மரக்கன்று நடும் மாணவர்கள் 
தினமணி கதிர்

மரங்களை வெட்டாதீர்கள்!

'சுவாசக் கோளாறுகள் வராமல் இருக்கவும், காற்று மாசுபடாமல் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரியுங்கள்.

சி.வ.சு.ஜெகஜோதி

'சுவாசக் கோளாறுகள் வராமல் இருக்கவும், காற்று மாசுபடாமல் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு பராமரியுங்கள். அது இந்தச் சமூகத்துக்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவை' என்கிறார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பசுமை மேகநாதன்.

இவர் கீழ்க்கதிர்ப்பூரில் அரியவகை மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளர்த்து அவற்றை பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகிறார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட மரங்களை தூரோடு, வேரோடு தன் சொந்த செலவில் அகற்றி, அவற்றை வெவ்வேறு இடங்களில் நட்டு, பராமரித்தும் வருகிறார். மரங்களுக்காகவே வாழும் இவருடன் ஓர் சந்திப்பு:

உங்களுக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி?

எங்கள் ஊரில் மூன்று மேகநாதன்கள் உள்ளனர். நான் மரங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும், அதற்கான அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் 'பசுமை இந்தியா அறக்கட்டளை' எனும் அமைப்பை நடத்துவதால், 'பசுமை மேகநாதன்' என்றே மக்கள் அழைக்கின்றனர்.

மரங்களின் மீது தணியாத காதல் ஏற்பட காரணம்?

நான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தங்கி நுரையீரல் கோளாறு காரணமாக, 2004-இல் சிகிச்சை எடுத்தேன். அப்போது பல நோயாளிகளை விசாரித்தேன்.

இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், தபால்காரர்கள், கணினி பழுது பார்க்க வெளியூர்களுக்குச் செல்பவர்கள், வணிகத் துறையில் இருப்பவர்கள் என பலரும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு புகை, மது பழக்கங்கள் இல்லை.

'காற்றில் நஞ்சு கலந்திருப்பதால்தான் பலருக்கும் நுரையீரல் கோளாறு வந்துள்ளது' என மருத்துவர்கள் கூறினர். இதற்கு மரங்களை அதிகமாக வளர்க்க வேண்டும் என்பதே தீர்வு. அன்று எடுத்த முடிவு இன்று வரை தொடர்கிறது.

மரங்களின் பயன்பாடுகளில் மிக முக்கியமானவை?

மரங்கள் பூமி வெப்பமயமாவதைத் தடுக்கும்.காற்று மாசுபடுவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கும். நிழல் தரும். மழை பொழியும். பறவைகள், குரங்குகள்,புழு, பூச்சிகள் போன்றவற்றுக்கெல்லாம் வாழ்விடமாகவும் இருக்கும். எந்த மரமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு மருத்துவத்துக்குப் பயன்படும். கோயில் கதவுகள், தேர் செய்யவும், வெளவால்கள் இனம் அழியாமலும் பாதுகாக்கும். இலுப்பை மரம், புங்க மரம் ஆக்சிஜன் அதிகமாகத் தரக் கூடியது. வேம்பு, முருங்கை, புரசு உள்பட ஏராளமான மரங்கள் மருத்துவக் குணமுடையது.

தங்களது 'பசுமை இந்தியா அறக்கட்டளை' எவ்வாறு செயல்படுகிறது?

எந்தக் காரணத்துக்காகவும், யாரையும் மரங்களை வெட்ட அனுமதிப்பதில்லை. யாராவது மரங்களை வெட்டப் போவது தெரிய வந்தால் உடனடியாக அவர்களை நேரில் சந்தித்து மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மாற்று நடவடிக்கைகள் செய்யுமாறு வலியுறுத்துகிறோம். எதிர்ப்புகளும் வரும். மரத்தை வெட்ட வேண்டும் என்ற நிலை வரும்போது எங்கள் அறக்கட்டளை செலவில் வேரோடு பறித்து வேறு இடத்தில் நட்டு வைத்து பராமரித்தும் வருகிறோம்.

