'கொல்கத்தாவின் தெருக்களில் இருந்து இந்தியத் திரைத்துறையின் உச்சத்துக்கு நான் செல்ல நடத்திய பயணத்தை என்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. தெருவிலிருந்து வெள்ளித் திரைக்குச் சென்று புகழையும் பணத்தையும் என்னால் சம்பாதிக்க முடிந்திருக்கிறது என்றால் மற்றவர்களும் இதைச் செய்யலாம்; செய்து காட்டலாம்' என்கிறார் பால்கே சாஹேப் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஹிந்தி - வங்க நடிகர் மிதுன் சக்ரவர்த்தி.
பிரபல இயக்குநர் மிருணாள் சென்னின் 'மிர்கயா' திரைப்படம் வாயிலாக, 1976-இல் அறிமுகமான மிதுன் முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
1982-இல் வெளியான 'டிஸ்கோ டான்சர்' படம் மூலம் சிறப்பாக நடனமாடும் நாயகனாக மின்னிய மிதுன் திரையுலகில் உச்சங்களைத் தொட்டு இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
இந்தப் படம் வெளிநாடுகளிலும் கூட பல நூறு கோடிக்கணக்கான டாலர்களை வசூல் செய்து சாதனை படைத்தது. மொத்தம் 3 தேசிய விருதுகளை சிறந்த நடிகருக்கான மிதுன் பெற்றுள்ளார். 350-க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களிலும், வங்காள மொழி, ஒரியா, போஜ்பூரி திரைப்படங்களிலும் ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் மிதுன் நடித்துள்ளார். 1989-இல் மிதுன் நடித்த 19 திரைப்படங்கள் வெளியானது பாலிவுட்டில் சாதனையாக மாறியது.
இந்திய கிரிக்கெட் லீக்கின் 'ராயல் பெங்கால் டைகர்ஸ்' குழுவின் உரிமையாளர்களில் மிதுனும் ஒருவர் என்பதால், அவர் தொழில் முனைவோராகவும் சிறந்துவிளங்குகிறார்.
மிதுன் புனா நடிப்பு கல்லூரியின் தயாரிப்பு. படங்களில் நடிக்க வருவதற்கு முன் மிதுனுக்கு அன்றைய பிரபல நக்சல் இயக்கத்தினருடன் தோழமையும் இருந்தது.
தமிழில் 'இருவர்' படத்தில் மிதுன் நடிப்பதாக இருந்தது. 'தலைமுடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றால் மிதுன் நடிக்கும் 15 படங்களில் தலைமுடி பிரச்னை உருவாக்கும்' என்பதால் மிதுன் 'இருவர்' படத்தில் நடிக்கவில்லை. ஆனால் 2015-இல் 'யாகாவாராயினும் நா காக்க' தமிழ் படத்தில் மிதுன் நடித்தார்.
'கொல்கத்தாவில் நடைபாதையில் இருந்து வந்த ஒரு சிறுவனுக்கு இப்படி ஒரு கௌரவம் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. மும்பையில் நான் தங்குவதற்கு இடம் கிடைக்காமல், வாடகை தர முடியாமல் தவித்தேன். பூங்காக்களிலும், விடுதிகளுக்கு வெளியிலும் கடைகளுக்கு முன்பும் பல நாள்கள் இரவுகளைக் கழித்துள்ளேன். கடைசியில் என் நண்பர் ஒருவர் 'மாதுங்கா' ஜிம்கானாவில் உறுப்பினராகச் சேர்ந்ததால், அங்குள்ள குளியலறையை நான் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. நான் காலையில் ஜிம்கானா கிளப்புக்கு சென்று தயாராவேன். பின்னர் எனது அடுத்த உணவு அல்லது உறங்கும் இடம் எங்கே என்று தெரியாமல் வீதியில் இறங்குவேன்' என்கிறார் மிதுன் சக்கரவர்த்தி.
தற்போது 72 வயதாகும் மிதுன் குறித்து ஒன்பது நூல்கள் வெளிவந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.