தனியார் பள்ளி ஆசிரியையாக இருந்த சுதா, சுவையாகத் தயாரிக்கப் பொடிகளைத் தயாரித்து சமைத்துப் பார்த்து வித்தியாசமான சுவையை அடையாளம் கண்டுபிடித்தார். அத்தகைய மசாலா பொடிகளை வீட்டுக்காகத் தயாரிப்பதுடன் நுகர்வோருக்கும் விற்றார். இன்று தொழில் முனைவோராகி, 'இனியா ஆர்கானிக்ஸ்' என்ற நிறுவனத்தையே தொடங்கிவிட்டார்.
வெற்றிப் பயணம் குறித்து அவரிடம் பேசியபோது:
'கரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பரமத்தி எனும் ஊரைச் சேர்ந்தவள் நான். வறுமையான குடும்பம். அதனால் நானும் அக்காவும் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தோம்.
தொடக்கத்தில் படிப்பு சுமார்தான். வகுப்புகளில் தோல்விகள். மனம் வெறுத்தது.
ஆசிரியர்கள் என்னிடம் கரிசனம் காட்டி பாடங்களைச் சொல்லிக் கொடுத்ததால் எப்படியோ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றேன். அக்காவுக்கு திருமணமானவுடன் என்னையும் திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தினர் வற்புறுத்தினர்.
ஆசிரியர் தந்த தூண்டுதலில், எப்படியோ பட்டப் படிப்பு முடிந்து பி.எட். படிப்பையும் முடித்தேன். பின்னர், திருமணமாகி 2011-இல் கோவைக்கு குடிபெயர்ந்தோம். அங்கே ஆசிரியை வேலை பார்க்கத் தொடங்கினேன்.
ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவைத் தயாரிப்பதற்கும் பல்வேறு வழிகளையும் ஆர்வத்துடன் கற்றேன்.
கீரைகளை எனது மகள் சாப்பிடாததால், முருங்கைக் கீரை, புதினா , மல்லி இலைகளில் பொடிகளை செய்து இட்லி, தோசையுடன் சாப்பிட வைத்தேன். விரும்பி சாப்பிட்டாள்.
அந்தத் தைரியத்தில் பொடிவகைகளைத் தயாரித்து, பிறருக்குக் கொடுத்தேன். சுவையாக இருப்பதாகப் பாராட்டினர்.
'இதை ஏன் நீ தொழிலாகச் செய்யக் கூடாது. பொடிகளை வாங்க நாங்க இருக்கிறோம்' என்று நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பெண்கள் உற்சாகப்படுத்தினர். அந்தத் தூண்டுதலே 'இனியா ஆர்கானிக்ஸ்' நிறுவனத்தைத் தொடங்கச் செய்தது.
தொடக்கத்தில் சில பொடிவகைகளைத் தயாரித்தேன். இப்போது 37 வகையான பொடிகள், மசாலாக்கள், ஹெல்த் மிக்ஸ்கள், சூப் பவுடர்கள்களைத் தயாரித்து விற்கிறேன்.
இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளிடம் முருங்கை இலைகள், புதினா, மல்லி இலைகளை வாங்கி உலர வைத்துப் பொடியாக்குகிறேன்.
சுவைக்காகவும் புரதச் சத்துக்காகவும் பருப்பு வகைகளை அளவாகச் சேர்ப்பேன். எனது பொடிகளுக்கு ஆதரவு பெருகப் பெருக பொடிகள் செய்வதை அதிகரிக்க வழிகளைத் தேடினேன். வங்கிக் கடன் பெற்று, 'சோலார் டிரையர்' வாங்கி இலைகளை உலர்த்தத் தொடங்கினேன்.
இயற்கைப் பொருள்களைத் தயாரித்தல், பேக்கிங் செய்தல், சந்தைப்படுத்துதல் குறித்து வழிகாட்டல்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திடமும், சில அமைப்பினரிடமும் கற்றேன்.
கணவரும் வேலையை விட்டுவிட்டு என்னுடன் இணைந்து வேலை செய்கிறார். பல பெண்களுக்கும் வேலைவாய்ப்பை அளிக்கிறேன். எனது தயாரிப்புகள் இயற்கைப் பொருள்கள் விற்பனை அங்காடிகளில், கடைகளிலும், இணையதளத்திலும் கிடைக்கும். கோவையில் ஒரு விற்பனை மையத்தையும் தொடங்கியிருக்கிறேன்' என்கிறார் சுதா.
-
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.