ஆர்.கே.அருள்செல்வன்
எனக்கு புத்தகங்களைப் படிப்பது மிகவும் பிடிக்கும். புத்தகங்களில் மக்களின் வாழ்க்கை, நாடுகளின் வரலாறு.. என ரசித்துப் படிப்பேன். படித்ததைத் தேர்வு எழுதி, ஒரு பட்டமாக மாற்றிக் கொள்வது மேலும் பிடிக்கும்.
இப்போது நான் நான்காவது எம்.ஏ. எழுதிக் கொண்டிருக்கிறேன். அதைப் போலவே குழந்தைகளின் குணாம்சங்களைக் கவனிப்பதில் எனக்கு அலாதி ஆர்வம். 'அவர்கள் மாணவர்கள்; நான் ஆசிரியர்' என்பதை மறந்துவிட்டு தனியே விலகி நின்று, நான் வெள்ளை மனம் கொண்ட அவர்களை உற்று நோக்கும்போது வேடிக்கையாக இருக்கும்.
என் மனைவி சென்னையில் பணியாற்றியதால், நான் தஞ்சாவூரிலிருந்து சென்னையில் ஏதாவது பள்ளிக்கு டிரான்ஸ்பருக்கு முயற்சி செய்தேன். கடைசியில் சென்னை அருகே என்று, இந்த மலைக் கிராமத்தில்தான் மாறுதல் கிடைத்தது. சென்னையில் இருந்து இரண்டு மணி நேரப் பயணம். நீளமான பயணம்தான் என்றாலும் அந்த ஊர் எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால், மாநகரத்தின் பரபரப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அந்தச் சூழல் இருந்தது.
அந்த நிலக்காட்சி புதியதான வரைபடம். சுற்றிலும் மலைகள், வயல்வெளிகள் , மலையிலிருந்து அருவி போல் வரும் சிற்றோடைகள், சாலையின் இருபுறமும் பாறைகள், பாறைகளின் இடுக்குகளில் பொதிந்து இருக்கும் புதர்கள், நெளி நெளியாய் காற்றில் அசையும் தாவரங்கள், செடி கொடிகள், வண்ண வண்ணப்பூக்கள்.. என்று இயற்கை மணம் கமழும். பாதையில் பாம்புகள் சகஜம். குறுக்கே குரங்குகள் குதித்தோடும். அவ்வூர் வேறு ஓர் உலகமாகத் தோன்றியது.
அந்தப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் முதல் தலைமுறை படிப்பாளிகள். எனவே அதற்கான தன்மையுடன் இருந்தார்கள். எங்கள் ஊரில் எல்லாம் ஆசிரியர்கள் மேல் மாணவர்கள் மரியாதை வைத்திருப்பார்கள். ஒரு பயம் இருக்கும். அருகில் செல்லவே அஞ்சுவார்கள். ஆனால் இங்கே சகஜமாக இருந்தார்கள். மரியாதை பற்றி தெரியாமல் இருந்தார்கள். அறியாமையின் அழகு அது.
நான் ஒருநாள் ஒன்றாம் வகுப்புக்குச் சென்றபோது ஒரு சிறு குழந்தை வந்து சிலேட்டைக் காட்டி ,
'வாத்தியாரே ரைட் வுடு' என்றது .
எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி, வியப்பு. உடனே இன்னொரு சிறுவன் வந்து, 'எனக்கு ஒரு ரைட் வுடு வாத்தியாரே' என்றான்.
' என்ன இப்படி ரைட் போடற? கொஞ்சம் பெருசா போடு' என்றது இன்னொன்று மூக்கு ஒழுகிக் கொண்டு.. இன்னொன்று அருகில் வந்து கசிந்த மூக்கைச் சட்டை காலரால் துடைத்தவாறு, 'எனக்கொண்ணு போடு' என்று சிலேட்டை நீட்டியது.
