எழுத்தாளர் பி.எஸ்.ராமையா  
தினமணி கதிர்

மணிக்கொடி தந்த மாமணி!

'தமிழ் வளர்த்த சான்றோர்கள்' என்ற சொற்பொழிவு தொடரில் எழுபத்து ஏழாவது நிகழ்ச்சியாக, எழுத்தாளர் பி.எஸ்.ராமையா பற்றிய கலந்துரையாடல் சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர். சபா அரங்கில் நடைபெற்றது.

எஸ்.குரு

'தமிழ் வளர்த்த சான்றோர்கள்' என்ற சொற்பொழிவு தொடரில் எழுபத்து ஏழாவது நிகழ்ச்சியாக, எழுத்தாளர் பி.எஸ்.ராமையா பற்றிய கலந்துரையாடல் சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர். சபா அரங்கில் நடைபெற்றது. பேராசிரியர் வ.வே.சு. மற்றும் ராமையா மகன் மோகன் ராமையா கலந்துரையாடி மணிக்கொடி தந்த மாமணியைப் பற்றி பல சுவையான தகவல்களை வழங்கினர்.

அப்படி என்னதான் மோகன் சொன்னார்:

'ராமையாவை 'சிறுகதை வியாசர்' என்று சொல்வார்கள். ' வாரம் ஒரு சிறுகதை' என்று விகடனில் 52 வாரங்கள் சிறுகதைகளை எழுதிக் குவித்தவர் பி.எஸ்.ராமையா.

மணிக்கொடி ஆசிரியராக வலம் வந்தபோதும், பல சிறுகதைகளை எழுதினார். கிட்டத்தட்ட முன்னூற்று நான்கு சிறுகதைகளை அப்பா எழுதியிருக்கிறார். 'ஆனந்த விகடன்' சிறுகதை போட்டியில் 'மலரும் மணமும்' என்ற அவரது சிறுகதைக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. 'இந்தக் கதைக்கல்லவா முதல் பரிசை கொடுத்திருக்க வேண்டும்' என்று கதையைப் படித்துப் பார்த்த விகடன் வாசகர்கள் சொன்னார்கள்.

மணிக்கொடியில் பல கதாசிரியர்களை ராமையா அறிமுகப்படுத்தினார். சி.சு.செல்லப்பாவின் 'சரசாவின் பொம்மை' எனும் முதல் சிறுகதையை பிரசுரம் செய்தார்.

1932-இல் வ.ரா., ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோர் இணைந்து மணிக்கொடி இதழை ஆரம்பித்தனர்.

பத்திரிகை அச்சாகும் நேரத்தில், பத்து அல்லது பன்னிரண்டு பக்கங்களுக்கு கதை, கட்டுரைகள் தேவைப்படும் என்று சொன்னால், ராமையாவும், கி.ரா.வும் (கி.ராமசந்திரன்) சிறுகதைகளை உடனே எழுதிவிடுவார்கள். இது அசுர சாதனை.

மணிக்கொடி நடத்துவதில் பல சிரமங்கள் இருந்தன. ஒருசமயத்தில் பணப்பற்றாக்குறை வந்தபோது, கி.ரா. தன் மோதிரத்தைக் கழற்றி கொடுத்தார். மௌனி எழுதிய பல சிறுகதைகளுக்குத் தலைப்புகளைக் கொடுத்தவர் ராமையா. மௌனியின் சில கதைகளை திறமையாகத் திருத்தம் செய்தும், அதை பிரசுரம் செய்திருக்கிறார்.

வாழ்க்கையில் அவருக்கு நேர்ந்த அனுபவங்களைச் சிறுகதைகளுக்கு விதைகளாக்கிக் கொண்டார் ராமையா. நினைத்தபோது, நினைத்த இடத்தில், நினைத்தவாறு கதைகளை எழுதிக் குவிக்கும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவரது கற்பனைத் திறன் அபாரமானது. அவருக்கு பிடித்த எழுத்தாளர் புதுமைப்பித்தன்.

'சிற்பியின் நரகம்' என்ற கதையை எழுதியபோது, அதில் வரும் நடராஜ பெருமானை ஓவியர் திட்ட ராமையாவே தாண்டவமாடும் நடராஜரைப் போல் போஸ் கொடுத்தார்.

வீட்டில் யாருமே படிக்க வாய்ப்பு இல்லாத நிலையில், ராமையாவுக்கு மட்டும் படிக்க ஆசை வந்தது. மதுரைக்குச் சென்று உபகாரச் சம்பளம் வாங்கி, வாரச் சாப்பாடு சாப்பிட்டு சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். தனது 12-ஆம் வயதில் தாயை இழந்தார்.

நான்காவது பாரம் படிக்கும்போது, 1921-இல் சென்னைக்கு வந்தார். பிழைப்புக்கு வழி இல்லாமல் மறுபடியும் மதுரைக்குத் திரும்புகையில் திருச்சியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். இந்த வேலையும் ஆறுமாதங்கள்தான்.

அடுத்ததாக, கடலூர் சுங்கச் சாவடியில் கணக்கு எழுதும் வேலையில் மூன்று மாதங்கள் இருந்தார். பின்னர், கடலூரிலேயே மணிலா கடையில் ஐந்து ரூபாய் சம்பளத்தில் சில காலம் பணி.

