நான் காச நோயால் அவதியுறுகிறேன். தொடர் இருமல், மூச்சிரைப்பு, தலைவலி, நெஞ்சுக்கூடு வலி, சளியுடன் ரத்தக் கசிவு, காய்ச்சல் போன்ற உபாதைகளால் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளேன். இதை எப்படி குணப்படுத்துவது?
-செழியன், சென்னை.
'பைஷஜ்ய ரத்னாவளி' எனும் ஆயுர்வேத நூலில், 'வாஸாவலேஹம்' என்ற ஒரு மருந்தின் தயாரிப்பு முறையை விளக்கி, அதற்கான மருத்துவப் பலன்களைக் குறிக்கும் இடத்தில், நீங்கள் கூறும் பல உபாதைகளுக்கான தீர்வும் காணப்படுகிறது. இதை நம் முன்னோர் எப்படித் தயாரிப்பதுச் சாப்பிட்டனர் என்பதையும் அது எடுத்துரைக்கிறது.
ஆடாதோடை இலைகளின் சாறு, சர்க்கரை, நெய், திப்பிலி சூரணம், தேன் ஆகியவற்றின் கலவைதான் இம்மருந்து.
எழுநூற்று ஐம்பது மில்லி புதிதாகப் பிழிந்தெடுத்த ஆடாதோடையின் இலைச்சாறு, அதில் முன்னூற்று எழுபத்து ஐந்து கிராம் சர்க்கரை, தொன்னூற்று மூன்று கிராம் உருக்கிய நெய்யைக் கலக்கவும். அடுப்பிலேற்றி கனமாக ஆகும் வரை வேக விடவும். அதில் தொன்னூற்று மூன்று கிராம் திப்பிலிப் பொடி கலந்து அடுப்பில் இருந்து இறக்கவும். நன்றாகக் குளிர்ந்தவுடன் அதில் முன்னூற்று எழுபத்து ஐந்து மில்லி தேன் கலந்து, கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
சுமார் பத்து கிராம் அதாவது இரண்டு தேக்கரண்டி அளவு இம்மருந்தை காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு, சிறிது சூடான பால் அல்லது குளிர்ந்த நீர் குடிக்கவும். காச நோயால் ஏற்படும் இருமல், ஆஸ்துமா எனும் மூச்சிரைப்பு, தலைவலி, நெஞ்சுக்கூடு வலி, ரத்தக் கசிவு, காய்ச்சல் போன்றவை குணமாகும் என்று இந்நூலில் காணப்படுகிறது.
உடலெங்கும் வியர்வை வரவழைத்து வாந்தி- பேதி மருந்துகளைக் கொடுத்து உட்புறச் சுத்தம் ஏற்படுத்துதல், மூலிகைகளில் தயாரான வத்திகளைக் கொண்டு மூக்கினுள் புகையிடுதல், குறித்த நேரத்தில் அளவுடன் உணவை உண்ணுதல், அரிசி மற்றும் சிறுதானியங்களாலான கஞ்சியை இளஞ்சூடாகப் பருகுதல், அறுபது நாளில் விளையக் கூடிய நெல் (அரிசி), கோதுமை, பார்லி, பூனைக்காலி விதை, உளுந்து, பச்சைப்பயிறு, கொள்ளு போன்றவற்றால் தயாரான கஞ்சியை வெதுவெதுப்பாகப் பருகுதல், ஆட்டிறைச்சி, கிராமங்களில் வாழக்கூடிய கோழி, பன்றி இறைச்சி போன்றவை சாப்பிட உகந்தது.
சிறிய ஏலக்காய், பசுவின் சிறுநீர், பூண்டு, கடுக்காய், திரிகடுகம் எனும் சுக்கு, மிளகு, திப்பிலி சூரணம், வென்னீர், தேன், நெல் பொரி, பகல் உறக்கம், எளிதில் செரிக்கும் உணவு போன்றவை பயன்படுத்தத் தக்கவை.
தவிர்க்க வேண்டியவைகளில் உடற்பயிற்சி, அடிக்கடி பற்களைத் தேய்தல், வெயிலில் செல்லுதல், துர்நாற்றம் முகருதல், வாய், மூக்கினுள் தூசி செல்லும்படியான செயல்கள், மணற்பரப்பில் அதிக தூரம் நடத்தல், மலச்சிக்கல் ஏற்படுத்தும் தின்பண்டங்கள், உட்புற வறட்சி மற்றும் புழுக்கத்தை ஏற்படுத்தும் கார உணவு வகைகள், வாந்தி, இருமல், ஏப்பம் மற்றும் மலக்கழிவுகளை வெளியேறும் தருவாயில் தடுத்தல், மீன், கிழங்குகள் (உருளை), கடுகுக் கீரை, அதிக உணவு உண்ணுதல் போன்றவை.
உங்கள் உடல்நலம், பிறர் உடல்நலம் காக்க, பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்வதை உறுதியாகக் கடைப்பிடிக்கவும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.