மற்றொன்று மூக்கும் கண்ணும் பொங்க, 'என்னெ இவன் கிள்றான். பாரு' என்றது.
அவர்கள் கதை சொன்னால் கூட வேடிக்கையாக இருக்கும். 'ஒரு ஊர்லயாம் பாரு. ஒரு காக்காவாம் பாரு. இருந்துச்சாம் பாரு' என்பார்கள்.
இப்படியாக இருந்தது- எனக்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் தோன்றியது.
இரண்டாம் வகுப்பு அவர்கள் வரும்போது, 'இருக்குங்ங் சார் ,இல்லீங்ங் சார்' என்று மரியாதையாகப் பேசக் கற்றுக் கொள்வர். அதற்கான பயிற்சியை ஆசிரியர்கள் கொடுத்துவிடுவார்கள்.
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஓர் உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். உற்றுக் கவனிக்காமல் அது புரியாது. ஒவ்வொருவரது குணச்சித்திரமும் அவர்கள் செய்யும் சேட்டைகளும் ரசிக்கத்தக்கதாக இருக்கும். சில நேரம் நாம் கவனிக்காமல் இருந்தால் எல்லைமீறி சத்தம் அதிகரிக்கும் .அப்போது நாம் தலையிட வேண்டி இருக்கும்.
என்னிடமிருந்த 34 குழந்தைகளில் தாமரைச்செல்வி மட்டும் தனியாகத் தெரிந்தாள். ஏனென்றால் அவள் எப்போதும் சிரித்துகொண்டிருப்பாள். எந்தச் செய்தி சொன்னாலும் முதலில் சிரிப்பையே பதிலாக வெளிப்படுத்துவாள். கேள்வி கேட்டாலும் சிரிப்பு. மிரட்டினாலும், அதட்டினாலும் சிரிப்பு. பேசும் முன்பு சிரிப்பை உதிர்த்துவிட்டுத்தான், அடுத்த வார்த்தையே வரும்.
அதுமட்டுமல்ல; எப்போதும் ஒரு உற்சாகத் துள்ளலுடன் ஒரு துடிப்புடன் இருப்பாள். அவள் செல்கள் அனைத்தும் ஒரு உணர்வு எழுச்சியில் இருப்பதுபோல் தோன்றும். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும் .அதே உற்சாகம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து இருக்கும். சோர்வே இருக்காது.
'எப்படி அவளால் இவ்வளவு உற்சாகம் பொங்க இருக்க முடிகிறது' என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதன் பின்னணியை ஆராய வேண்டும் போல் ஒரு துறுதுறுப்பு எனக்குள் படர ஆரம்பித்தது.
அவள் பள்ளியில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இருந்தாலும் சக குழந்தைகளுடன் எளிதில் ஒட்டிக் கொண்டு விட்டாள். அவளைச் சுற்றிப் பல குழந்தைகள் சூழ்ந்து கொண்டிருந்தன.யார்கூடவும் அவள் எளிதாக அணுக்கமாகிக் கொள்வாள்.
அவளைப் பற்றி, 'என் பெஸ்ட் பிரண்ட் சார்..' ,
'எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருப்பா சார்' என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள் பெருமையாக! அந்தளவுக்கு அவர்கள் மனதில் இடம் பிடித்து விட்டாள். அதற்குக் காரணம் அவளிடம் இருந்த ஒரே செல்வமான புன்னகைதான்.
அவள் நேரம் தவறாமல் பள்ளிக்கு வந்துவிடுவாள். ஒருநாள் பள்ளிக்கு வரவில்லையென்றாலும் வகுப்பு மின்சாரம் போன வீடு மாதிரி நிசப்தமாக இருக்கும். எந்த அசைவுகளும் இல்லாதது போல் தோன்றும். அந்த அளவுக்கு அவள் சிரித்துகொண்டே இருப்பாள்.
