எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்
அமெரிக்காவில் 1947-இல் புகழ் பெற்ற பெல் ஆய்வகத்தில் குறை கடத்தியலான முதல் டிரான்சிஸ்டர் வடிவமைக்கப்பட்டவுடன் மின்னணு, தகவல் தொழில்துறையில் ஏற்பட்ட புரட்சி அபாரமானது.
அமெரிக்காவில் 1947-இல் புகழ் பெற்ற பெல் ஆய்வகத்தில் குறை கடத்தியலான முதல் டிரான்சிஸ்டர் வடிவமைக்கப்பட்டவுடன் மின்னணு, தகவல் தொழில்துறையில் ஏற்பட்ட புரட்சி அபாரமானது. அதில் ஒரு பகுதியே எல்.இ.டி.க்களின் (ஒளி உமிழும் டையோடு) தோற்றமும், வளர்ச்சியும்.
தற்போது விளக்குகள், மின்சாதன பொருள்கள், தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்திலும் அவை நிறைந்துள்ளன. ஆனால், குறைகடத்தியலான எல்.இ.டி.க்களுக்கு முன்பே எல்.இ.டி.யைக் கண்டுபிடித்தவர் ரஷிய அறிவியல் அறிஞர் ஒலெக் விளாடிமிரோவிச் லோசெவ்.
இவர் சோவியத் ஒன்றியத்தின் பல்வேறு வானொலி ஆய்வகங்களில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். 1942 நவம்பரில் இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் ஜெர்மானியப் படைகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட்டில் அவர் தனது 39-வது வயதில் பல்லாயிரக்கணக்கானோரோடு உயிரிழந்தார்.
Advertisement
லோசெவ் முறையான கல்வியைப் பெறவில்லை. இருந்தபோதும், இவர் தனது குறுகிய கால ஆராய்ச்சிப் பயணத்தின்போது, ரஷ்ய, பிரிட்டிஷ், ஜெர்மானிய முன்னணி ஆராய்ச்சி இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டதோடு, 16 காப்புரிமைகளைப் பெற்றிருந்தார். திண்ம நிலை குறைகடத்திப் பெருக்கி, 'கிரிஸ்டடைன்' உள்ளிட்ட பல முக்கியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.
ரேடியோ ரிசீவர்களில் பயன்படுத்தப்படும் துத்தநாக ஆக்சைடு, சிலிக்கான் கார்பைடு படிக ரெக்டிஃபையர் டையோடுகளின் வழியே மின்னோட்டம் பாய்ச்சப்பட்டபோது, அவற்றிலிருந்து ஒளி உமிழ்வதை லோசெவ் கவனித்தார். அவர் தனது முதல் கட்டுரையை 'ஒளிரும் கார்போரண்டம் சிலிக்கான் கார்பைடு, படிகங்களைக் கொண்டு கண்டறிதல்' என்ற தலைப்பில் 1927-இல் ரஷியாவின் 'டெலிகிராஃபியா இ டெலிஃபோனியா பெஸ் ப்ரோவோடோவ்' இதழில் வெளியிட்டார். பின்னர் பிரிட்டிஷ், ஜெர்மன் இதழ்களில் அவரது முக்கியமான வெளியீடுகள் தொடர்ந்தன. அவையே எல்.இ.டி. என்ற கண்டுபிடிப்பாக அமைந்தது.
எல்.இ.டி. குறித்து இவர் தனது முதல் ஆய்வுக் கட்டுரையில், ஓர் உலோகக் கம்பிக்கும் சிலிக்கான் கார்பைட் படிகத்துக்கும் இடையிலான புள்ளித் தொடர்பிலிருந்து ஒளி உமிழ்வு தொடங்குவதற்கான மின்னோட்ட வரம்பை நிறுவினார். அந்த ஒளியின் நிறமாலையையும் அவர் பதிவு செய்தார். 1924 - 30-க்கு இடைப்பட்ட காலத்தில் அவர் வெளியிட்ட 16 ஆய்வுக் கட்டுரைகளில் எல்.இ.டி. குறித்து விரிவான ஆய்வை வழங்கியதுடன், அதன் பயன்பாடுகளையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.
இந்த ஒளி உமிழ்வின் ஒளிர் தன்மையை லோசெவ் அறிந்து, அதன் மின்னோட்ட வரம்பை அளவிட்டார். எல்.இ.டி. உமிழ்வானது டையோடு செயல்பாட்டுடன் தொடர்புடையது என்பதை அங்கீகரித்தார். அந்தச் சாதனத்தின் மின்னோட்ட, மின்னழுத்தப் பண்புகளை விரிவாக அளவிட்டார். அந்த ஒளி உமிழ்வின் வெப்பநிலைச் சார்பையும் அவர் ஆய்வு செய்தார். திரவ நைட்ரஜன் வெப்பநிலை வரையிலும் இந்த ஆய்வை அவர் மேற்கொண்டார். அந்தத் தொடர்பில் ஒரு மாறுதிசை மின்னோட்டத்தைச் செலுத்துவதன் மூலம், எல்.இ.டி உமிழ்வை 78.5 கே.ஹெச்.இசட். வரையிலான அதிர்வெண்ணில் அவர் பண்பேற்றம் செய்தார். அவர் எல்.இ.டி. யின் செயல்பாட்டை விளக்க ஐன்ஸ்டீனின் குவாண்டம் கோட்பாட்டைப் பயன்படுத்தி, அந்த உமிழ்வு செயல்முறையை 'தலைகீழ் ஒளிமின் விளைவு' என்று அழைத்தார். பின்னர், அவர் கூடுதலாக உருவாக்கிய சூத்திரமே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.
'குறைகடத்தி பட்டை கோட்பாடு முழுமையாக உருவாக்கப்படவில்லை' என்றபோதிலும், சிலிக்கான் கார்பைடில் ஏற்படும் விளைவை எலக்ட்ரான் டி பிராக்லி பொருள் அலைகளின் விளிம்பு விலகலுடன் தொடர்புபடுத்த லோசெவ்வால் முடிந்தது. 1929-இல் லோசெவ் எல்.இ.டி. நிறமாலைகளின் விரிவான அளவீடுகளை வெளியிட்டார். அவை மின்னோட்டத்தைச் சார்ந்திருப்பதைத் தெளிவாகக் கவனித்தார். நிறமாலை குறுகுவது லேசர் செயல்பாட்டுக்கான சான்று என்ற பின்னோக்குப் பார்வையுடன், இந்தத் தரவை இப்போது பார்ப்பது நம்பமுடியாத அளவுக்கு சுவாரசியமாக உள்ளது. இதன் அடிப்படையில் 1990-களின் தொடக்கத்தில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட முதல் குறிப்பிடத்தக்க நீல நிற எல்.இ.டி.க்கள் சிலிக்கான் கார்பைடைப் பயன்படுத்தின.
தொலைதொடர்புத் துறையில் எல்.இ.டி.யின் ஆற்றலை முதன்முதலில் உணர்ந்தவர் லோசெவ். 1927-இல் தாக்கல் செய்யப்பட்டு, 1929 டிசம்பர் 31-இல் ஒப்புதல் அளிக்கப்பட்ட 'ஒளி அஞ்சல் கருவி' எனும் தலைப்பிலான தனது காப்புரிமை ஆவணத்தின் முன்னுரையில் அவர் எழுதியிருந்தது, 'பண்பேற்றப்பட்ட மின்னோட்டச் சுற்றுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு ஒளி உமிழ்வுத் தொடர்புப் புள்ளியை ஒளிமூலமாகப் பயன்படுத்தி, விரைவான தந்தி, தொலைபேசித் தொடர்பு, படங்களை அனுப்புதல், பிற பயன்பாடுகளுக்காக, ஒளியியல் அஞ்சல் கருவியில் அத்தகைய உணர்வியைப் பயன்படுத்துவதே இந்தக் கண்டுபிடிப்பின் சாராம்சமாகும். அதிகம் அறியப்படாதவராகவும், எவராலும் கொண்டாடப்படாதவராகவும் இருந்தபோதிலும், இதுவே ஒளியியல் தொலைத்தொடர்புப் புரட்சியின் தொடக்கமாக அமைந்திருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
லோசெவ் ராணுவ அலுவலரின் உயர்குடிக் குடும்பத்தில் பிறந்திருந்தார். அத்தகைய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தொழில்முறைப் படிநிலைகளில் முன்னேறுவது அங்கு தடை செய்யப்பட்டிருந்தது. தனது கல்வியை முறைப்படி நிறைவு செய்யாத, தன் சொந்த முயற்சியால் உயர்ந்த ஒரு விஞ்ஞானியான லோசெவுக்கு, 1938-ஆம் ஆண்டில் லோஃபி நிறுவனம் சார்பில், முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அவர் நிஸ்னிய நொவ்கோரோட் வானொலி ஆய்வகத்தில் நாள்களைக் கழித்தார்; பின்னர் அவர் லெனின்கிராட்டுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பல ஆண்டுகள் கடும் இன்னல்களைச் சந்தித்தவுடன், இறுதியில் லெனின்கிராட் மருத்துவ நிறுவனத்தில் எளிய தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்தார்.