திபெத்திலிருந்து தலாய்லாமா எழுதியிருந்த கடிதத்தை காந்தியடிகளால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை.
இதனால் காந்தியடிகள் தனது தாய்மொழியான குஜராத்தியில் ஒரு கடிதம் எழுதி, தலாய் லாமாவுக்கு அனுப்பிவைத்தார்.
தனது தாய்மொழியில் தலாய் லாமா கடிதம் எழுதியதற்கு, காந்தியடிகளும் தனது தாய்மொழியில் கடிதம் எழுதியது பொருத்தம்தானே..!
எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா சகாப்தத்துக்குப் பின்னர் சொந்தக் குரலில் பாடும் நடிகர்கள் மூவர் இருந்தனர். கே.ஆர்.ராமசாமி, ஜே.பி.சந்திரபாபு, டி.ஆர். மகாலிங்கம் ஆகியோர்தான் அவர்கள்.
1955 ஜனவரி 22-இல் சென்னை தேனாம்பேட்டையில் எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு. கல்வி பயிலும் மாணவிகள் விடுதிக்கு கல்வியமைச்சர் மௌலானா ஆசாத் அடிக்கல் நாட்டினார். 'பெண் கல்வி புறக்கணிக்கப்படக் கூடாது என்பதில் எப்போதும் நேரு உறுதியாக இருக்கிறார்' என்று ஆசாத் அப்போது குறிப்பிட்டார்.
'என்னை நோக்கி வீசப்பட்ட செங்கற்களைப் பிடிப்பது வேறு வழியில்லாத வேலை. ஆனால், பலர் வெட்டி வேலை என்று விமர்சனம் செய்தனர். வலி மிகுந்த நேரத்தை என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டு எதிர்காலத்தின் வரைப்படத்தை இதயத்தில் வரைந்தேன். அந்த வலியால் விழுந்த வியர்வைத் துளிகள் என்னுள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் கொடுத்தன.
கொளுத்தும் வெயிலில் அயராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பக்குவத்தைப் பரிசாய் அளித்தது. நான் சிறந்த கால்பந்தாட்ட வீரனாக வருவது என்று முடிவு எடுத்தததும், ஒவ்வொரு நாளும் 5 மைல் தூரம் மலைப் பகுதியில் ஓடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.
இந்தக் கூடுதல் தகுதியை வளர்த்துகொண்டதால் கால்பந்தாட்டத்தில் என்னால் தனித்தன்மையுடன் விளங்க முடிந்தது. மிகப் பெரிய சாதனையாளராக வளர வேண்டும் என்று விரும்பி விட்டால் குறிக்கோளை நோக்கிக் கடுமையாக உழைக்க வேண்டும். கூடுதல் தகுதிகளை வளர்த்துகொள்ள வேண்டும். சவால்களைச் சந்தர்ப்பங்களாக்கி வெற்றி காண வேண்டும்' என்றார் கால்பந்தாட்ட வீரர் ஜெர்ரிரைஸ்.
தாமஸ் ஆல்வா எடிசன் சிறு வயதில் இருந்தே கேட்கும் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்.
அவர் தனது காதலிக்கு 'மோர்ஸ் கோடை' கற்று தந்தார். அவரும் தகவல் அனுப்பவும் பெறவும் விரைவில் அறிந்துகொண்டார்.
எடிசன் அவரை விரும்புவதை காதலியின் கைகளில் மோர்ஸ் கோடை பயன்படுத்தியே தெரிவித்தார். அவரும் குறியீட்டின் மூலமே சம்மதமும் தெரிவித்தார். இருவரும் திருமணம் செய்துகொண்ட பிறகும் அடிக்கடி அந்தக் குறியீட்டின் மூலமே பேசிக் கொண்டனர்.
ஏதாவது நாடகத்தைப் பார்க்க நேரிடும்போது, மனைவியின் கையைத் தனது முழங்காலில் எடிசன் வைத்துகொள்வார். நடிகர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அவருக்கு, மனைவி 'மோர்ஸ் கோடு' மூலம் தெரிவிப்பார்.
அமெரிக்கர்களின் பத்து பயங்களைப் பட்டியலிட்டனர். அதில், நாய்கள் பத்தாவது இடத்திலும், தனிமை ஒன்பதாவது இடத்திலும், விமானப் பயணம் எட்டாவது இடத்திலும், மரணம் ஏழாவது இடத்திலும், வியாதி ஆறாவது இடத்திலும், ஆழமான நீர்நிலைகள் ஐந்தாவது இடத்திலும், நிதிப் பிரச்னை நான்காவது இடத்திலும், பூச்சிகள் மூன்றாவது இடத்திலும், உயரம் இரண்டாவது இடத்திலும் இருந்தன.
முதலிடத்தில் இருந்தது என்ன தெரியுமா?
மேடையில் பேசுவதுதான்.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
தீரர் சத்தியமூர்த்தியின் சாதனைகளில் முக்கியமானவை இரண்டு. முதலாவது 1927-ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்கள் தடைச் சட்டத்தை தன் வாதத் திறமையால் சத்தியமூர்த்தி தோற்கடித்தார்.
இதையறிந்த காந்திஜி வெகுவாகப் பாராட்டி, 'ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் ஏதேச்சாதிகார, கொடுமையான அடக்குமுறைகளைக் கண்டிக்க நாம் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செல்ல வேண்டிய நிலை வந்தால், நாம் அத்தனை பேரும் அங்கே போக வேண்டியதில்லை. சத்தியமூர்த்தி ஒருவரை அனுப்பிவைத்தாலே போதும்' என்று புகழாரம் சூட்டினார்.
1939-இல் சத்தியமூர்த்தி சென்னை மாநகர மேயரானபோதுதான் பூண்டி குடிநீர்த் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது இரண்டாவது பெரிய சாதனை.
-ஜி.வேலாயுதம், சேலம்.
ஒருமுறை நா.பார்த்தசாரதியின் 'தீபம்' பத்திரிகை அலுவலகத்தில், புதியதாக ஒரு நபர் வேலைக்குச் சேர்ந்தார்.
ஒருநாள் அவரிடம் நா.பா., 'ஏனப்பா உனக்கு சாவே வராதா?' என்று கேட்டார்.
இதை கேட்ட அந்த நபர் அதிர்ச்சி அடைந்தார். 'பாருய்யா.. நீ எழுதிய லட்சணத்தை..' என்று அந்த நபர் எழுதிய கட்டுரையை அவரிடமே நா.பா. அளித்தார்.
அதில், 'ச' என்ற எழுத்துக்குப் பதிலாக, எல்லா இடங்களிலும் 'க' என்றே அந்த நபர் எழுதியிருந்தார். உடனே அந்த நபருக்கு அதிர்ச்சி நீங்கியது.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
ஒருமுறை கி.வா.ஜகந்நாதனுக்கு அன்பர் ஒருவர் தனது இல்லத்தில் அறுசுவை விருந்தை அளித்தார். அதை கி.வா.ஜ. ரசித்து உண்டார். சாப்பாடு முடியும் தருவாயில் விருந்தளித்த அன்பர், 'விருந்து திருப்தியாக இருந்ததா?' என்று பரிவுடன் கேட்டார். 'ஒரேயொரு குறை' என சட்டென்று கி.வா.ஜ. பதிலளித்தார். விருந்து அளித்தவரோ, 'என்ன குறைங்க? இப்போது சொன்னால்கூட குறையை நிவர்த்தி செய்துவிடுகிறேன்' என்றார். 'இந்த அருமையான விருந்தை இன்னும் வேண்டிய அளவு சாப்பிட இறைவன் இன்னொரு வயிறு கொடுக்கவில்லையே என்பதுதான் குறை'
என்றார் கி.வா.ஜ. புன்னகையோடு!
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஜேம்ஸ் ஹைதரிங்டன் என்பவர் 1797-இல் அறிமுகப்படுத்திய புதிய பேஷன் பிரச்னையை உண்டாக்கியது.
லண்டன் தெருவில் அவர் நடந்து சென்றபோது, ஒரு பெரிய கூட்டம் அவரைச் சூழ்ந்தது. அவரைப் பார்த்து நாய்கள் குரைத்தன. சிறுவர்கள் கத்தினார்கள். ஹைதரிங்டன் கைது செய்யப்பட்டார். பொது இடத்தில் சாதாரண மனிதர்களைப் பயமுறுத்தி, அமைதியைக் குலைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
50 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்தக் காலத்தில் அது மிகவும் அதிகத் தொகை. எதை அணிந்து கொண்டு அந்தகைய பிரச்னையை உண்டாக்கினார். ஓர் உயரமான தொப்பியை அவர் முதன்முதலாக அணிந்ததுதான்!
-முக்கிமலை நஞ்சன்
1962-இல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் வெளியான 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இடம்பெற்ற 'சிங்காரவேலனே தேவா..' என்ற பாடல் எஸ்.ஜானகியின் முதல் வெற்றிப் பாடலாக அமைந்தது.
தொழில்நுட்பம் பெரிதும் வளராத அந்தக் காலத்தில் இந்தப் பாடல் இரு இடங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. மும்பையில் இருந்த ஸ்டுடியோவில் எஸ்.ஜானகி பாட, இந்தப் பாடலுடன் இணைந்து ஒலிக்கும் நாகஸ்வர இசையை காருக்குறிச்சி அருணாசலம் சென்னையில் இருக்கும் ஒரு ஸ்டூடியோவில் வாசித்தார். அது இரண்டு டிராக்கில் பதிவு செய்யப்பட்டு, மிக்ஸிங் செய்யப்பட்டது. இந்தப் பாடல் எஸ்.ஜானகியின் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.