அந்தச் சிரிப்பொலி வகுப்பில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவள் சிரிக்கும்போது அது முழு நீளச் சிரிப்பாக இருக்கும். வாய் விரிந்து பற்கள் தெரிவது மட்டுமல்ல; மூக்கும் சுழிப்பு காட்டிக் சிரிக்கும்.அதில் கண்களும் சேர்ந்துகொள்ளும். இப்படி வாய், கண், மூக்கு சேர்ந்து சிரிப்பு விரியும். கன்ன கதுப்புகள் மினுப்பு காட்டும்.
நான் எப்போதும் குழந்தைகளிடம் வெகு சகஜமாக இருப்பேன். அவர்கள் வந்து என்னிடம் எந்தச் சந்தேகத்தையும் விரல் தொட்டு, கையை நிமிண்டிக் கேட்கும் அளவுக்கு அவர்களிடம் அணுக்கமாக இருப்பேன். என் வகுப்பு எப்போதும் கலகலப்பாக இருக்கும். வகுப்பின் முகப்பில், 'இது ஆனந்தம் விளையாடும் வீடு' என்று போர்டு வைத்திருப்பேன்.
சிலர் கூறுவதுண்டு. பள்ளி வகுப்பறை அமைதியாக இருப்பதுதான் ஒழுங்கான வகுப்பறை என்று. அப்படி குழந்தைகளை மிரட்டி கைகட்டி வாய்பொத்தி உறைநிலையில் வைத்திருப்பது எனக்குப் பிடிக்காது. எனவே என்னுடைய வகுப்பறை எப்போதும் சல சலவென ஓடும் நீரோடை போல கலகலத்துக் கொண்டிருக்கும். இதற்கு மத்தியில்தான் கற்பித்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் .
அது மூன்றாம் வகுப்பு. பற்கள் விழும் பருவம் என்பதால் அடிக்கடி, 'பல் ஆடுகிறது, பல் கழண்டுவருகிறது. வேர் அறுந்து விழும் நிலையில் உள்ளது. எடுத்து போட்டுவிட்டு வருகிறேன்' என்றெல்லாம் வெளியில் செல்ல அனுமதி கேட்பார்கள். அப்போது தாமரைச்செல்வியும் கூடவே செல்வாள். அதைப் புதைத்துவிட்டு வருவதாகக் கூறுவார்கள். அப்போது, 'புதைக்கிற பல் முளைக்குமா சார்?' என்பாள் தாமரை. அவளுக்கு இன்னும் பல் விழ ஆரம்பிக்கவில்லை.
'யார் காலிலாவது குத்தி விடும் என்பதற்காக சொல்லப்பட்ட பழக்கம்' என்று சொல்வேன். வாய் கழுவிக் கொப்பளித்துவிட்டு வரும்படி கூறுவேன்.
அந்த ஓரிரு மாதங்களிலேயே அவளுக்குச் சக குழந்தைகள் பற்றித் தெரிந்துவிட்டது. யாரைப் பற்றி கேள்வி கேட்டாலும் பதில் சொல்வாள். ' ரமணி வரவில்லை' என்பாள். காரணமும் சொல்வாள். 'அவளுக்கு ஜுரம்' என்று தகவல் சொல்வாள். 'யுவராஜ் வர மாட்டான் சார். அவங்க மாமாவுக்குக் கல்யாணமாம் ஊருக்கு போயிருக்கான்' என்பாள். 'இவன் ஒன் பாத்ரூம் போகணுமாம் சார்' என்று அடுத்தவனுக்குப் பரிந்துரைப்பாள்.
'இவ ஏதோ சந்தேகம் கேட்கணுமாம் சார் உங்ககிட்ட. வர்றதுக்கு கூச்சப்படுறா' என்பாள். ஒவ்வொன்றையும் சிரிப்பின் ஊடாகத்தான் கூறுவாள்.
குழந்தைகளின் உள்ளங்களில் புகுந்து பார்க்க எனக்கு ஆசை. உலோகங்களில் பாதரசம்போல் மாணவிகளில் அவள் தனித்து தெரிந்தாள். அவளது துடிப்பும் துறுதுறுப்பும் உற்சாகமும் துள்ளலும் சிரிப்பும் என்னை தொந்தரவு செய்து கொண்டிருந்தன. எப்படி அவளால் இப்படி இருக்க முடிகிறது? அவள் கண்கள் எப்போதும் அலைபாய்ந்தபடி எல்லாவற்றையும் கவனித்துகொண்டிருக்கும்.
'நேத்து போட்ட சட்டை இன்னைக்கு போட்டு வந்திருக்கிறா' என்று கூறுமளவுக்கு அனைத்தும் அத்துப்படி. நான் மாறுதலாக உடை அணிந்து கொண்டால் கூட, 'இன்னைக்கு உங்க அரைக்கை சட்டை நல்லா இருக்கு சார்' என்பாள். 'இந்த பேண்ட் சட்டை நல்லா இருக்கு சார்' என்பாள்.
மூன்றாவது படிக்கும் பருவத்தில் உள்ளவள் அந்த அளவுக்கு எடை போட்டுக் கொண்டிருப்பாள். சொல்லிக் கொடுப்பதை 'கப்'என்று பிடித்துக் கொள்வாள். நன்றாகப் பாடுவாள். அவள் பாடிய 'ஆண்டவனே ஆண்டவனே வர வேணும்' என்ற பாடலை அவளிடம் நான் கற்றுகொண்டேன். பல இடங்களில் அதைப் பாடி , கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன்.
சில நாள்கள் ஓடிவிட்டன .அவளது மகிழ்ச்சியின் காரணம் அறிய வேண்டும் என்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டே இருந்தது.
ஒருவர் சோகமாக இருந்தால் காரணம் அறியலாம். மகிழ்ச்சியாக இருந்தால் எப்படி அறிவது? ஏன் அறிய வேண்டும்? இது என்ன நியாயம்? இருந்தாலும் அவளைப் பற்றி அறிய ஆர்வம் மேலும், மேலும் அதிகரித்தது.
ஒருநாள் அவளைப் பெயர் சொல்லி அழைத்தேன். உடனே கூடவே சாதனாவும் வந்தாள். அவளை அமரச் செய்தேன். 'தாமரைச்செல்வி மட்டும் வா' என்று அழைத்தேன்.
சிரித்தவாறு வந்தாள். கைகளை கட்டிக் கொண்டாள். தோளை மேலும் கீழும் அசைத்தாள் வெட்கப்பட்டது போல். 'என்ன சார் ?' என்பது போல் பார்த்தாள்.
'உன்னைப்பற்றிச் சொல்' என்றேன். குழந்தைதானே? விழித்தாள்.
'உங்க அப்பா என்ன பண்றாரு ?' என்றேன். மற்ற பிள்ளைகள் கவனிக்காதபடி அவளிடம் தனியாகப் பேசினேன். மற்றவர்கள் காதில் விழாதபடி கேட்டேன். தோளை அசைத்து
கொண்டிருந்தவள், 'சட்' என உறைந்து நின்றாள் . அவள் முகத்தில் இருந்த சிரிப்பு அணைந்து விட்டது.
'சொல்லு என்ன பண்றார் அப்பா?' என்றதும் சட்டென்று முகம் வாடி இருண்டது.
'உங்க அம்மா என்ன பண்றாங்க? எங்க இருக்காங்க? உனக்கு எந்த ஊரு ?' என விசாரித்தபோது, திடீரென்று அவள் உதடு கோணியது .
'சட்' என்று அழ ஆரம்பித்து விட்டாள் சத்தமின்றி,
' 'என்ன ? என்ன விஷயம்?' என்றேன் குழப்பமாக?
'ஒண்ணுமே செய்யல ஏன் இப்படி அழுகிறாய்?' என்றபோது, அதே ஓசையில்லாத செருமலுடன் அழுகை. சாதனாவை கூப்பிட்டேன். கூடவே இருக்கும் சாதனா ஓடிவந்தாள்.
'என்ன சாதனா.. உன் ப்ரண்டுகிட்ட அவங்க அப்பா, அம்மா என்ன பண்றாங்கன்னு கேட்டா அழ ஆரம்பிச்சுட்டா?' என நான் கேட்டபோது , தாமரை தேங்காய் உடைத்த பின் வரும் சத்தம் போல ஓசையில்லாமல் ஆனால் குமுறி அழுது கொண்டிருந்தாள்.
'சார் அவங்க அம்மா அப்பா பத்தி கேக்காதீங்க' என்றாள் சாதனா. 'ஏன்' என்றேன்.
'அவங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை சார். அவங்க அம்மா வந்து கிஷ்ணாயில் ஊத்தி தீ வச்சிக்கிட்டாங்க சார். அவங்கள காப்பாத்த போய் அவங்க அப்பாவும் எரிஞ்சுட்டாரு சார். அவங்க அம்மா அன்னக்கே இறந்துட்டாங்க சார் . அப்பாவும் ரொம்ப சீரியஸா போய் பத்து நாள்ல அவரும் இறந்துட்டார் சார். அவ இப்ப ஹாஸ்டல்ல இருக்கா சார்' என்றாள்.
ஓர் ஆதரவற்றோர் இல்லம் அங்கிருந்தது. அதையே 'ஹாஸ்டல்' என்பார்கள்.
'இது என்ன மாதிரி சில பேருக்கு மட்டும்தான் சார் தெரியும்' என்றாள் சாதனா. நான் வாயடைத்துப் போய் நின்றேன்.
'நல்லா சிரிச்சு பேசிட்டு இருப்பா சார் .ஆனா அவங்க அப்பா பத்தி, அம்மா பத்தி யாருனா கேட்டா அழுதிடுவா சார். நாங்க யாரும் கேட்க மாட்டோம். சில பேருக்கு மட்டும்தான் சார் இது தெரியும்' என்றாள் .
' ஹாஸ்டல் பாதர்தான் சார், இவள ஸ்கூல்ல சேர்த்தாரு' என்றாள்.
இவ்வளவு சோகத்தையும் துயரத்தையும் வைத்துக்கொண்டுதான் இவள் பள்ளிக்கு வருகிறாள். எட்டு வயதுக்குள் எப்படி தன் மனத் துயரத்தை சிரிப்பு முகமூடி போட்டு மூடிக் கொள்ள இந்தக் குழந்தை கற்றிருக்கிறது? இது நான் படித்த குழந்தைகள் உளவியலில் எல்லாம் பார்க்க முடியாதது. நான் சுருங்கிப் போய் விட்டேன்.
ஒவ்வொரு குழந்தையும் ஓர் உலகம்தான். மனித வாழ்க்கை புத்தகங்களுக்கு வெளியே உள்ளது . முதலில் அதைப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். 'டிகிரி படிப்பை நிறுத்திவிட்டு இவர்களைப் படிக்கக் கற்று கொள்ள வேண்டும்' என்று தோன்றியது. தாமரைச்செல்வியை அருகே அழைத்தேன். கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டேன். 'முகத்தை கழுவிட்டு வா' என்றேன். வந்தாள்.
' உனக்கு பிடிக்கலைன்னா அதை பத்தி நான் கேட்க மாட்டேன்' என்றேன். கன்னத்தை வருடி, தலையில் மிருதுவாகத் தட்டியபடி.
தலையாட்டலில், 'சரி சரி' என்றாள். 'சிரி சிரி' என்றேன். மீண்டும் சிரித்தாள். அதே சிரிப்பு .நீளமான சிரிப்பு. அவளுக்குள்ள தைரியம் எனக்கில்லை. துயர நெருப்புகளை உதிர்த்தபடி அவள் சிரிக்கிறாள். நான் உள்ளுக்குள் அழ ஆரம்பித்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.