FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

அனுபவம் பெரிது...

'பத்து கோடி ரூபாய் ஆர்டர்... எத்தனை முறை பேசியிருப்போம்? எவ்வளவு மெயில் பரிமாறிக்கிட்டிருப்போம்? கடைசி சமயத்தில நீங்க இந்த மாதிரி ஆர்டரை கான்சல் பண்ணறது நல்லாயில்ல...

Updated On : 19 ஜூலை 2026, 4:03 am IST
பகிர்:

'பத்து கோடி ரூபாய் ஆர்டர்... எத்தனை முறை பேசியிருப்போம்? எவ்வளவு மெயில் பரிமாறிக்கிட்டிருப்போம்? கடைசி சமயத்தில நீங்க இந்த மாதிரி ஆர்டரை கான்சல் பண்ணறது நல்லாயில்ல... நம்ம ரெண்டு பேருக்கும் நேரம் மட்டுமில்ல... பணமும் நஷ்டமாகும்...'

கோதாரி போனில் இரைந்து கொண்டிருந்தார். கண்கள் சிவந்திருந்தன. உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. வலது கரம் கைக்குட்டையை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைக்க முற்பட்டது.

'இங்க பாருங்க கோதாரி ! இந்த பிராஜெக்ட் பிரபோசல் நாங்கதான் கொடுத்தோம். ஆனா, எங்களுக்கு இப்ப இந்த பிசினஸ் அக்ரிமெண்ட் சரியா படல. அதனால நாங்களே ரத்து செய்யறோம்.'

Advertisement

Advertisement

'இது நம்பிக்கைத் துரோகம் செய்யற மாதிரி இருக்கு...'

எதிர்முனையில் இருந்த பார்ட்டி கோதாரிக்கு பதில் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்தது.

பத்துக் கோடி ரூபாய் ஆர்டர் கையை விட்டு நழுவியதில் கோதாரிக்கு பெரிய அதிர்ச்சி! மேலும் அந்த பார்ட்டி பேசிய விதமும் கோதாரிக்கு அருவருப்பாக இருந்தது. சற்றே சுதாரித்துக் கொள்ள அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். கையிலிருந்த செல்பேசியை ஆத்திரத்துடன் கீழே விட்டெறிந்தார். ஐபோன்கள் அவருக்குத் துச்சம்.

உதவியாளர் திவாரி பொறுமையாக செல்பேசியை எடுத்து கோதாரியின் மேஜை மேல் வைத்தார். மேலும் அவருக்கு குளிர்ந்த நீர் கொண்டு வந்து தந்து கோதாரியை ஆசுவாசப்படுத்தினார்.

கோதாரி மூச்சு சீராகவிட சிறிது நேரம் ஆனது. திவாரி அருகில் நின்று மெளனமாக கவனித்துக் கொண்டிருந்தார். அவர் பார்த்து வளர்ந்த பிள்ளை. இன்னும் நாற்பதைக் கூடத் தொடவில்லை. ஆனால், இப்போது கோதாரி அவருக்கு எஜமான். மூன்று தலைமுறைகளாக திவாரி ஓர் ஊழியராக அந்தக் குடும்பத்தின் வளர்ச்சியைப் பார்த்து வருகிறார்.

கோதாரியின் தாத்தா காலத்தில் சிறு பையனாக அவர்கள் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்த நினைவு இன்றும் திவாரியிடம் இருந்தது. பின்னர் கோதாரியின் தந்தையார் காலத்தில் அவர் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக நடந்து கொண்டு வளர்ந்திருந்தார். அவரது அகால மரணத்துக்குப் பின் இப்போது பேரன் கோதாரிக்கும் உதவியாளர். திவாரியை ஓய்வெடுக்க கோதாரி அனுமதிக்கவேயில்லை!

முதலில் 'மகனே' என்றுதான் கோதாரியை அன்புடன் அழைத்து வந்தார். கோதாரியின் தகப்பனார் இறந்து அந்த பெரிய சாம்ராஜ்யத்தை கோதாரி எடுத்துக்கொண்டதும் கோதாரியை ' சாஹேப்' என்று மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினார்.

கோதாரி முதலில் அப்படி அழைக்க அவசியம் இல்லை என்று சொன்னாலும், திவாரியின் மனது கேட்கவில்லை. அவரவர்கள் அந்தந்த இடத்தில் இருப்பதுதான் நல்லது என்ற நினைப்பு அவருக்கு எப்போதும் உண்டு ! ஆனால் கோதாரி அவரை 'அங்கிள்' என அழைப்பதை நிறுத்தவில்லை !

'சாஹேப்ஜி ! இப்படிக் கோபப்படறதில அர்த்தம் இல்லை. உங்களுக்கு ஏற்கெனவே இந்த சின்ன வயசிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை பிரச்னைகள் இருக்கு. கொஞ்சம் பொறுமை வேணும். உங்க நல்லதுக்குச் சொல்றேன்...'

கோதாரி மெளனமாகத் தலையாட்டினார். கோதாரியிடம் என்றும் மரியாதை வைத்திருப்பவர்.

' ஃபேக்டரிக்குக் கிளம்பலாம். டிரைவர்கிட்ட சொல்லிடுங்க... அங்க மாதாந்திர மீட்டிங் இருக்கு. நேரத்துக்குப் போகணும்...'

'சரி ! சாஹேப் !'

திவாரி நகரும்போது கம்பெனி ஜெனரல் மேனேஜர் சதீஷ் உள்ளே நுழைந்தார். அவர் முகம் இருண்டிருந்தது.

'என்ன?'

கோதாரியிடம் எரிச்சல்.

'சார்! இந்த மாச ரெவின்யூ இரண்டு பர்சன்டேஜ் குறைஞ்சுப் போச்சு...'

இழுத்து இழுத்துத்தான் கூறினார். அதற்குள் கோதாரியின் சினம் தலைக்கேறியிருந்தது.

'உங்களுக்கெல்லாம் சம்பளம் தந்து எதுக்கு வச்சிருக்கேன்? தூங்கறீங்களா?'

'சார் ! மார்க்கெட் சரிஞ்சுகிட்டே வருது. மத்த கம்பெனிகளுக்கெல்லாம் பத்து பர்சென்ட்க்கு மேல நஷ்டம். நாம கொஞ்சம் பலமா இருக்கிறதால நம்பளை அதிகம் பாதிக்கலை...'

சதீஷ் முதலாளியை உற்சாகப்படுத்த முயன்றார். கோதாரி எந்த விளக்கத்தையும் கேட்கும் நிலைமையில் இல்லை.

'என்ன செய்வீங்களோ... ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. அடுத்த மாசம் நம்மளோட ரெவின்யூ நாலு பர்சென்ட் அதிகமாகியிருக்கணும்...'

ஜெனரல் மேனேஜர் அந்த நடப்புக்கு உதவாத டார்கெட்டைக் கேட்டு சிலையாய் நின்றார். கோதாரி திவாரியுடன் வெளியேறினார்.

கார் பறந்து கொண்டிருந்தது. முன்னால் டிரைவருடன் அந்த சொகுசுக் காரில் திவாரி அமர்ந்திருந்தார். அவர் மடி முழுவதும் ஆபீஸ் ஆவணங்கள். பின்னால் செல்பேசியும் கையுமாக கோதாரி. காரில் அவர் அயர்ந்தோ குட்டித் தூக்கம் போட்டோ திவாரி பார்த்ததில்லை. எப்போதும் பிசினஸ் பற்றிய சிந்தனைதான். கோதாரியின் செல்பேசி ஒலித்தது.

சஞ்சலத்துடன் திவாரி திரும்பிப் பார்த்தார்.

'சொல்லுங்க டாக்டர்...'

கோதாரி செல்பேசியை உயிர்ப்பித்திருந்தார்.

'உங்க மெடிக்கல் ரிபோர்ட் வந்திடுத்து சார் ! உங்க கொலெஸ்டிராலும் எகிறியிருக்கு. கொஞ்சம் மன அழுத்தத்தைக் குறைச்சிக்குங்க. நெய், வெண்ணெய்... இதையெல்லாத்தையும் கம்மி பண்ணிக்கிறது நல்லது. நல்ல வேளை நீங்க சைவம். கொஞ்ச நாள்கள் பார்த்துட்டு வேணும்னா மாத்திரைகள் தரேன்...'

'வேண்டாம்... நீங்க யாரும் எனக்கு இன்னிக்கு நல்ல செய்தியைத் தரக் கூடாதுன்னு கங்கணம் கட்டியிருக்கிற மாதிரி தெரியுது. நான் வேற டாக்டரைப் பார்த்துக்கறேன்...' என்று கோதாரி கூறிவிட்டு, இணைப்பைத் துண்டித்தார்.

திவாரிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. பரிதாபமாக இருந்தது. சாஹேப்க்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்று ஆசை. ஆனால், மரியாதை நாக்கை கட்டிப் போட்டது.

கோதாரியும் இப்போது ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது... சிந்தனையோ...?

நீண்ட நேர மெளனத்துக்குப் பிறகு கோதாரியே மெளனத்தைக் கலைத்தார்.

'நீங்க பத்து வருஷமா எங்கூட இருக்கீங்க... என்னை அறியாம உங்களை மரியாதைக் குறைவா கூட நான் நடத்தியிருக்கலாம். ஆனா உங்ககிட்டேந்து எப்பவும் அமைதியும் லேசான புன்னகையுமே பார்க்கிறேன். முகத்தை தொங்கப் போட்டுக்கூட நான் பார்த்ததில்ல. அது எப்படி உங்களால மட்டும் அப்படி நடந்துக்க முடியறது...?'

'சாஹேப் ! வாழ்க்கையில உண்மை அதாவது நிதர்சனம் என்னன்னு எனக்கு சின்ன வயசிலேயே புரிஞ்சுது. அதற்கான சூழ்நிலையும் கெடைச்சுது. அதற்கு என்னை படைச்சவனுக்கும் பெத்தவங்களுக்கும் நான் தினந்தோறும் நன்றி சொல்லிக்கிட்டிருக்கேன்...'

'அப்படி என்ன உண்மை அது..?'

'மரணம்..... மரணம்... சாஹேப்!'

திவாரி இரண்டு முறை அழுத்திக் கூறினார். கோதாரி திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.

'என்ன சொல்றீங்க...?'

'சாஹேப் ! நான் இளம் பிராயத்தில் காசியில் வளர்ந்தவன். அங்கே கங்கை நதிக்கரையில 'மணிக்கர்ணிகா காட்' - அதாவது 'மணிக்கர்ணிகா படித்துறை' என ஒன்று உண்டு. உள்ளூர்ல, சுத்தியிருக்கிற வெளியூர்ல எவங்களெல்லாம் இறந்து போனாங்களோ அந்த மணிக்கர்ணிகா காட்ல தான் அவங்க உடல்களை எரிப்பாங்க... பணக்காரங்க, ஏழைங்க, பெரிய பதவியில இருந்தவங்க, கூலி செஞ்சு பிழைச்சவங்கன்னு அத்தனை பேரோட சவங்களும் அங்கதான் வரும். அதில பலர் வாழ்க்கையில செருக்கோட இருந்திருக்கலாம்... எளிமையாவும் சாந்தமாவும் நடந்திருக்கலாம்... கோபத்தோட வாழ்ந்திருக்கலாம்... ஆனா, அந்தத் தீயில அவங்க உடல் சாம்பாலாகத்தான் போறது. அங்க எந்த வேறுபாடும் இல்ல. பல நாள் நான் அந்த படித்துறையில் உட்கார்ந்து கவனிச்சிருக்கேன். முதல்ல பயமா இருந்துது. அப்புறம் வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சுது. அந்த சடலங்கள் எரியற காட்சிதான் என் மனசை எந்தச் சூழ்நிலையிலும் ஒரு சமநிலையைக் கொண்டுவரும்...'

'எங்கேயாவது உட்கார்ந்து ஒரு டீயோட பேசலாமா... ? நீங்க முன்னால நான் பின்னால கார்ல உட்கார்ந்து பேசறது அவ்வளவு செளகரியமா இல்ல...'

படபடப்புடன் கூறினாலும் கோதாரி அந்த உரிமையை எடுத்துக்கொண்டது திவாரிக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

டிரைவரை பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஹோட்டலில் நிறுத்தச் சொன்னார்.

'சாஹேப் ! இங்க ஸ்டார் ஹோட்டல் ஒன்னும் பக்கத்தில இல்ல...' என்று டிரைவர் தயங்கியபடியே சொன்னான்.

திவாரி மெளனமாக கோதாரியைத் திரும்பிப் பார்த்தார். அவர், 'அருகில் இருக்கும் எந்த ஹோட்டலும் பரவாயில்லை' என்றார். தைரியமாகச் சொன்னாலும் தயங்கியபடி, கொஞ்சம் தலையைக் குனிந்தபடிதான் கோதாரி அந்த சாதாரண ஹோட்டலில் உள்ளே நுழைந்தார். திவாரி ஹோட்டலின் ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் அவரை அமர வைத்து எதிரில் உட்கார்ந்துகொண்டார். கோதாரிக்கு தினந்தோறும் கோட் சூட் போடும் வழக்கம் இருந்ததில்லை. இளம் தலைமுறை தொழிலதிபதி. அதனால் கொஞ்சம் வசதியாக இருந்தது. டீ கோப்பைகளும் வந்தன.

'நீங்க யார் என்ன என்பதை மறந்திடுங்க... இந்த நிமிஷத்துக்கு வாழணும்... சூடா இருக்கிற டீயை முதல்ல சுவைச்சுப் பாருங்க.'

அப்பவும் கோதாரி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டேதான் டீ கிளாசை வாங்கினார். நல்லவேளை! தெரிந்தவர்கள் எவரும் இல்லை. வீட்டு, ஆபீஸ் டீயை விட அமிர்தமாக இருந்தது. திவாரி தொடர்ந்தார்.

'சாஹேப் ! இந்த வாழ்க்கை பெரும்பாலோருக்கு அறுபது அல்லது எழுபது அல்லது எண்பது வரைக்கும்தான். அதற்குப் பிறகு என்ன... ஒருத்தருக்கும் தெரியாது.

மகாராஜாவா கூடப் பிறக்கலாம். ஆனா, அவங்களும் இறந்தப்பறம் எந்த மண்ணிலேந்து வந்தாங்களோ அந்த மண்ணுக்குள்ள தான் போவாங்க. இறப்புக்கு அப்புறம் எந்த வித்தியாசமும் இல்ல. வாழ்க்கையில கடைசி உண்மை ஒருவரோட மரணம்தான். இந்த உண்மைதான் எனக்கு வாரணாசி மணிக்கர்ணிகா காட்ல புரிஞ்சுது... முப்பது வருஷம் முன்னாடி எனக்கு உங்க வயசுதான் இருக்கும். காசியில மணிக்கர்ணிகா படித்துறையில உட்கார்ந்திருந்தேன். மாலை ஏழு மணி இருக்கும். ஒருபுறம் விளக்கேற்றி சிலர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தார்கள். இன்னொரு புறம் உண்பண்டம், லஸ்ஸி முதல் பூக்கள் வரை விற்பனை தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. ஊர்வலமாக ஒரு சவம் வந்து நின்றது. கூட வந்தவர்களைப் பார்த்தபோது நல்ல பசையுள்ள இடத்திலிருந்து வந்தவர்கள் என்று புரிந்தது. துறையில் 30 வருடங்களுக்கு மேல் இருந்து பல நூறு கோடிகளைச் சம்பாதித்தவர். சொந்த ஊர் பனாரஸ்தான். அன்று காலையில்தான் மரணம்.'

'அப்படியா..?'

'பண்டிதரிடம் வேறு எந்த சுவாரசியமும் இல்லை. நொடிக்கு ஒரு சவம் பார்ப்பவர்.

இறந்தவர் சடலத்தை பண்டிதர் ஒரு முறை நோக்கினார். பின் நெய்க் கிண்ணத்திலிருந்து தாராளமாக நெய்யை வழித்தெடுத்து சடலத்தின் விரலில் தடவினார். வைரங்களுடன் கூடிய விலை உயர்ந்த மோதிரம். அதனைக் கழற்ற அவரது அனுபவ யுக்தி.

'பண்டிதரே! விரலிலேயே இருக்கட்டும். அதோட தகனம் ஆனா பரவாயில்லை. அவர் அதை அதிகம் விரும்பினார்.'

இறந்தவரின் மகன் பண்டிதரைத் தடுக்க முயன்றான். பண்டிதர் அந்தப் பையனைத் திரும்பிப் பார்த்தார்.

'உயிர் போன சடலம் எந்தப் பந்தத்துடனும் போகக் கூடாது. எல்லாப் பற்றுகளையும் நீக்கத்தானே இங்க கொண்டு வந்தீங்க...'

பையனிடம் மெளனம்.

பண்டிதர் மோதிரத்தைக் கழற்றி அந்தப் பையனிடமே கொடுத்தார்.

'மகனே ! 2000 ரூபாய் தகனமா அல்லது 3000 ரூபாய் தகனமா..?'

பையன் புரியாமல் முழித்தான்.

'இரண்டாயிரத்துக்கு தகனத்தில் சாதாரண கட்டைகள் வைப்போம். மூவாயிரத்தில் சந்தனக் கட்டைகளும் இருக்கும். சீக்கிரம் தகனம் ஆகி மேல உடனே போய்ச் சேர்ந்து விடுவார், பல கோடி சொத்துகளுக்கு அதிபர் இறுதியில் ஒரு இரண்டாயிரத்துக்கு அல்லது மூவாயிரத்துக்கும்தான் உலகத்தை விட்டுப் பிரிகிறார். பையனுக்கு அந்த உண்மை ஜீரணமே ஆகவில்லை. பிறப்பில் நம்மளோட அதிர்ஷ்டம், அதாவது பாக்கியம் இருக்கிறது, இறப்பு நமக்கென விதித்த சமயத்தைப் பொறுத்தது. ஆனா, இறப்புக்கு அப்புறம் மத்தவங்களோட மனசில நாம இடம் பிடிக்கறது நம்மளோட கர்மங்களையும் நடந்துக்கிற முறையையும் பொறுத்தது. பிசினஸ்ல லாபம் அதிகமா கிடைக்கலாம். குறைஞ்சும் போகலாம். குறைஞ்சா அதிகமாகாதுங்கிற நியதி எங்கேயும் இல்ல. குறைஞ்சே போனாலும் என்ன தப்பு சாஹேப்..? நாம் உயிரோடு இருக்கோம் இல்லையா ? ஆரோக்கியமா இருக்கோம் இல்லையா ? நமக்கு வாசம் செய்ய வீடு இருக்கு... வீட்டுக்கு மேல கூரை இருக்கு... கூட நம்ல மேல அக்கறையோட குடும்பமும் இருக்கு. நமக்கு நல்லது நினைக்க நண்பர்களும் உறவினர்களும் இருக்காங்க தானே.. ? உண்மையில இது அத்தனையும் இருக்கிற ஒருத்தன் தான் பணக்காரன் சாஹேப்...'

கோதாரி சற்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

'சாஹேப் ! பணம்ங்கிற லட்சுமி நிரந்தர வாசம் எங்கேயும் இருக்காது. இன்னிக்கு வரும். நாளைக்குப் போகும். அதை நினைச்சு வருத்தப்படறதோ மன அழுத்தத்தை அதிகரிச்சிக்கிறதோ அவசியம் இல்லை. அதுக்குன்னு முயற்சி செய்ய வேண்டாம்னு இருக்கவும் கூடாது. ஆனா, பொறுமையும் நிதானமும் அவசியம்...!'

கோதாரியிடம் மெளனம். தேநீரை உறிஞ்சு முடித்தார். முகத்தில் ஒரு தெளிவு...

'ஒத்துக்கிறேன்... நான் ஏதோ வயசுக் கோளாறுல ஏதோ ஒரு மாயையில இருந்துட்டேன். என்னைச் சுத்தி எனக்கு நல்லது நினைக்கிறவங்க இருக்கும்போது நான் எதுக்குக் கவலைப்படணும் ?'

நெகிழ்ச்சியுடனும் ஆதுரத்துடனும் கோதாரி திவாரியின் கரங்களைப் பற்றிக்கொண்டார். என்னைப் பெற்றவர்களுக்குப் பதிலாக நீங்கள் இருக்கிறீர்களே என்று அவர் சொல்வது போல் இருந்தது.

'சாஹேப் ! உங்க வாழ்க்கை முறையைக் கொஞ்சம் மாத்திக்குங்க... நல்லதே நடக்கும்!'

கோதாரி மெளனமாக தலையசைத்தார்.

திவாரியிடமும் ஒரு நெகிழ்ச்சி !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments