முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இடுப்பு வலி குணமாக?

வெந்தயக் கீரை சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும் என்று என் அம்மா கூறுகிறார். விதை இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் என்றும் கூறுகிறார். ஆயுர்வேதத்தின் கருத்து என்ன?

Updated On : 13 அக்டோபர் 2024, 12:00 am IST
வெந்தயக் கீரை
பகிர்:

வெந்தயக் கீரை சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும் என்று என் அம்மா கூறுகிறார். விதை இடுப்பு நரம்புகளை வலுவாக்கும் என்றும் கூறுகிறார். ஆயுர்வேதத்தின் கருத்து என்ன?

-ராஜேஸ்வரி, சேலம்,.

கீரை இனத்தைச் சேர்ந்த வெந்தயம் மிகவும் பிரசித்தமான உணவுப் பொருள். இதன் இலை கீரையாகச் சுண்டியும் கடைந்தும் உணவாகிறது.

Advertisement

Advertisement

வேக வைத்த வெந்தயக் கீரையுடன் வெந்த துவரம் பருப்பைச் சேர்த்துக் கடைந்து சிறிது உப்பு சேர்த்து உபயோகிக்கலாம். ருசி கூட்ட, புளி சேர்த்து வேகவைத்துக் கூட்டாக்கிக் கொள்வதுமுண்டு. கிராமங்களில் இன்றளவும் கீரையைக் குழம்பிலும் சேர்த்துச் சாப்பிடுகின்றனர். அதிலுள்ள கசப்பைக் குறைக்க பருப்பும் புளியும் உதவும்.

வயிற்றில் ஏற்படும் சூடு காரணமாக, மலம் இறுகி சிறு வலியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவதும் உளைச்சலும் எரிச்சலும் உள்ள நிலையில், வெந்தயக் கீரையை உணவாகச் சமைத்துச் சாப்பிட நல்லது. மலத்தை இளக்கி வெளியேற்றும். குடலில் புண்ணையும் ஆற்றிவிடும். வெந்து போன குடல் உண்டாகும் கடுப்பு வலியைக் குழகுழப்பு காரணமாகக் குறைக்கும்.

உங்களுடைய அம்மா குறிப்பிடுவதுபோல, இடுப்புக்கு நல்ல வலுவைத் தரும் கீரை இது. அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியைப் போக்க, வெந்தயக் கீரையைத் தேங்காய் துருவலுடன் சேர்த்து வேகவைத்துச் சாப்பிட மிகவும் நல்லது. நெய்யிலும் வதக்கிச் சாப்பிடலாம்.

வயிற்று உப்புசம், பித்த கிறுகிறுப்பு, பசியின்மை, ருசியின்மை நீங்க, கீரையை வேகவைத்து எண்ணெய் போட்டு வதக்கிச் சாப்பிடலாம். கபம் உறைந்து வெளியேறாமல் ஏற்படும் வரட்டு இருமல், காங்கை எனும் உட்புறச் சூடு போன்ற உபாதைகளையும் நீக்கும். தேனை வேகவைத்த கீரையுடன் கலந்து நன்கு கடைந்து காலை வேளையில் சாப்பிட்டு வர மலமிளகிப் போகும், குடல் சுத்தமாகும்.

மூல உபாதை, குடலில் புண், மார்பில் வலி போன்ற பிரச்னைகளுக்கு வெந்தயக் கீரை ஏற்ற உணவு. உடல் இளைத்தலவர், உடல் புஷ்டியாகவும், இடுப்பு வலி குணமாகவும், வெந்தயக் கீரையை வதக்கி, அதனுடன் வாதுகைப் பருப்பு, கசகசா, கோதுமைகளை பாலில் அரைத்துக் கலக்கிச் சேர்த்துக் காய்ச்சி நெய்விட்டு கிண்டி உட்கொள்ளவும்.

வெளிப்புறமாகவும் வெந்தயக் கீரையைப் பயன்படுத்தி சில உபாதைகளைக் குணப்படுத்தலாம். உதாரணமாக, கீரையை அரைத்துச் சுடவைத்து மேல் பூச வீக்கம் தணியும், சுட்ட புண்ணும் ஆறும். இதனுடன் சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மேல் மற்றுப் போட அவை பழுத்து சீக்கிரம் உடையும்.

தினமும் சமையலில் வெந்தய விதை கடுகு போல் தாளித்துச் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கும், நரம்புகளுக்கும் நல்ல பலமளிக்கக் கூடியது. இதிலுள்ள குழகுழப்பும் நெய்ப்பும் குடலின் வேகக் காளத்தையும் பரபரப்பையும் குறைக்க உதவும். ஆனால், கீரையைப் போலல்லாமல் விதை மலத்தை இறுக்க உதவக் கூடியது.

பேதியில் தினமும் இரவில் தயிரில் இதை ஊறவைத்து, மறுநாள் காலையில் சிறிது தேன், சர்க்கரை சேர்த்தோ அல்லது தனித்தோ சாப்பிட்டாமல் நல்ல பயன் கிடைக்கும்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.