இதுவரை எத்தனை மரங்கள் வேரோடு பறித்து வேறு இடத்தில் நட்டு வைத்துள்ளீர்கள்?

மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பதும், மரங்களை வேறு இடத்துக்குத் தூரோடு பறித்து வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று நட்டு பாதுகாப்பதும் எங்களின் தலையாய பணியாகும். சாலை விரிவாக்கத்துக்காக 38 மரங்களும்,விளையாட்டு மைதானம்,பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவது என்ற காரணங்களுக்காக 6 மரங்களும் உள்பட மொத்தம் 44 மரங்களைப் பறித்து வேறு இடத்தில் நட்டு வைத்து பராமரித்து வருகிறோம்.

இதுவரை ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். திருப்பருத்திக்குன்றம் என்ற கிராமத்தில் 330 மரக்கன்றுகளை நட்டதில், அவை இன்று அடர்வனமாக இருக்கிறது.

காஞ்சிபுரம் பல்லவன் நகரில் சுமார் 40 ஆண்டுகள் பழமையான மரத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட, நாங்களே கிரேன் மூலம் வேரோடு பறித்து,லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து கீழ்க்கதிர்ப்பூர் கிராமத்தில் நட்டு பராமரித்து வருகிறோம்.

உங்களின் செயல்களுக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது?

பலரும் தாங்களாகவே தன்னார்வத்துடன் வந்து உதவி செய்கிறார்கள். காஞ்சிபுரத்தில் உள்ள மகிழம், பசுமை தேடி, சர்வம் அறக்கட்டளை, காஞ்சி அன்ன சத்திரம், பசுமை காஞ்சி, ரோட்டரி சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும், பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுடனும் இணைந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மரக்கன்றுகள், பனை விதைகள் நடும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இதுதவிர தொழிற்சாலைகள், வீடுகளில் வளர்க்கவும் அவர்களுக்குத் தேவையான மரக்கன்றுகளை இலவசமாக வழங்குகிறோம். 90 % மரக்கன்றுகளை நாங்களே உற்பத்தி செய்தும் மீத 10 % அரியவகை மூலிகை மரக்கன்றுகளை விலைக்கு வாங்கியும் இலவசமாக கொடுக்கிறோம்.

மரக்கன்றுகளை இலவசமாக வாங்கிச் செல்பவர்கள், அதை முறையாகப் பாதுகாக்கிறார்களா?

பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள், ஆகியனவற்றுக்கு மரக்கன்றுகளை வாங்கி செல்கிறார்கள். கொடுக்கும்போது முறையாகப் பாதுகாப்போம் என உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் கொடுக்கிறோம். நாங்களும் நேரம் கிடைக்கும்போது, நேரில் போய் பார்த்து சிறப்பாக வளர ஆலோசனைகளைச் சொல்வதும் உண்டு.

2008- ஆம் ஆண்டு முதல் 41ஏரிகளின் வெளிப்பகுதி கரைகளில் குறைந்தபட்சம் 5 லட்சம் பனை விதைகளை நட்டோம்.

உங்கள் லட்சியம் என்ன?

'மனிதன் பிறக்கும்போது தொட்டில், நடக்க முற்படும்போது நடைவண்டி, திருமணத்துக்குப் பின்னர் கட்டில், வயதான பிறகு ஊன்றுகோல், இறந்த பிறகு மயானத்துக்குத் தூக்கிச் செல்ல பாடை.. என அவனது முதல் இறப்பு வரை அவனது ஒவ்வொரு பருவத்துக்கும் மரங்களே உதவுகின்றன.

மரம் வளர்ப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். செம்மண் எடுத்துகொள்ள அனுமதித்தாலே போதும். நாங்கள் மக்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். தயவு செய்து மரங்களை வெட்டாதீர்கள். தொண்டு நிறுவனங்கள் பலவும் எங்கள் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கியிருக்கின்றன. பசுமை விருதை 2021-இல் தமிழ்நாடு அரசு வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

குஜராத்தில் உருவானது வாக்குத்திருட்டு; 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல்

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

உடைந்த நிலா... ஷ்ருதி ஹாசன்!

சிறிய விஷயங்களின் கடவுள்... சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT