கோலிவுட் ஸ்டூடியோ!
தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாநாயகியாக அசத்தி வருபவர் த்ரிஷா.
த்ரிஷா லைன் அப்!
தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாநாயகியாக அசத்தி வருபவர் த்ரிஷா. கமல், சிரஞ்சீவி, மோகன்லால், அஜித், டொவினோ தாமஸ் என ஒவ்வொரு இன்டஸ்ட்ரியின் டாப் ஹீரோக்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.
மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக ஸ்கோர் செய்த த்ரிஷா, மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்துள்ள படம் 'தக் லைஃப்'. கமல், சிம்பு, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி என பெரிய நட்சத்திர கூட்டம் இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.
Advertisement
சிம்புவின் ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார் என்றும் ஒரு பேச்சு இருக்கிறது. இதில் கமலின் போர்ஷன் முடிவடைந்துவிட்டாலும், இதர நடிகர்களின் போர்ஷன் இப்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இதற்கு முன்னர் மும்பையில் எடுக்கப்பட்ட காட்சிகளிலேயே த்ரிஷாவின் போர்ஷன் எடுக்கப்பட்டுவிட்டது என்பதால், அதனை முடித்த பின்னரே அஜித் படத்துக்குச் சென்றார் த்ரிஷா.
அஜித்துடன் 'விடா முயற்சி' படத்தில் கமிட் ஆனார் த்ரிஷா. அஜர்பைஜான் நாட்டில் அதன் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த சமயத்தில்தான் அஜித்தின் மற்றொரு படமான 'குட் பேட் அக்லி'யின் படப்பிடிப்பையும் தொடங்கினார் அஜித்.
இரண்டு படங்களின் படப்பிடிப்பிலும் தொடர்ந்து ஒரு வாரம் நடித்துக் கொடுத்தார் அஜித். அப்போது த்ரிஷாவின் காம்பினேஷன்களையும் படமாக்கினார்கள். அதன்பிறகு ஸ்பெயினில் நடைபெற்று வரும் படப்பிடிப்பிலும் த்ரிஷா பங்கேற்று வருகிறார். 'விடா முயற்சி' படப்பிடிப்பு நிறைவடைய ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டியிருக்கிறது என்றும், அடுத்தாண்டில் அதன் படப்பிடிப்பு இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
'விடா முயற்சி'யின் படப்பிடிப்புக்கு இடையேதான் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா', மலையாளத்தில் டொவினோ தாமஸூடன் 'ஐடென்டிட்டி' ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இதில் டொவினோவுடன் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுவருகின்றன. அடுத்த மாதம் படம் திரைக்கு வரும் என அறிவித்துள்ளதால், பின்னணி இசை வேலைகள் தீவிரமடைந்துள்ளன.
சிரஞ்சீவியுடன் நடித்து வரும் 'விஸ்வம்பரா' ஃபேன்டஸி, ஆக்ஷன் படம். த்ரிஷாவுடன் 'கோட்' நாயகி மீனாட்சி செளத்ரி, 'சர்தார் 2' ஆஷிமா ரங்கநாத்தும் நடிக்கிறார். இதிலும் த்ரிஷாவின் போர்ஷன் முழுவதும் படமாக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
வரும் ஜனவரி 10-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன. இதுதவிர, மோகன்லாலுடன் 'ராம்' என்ற படமும் கைவசம் வைத்துள்ளார்.
2020 கரோனா காலத்துக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு ஆரம்பமானது. பல்வேறு காலகட்டங்களை பிரதிபலிக்கும் இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்குகிறார். வெளிநாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. இன்னும் சில ஷெட்யூல்கள் இதன் படப்பிடிப்பு மீதமிருக்கின்றன என்றும் தகவல்.
சினிமாவில் இருந்து விலக நினைத்த நயன்தாரா!
நெட்பிளக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, திருமணம் பற்றிய ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் நயன்தாரா, சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தது ஏன் என்பது குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார் அவர், ' ஸ்ரீ ராம ராஜ்யம் படத்தில் கடைசி ஷாட் எடுக்கும்போது எனக்கு ஒருமாதிரி இருந்தது, எனக்கே தெரியாமல் அப்போது அழுதேன்.
எனக்கு சினிமாதான் எல்லாமே, அப்படிப்பட்ட சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தது கஷ்டமாக இருந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் நான் திரைத்துறையில் இருந்து வெளியேறியதற்கு காரணம் அந்த நபர்தான் ( ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபர்). அவர்தான் என்னை சினிமாவில் இருந்து விலகச் சொன்னார். எனக்கு அதில் விருப்பமில்லை, எனக்கு எந்த ஒரு ஆப்ஷனும் கொடுக்கவில்லை.
ஒரே வார்த்தையில் இனி சினிமாவில் வேலை செய்யக் கூடாது என அந்த நபர் சொல்லிவிட்டார். எனக்கு வேறு வழியே இல்லை. வாழ்க்கையை புரிந்துகொள்ள அப்போது எனக்கு முதிர்ச்சி இல்லை. தவறு செய்வது சகஜம்தான். தவறை நினைத்து வருத்தப்படுவதும் சரியானதுதான். எல்லோரும் என் கதை முடிந்தது. நான் அவ்வளவுதான் என்று நினைத்தார்கள்.
திடீரென தெலுங்கில் 'நாகார்ஜுனா' படத்திலும், தமிழில் 'ராஜா ராணி' படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பைத் தொடர்ந்துதான் நான் சினிமாவில் மீண்டும் நடிக்க தயாரானேன்' என்று பேசியிருக்கிறார் நயன்தாரா.
பாலாவிடம் உருகிய அருண் விஜய்!
2022 மார்ச் 28 - இல் பாலா இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி ஷெட்டி, மமிதா உள்பட பலர் நடிப்பில் 'வணங்கான்' படம் தொடங்கப்பட்டது. நடிகர் சூர்யா படத்திலிருந்து விலகிவிட, அவருக்குப் பதில் 'வணங்கான்' படத்தில் நடித்தார் அருண் விஜய். சூர்யாவை போலவே அப்படியே கதாபாத்திரத்தில் அருண் விஜய் பொருந்திப் போனார். 'வணங்கான்' படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் குடும்பத்துடன் 'வணங்கான்' திரைப்படத்தை பிரத்யேகமாகத் திரையிட்டுப் பார்த்திருக்கிறார் அருண் விஜய். அவர் பதிவிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், 'மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குநர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக 'எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா' என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
நம் படப்பிடிப்பின்பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.
என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.எனது திரையுலகப் பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில், எனக்குத் துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சிக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாள் நோக்கி மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.