பின்னர், மீண்டும் சென்னைக்கு வந்து மோட்டார் கம்பெனி, ஆயுர்வேத மருத்துவமனையில் உதவியாளர், ஆர்ய பவனில் சர்வர் என்று பல இடங்களில் ராமையா பணிபுரிந்தார்.

சிறுவயதில் இருந்தே கதை படிக்கும் ஆர்வம் இருந்தது. வடூவூர் துரைசாமி ஐயங்கார், ஜே.ஆர்.ரங்கராஜூ ஆகியோரின் துப்புறியும் நாவல்களைப் படித்து 1924-வாக்கில் தனது 19-ஆம் வயதில் 'கோமளா அல்லது கைலாச ஐயரின் கெடுமதி' என்ற துப்பறியும் நாவலை எழுதிப் பிரபலமானார்.

1930 ஏப்ரல் 13-இல் நடத்தப்பட்ட உப்பு சத்தியாகிரகத்தில் ராமையா பங்கேற்றது அவருடைய வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. கைதாகி சிறையில் இருந்தார். வெளியே வந்தவுடன் அவர் அரசியலில் ஈடுபட்டார்.

1932-இல் 'விதியின் விளையாட்டு' என்ற நாவலை எழுதினார்.

பாரதிதாசனின் 'தமிழுக்கு அமுதென்று பேர்' கவிதையை மணிக்கொடியில் முதன்முதலில் பிரசுரம் செய்தவர் ராமையா. பாரதிதாசன் மீது அபார அன்பு கொண்டவர் ராமையா.

பாரதிதாசன் சென்னைக்கு வரும்போது, மணிக்கொடி அலுவலகத்தில் தன் சக்திக்கும் மீறி செலவு செய்து விருந்து வைத்து அசத்துவார்.

1940 முதல் 1949 வரையில் திரைத் துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் ராமையாவுக்கு கவனம் இல்லை. இவர் கதை- வசனம் எழுதிய 'குபேர குசேலா' ஒரு அற்புதமான படைப்பாகும். இவரது 'போலீஸ்காரன் மகள்' முதலில் மேடை நாடகமாக வடிவெடுத்தது. பின்னர், திரைப்படமாகவும் உருவாகியது.

1949-இல் திரைத் துறையில் இருந்து முழுவதுமாக வெளியேறி, எழுத்துப் பணியைத் தொடங்கினார் ராமையா. 1956 முதல் நாடகத் துறையில் பிரவேசம். இப்படி அரசியல், இலக்கியம், திரைத் துறை, நாடகம் என்று பல துறைகளில் பரிமணித்த ராமையா 1983-ஆம் ஆண்டு மே 18-இல் காலமானார்.

'எழுத்து உயர்ந்ததாக இருக்க வேண்டும். நமது எழுத்தின் மூலம் ஒரு காந்தி மகானையோ அல்லது ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரையோ உருவாக்க முடிந்தால் அந்த எழுத்தே உயர்ந்த எழுத்தாகும்' என்று சொல்வார் ராமையா' என்று மோகன் உருக்கமாகப் பேசினார்.

வ.வே.சு. பேசியது:

'ராமையா எழுதிய 'நட்சத்திரக் குழந்தை' அற்புதமானது. மொட்டை மாடியில் தந்தையும் மகளும் அமர்ந்திருக்க, ' நட்சத்திரங்கள் எப்படி உருவெடுக்கின்றன' என்று சிறுமி கேட்கிறாள்.

உலகில் எந்தவொரு மனிதனும் ஒரு உண்மை பேசும்போது, ஒரு நட்சத்திரம் வானில் தோன்றும் என்கிறார் தந்தை. சற்றுநேரத்துக்குப் பின்னர் ஒரு எரிநட்சத்திரம் வானில் இருந்து இறங்கித் தரையில் விழுகிறது.

'அப்பா.. பூமியில் யாரோ ஒரு பொய் சொல்லிவிட்டார்கள். அதனால் ஒரு நட்சத்திரம் விழுந்துவிட்டது' என்று குழந்தை அழுகிறாள். இதைப் போன்று அபாரத் தன்மை வாய்ந்த பல கதைகளை ராமையா எழுதிக் குவித்திருக்கிறார்.

பெருந்தலைவர் காமராஜர் மீது ராமையா பேரன்பைக் கொண்டவர். சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க ராமையா சென்றபோது, அவரை காமராஜர் அழைத்து கட்டித் தழுவிக் கொண்டார். இதைப் பார்த்த ஒரு காங்கிரஸ்காரர், 'பசுவும் கன்றும் ஒன்றாக இருக்கிறது' என்று சொல்லி மகிழ்ச்சியுற்றார்.

ராமையாவிடம் காமராஜர், 'அரிச்சந்திரனின் கதையை நாடகமாக எழுது. பாலப் பருவத்தில் காந்திஜி அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து எப்போதும் உண்மையே பேச வேண்டும் என உறுதி பூண்டதுபோல் பலரும் மனம் திருந்துவர்' என்பார். ராமையாவின் நல்ல குணங்களைப் பேசிக் கொண்டே செல்லலாம்' என்று வ.வே.சு. பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT