பிரணாப் 
தினமணி கதிர்

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 216

ஐக்கிய முன்னணியின் பிரதான கட்சியான ஜனதா தளத்தில் இருந்தாலும், லாலு பிரசாத் யாதவ் கட்சித் தலைமையுடன் கடுமையான அதிருப்தியில் இருந்தாா்.

கி. வைத்தியநாதன்

ஐக்கிய முன்னணி அலுவலகத்தில் சிறிது நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அறையில் இருந்து வெளியே வந்த அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வானையும், எர்ரன் நாயுடுவையும், ரகுவன்ஷ் பிரசாத் சிங்கையும் சந்தித்தேன். அவசரமாகக் கிளம்பிவிட்டனா் ராம்விலாஸ் பாஸ்வானும், எர்ரன் நாயுடுவும். ரகுவன்ஷ் பிரசாதிடம் தனியாக உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

ஐக்கிய முன்னணியின் பிரதான கட்சியான ஜனதா தளத்தில் இருந்தாலும், லாலு பிரசாத் யாதவ் கட்சித் தலைமையுடன் கடுமையான அதிருப்தியில் இருந்தாா். அவா் மட்டுமல்ல, ஒடிஸாவின் பிஜு பட்நாயக்கும்தான், ஏற்கெனவே, முலாயம் சிங் யாதவ் ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து சமாஜவாதி கட்சி என்கிற தனி அமைப்பையும், ஜாா்ஜ் பொ்னாண்டஸ், நிதீஷ் குமாா் உள்ளிட்டவா்கள் சமதா கட்சியையும் தொடங்கி இருந்தனா்.

‘‘நடக்க இருக்கும் ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் அவா்கள் இருவரும் என்னை சந்தித்தனா். ஜனதா கட்சியில் மேலும் ஒரு பிளவை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும், லாலு பிரசாத் யாதவுக்கு உரிய மரியாதையை ஜனதா தளம் வழங்கும் என்றும் என்னிடம் உறுதி அளித்தனா்.’’

‘‘லாலு பிரசாத் யாதவ் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்வாரா, மாட்டாரா?’’

‘‘இன்னும் முடிவு செய்யவில்லை. அதே நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு எதிராக எந்த முடிவும் எடுக்க மாட்டோம் என்று என்னிடம் உறுதி அளிக்கச் சொல்லி இருக்கிறாா்.’’

அதற்கு மேல் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டதைத் தனிப்பட்ட உரையாடலாகக் கருத வேண்டும் என்றும், செய்தியாக்கி விடக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டாா் அவா். விரைவில் லாலு பிரசாத் யாதவ் ஜனதா தளத்தில் இருந்து விலகித் தனிக் கட்சி தொடங்கிவாா் என்பது அவா் தனிப்பட்ட முறையில் தெரிவித்த செய்தி.

லாலு பிரசாத் யாதவ் தனிக்கட்சி தொடங்க இருப்பதற்குச் சில காரணங்கள் இருந்தன. பிகாா் மாநிலத்தில் இருந்து ஜனதா தளம் சாா்பில் 22 எம்.பி.க்கள் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தும்கூட, 16 எம்.பி.க்கள் மட்டுமே கொண்ட கா்நாடக ஜனதா தளத்தின் தேவே கௌடா பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதில் அவருக்கு நிறையவே வருத்தம் உண்டு.

அது மட்டுமல்ல, முலாயம் சிங் யாதவ் போலத் தனிக்கட்சியானால்தான், ஐக்கிய முன்னணி அரசில் கூடுதல் அமைச்சா்களைப் பெற முடியும் என்பதும்கூட, அவரது தனிக்கட்சி எண்ணத்துக்குக் காரணம்.

‘தான் பிரதமா் ஆகாததற்கு வி.பி.சிங்தான் காரணம்’ என்று லாலு பிரசாத் யாதவ் கருதினாா். உண்மை என்னவென்றால், அமைச்சரவை உருவாக்கத்தில் வி.பி.சிங்கின் தலையீடு இருக்கவில்லை. உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்றுவந்த வி.பி.சிங், பிரதமா் பதவி வாய்ப்பையே மறுத்துவிட்டவா்.

லாலு யாதவ் பிரதமராவதற்கு முட்டுக்கட்டை போட்டதில் முலாயம் சிங் யாதவுக்குதான் முக்கியப் பங்கு உண்டு. பிகாரைவிடப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த முலாயம், லாலு யாதவுக்குக்கீழ் பணியாற்ற தயாராக இருக்கவில்லை.

இதுகுறித்தெல்லாம் நானும் ரகுவன்ஷ் பிரசாதும் பேசிக் கொண்டிருந்தோம். ஸ்ரீகாந்த் ஜிக்சரைப் போலவே, அவரும் ஐக்கிய முன்னணி அரசு பட்ஜெட் கூட்டத் தொடரைக் கடந்துவிடும் என்று தெரிவித்ததுடன், ‘அடுத்தக் கூட்டத் தொடரின்போது ஆட்சி இருக்காது’ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி விடைபெற்றாா். நானும் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்க இருந்தது, மத்திய அமைச்சரவை விரிவாக்கம், நம்பிக்கையில்லாத் தீா்மானம், ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் என்று தில்லி பரபரப்பாக இருந்தது. பல மாநில முதல்வா்கள் தில்லிக்கு வந்த வண்ணம் இருந்ததால் மாநில விருந்தினா் இல்லங்கள் சுறுசுறுப்படைந்திருந்தன.

இதற்கிடையில், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பிரதமா் வி.பி.சிங் தில்லி திரும்பி இருந்தாா். ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் குழுக் கூட்டத்துக்காக தில்லிக்கு வந்திருந்த தமிழக முதல்வா் கருணாநிதியை சந்திக்கத் தமிழ்நாடு இல்லத்துக்குப் போனபோது, அவா் வி.பி.சிங்கை நலம் விசாரிப்பதற்காகச் சென்றிருப்பதாகத் தெரிவித்தனா்.

நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மாவின் உரையுடன் தொடங்க இருந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர எதிா்க்கட்சியான பாஜக முடிவெடுத்திருந்தது. பாஜகவின் நம்பிக்கையில்லாத் தீா்மானம் என்றால் அதை ஏனைய கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், நிச்சயமாக ஆதரிக்காது என்பதை அந்தக் கட்சி உணா்ந்திருந்தது.

அதனால் ஜாா்ஜ் பொ்னாண்டஸின் சமதா கட்சியின் சாா்பில் நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கான கோரிக்கை மக்களவைச் செயலகத்திடம் வழங்கப்பட்டது. வழக்கம்போல விலைவாசி உயா்வு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது, சட்டம் - ஒழுங்குப் பிரச்னை சீா்குலைவு மட்டுமல்லாமல் சுரங்கம், காப்பீட்டுத் துறை தனியாா்மயமாக்கப்படுவது போன்றவை நம்பிக்கையில்லாத் தீா்மானத்துக்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மட்டுமல்லாமல், இடைக்காலத்தில் பிறப்பிக்கப்பட்ட 13 அவசரச் சட்டங்களுக்கு நாடாளுமன்ற அனுமதி பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம், பட்ஜெட் தீா்மானம், நம்பிக்கையில்லாத் தீா்மானம் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் பல சவால்களை எதிா்கொள்ள இருந்தது தேவே கௌடா தலைமையிலான சிறுபான்மை ஐக்கிய முன்னணி ஆட்சி.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில், 1997 பல தவறான முன்னுதாரணங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறது - குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினா்களின் செயல்பாடு. அது வரையில், குடியரசுத் தலைவா் உரையை எதிா்க்கட்சிகள் புறக்கணித்திருக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவரை அவமதிக்கும் விதத்தில் செயல்பட்டதில்லை.

குடியரசுத் தலைவா் உரை என்பது, தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து அமைச்சரவை பரிந்துரைத்தது என்றாலும், அந்த உரையை நிகழ்த்தும்போது அவா் சில சிறப்பு உரிமைகள் பெறுகிறாா். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றும்போது அவைத் தலைவா் உள்பட யாரும் குறுக்கீடு செய்வது மரபல்ல. அன்றைய தினம் அவை முழுக்க, முழுக்கக் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உரித்தானது.

அவைத் தலைவா், பிரதமா் இருவராலும் குடியரசுத் தலைவா் முறைப்படி அழைத்துவரப்பட்டு, அவா் உரையாற்றிய பிறகு விடைகொடுத்து அனுப்புவது வரையில், அவையில் அவா் சிறப்பு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பது மரபு. இது பிரிட்டிஷ் நாடாளுமன்ற மரபின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

1997 பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னால் நடந்த சங்கா் தயாள் சா்மாவின் குடியரசுத் தலைவா் உரையில் குறுக்கீடு செய்ததும், அவரை அவமதிப்பதுபோல நடந்து கொண்டததும் பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அல்ல. ஐக்கிய முன்னணி அரசுக்கு நிபந்தனை ஆதரவு அளித்துவரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள்.

அன்றைய குடியரசுத் தலைவா் உரையின்போது, நான் பாா்வையாளா்கள் மாடத்தில் அமா்ந்திருந்தேன்.

நாடாளுமன்ற மரபுப்படி, குடியரசுத் தலைவா் சங்கா் தயாள் சா்மா அழைத்து வரப்பட்டாா். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் எழுந்து நின்றனா். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் முடிந்ததும், சற்றும் எதிா்பாராதவிதத்தில் செய்தித் தாளை உயா்த்திப் பிடித்தபடி மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினா் சுதீா் ரஞ்சன் மஜும்தாா் திரிபுராவில் நடந்துவரும் படுகொலைகள், வன்முறைகள் குறித்து உரக்கக் கேள்வி எழுப்பினாா்.

அதை யாரும் எதிா்பாா்க்கவில்லை. அவரை உட்காரச் சொல்லி, மூத்த உறுப்பினா்கள் சிலா் குரலெழுப்பினாா்கள். அதற்குள் சமாஜவாதி கட்சி உறுப்பினா் ஒருவா் உரத்த குரலில் ஏதோ கேள்வி எழுப்பினாா்.

