FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

என் வயது 37. காலையில் எட்டு மணிக்கு டிபன் சாப்பிடுவேன். பத்து மணி சுமாருக்கு வயிறு, மார்பு, முதுகுப் பகுதிகளில் எரிச்சலுடன் வலி ஏற்படுகிறது.

Updated On : 2 பிப்ரவரி 2026, 8:36 pm IST
பகிர்:

என் வயது 37. காலையில் எட்டு மணிக்கு டிபன் சாப்பிடுவேன். பத்து மணி சுமாருக்கு வயிறு, மார்பு, முதுகுப் பகுதிகளில் எரிச்சலுடன் வலி ஏற்படுகிறது. உடனே சூடாக ஒரு கப் காபி சாப்பிடுகிறேன். எரிச்சலும் வலியும் குறைந்து விடுகின்றன. ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் மறுபடியும் எரிச்சல், வலி உணர்கிறேன். இது எதனால்? இதற்கு ஏதேனும் ஆயுர்வேத மருந்து உண்டா?

-கபிலன், காஞ்சிபுரம்.

உண்ட உணவு இரைப்பையில் செரிமானமாகி, மேல் வயிறு காலியானதும், உடனே வயிறு, மார்பு, முதுகு ஆகிய இடங்களில் நீங்கள் குறிப்பிடுவதைப் போல எரிச்சலுடன் நோவும் உண்டாகும். இதற்கு "பரிணாம சூலம்' என்று பெயராகும்.

Advertisement

Advertisement

உணவை செரிப்பதற்காக இரைப்பையில் சுரக்கும் திரவத்தில் ஹைட்ரோக்ளோரிக் ஆஸிட் இருக்கிறது. காரம், புளி, உப்பு சுவையின் அதிகச் சேர்க்கையினால், சுரப்புத் திரவத்தில் இந்த ஆஸிட்டின் அளவு அதிகமாகி விடுகிறது. உணவு செரிமானமான பிறகு இந்த உபரி அம்சமான "ஆஸிட்' இரைப்பையில் நிற்பதால், நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் ஏற்படுகின்றன. கால ஓட்டத்தில் இதன் காரணமாக வயிற்றினுள் புண் ஏற்பட்டு, அதனால் இந்த எரிச்சலும் வலியும் நிரந்தரமாக நீடிக்கிறது.

இந்த உபரி ஆஸிட்டை குறைக்க "ஆல்கலைன்' மிக்ஸர், பவுடர், மாத்திரை என்றெல்லாம் சாப்பிட குணமும் ஆகும். ஆனால், ஏட்டிக்குப் போட்டியாக இந்த இரப்பைச் சுரப்பில் "ஆஸிட்'டின் அம்சமும் அதிகமாகிக் கொண்டே போகும்.

இந்த பிரச்னையில் சிலருக்கு மலச்சிக்கலும் ஏற்படும். இதற்கு வராடிகா பஸ்மம், பாஸ்கர லவணம் என்று எத்தனை மருந்துகளை உபயோகப்படுத்தினாலும், "கல்யாணக க்ஷôரம்' எனும் மருந்து மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒரு சிட்டிகையளவு முதல் இரண்டு சிட்டிகை வரையில் சிறிது நெய்யுடன் இதை தினமும் இரண்டு வேளை சில நாள்களுக்குச் சாப்பிட, பரிணாம சூலம் எனும் உங்களுடைய உபாதையானது அடங்கிவிடும். பிறகு சில வருடங்களுக்கு இந்த உபாதை வராமலேயே இருக்கும். மறுபடியும் இப் பிரச்னை ஏற்பட்டால் மருந்தை திரும்பவும் சாப்பிட்டு அடக்கி விடலாம்.

நாட்டு மருந்துக் கடைகளில் சிவதை வேர் கிடைக்கும். வெளுத்ததை விட கறுத்ததில் வீரியும் அதிகம். அதன் மேல் தோலை மட்டும் எடுத்து, நன்கு இடித்து துணியால் சலித்து எடுத்துக் கொள்ளவும். இதற்கு திருவிருத் சூரணம் என்று பெயர். சிறிது சூரணத்தை முன் சொன்ன கல்யாணகசாரத்துடன் கலந்து நெய்யுடன் சாப்பிட, மலம் நன்கு இளகி வெளியேறும். அதிகம் மலம் போனால், கல்யாணக க்ஷôரத்தை அளவோடு எடுத்து சிறிது மோரில் கலக்கிக் குடித்தால் போதும். வயிற்று வலியும், மலப்போக்கும் மட்டுப்படும்.

வயிற்றில் எரிச்சலுடன் கூடிய பரிணாம சூலையில், பச்சைப் பயறு சிறிது எடுத்து, தண்ணீருடன் வேகவைத்து வடிகட்டி, அந்த நீரை 60 மில்லி முதல் 120 மில்லி வரையில், கல்யாணக க்ஷôரத்தை நெய்யில் குழைத்து நக்கிச் சாப்பிட்ட பிறகு குடிப்பதும், அதன் மேல் உப்பு சேர்க்காத வேக வைத்த அந்தப் பச்சைப் பயறையும் சாப்பிட்டு விட வேண்டும். இதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பரிணாம சூலையும், வயிற்றில் உள்ள எரிச்சலும் குணமாகும்.

பரிணாம சூலையை டுயோடினல் அல்ஸர் உபாதையுடன் ஒப்பிடலாம். அதிகமான பித்த தோஷ சீற்றத்தினால் ஏற்படும் இந்த உபாதையில், அதைக் கட்டுப்படுத்த மென்மையான, எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். பால், நெய், கஞ்சி, சாதம், பாசிப்பயறு சூப், சுரைக்காய், புடலங்காய், வாழைக்காய் போன்ற காய்கறிகள், வாழைப்பழம், மாதுளை ஆகியவை நல்லவை.

காரம், புளிப்பு, வறுத்த உணவுகள், காபி, டீ, மது, புகையிலை ஆகியவை தவிர்க்க வேண்டும். அதிமதுரம், சதாவரீ, நெல்லி, சீந்தில் கொடி மருந்தாகப் பயன்படுத்தலாம். அவிபத்தி சூரணம், சங்க பஸ்மம், விதார்யாதி க்ருதம், அப்ரக பஸ்மம் போன்றவை பித்தத்தைச் சம

நிலைப்படுத்தி புண் ஆற உதவுகின்றன. சரியான நேரத்தில் உணவு, மன அழுத்தம் குறைத்தல், போதிய உறக்கம் ஆகியவையும் சிகிச்சையின் முக்கியப் பகுதிகளாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments