ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சுக சிகிச்சை என்றால் என்ன?
ஆயுர்வேத மருந்துகளுக்கு பக்க விளைவுகள் கிடையாது என்பது உண்மையா? ஆங்கில மருத்துவத்தில் அதிக உணவு, நடவடிக்கை கட்டுப்பாடுகள் கூறுவதில்லை.
ஆயுர்வேத மருந்துகளுக்கு பக்க விளைவுகள் கிடையாது என்பது உண்மையா? ஆங்கில மருத்துவத்தில் அதிக உணவு, நடவடிக்கை கட்டுப்பாடுகள் கூறுவதில்லை. ஆனால், ஆயுர்வேத மருத்துவர்கள் ஏன் கூறுகின்றனர். அனைத்து வகை நோய்களுக்கும் பயனுள்ள சிகிச்சை கூறப்படுள்ளதா? ஆயுர்வேதத்தில் சுக சிகிச்சை என்றால் என்ன?
-ராமகிருஷ்ணன், தஞ்சாவூர்.
உலகில் நாம் காணும் பொருள்கள் அனைத்தும் பஞ்ச மஹாபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவைகளால் ஆனவை. உயிருள்ள வஸ்துக்களில் மனம், ஆன்மா செயல்புரிவதற்காக, பூத உடலுடன் சேர்ந்திருக்கின்றன. மஹா பூதங்களில் உயர்வு, தாழ்வுநிலையே நோயாக மாறி திரிதோஷ தத்துவங்களாகிய வாதம் (காற்று, ஆகாயம்), பித்தம் (நெருப்பு), கபம் (நிலம், நீர்) வழியே காண்பிக்கின்றன.
ஆயுர்வேத மருந்துகள் அனைத்தும் இந்தத் தாழ்வு அல்லது உயர்வுநிலையை சரி செய்து தரும் நிலையில் வழங்கப்படுவதால், நோயானது குணமாகிறது. உடல்உட்புறக் கூறுகளில் உள்ள நுண்ணிய பூத தத்துவங்களால் ஆயுர்வேத மருந்துகளால் மிக அரிதாக ஒவ்வாமை ஏற்படுவதைக் காண்கிறோம்.
ஒரு நோய்க்கான காரணத்தை உணவு, நடவடிக்கை ஆகியவற்றின் வழியாகக் கண்டறிந்து சாப்பிட்டால், நோயானது எளிதில் விலகிவிடுகிறது. இதற்குப் பத்தியம் கூறுதல் என்று பெயர். உதாரணமாக, வயிற்றில் வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உபாதையில் உருளை, வாழை, காராமணி, மொச்சை, வேர்கடலை, பருப்பு சாம்பார் போன்றவை சமைத்து ஆறிய நிலையில் சாப்பிட வேண்டாம் என்று கூறி அதன்பிறகு ஏற்பட்டுள்ள உபாதை குறைய வாயு குளிகை, தசமூலம் கஷாயம், அஷ்டசூரம், அபயாரிஷ்டம் போன்றவை கொடுக்கப்பட்டால், நிவாரணம் எளிதாகிறது.
'என் இஷ்டப்படிதான் சாப்பிடுவேன். ஆனால் உங்கள் மருந்து வேலை செய்ய வேண்டும்' என்று ஒருவர் கூறினால், மருந்துக்கும் உணவுக்கும்தான் சண்டை நடக்குமே தவிர, மருந்துக்கும் நோய்க்கும் சண்டை ஏற்படாது. அதனால் நோய் மாறவும் மாறாது. அதனால்தான் ஆயுர்வேத மருத்துவர் உணவு, நடவடிக்கைகளில் கட்டுப்பாட்டைக் கூறுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், உடல், மன வலுவைக் கூட்டுவதுதான் மருத்துவத்தின் அடிப்படை சித்தாந்தம், அதை ஆயுர்வேதம் திறம்பட நடத்தித் தருவதோடு, இரு வகை சிகிச்சைத் தத்துவமாகிய 'சோதனம்சமனம்' எனும் முறைகளைப் பயன்படுத்துகிறது. சோதனம் என்றால் உடல் உட்புறக் கழிவுகளை வெளியேற்றி, உடல், மன வலுவைக் கூட்டுவது, வலுவற்ற நிலையிலுள்ள பலவீனமான நோயாளிகளுக்கு 'சமனம்' எனும் நோயை உட்புறமாக அடக்கி குணமாக்குவது என்ற முறையாகும். இவை இரண்டுமே ஆயுர்வேதத்தின் பயனுள்ள சிகிச்சை முறைகளாகும்.
நோயின் தன்மை மிகத் தீவிரமான நிலையில், சிகிச்சைக்கு வசப்படாமல் போய்விடும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.
உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மூப்பைத் தள்ளிப் போடுதல், இளமையைத் தக்க வைத்தல் போன்றவை ஆயுர்வேதத்தின் சுக சிகிச்சையின் மூலம் கிடைப்பவை. பருவக் காலங்களுக்குத் தக்கவாறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு, நோய்களில் இருந்து நிவாரணம் பெறுதல், ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு ஆரோக்கியத்தை நிலைநிறுத்துதல் போன்றவை சுக சிகிச்சை மூலமாகவும் பெறலாம்.
பஞ்சகர்மா எனும் ஐந்து வகை உடல் சுத்தம் ஏற்படுத்துதல், உடல் தன்மைக்கேற்ப உணவை அமைத்துத் தருதல், மன ஆரோக்கியத்துக்கான பரிந்துரைகள் போன்ற சுக சிகிச்சை மூலம் வழங்கப்படுகின்றன.
(தொடரும்)