருபுறம் பட்ஜெட் கூட்டத்தொடர், நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று தில்லி அரசியல் சூடுபிடித்திருந்தாலும், விஞ்ஞான் பவன் வளாகத்தில் ஜெயின் கமிஷன் விசாரணையும் பத்திரிகையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. மூன்றாவது முறையாக ஜெயின் கமிஷன் விசாரணைக்குத் தயாராக திமுக தலைவர் கருணாநிதி வந்திருந்ததுதான் அதற்குக் காரணம்.

தில்லி வந்திருந்த தமிழக முதல்வர் திட்ட கமிஷன் ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, குறித்த நேரத்தில் ஜெயின் கமிஷன் விசாரணைக்கும் ஆஜராகி இருந்தார். இரு தினங்கள் விசாரணைக்குத் தயாராக வரும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் குறுக்கு விசாரணையும், அதற்கு முதல்வர் கருணாநிதி அழுத்தம் திருத்தமாகத் தனது கருத்தை பதிவு செய்ததையும் பார்வையாளர்களாக இருந்த பத்திரிகையாளர்கள் வியந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவனாக ஓர் ஓரத்தில் இடம் பிடித்து அமர்ந்து, குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

'இந்திய அமைதிப் படையை நீங்கள் எதிர்க்கக் காரணமென்ன?' -வாழப்பாடி ராமமூர்த்தி.

'அமைதியை நிலைநாட்ட இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்தியப் படை, அமளிப் படையாக மாறிவிட்டது. சரியான வழிகாட்டுதலுடனும், குறிக்கோளுடனும் முறையாக இந்திய ராணுவம் அனுப்பப்படவில்லை என்பது என் கருத்து!' - முதல்வர் கருணாநிதி.

'இந்திய அமைதிப் படை திரும்பியபோது, முதல்வராக இருந்த நீங்கள் அதை வரவேற்கச் செல்லாதது ஏன்?'

'அமைதிப் படையின் செயல்கள் எனக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அதனால் அதை வரவேற்கச் செல்லவில்லை என்பது நான் எடுத்த முடிவு. 'தமிழ்ச் சாதியைக் கொன்றவர்களை வரவேற்கச் செல்லவில்லை' என்று தமிழகப் பேரவையிலேயே நான் குறிப்பிட்டேன். அதையே என்னுடைய பிரமாண வாக்குமூலத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன்'

'அப்படியானால், விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டபோது அதை திமுக எதிர்க்கவில்லையே, ஏன்?'

'ஆமாம், திமுக எதிர்க்கவில்லை. எதிர்க்கவில்லை என்பதை ஆதரித்ததாகச் சொல்ல முடியாது. நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தேவையற்ற நடவடிக்கை என்று திமுகவின் கருத்தை மாறன் பதிவு செய்திருக்கிறார்.'

'தேவையற்றது என்று நீங்கள் கருதினால் அதை ஏன் எதிர்க்கத் தயங்கினீர்கள்?'

'தேவையற்றது என்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பதை நான் அறிவேன். மத்திய அரசு தடை விதித்த பின்னர், அதைச் செயல்படுத்துவதுதான் மாநில அரசின் கடமை என்பதையும் நான் உணர்ந்து வைத்திருந்தேன். அதனால்தான் வெளிப்படையாக எதிர்க்கவில்லை.'

'வை.கோபால்சாமி 1989-இல் இலங்கைக்குச் சென்றது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'

'அவர் இலங்கைக்குச் சென்றது திமுகவின் கொள்கைக்கு விரோதமானதல்ல. ஆனால் திமுகவின் அணுகுமுறைகளுக்கு விரோதமானது. அதனால்தான் அவரது செயல் கண்டிக்கப்பட்டது.'

'உங்களிடம் நேரில் அனுமதி பெறாமல் அவர் சென்றார் சரி, அவரிடம் விவரம் கேட்டுத் தெரிந்து கொண்டீர்களா?'

'இல்லை. அவரது செயலில் எனக்கு உடன்பாடு இல்லாததால் அவரது பயண விவரம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.'

'உங்களிடம் பிரபாகரனை சந்திக்கப் போவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தும், நீங்கள் ஏன் அது குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை?'

'பிரபாகரனைப் பார்க்கச் சென்று கொண்டிருப்பதாக அவரது கடிதத்தில் இருந்தாலும், அவரால் உண்மையிலேயே பிரபாகரனைப் பார்க்க முடியும், சந்திக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.'

அதன் பிறகு குறுக்கு விசாரணை கோபால்சாமி, விடுதலைப் புலிகள் ஆகியவற்றில் இருந்து விலகி, முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜன் குறித்துத் திரும்பியது. நாகராஜன் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதம் போலி என்று வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்த கருத்தைக் கருணாநிதி மறுத்தார். அந்தக் கடிதத்தின் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொள்ள கடிதத்தை நிபுணர்களுக்கு அனுப்பி ஜெயின் கமிஷன் தெரிந்துகொள்ளலாம் என்றார் கருணாநிதி.

'விடுதலைப் புலிகளுக்கு திமுக உதவியதாகவும், பத்மநாபா கொலையாளிகள் தப்பிச் செல்ல திமுக ஆட்சி உதவியதாகவும் நாகராஜன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பது பொய்' என்று காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர் ஆர்.எல்.மிட்டல் குறுக்கு விசாரணை செய்தபோது அவர் தெரிவித்தார்.

அத்துடன் திமுக தலைவரின் குறுக்கு விசாரணை முடிவடைந்தது. அன்று மாலையே அவர் சென்னைக்குத் திரும்பிவிட்டார்.

நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கிவிட்டிருந்தது. குளிர் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கி இருந்த நேரம். பிரணாப் முகர்ஜி கொல்கத்தாவில் இருந்து திரும்பி இருந்தார். அவரது வீட்டைத் தொடர்பு கொண்டபோது, மாநிலங்களவையில் அவர் பேச இருப்பதால், உரை முடிந்த பிறகு நாடாளுமன்றக் காங்கிரஸ் அலுவலகத்தில் அவரை சந்திக்கச் சொன்னார்கள்.

ஐக்கிய முன்னணி ஆட்சியின் மீதான முதல் தாக்குதலை நடத்தும் பொறுப்பு பிரணாப் முகர்ஜிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆட்சியை வெளியே இருந்து ஆதரிக்கும் கட்சியின் உரையாக அவரது உரை இருக்கவில்லை; எதிர்க்கட்சியின் உரையாகத்தான் தெரிந்தது.

'நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துவிட்டு அவசரச் சட்டங்களின் மூலம் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி நடத்துகிறது' என்று எடுத்த எடுப்பிலேயே தனது தாக்குதலைத் தொடங்கினார் அவர். நிதானமாகவும் தெளிவாகவும், அதே நேரத்தில் அழுத்தமாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்வதில் பிரணாப் முகர்ஜிக்கு நிகராக வேறு யாரையும் சொல்ல முடியாது.

13 அவசரச் சட்டங்களுக்கு நாடாளுமன்ற அனுமதி பெறுவதற்கான கோரிக்கையைத் தாக்கல் செய்ய அரசு முற்பட்டபோது, பிரணாப் முகர்ஜி எதிர்ப்புத் தெரிவித்தார். 'சென்ற நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததும் இந்த அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அதனால் ஆதரிக்க முடியாது' என்று அவர் தெரிவித்தபோது, சற்றும் எதிர்பாராமல் இன்னொரு குரல் எழுந்தது.

காங்கிரஸை போலவே ஐக்கிய முன்னணி அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் பிப்லாப் தாஸ்குப்தா, பிரணாப் முகர்ஜியின் குற்றச்சாட்டை வழிமொழிந்தபோது, அரசுத் தரப்பு தர்மசங்கடத்தில் நெளிந்தது.

முந்தைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக சர்க்கரை ஏற்றுமதி தொடர்பான மசோதாவை அரசு ஒத்திவைத்தது. ஆனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுதான் காங்கிரஸூம், மார்க்சிஸ்ட் கட்சியும் அரசை விமர்சிக்க முற்பட்டதன் பின்னணி.

காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து அவை கலைந்தபோது, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குச் சென்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன். நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு சந்தித்தேன் என்பதால், சற்று தயக்கத்துடன் ஒதுங்கியே நின்று கொண்டிருந்தேன். அஜீத் ஜோகி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஏனைய சில மாநிலங்களவை உறுப்பினர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிரணாப்தா கிளம்பும்போதுதான் என்னைக் கவனித்தார்.

புன்னகைத்தபடியே என்னைத் தட்டிக்கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் அவர் நகர்ந்தது சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. சற்று தூரம் சென்றார், என்ன தோன்றியதோ என்னை அழைத்தார். குவாலியரில் நேதாஜி சுபாஷ் போஸின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்வதாகவும், திரும்பி வந்ததும் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தபோது, அந்த ஏமாற்றம் மறைந்தது.

நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறி, சுற்றுப்பாதை (காரிடார்) வழியாக வெளியே சென்று கொண்டிருந்தபோது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் சிக்கந்தர் பக்த், அவரது அறைக்குள் நுழைவது தெரிந்தது. அவரை சந்திக்கலாம் என்று போனபோது, அறையில் பல பாஜக எம்.பி.க்கள் அவரை சூழ்ந்து கொண்டிருந்தனர்.

பாஜகவில் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பும் அக்கறையும் கொண்ட தலைவர்களில் சிக்கந்தர் பக்த் ஒருவர் என்று முன்பே தெரிவித்திருந்தேன். சிக்கந்தர் பக்திடம் ஒரு முக்கியமான விஷயம் குறித்துப் பேச வேண்டும் என்பதால்தான் பொறுமையாகக் காத்திருந்தேன்.

அடிப்படையில் சிக்கந்தர் பக்த் ஒரு காங்கிரஸ்காரர். 1969-இல் காங்கிரஸ் பிளவுபட்டபோது, அவர் ஸ்தாபன காங்கிரஸில் தொடர்ந்தார். காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, அவருடன் நெருக்கமாக இருந்த தில்லி நகர காங்கிரஸ் தலைவர்களில் சிக்கந்தர் பக்தும் ஒருவர். பிறகு எப்படி அவர் பாஜகவில் இணைந்தார் என்பது பலரும் எழுப்பும் கேள்வி.

1975 ஜூன் 25-ஆம் தேதி, அன்றைய இந்திரா காந்தி அரசு அவசரநிலையைப் பிரகடனம் செய்தபோது சிக்கந்தர் பக்தும் கைது செய்யப்பட்டார். அவசரநிலை விலக்கப்பட்டு 1977-இல் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் இணைந்து ஜனதா கட்சி உருவானது. ஸ்தாபன காங்கிரஸில் இருந்த பக்த், ஜனதாவில் இணைந்தார்.

1977 பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி வேட்பாளராக தில்லி சாத்தினி செளக் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிக்கந்தர் பக்த், மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை, வீட்டுவசதித் துறை கேபினட் அமைச்சரானார். 1980-இல் ஜனதா கட்சி பிளவுபட்டபோது, சிக்கந்தர் பக்த் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக, கட்சியின் துணைத் தலைவராக, மாநிலங்களவைக் கட்சித் தலைவராக, வாஜ்பாய் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக என்று பல்வேறு பதவிகள் வகித்து, கடைசியில் கேரள ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

பாஜகவில் இருந்தாலும்கூட, சிக்கந்தர் பக்த் காந்தியக் கொள்கைகளின் ஆதரவாளர். மதச்சார்பின்மை உள்பட பல்வேறு பிரச்னைகளில் அவரது பார்வை வித்தியாசமானதாகவே இருந்தது.

'இந்திய முஸ்லிம்கள் செய்த மிகப் பெரிய தவறு, மார்க்க அறிஞரான அபுல்கலாம் ஆசாதைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு, மத நம்பிக்கை இல்லாத முகமது அலி ஜின்னாவைப் பின்பற்றியதுதான்' என்று வெளிப்படையாகவே அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

ஓர் ஓரமாக அமர்ந்து அங்கிருந்த நாளிதழ்களை நான் புரட்டிக் கொண்டிருந்தேன். சிக்கந்தர் பக்தின் பார்வை என்மீது விழுந்திருக்க வேண்டும். அவரது உதவியாளர் என்னை உள்ளே வரும்படி அழைத்தார். தன்னைச் சுற்றிப் பலர், அதுவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும்கூட, மிகுந்த மரியாதையுடன் அவரது அறையில் இருந்த சோபாவில் அமரும்படி அவர் பணித்தபோது, அந்த மனிதரின் பெருந்தன்மையில் நான் நெகிழ்ந்தேன்.

சுமார் அரை மணி நேரம் கடந்து, பெரும்பாலோர் விடைபெற்ற பிறகு சிக்கந்தர் பக்த் சோபாவில் அமர்ந்திருந்த என்னிடம் வந்தார்.

அவர் கோவை வன்முறை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக பாஜக சார்பில் தமிழகம் சென்றிருந்தது பற்றித் தெரிவித்தார். ஓ.ராஜகோபால், அனந்தகுமார், தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோரும் தன்னுடன் வந்ததாகக் கூறினார்.

'தங்களது அரசியல் ஆதாயத்துக்காக இந்துக்கள் - முஸ்லிம்கள் இடையே சிலர் பிரச்னைகளை உருவாக்கி விடுகிறார்கள். அரசியல்வாதிகளின் அணுகுமுறை பாரபட்சமில்லாமல் இருந்தால்தான் மக்கள் கண்ணியத்தோடு வாழ முடியும்' என்றார் அவர்.

நான் அவரிடம் சொன்ன விஷயம், அவரை நிமிர்ந்து உட்கார வைத்தது. 'உங்களுக்கு எப்படித் தெரியும்?' என்பதுபோல என்னை நிமிர்ந்து பார்த்தார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் பணி: விண்ணப்பிக்க செப்.4 கடைசி நாள்

பென்ஸ் படத்தில் ரவி மோகன்!

விஜய் அரசியல் ரீதியாக பேச வேண்டும் : முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கருத்து

வாக்குத் திருட்டைத் தொடர்ந்து ரேசன் அட்டையையும் நிலத்தையும் இழக்க நேரிடும்: வாக்காளர்களுக்கு ராகுல் எச்சரிக்கை!

பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக போராட்டம்! என்ன நடக்கிறது?

SCROLL FOR NEXT