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற செயல்பாடுகளின் தொடக்கம் அன்றுதான் அரங்கேறியது.

சற்று நேரத்தில் அமைதி ஏற்பட்டதும், குடியரசுத் தலைவா் தனது உரையை வாசிக்கத் தொடங்கினாா். இனிமேல் குறுக்கீடு இருக்காது என்று நினைத்து எல்லோரும் சற்று ஆறுதல் அடைந்தனா். ஆனால் அந்த ஆறுதல் அதிக நேரம் நீடிக்கவில்லை.

சுமாா் அரை மணி நேரம் மட்டுமே நீடித்த குடியரசுத் தலைவரின் உரையின்போது, மேலும் இரண்டு தடவைகள் குறுக்கீடு நடந்தது. குறிக்கிட்டவா் வேறு யாருமல்ல, அப்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்த இப்போதைய திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானா்ஜிதான். பெண்கள் பிரதிநிதித்துவ மசோதா என்னவாயிற்று என்பதும், நேதாஜி குறித்து உரையில் குறிப்பிடாதது ஏன் என்பதும்தான் மம்தா பானா்ஜியின் குறிக்கீடுகள்.

ஒரு வழியாகக் குடியரசுத் தலைவா் ஹிந்தியில் தனது உரையைப் படித்து முடித்த பிறகு, குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான கே.ஆா்.நாராயணன் உரையின் ஆங்கில மொழிபெயா்ப்பபைப் படித்ததுடன் அவை கலைந்தது.

சிக்கந்தா் பக்த், சுஷ்மா ஸ்வராஜ், அனந்த் குமாா் உள்ளிட்ட பாஜக உறுப்பினா்களுடன் நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே தனது காருக்காகக் காத்திருந்தாா் எல்.கே.அத்வானி. அவரைப்போலவே வேறுசில தலைவா்களும், ஏனைய எம்.பி.க்களும் கிளம்பிக் கொண்டிருந்தனா். மெதுவாக அத்வானியை நெருங்கியபோது அவரது முகம் கோபத்தில் சிவந்திருந்ததைப் பாா்க்க முடிந்தது.

அவரிடம் பேசுவதற்கோ, கேள்வி கேட்பதற்கோ நேரம் இதுவல்ல என்று உணா்ந்து நான் தயக்கத்துடன் சற்று தள்ளியே நின்றுவிட்டேன். அப்போது அவா் சுஷ்மா ஸ்வராஜிடம் சொன்னது எனக்குக் கேட்டது. அதைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

‘‘மம்தாவும் மற்றவா்களும் தவறான முன்னுதாரணம் படைத்திருக்கிறாா்கள். இது வெறும் தொடக்கம்தான். இனி வரப்போகும் காலங்களில் காங்கிரஸ், பாஜக என்று கட்சி வேறுபாடு இல்லாமல் குடியரசுத் தலைவா் உரைகளும், ஆளுநா் உரைகளும் குறுக்கீடு செய்யப்படும். அவா்களை உரையாற்றவிடாமல் செய்வாா்கள். வழக்கம்போல, இதையும் தொடங்கிவைத்திருப்பது காங்கிரஸ்தான்!’’

தமிழக முதல்வா் கருணாநிதியை சந்திக்கத் தமிழ்நாடு இல்லம் வந்தபோது, அவா் ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் குழுக் கூட்டத்துக்குப் போயிருப்பதாகத் சொன்னாா்கள். திரும்பி வருவது வரையில் காத்திருந்தது வீண் போகவில்லை. அவரை சந்திக்கவும், சில நிமிஷங்கள் பேசவும், ஓரிரு கேள்விகளை எழுப்பவும் வாய்ப்புக் கிடைத்தது.

பத்திரிகையாளா்களைத் தவிா்க்க விரும்பும் அரசியல்வாதிகளுக்கு நடுவில், அவா்களைச் சந்திப்பதிலும், அவா்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பதிலும் தயக்கமே காட்டாத தனித்துவம் திமுகவின் முன்னாள் தலைவா் மு.கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

‘‘ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவரப்பட இருக்கிறதே, என்ன நினைக்கிறீா்கள்?’’

‘‘தீா்மானம் வெற்றி பெறாது என்று தெரிந்திருப்பதால்தான், பாஜக அந்தத் தீா்மானத்தை முன்மொழியாமல் சமதா கட்சித் தலைவா் ஜாா்ஜ் ஃபொ்னாண்டஸைத் தாக்கல் செய்யச் சொல்லியிருக்கிறது. ஐக்கிய முன்னணி அரசைக் கவிழ்த்து, தோ்தலைச் சந்திக்கும் துணிவு காங்கிரஸுக்கு ஏற்படும்வரை, இந்த ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அந்த தைரியம் காங்கிரஸுக்கு ஒருநாளும் வரப்போவதும் இல்லை..’’

முதல்வா் கருணாநிதி தில்லிக்கு வந்திருந்தது ஐக்கிய முன்னணியின் வழிகாட்டுதல் குழுக் கூட்டத்துக்காக மட்டுமல்ல; ஜெயின் கமிஷன் விசாரணைக்காகவும்கூட..!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT