முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பொது இடங்களுக்கு சென்றால் உடல்நலக் குறைவு ஏன்?

நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்குக் குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது.

Updated On : 19 அக்டோபர், 2024 at 6:30 PM
பகிர்:

மக்கள் அதிகம் கூடும் இடங்களாகிய துணிக்கடை, நகைக் கடை, கடற்கரை, கோயில், பஸ் பயணம், ரயில் பயணம், பள்ளி- கல்லூரிகள் போன்ற பகுதிகளுக்கு நான் செல்ல நேர்ந்தால், மறுநாள் இருமல், ஜலதோஷம், மூச்சிரைப்பு, ருசியின்மை, பசியின்மை, தொண்டையில் சளி கட்டிக் கொண்டு குரல் கம்மி விடுதல் ஆகிய உபாதைகளால் வேதனையடைகிறேன். இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?

-பெருமாள், சென்னை.

நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்குக் குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது. கூட்ட நெரிசலில் பலரும் இருமுவார்கள், தும்முவார்கள், பேசுவார்கள், ஆனால் தனக்கு இவ்வாறு உள்ளதே, மற்றவர்களுக்குத் தன்னால் தொல்லை ஏற்படக் கூடாதே என்று நினைக்காததால் முகக் கவசம் அணிய மாட்டார்கள்.

இதனால் காற்றின் வழியாகப் பரவும் அணுக் கிருமிகள், மற்றவர்களின் மூச்சுக் காற்றுடன் உள்புகுந்து, நுரையீரலைத் தாக்கி, அதன் வெளியேற்றத்துக்கான முயற்சிகளை நீங்கள் குறிப்பிடும் உபாதைகளின் மூலம் செயலாற்ற விழைகிறது.

அதனால் நீங்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, உங்களைத் தற்காத்துகொள்ளும் முயற்சியாக, முகக் கவசம் அணிந்தே செல்லுங்கள். ஒன்றுக்கு இரண்டாகவும் முகக் கவசம் அணிவதும் நல்லதே.

கோரைக்கிழங்கு பத்து கிராம், சுக்கு ஐந்து கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி, அரை லிட்டராக வற்றியதும் வடிகட்டி பிளாஸ்க்கில் ஊற்றி எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லுங்கள். நீர்வேட்கை உள்ள நிலையில், சிறிது அருந்தவும். அணுக்கிருமிகளின் உட்புற நுழைவை இந்த மூலிகை நீரே அழித்துவிடும். சளி சேரவும் அனுமதிக்காது. நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வளர்க்கும்.

நூற்றி இருபது கிராம் மாதுளம் பழத்தோல் (காய்ந்தது), நானூற்றி எண்பது கிராம் வெல்லம், திரிகடுகம் எனும் சுக்கு, மிளகு, திப்பிலி சமமாக எடுத்துப் பொடித்தது நூற்றி எண்பது கிராம் நன்கு பொடித்து, துணியால் சலித்து, பாட்டிலில் பத்திரப்படுத்தவும். அதிலிருந்து மூன்று முதல் ஐந்து சிட்டிகை வீட்டில் இருந்து கிளம்பும்போதும், வீட்டுக்கு வந்தபிறகும் அப்படியே சாப்பிடவும். இதனால் ஏற்படும் நன்மைகள்.

நாக்கில் ருசி கோளங்களைத் திறந்துவிடும்.

பசியைத் தூண்டிவிடும்.

தொண்டையிலுள்ள சளிக்கட்டியை நெகிழ்த்தி, வெளியாக்கி குரலைத் தெளிவாக்கும்.

மூக்கிலிருந்து ஒழுகும் ஜலதோஷம், மூச்சிரைப்பு, இருமல் போன்ற உபாதைகளை நன்கு குணப்படுத்தும். இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.

நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் அனைத்தும் குணமாகும்.

கூட்ட நெரிசலிலிருந்து ஒரு வழியாக விடுபட்டவுடன், பசி உள்ளதோ இல்லையோ பலருக்கும் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதுமாதிரியான மனநிலையில் நீங்கள்

குளிர்பானம், இட்டிலி, தோசை, வடை, தேங்காய் சட்டினி போன்றவற்றைச் சாப்பிடவே கூடாது.

சாப்பிடும் முன் கை, முகம், வாய் ஆகியவற்றை நன்கு கழுவிய பிறகே உணவைச் சாப்பிட வேண்டும். இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை கொண்ட உணவு வகைகளை அறவே தவிர்த்து, காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் உபாதைகள் அனைத்தும் குணமாகும்.

நுரையீரலில் கிருமி அண்டுவதைத் தடுத்து நிறுத்தும் ஹரித்ராகண்டம், வியோஷாதிவடகம் போன்ற ஆயுர்வேத மருந்துகளை மருத்துவர் ஆலோசனையின்படி, சாப்பிட உகந்தது.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

முழு கட்டுரையைப் படிக்க →