பிரணாப் முகர்ஜி 
தினமணி கதிர்

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 218

கல்லூரியில் ஒரே வகுப்பில், ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து படித்த மாணவர்கள், பிற்காலத்தில் வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் சேர்ந்து தலைவர்களாவது என்பது அரிதிலும் அரிதான ஒன்று.

கி. வைத்தியநாதன்

கல்லூரியில் ஒரே வகுப்பில், ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து படித்த மாணவர்கள், பிற்காலத்தில் வெவ்வேறு அரசியல் இயக்கங்களில் சேர்ந்து தலைவர்களாவது என்பது அரிதிலும் அரிதான ஒன்று. இந்திய அரசியலில் அது நடந்திருக்கிறது. இந்தத் தகவலை என்னிடம் தெரிவித்தார், அந்த மூன்று மாணவர்களில் ஒருவரான தோழர் எம்.ஃபரூக்கி.

எம்.ஃபரூக்கியின் தந்தை, கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் ஆலோசகராக இருந்தவர். தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படிக்கும்போதே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார் ஃபரூக்கி. கல்லூரியில் அவரது சக தோழர்களாக இருந்தவர்கள் பின்னாளில் இந்தியப் பிரதமரான இந்தர் குமார் குஜ்ராலும், பாஜக தலைவரும், ஆளுநருமாக உயர்ந்த சிக்கந்தர் பக்த்தும்.

பண்டித ஜவாஹர்லால் நேருவின் கைதை எதிர்த்து, செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தியவர் ஃபரூக்கி. 1940 இல் நடந்த அந்த போராட்டத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர்கள் குஜ்ராலும், பக்த்தும்.

ஆரம்ப காலத்தில் இருந்தே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டிருந்தபோதிலும், 1942 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது, காந்தியடிகளின் அழைப்பை ஏற்று போராட்டத்தில் குதித்தவர்களில் ஃபரூக்கியும் ஒருவர். அதற்காக அவர் சிறைத்தண்டனையும் பெற்றார்.

பின்னாளில் அவர் முழுநேர இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டராகி, தில்லி நகரத்தின் செயலாளராக நீண்டகாலம் இருந்தவர். அவரது நண்பர்களான குஜ்ராலும், சிக்கந்தர் பக்தும் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்தனர். பிரிவினை காலகட்டத்தில், அகதிகளாக வந்தவர்களுக்கு உதவும் பணிகளில் அவர்கள் மூவரும், இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தியுடன் இணைந்து பணியாற்றினார்கள் என்பது, பின்னொரு காலம் ஐ.கே.குஜ்ரால் தெரிவித்து எனக்குத் தெரிய வந்தது.

தில்லி ஐ.டி.ஓ.வில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான அஜாய் பவனில் தோழர் ஃபருக்கியுடன் பேசிக் கொண்டிருந்தபோது இந்தத் தகவல்களை எல்லாம் அவர் பகிர்ந்து கொண்டார்.

'அதற்குப் பிறகு நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?' என்று நான் கேட்டபோது, 'சந்தித்திருக்கிறோம். தனித்தனியாகச் சந்தித்திருக்கிறோம். ஆனால் மூன்று பேரும் சந்தித்துப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கவில்லை' என்று தெரிவித்தார்.

இதையெல்லாம் சொன்னபோதுதான், சிக்கந்தர் பக்த் என்னை வியப்புடன் பார்த்தார்.

'ஃபரூக்கி சொன்னதுபோல மூவரும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதுதான் எனக்கும் ஆசை. நாங்கள் இருவரும் சந்திப்பது நடக்கும். ஆனால், இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் இந்தர் குமார்ஜிக்கு நேரம் கிடைக்க வேண்டுமே..' என்று தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார் சிக்கந்தர் பக்த்.

அதற்குப் பிறகு நான் வெளியுறவுத் துறை அமைச்சர் குஜ்ராலை சந்தித்துப் பேசியது, சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது எல்லாமே இப்போது கனவுபோல இருக்கிறது.

வேறு சில நண்பர்களையும் குஜ்ரால்ஜி விருந்துக்கு அழைத்திருந்தார். அவர்கள் மூவரும் வெளியே புல் தரையில் அமர்ந்து சிரித்துப் பேசியதையும், பழைய நினைவுகளை அசைபோட்டு மகிழ்ந்ததையும் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் மூவரும் ஐம்பது வயது குறைந்து விட்டதுபோல உற்சாகமாகிவிட்டனர்.

அந்த அபூர்வ சந்திப்பு நடந்து ஆறு மாதங்கள்கூட ஆகவில்லை. ராஜீவ் காந்தி ஃபவுன்டேஷன் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும்போது, திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பில் தோழர் எம்.ஃபரூக்கி காலமாகிவிட்டார். என்னை சந்திக்கும்போதெல்லாம், ஐ.கே.குஜ்ரால் நண்பர்களுடனான அந்த சந்திப்பைக் குறிப்பிட்டு எனக்கு நன்றி கூறுவார்.

தேவே கெளடா அரசின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்பதற்கான எல்லா அறிகுறிகளும் தோன்றத் தொடங்கிவிட்டன. அதற்கிடையில் ப.சிதம்பரம் தனது பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டார். பெரிய அளவில் பரபரப்பையோ, எதிர்ப்பையோ ஏற்படுத்தாத பட்ஜெட் என்பதால், அது குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எதுவும் எழவில்லை. காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் வளர்ச்சிக்கு உதவாத பட்ஜெட் என்று மட்டும் கூறி நிறுத்திக் கொண்டன.

பட்ஜெட்டை மையப்படுத்தி அரசை விமர்சிக்க வழியில்லை என்கிற நிலையில், காங்கிரஸ் கட்சி இப்போது போஃபர்ஸ் பிரச்னையைக் கையிலெடுத்தது. காங்கிரஸின் தாக்குதலை முன்னெடுக்க சீதாராம் கேசரி களமிறக்கியது யாரைத் தெரியுமா? வேறு யார் பிரணாப் முகர்ஜியைத்தான்.

சுவிட்சர்லாந்தில் இருந்து பெறப்பட்ட போஃபர்ஸ் தொடர்பான எல்லா ரகசிய ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்பது பிரணாப் முகர்ஜி மூலம் காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கை. இந்தக் கோரிக்கை ஏற்கப்படாது என்பது எல்லோருக்குமே தெரியும்.

'தற்போதைய நிலையில் இது இயலாத காரியம். ஆனால், காலம் கணிந்து வரும் நேரத்தில் அந்த ஆவணங்கள் அனைத்தும் நிச்சயமாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்' என்று மத்திய சட்ட அமைச்சர் ரமாகாந்த் காலப் தெரிவித்தபோது, காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் அதை எதிர்த்து கோஷமெழுப்பினார்கள்.

'அந்த ஆவணங்களை அவையில் தாக்கல் செய்வதில் அரசு ஏன் தயங்க வேண்டும்? போஃபர்ஸ், போஃபர்ஸ் என்று கூறி காங்கிரஸை அச்சுறுத்தலாம் என்று உங்கள் அரசு நினைக்கிறது. அதனால்தான் அந்த ஆவணங்களை வெளியிடத் தயங்குகிறீர்கள்' என்று பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டினார்.

'சுவிஸ் அரசிடமிருந்து பெறப்பட்ட ரகசிய ஆவணங்கள், இந்தப் பிரச்னையில் மேற்கொண்டு புலனாய்வு செய்வதற்காகத்தான். அந்த ஆவணங்கள் குறித்த சில முக்கிய விவரங்கள் சுவிஸ் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. அதனால் ரகசிய அறிக்கையை அம்பலப்படுத்துவது அந்த விசாரணைக்கு இடையூராக அமையக் கூடும்' என்பதுதான் அமைச்சர் ரமாகாந்த் காலப்பின் பதிலாக இருந்தது.

காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே அமைச்சரை மேலும் வலியுறுத்தியபோது, அவர் அது குறித்துத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தத் தயார் என்று தெரிவித்தார்.

'இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க அரசு தயாராகவே இருக்கிறது. அதனால் அவையின் நேரத்தை வீணாக்க வேண்டாம். மக்களவை, மாநிலங்களவைத் தலைவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தால், அரசு அதை ஏற்கும்' என்றால் அமைச்சர் காலப்.

போஃபர்ஸ் ஆவணங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பது பாஜக உறுப்பினரான யஷ்வந்த் சின்ஹாவின் வேண்டுகோள். விசாரணை அதிகாரிகள், விசாரணை தொடர்பான விவரங்களைத் தொலைக்காட்சிச் சேனல்களுக்குப் பேட்டி அளிப்பதும், அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மறைப்பதும் கடுமையான கண்டனத்துக்குரியது என்பது யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டு.

பட்ஜெட் வெளியாகி இருந்த நிலையில், அதை ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் வழியில்லாமல் இடதுசாரிக் கட்சிகள் தவித்தன. ஏழைகளுக்கு சாதகமான பட்ஜெட் என்று சப்பைக்கட்டு கட்டினாலும், காப்பீட்டுத் துறையில் தனியாரை அனுமதிக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவை எப்படி நியாயப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தது மார்க்சிஸ்ட் கட்சி. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் பங்கு பெற்றிருந்ததால், வெளிப்படையாக விமர்சிக்க முடியவில்லை.

ஸ்ரீகாந்த் ஜிக்சரும், ரகுவன்ஷ் பிரசாதும் கூறியதுபோல, உடனடியாக ஐக்கிய முன்னணி அரசுக்கு ஆபத்து ஏற்படும் என்று தோன்றவில்லை. என்னதான் நினைக்கிறது காங்கிரஸ் என்று தெரிந்துகொள்ளப் பலரைத் தொடர்பு கொண்டும், யாரையும் சந்திக்க முடியவில்லை. பிரணாப் முகர்ஜியை சந்திக்கப் பலமுறை முயன்றும் அவர் பட்ஜெட் குறித்த கூட்டங்களில் கலந்து கொண்டிருந்ததால், பார்க்க முடியவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்குப் போனால், அதன் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தனை சந்திக்க முடியும் என்று நினைத்து அங்கே போனேன். வழக்கத்துக்கு விரோதமாக அவர் தனியாகவே இருந்தார். பெரும்பாலும் அவரை சந்திக்க வரும் வெளியூர் கட்சிக்காரர்கள் புடைசூழத்தான் தோழர் ஏ.பி.பர்தன் காட்சியளிப்பது வழக்கம்.

இந்திய இடதுசாரி இயக்கங்களில் மறக்க முடியாத ஓர் ஆளுமை அர்தேந்து பூஷன் பர்தன் என்கிற ஏ.பி.பர்தன். பிறப்பால் வங்காளியாக இருந்தாலும் அவர் படித்து, வளர்ந்து, கம்யூனிஸ இயக்கத் தொண்டராகக் களமிறங்கி உயர்ந்தது மகாராஷ்டிர மாநிலத்தில்தான். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே, அகில இந்திய மாணவர் கூட்டமைப்பில் இணைந்துவிட்டவர்.

கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அவர் முழுநேரத் தொழிற்சங்கவாதியாக மாறிவிட்டார். மாகாராஷ்டிர மாநிலம் உருவாகும் போராட்டம் உள்பட அவர் பல போராட்டங்களின் முன்னணியில் இருந்திருக்கிறார். அதனால்தான் 1994இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1997 தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இணையக் கூடாது என்று கருத்துத் தெரிவித்த சி.பி.ஐ. கட்சித் தலைவர்களில் அவரும் ஒருவர். ஆனால் கட்சியின் தலைமைக் குழு மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தியபோது, பொதுச் செயலராக இருந்த இந்திரஜித் குப்தாவும், சதுரானன் மிஸ்ராவும் தேவே கெளடா அமைச்சரவையில் சேர்ந்தனர். இந்திரஜித் குப்தாவின் இடத்தை நிரப்ப, ஏ.பி.பர்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1996 முதல் சுமார் 12 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஏ.பி.பர்தனுக்கு 2004 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதில் மிக முக்கிமான பங்கு உண்டு. மனைவியின் மறைவுக்குப் பிறகு கட்சி அலுவலகத்திலேயே ஓர் சிறிய அறையில் தங்கியிருந்து கட்சிப் பணியாற்றும் ஏ.பி.பர்தனைப் போன்ற தன்னலமற்ற அரசியல் தலைவர்கள் இப்போது அருகிவிட்டனர்.

என்னைப் பார்த்ததும் அவருக்கு வியப்பு. சிகரெட்டைப் பற்ற வைத்தபடி என்னிடம் கேட்டார் 'எப்போது ஐக்கிய முன்னணி அரசு கவிழும் என்று காத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது...'

'ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?'

'ஆட்சி கவிழுமா, தொடருமா என்று என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்குத்தானே வந்திருக்கிறீர்கள்? ஆட்சி தொடர்ந்தாலும் நல்லதல்ல, கவிழ்ந்தாலும் நல்லதல்ல. அதனால், நான் சொல்லாதது எதுவும் போட வேண்டாம்.'

'தேவே கெளடா ஆட்சியைப் பற்றி நீங்கள் என்னதான் நினைக்கிறீர்கள்?'

'நரசிம்ம ராவ் அரசு போன பாதையில் ஐக்கிய முன்னணி பயணிக்காது. ஏனென்றால் நாங்கள் இடதுசாரிகளும் இதில் இருக்கிறோம். அதே நேரத்தில், இப்படியே போனால் மக்களுக்கே இந்த ஆட்சியின்மீது வெறுப்பு ஏற்பட்டு விடும். அதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது.'

'எதற்காகத் தேவையில்லாமல் மீண்டும் மீண்டும் போஃபர்ஸ் பிரச்னையை ஐக்கிய முன்னணி எழுப்புகிறது?'

'அரசு தனது கடமையைச் செய்கிறது. அவ்வளவுதான். அந்தப் பிரச்னையை அடிக்கடி எழுப்பி எங்களை அச்சுறுத்த முற்படுவது காங்கிரஸ்தான்.

போஃபர்ஸ் குறித்தே பேசக் கூடாது என்றால் எப்படி?'

'காங்கிரஸ் உண்மை வெளிவரட்டும் என்றுதானே சொல்கிறது...'

'அப்படியானால் பேசாமல் இருக்கட்டும். உண்மை வெளிப்படும்.'

'அந்த உண்மைதான் என்ன?'

வழக்கம்போல அமைதியாகச் சிரித்தார் பர்தன்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள்... ஆஷிகா ரங்கநாத்!

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

SCROLL FOR NEXT