FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஆறு தசாப்தங்கள்... நாற்பத்தெட்டாயிரம் பாடல்கள்..!

தென்னிந்திய திரையிசை உலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தன் குயில் குரலால் மொழிகளைக் கடந்து, வயது வித்தியாசமின்றி, கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் எஸ். ஜானகி.

Updated On : 19 ஜூலை 2026, 4:00 am IST
எஸ். ஜானகி
பகிர்:

தென்னிந்திய திரையிசை உலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தன் குயில் குரலால் மொழிகளைக் கடந்து, வயது வித்தியாசமின்றி, கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் எஸ். ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 48 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள அவர் தலைமுறைகளைக் கடந்து, தனது அசாதாரணமான கொஞ்சும் குரலால் ரசிகர்களின் மனங்களை மயக்கியவர்.

1938- ஆம் ஆண்டு ஏப்ரல் 23 -ஆம் தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த எஸ். ஜானகி, சிறு வயது முதலே இசையின் மீது தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார். நாகசுவர வித்வான் பைடிசுவாமியிடம் முறையாக இசை பயின்று, 1957-ஆம் ஆண்டில் 'விதியின் விளையாட்டு' என்ற திரைப்படத்தில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கி, அதே ஆண்டில் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அறிமுகமானார். ஹிந்தி, துளு, செளராஷ்டிரா, சம்ஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடி சாதனை படைத்தவர். மிகக் குறுகிய காலத்திலேயே தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தவர்.

பிறந்தது ஆந்திரம் எனினும், தமிழ்நாட்டை தன் கலையின் பிறந்த வீடாகக் கொண்டு இளையராஜாவின் இசையில் எண்ணற்ற மறக்க முடியாத பாடல்களைப் பாடிய ஜானகி அன்றைய எம். எஸ். வி. முதல் ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் வரை பாடியுள்ளார்.

Advertisement

Advertisement

4 தேசிய விருதுகள், பல்வேறு மாநில அரசின் உயரிய விருதுகள் எனப் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். எனினும், நெற்றியில் வட்டப் பொட்டுடன், கழுத்தை மூடிய ஜாக்கெட்டுகள், எளிய கைத்தறிச் சேலைகள் என எவ்வித பந்தாவும் இன்றி, எளிமையின் சிகரமாகவே இறுதிவரை வாழ்ந்தவர் எஸ். ஜானகி.

திரையுலகில் எத்தனையோ பாடகிகள் வந்து சென்றாலும் எஸ். ஜானகி மட்டும் தனித்தன்மையுடையவராக அறியப்படுவதற்குக் காரணம் அவரின் அசாத்திய குரல் வளம் மட்டுமல்ல; ஒரு கலைஞருக்கு இருக்க வேண்டிய மிக உயரிய பண்பான 'சுயமரியாதை' யுடன் வாழ்ந்து காட்டியதும்தான்.

பத்மபூஷண் விருதை நிராகரித்தவர்: 2013 -ஆம் ஆண்டில் இவருக்கு உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்மபூஷண்' விருதை மத்திய அரசு அறிவித்தது. அந்த விருதை அவர் ஏற்க மறுத்துவிட்டார். 'இந்த விருது 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தென்னிந்தியக் கலைஞர்களை மத்திய அரசு எப்போதும் தாமதமாகவே அங்கீகரிக்கிறது. காலம் கடந்த இந்த விருது எனக்குத் தேவையில்லை. என் ரசிகர்களின் அன்பும், கைதட்டலுமே எனக்குப் போதுமானவை' என்று அவர் விருதை ஏற்க மறுத்த காரணத்தைத் தெரிவித்திருந்தார்.

2013-ஆம் ஆண்டின் பத்ம விருதுகள் பட்டியலில் தென்னிந்தியர்களைவிட வடஇந்தியக் கலைஞர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததையும் அவர் தைரியமாகச் சுட்டிக்காட்டியது அன்று பேசப்பட்டது. மத்திய அரசின் விருதுக்கு முன்பாக தன் சுயமரியாதையை உரக்கச் சொன்ன துணிச்சல், அவரை ஒரு சிறந்த ஆளுமையாகவும் உயர்த்தியது.

கதாபாத்திரத்துக்கும் உணர்வுக்கும் குரல்களை மாற்றியவர்: எஸ். ஜானகியின் குரல் 'கடவுளின் ஸ்பெஷல் வரம்' எனலாம். எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும், எந்த ஓர் உணர்வுக்கும் ஏற்ப தன் குரலை மாற்றிக் கொள்ளும் அசாத்திய வித்தை தெரிந்தவர் என்பதால், இசையமைப்பாளர்களுக்கு அவர் குரல் ஒரு பெரும் வரப்பிரசாதமாகவே இருந்தது.

ஆன்மிகத்தில் உருகிய 'சிங்கார வேலனே தேவா', இளமை பொங்கும் 'செந்தூரப்பூவே...' வில் பதின்ம வயதினரை கனவில் மூழ்க வைத்து, 'டாடி டாடி ஓ மை டாடி...' என மழலையாகக் கொஞ்சி, 'அடி ஆத்தாடி இளமனசு ஒண்ணு...' என்று கிராமத்து ஸ்டைலில் கவர்ந்து, 'நேத்து ராத்திரியம்மா' என ரொமான்ஸ் பாடலிலும் வெளுத்துக் கட்டியவர். இவை இவரது இசைப் பெருங்கடலில் சிறு துளி சான்று. இவரது ஒவ்வொரு பாடல்களும் நம்மை அதற்குள் இழுத்துப் பயணிக்க வைத்து விடும் அற்புதச் சக்தி கொண்டது.

பன்முகக் குரல் வித்தைக்காரராக நாட்டுப்புற பாடல்களுடன் ஆன்மிகம் முதல் மேற்கத்திய பாடல் வரை தனது இசைப் பரிமாணத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருந்த உச்ச காலகட்டத்தில் தனது ஓய்வை அறிவித்து, அதிலும் தனது தனித்தன்மை காட்டியவர்.

இறுதிப் பாடலான 'அம்மா பூவினு...' (2016) என்ற மலையாளப் பாடலோடு, 'நான் நீண்ட காலம் பாடி விட்டேன். எனக்கு இப்போது வயது ஆகிவிட்டது. இனிவரும் காலங்களில் ஓய்வெடுக்கவும், இளைய தலைமுறை கலைஞர்களுக்கு வழிவிடவும் விரும்புகிறேன்' என்று கூறி , அவர் தன் 60 ஆண்டுகால திரையிசை பயணத்திலிருந்து கம்பீரமாக விடைபெற்றார்.

பிற மொழிகளில் பாடும்போது உச்சரிப்பில் எந்தத் தவறும் வந்துவிடக் கூடாது என்பதில் அவர் காட்டிய அக்கறை இளைய தலைமுறையினர் கற்க வேண்டிய பாடம். அவர் பாடிய தாலாட்டுப் பாடல்களால் கண் அயர்ந்தோம். சோகப் பாடல்களால் இதயம் நனைந்தோம். இளமையான துள்ளல் பாடல்களால் உற்சாகமானோம். இந்த கானக்குயிலின் புகழ் பாடல்களால் நிரம்பும் காற்றுள்ள வரை திரையிசை வரலாற்றில் மட்டுமல்ல நமது மனங்களிலும் அழியாமல் நிலைத்திருக்கும்.

ரசிகர்களின் மனங்களில் என்றும் நீங்கா இடம் உண்டு!

ஜானகியுடன் பயணித்தவர்கள் அவரது நினைவலைகளாகக் கூறியவை:

இளையராஜா: சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களை, தாங்க முடியாத துக்கங்களைத் தாங்கி, ஜானகி வாழ்ந்தார். உலக இசையமைப்பாளர்கள், மாமேதைகள் அவர்களுடைய ஒவ்வொருவர் வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் துக்கமானதாக இருந்திருக்கிறது. ஆனால், ஜானகி தன்னுடைய திறமையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை ஒவ்வொரு பாடலிலும் நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறார். கடினமான உழைப்பாளி. என்னுடன் சேர்ந்து விடாப்பிடியாக அவரும் கடின உழைப்பை மேற்கொள்வார். அவருடைய இழப்பு இந்திய திரைப்பட இசை உலகுக்கு மிகப் பெரிய இழப்பு.

பி. சுசீலா: ஜானகி காலமான நாள் என் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள். ஒரு புகழ்பெற்ற சக பாடகியை மட்டுமல்ல, ஒரு நல்ல நண்பரும் சகோதரியுமான ஜானகியை இழந்துவிட்டேன். இசைத் துறையில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை ஒன்றாகக் கழித்த நாங்கள், மொழிகளைக் கடந்து எண்ணற்ற மெலடி பாடல்களையும், அழகான, வாழ்நாளுக்குமான பந்தத்தையும் பகிர்ந்துள்ளோம். லட்சக்கணக்கான மனங்களில் நீ என்றும் வாழ்வாய் என் அன்புக்குரிய ஜானகி.

ரஜினிகாந்த்: தன்னுடைய தேனமுத குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்தவர் ஜானகி.

கமல்ஹாசன்: உங்கள் பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்க முடியாத சோகம் பலருக்கும் இருக்கும்.

வைரமுத்து: கானக் குயிலே காலமானாயா? அரை நூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா? 'சிங்கார வேலனே தேவா...'வில் நாகசுவரத்தை வென்று காட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு? கண்ணதாசன் எழுதி நீ பாடிய பல்லவி கொண்டே புகழ் வணக்கம் செலுத்துகிறேன். தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே... அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே... வாழ்க நீ அம்மா.

விஜய டி.ராஜேந்தர்: ஜானகி அம்மாவின் மறைவு என் நெஞ்சத்தை வாட்டுகிறது. என் பல மெட்டுகளுக்கு குரல் தந்து மெருகேற்றியவர். என் வரிகளுக்கு வாழ்க்கை தந்தவர். 'சம்சார சங்கீதம்' படத்தில் என் மகன் சிம்புவாக 'ஐயம் ஏ லிட்டில் ஸ்டார்...' பாடலைப் பாடி அவனுக்கு வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர்.

தேவா: குரலில் பல பரிமாணங்களைக் காட்டி திரையுலகில் முத்திரை பதித்தவர் ஜானகி. மிகவும் எளிமையானவர். அவர் இல்லை என்றால் பல கலைஞர்கள் வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்த ஜானகி அம்மா, என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

மனோ: இசைக் கலைவாணி ஜானகி எத்தனை மொழிகள், எத்தனை பாடல்கள். அனைத்தும் ஆச்சரியமானவை. என்னைப் போன்று வளர்ந்து வந்த பாடகர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு உற்சாகம் தந்து அரவணைத்திருப்பார். நான் மட்டுமே அவருடன் ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன். அந்த விதத்தில் நான் கொடுத்து வைத்தவன்.

பரத்வாஜ்: உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஜானகிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அவருக்குக் கிடைக்காத அங்கீகாரம் இல்லை. பல மாநில அரசுகளின் விருதுகள், தேசிய விருதுகள் என எல்லாவற்றையும் பார்த்தவர். அவர் புகழ் என்றும் இந்தப் பூமியில் நிலைத்திருக்கும்.

சிம்ரன்: சில குரல்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக என்றென்றும் நிலைத்து விடுகிறது. ஜானகியின் குரலும் அத்தகையதே. அவரது பாடல்கள் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்.

சின்மயி: 23 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜானகியுடன் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் மேடையில் நேரடியாக ஒரு பாடலைப் பாடினார். அதில் அவரின் குரல் ஒரு குழந்தை போலவும், ஒரு பெண் போலவும், ஓர் ஆண் போலவும் ஒலித்தது. நான் மேடைக்குப் பின்னால் இருந்தேன். அந்தப் பாடலை முழுவதுமாகப் பாடுவது அவர்தான் என்று தெரிந்துகொள்ளும் வரை, அந்த ஆண் பாடகர் யார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நான் மிகவும் மதிக்கும் ஒரு பாடகி அவர். ஒருவேளை அங்கே அவர் முருகனுக்கு சிங்கார வேலனாக இருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments