ஜெனரல் சுந்தர்ஜி என்ன சொல்லப் போகிறார் என்பதை எதிர்பார்த்து நாங்கள் எல்லோரும் காத்திருந்தோம். பாதுகாப்புச் செயலர் பட்நாகருக்கு அதிகாரபூர்வக் குறிப்பு அனுப்பினேன் என்று அவர் சொன்னபோது, கூடவே இணையமைச்சர் அருண் சிங்கின் ஒப்புதலுடன் என்றும் அவர் குறிப்பிட்டது என்னைக் கேள்வி எழுப்பத் தூண்டியது.
கபூர்தலா அரச குடும்பத்தைச் சேர்ந்த அருண் சிங், ராஜீவ் காந்தியுடன் டூன் பள்ளியில் படித்தவர். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் இருவரும் கல்லூரித் தோழர்கள். அவர் நேரடியாக அரசியலில் நுழையாத நிலையிலும், சஞ்சய் காந்தியின் அகால மரணத்தைத் தொடர்ந்து ராஜீவ் காந்தியின் அணுக்கத் தோழர்களாக இருந்தவர்கள் உறவினர் அருண் நேருவும், நண்பர் அருண் சிங்கும்தான்.
அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் ராணுவத்தை அனுப்பி, உள்ளே இருந்த பயங்கரவாதிகளை வெளியேற்றும் முடிவுக்கு முதலில் பிரதமர் இந்திரா காந்தியின் ஒப்புதல் இருக்கவில்லை. அந்த முடிவை எடுக்க ராஜீவ் காந்தி மூலம் வற்புறுத்தியவர்கள் அருண் நேருவும், அருண் சிங்கும்தான் என்று ஒருமுறை பிரணாப் முகர்ஜி என்னிடம் தெரிவித்தது நினைவுக்கு
வந்தது.
அமிர்தசரஸ் பொற்கோயில் நடவடிக்கையை முன்னின்று நடத்தியவர் என்கிற முறையில் அருண் சிங்கும், ஜெனரல் சுந்தர்ஜியும் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்கள். சுந்தர்ஜி ராணுவத் தளபதியாகும்போது, நண்பர் அருண் சிங்கை அரசியலுக்கு அழைத்து வந்து பாதுகாப்புத் துறை இணையமைச்சராகவும் தனது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டிருந்தார் ராஜீவ் காந்தி.
'நீங்கள் பட்நாகருக்கும் குறிப்பு அனுப்பியதாகக் குறிப்பிட்டீர்கள். அமைச்சர் அருண் சிங்கிடம் விவாதித்தீர்களா?''
'நிச்சயமாக. அமைச்சருக்குத் தெரியாமல் நான் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வது கிடையாது. அது பிரதமரால் எனக்குத் தரப்பட்டிருந்த நேரடி உத்தரவும்கூட...''
'அமைச்சர் அருண் சிங் என்ன சொன்னார்?''
'ராணுவத்தின் கெளரவத்துக்கோ, நற்பெயருக்கோ களங்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று கருதினால், நான் அது குறித்து நாடாளுமன்றத்தில் பேசத் தயங்கப் போவதில்லை என்று என்னிடம் இணையமைச்சர் அருண் சிங் தெரிவித்தார்.''
'அப்போது கேபினட் அமைச்சராக இருந்தவர் யார்?''
'போஃபர்ஸ் பேச்சுவார்த்தை நடக்கும்போது பிரதமர் ராஜீவ் காந்தியே பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். ஒப்பந்தம் மேற்கொண்ட பிறகு, அந்தத் துறை கே.சி.பந்துக்கு ஒதுக்கப்பட்டது.
எல்லா முக்கியமான முடிவுகளையும், பிரதமர் ராஜீவின் நம்பிக்கைக்குரிய நண்பர் என்பதால் இணையமைச்சர் அருண் சிங்கிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்படி பிரதமர் என்னிடம் கூறியிருந்தார்.''
அதற்குப் பிறகு ஏனைய நிருபர்கள் கேள்விகளைத் தொடுக்கத் தொடங்கியபோது நான் குறிப்பெடுப்பதில் கவனம் செலுத்தினேன்.
'நீங்கள் பாதுகாப்புச் செயலர் பட்நாகருக்குக் குறிப்பு அனுப்பியதற்கு என்ன பதில் கிடைத்தது...?''
'ஏறத்தாழ ஒரு மாதம் அந்தக் குறிப்பு குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. நிர்வாக ரீதியிலான விவாதம் நடக்கும் என்று நானும் பேசாமல் இருந்துவிட்டேன். பாதுகாப்புச் செயலர் பட்நாகர் என்னை சந்திக்க விரும்புவதாக ஒருநாள் தகவல் அனுப்பினார். நான் அவரை சந்தித்தேன்.''
'அவர் என்ன சொன்னார்?''
'போஃபர்ஸ் பேரம் தொடர்பான எனது தயக்கத்தைக் கைவிடச் சொன்னார். அந்தக் குறிப்பைத் திருத்தி எழுதும்படியும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற என்னுடைய பரிந்துரையை திரும்பப் பெறும்படியும் வற்புறுத்தினார். 1987 ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட போஃபர்ஸ் ஹோவிட்சர் பீரங்கி ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களுக்கு பயந்து, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது தேச நலனுக்கும், ராணுவத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படும் என்று என்னிடம் தெரிவித்தார். அதனால் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்வதாக இன்னொரு குறிப்பை அனுப்பும்படி கேட்டுக் கொண்டார்.''
'நீங்கள் என்ன செய்தீர்கள்?''
'அவரிடம் நான் அதிகம் விவாதிக்க விரும்பவில்லை. விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று எனக்குத் தோன்றியது. யோசித்துச் சொல்வதாகக் கூறி விடை பெற்றுக் கொண்டேன். ஆனால் அவர்கள் என்னை விடுவதாக இல்லை.''
'என்ன செய்தார்கள்?''
'அடுத்த நாளே பிரதமர் அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது. விவாதம் எழுந்திருக்கும் சூழ்நிலையில், போஃபர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தால், அதனால் பாதுகாப்பு, நிதி, அரசியல் ரீதியாக எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்று கருத்துத் தெரிவிக்குமாறு பிரதமர் அலுவலகம் கோரியிருந்தது.''
'அவர்கள் ஏன் உங்களிடம் அதுகுறித்து ஆலோசனை கேட்க வேண்டும்? அது அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய முடிவாயிற்றே..''
'என்னை மறுசிந்தனைக்கு உள்படுத்த விரும்பினார்கள். நான் வற்புறுத்தப்படுகிறேன் என்கிற எண்ணம் எனக்கு ஏற்படக் கூடாது என்று நினைத்திருக்கலாம். ஒப்பந்தத்தை ரத்து செய்வதால் தேசப் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று நான் பிரதமர் அலுவலகத்துக்குப் பதில் அனுப்பினேன்.''
'பிரதமர் அலுவலகத்துக்கு பதில் எழுதுவதற்கு முன்னால், நீங்கள் பாதுகாப்பு இணையமைச்சர் அருண் சிங்கை கலந்தாலோசிக்கவில்லையா?'' (கேள்வி எழுப்பியது நான்.)
'நிச்சயமாகக் கலந்தாலோசித்தேன். எனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகல் அவருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. நிதி, அரசியல் ரீதியாக எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அவரும் பிரதமர் அலுவலகத்துக்கு பதில் அனுப்பினார். அதை என்னிடமும் காட்டினார்.''
'உங்களது பதில்களைப் பரிசீலித்த பிரதமர் அலுவலகம், அழைத்துப் பேசவில்லையா?''
'பேசவில்லை என்பது மட்டுமல்ல, நான் தொடர்பு கொள்ள விரும்பி அனுப்பிய கோரிக்கைக்கும் பதில் வரவில்லை. மூன்று வாரங்கள்வரை பிரதமர் அலுவலகத்தில் இருந்து எத்தகைய பதிலும் வராமல், தனது நண்பர் என்ற முறையில்கூட பிரதமர் ராஜீவ் காந்தி தன்னை அழைத்துப் பேசாமலும் இருந்ததால் மிகுந்த வருத்தத்துக்கு ஆளானார் அமைச்சர் அருண் சிங். அவர் அடிக்கடி அருண் நேருவிடம் மட்டும்தான் தொடர்பில் இருந்தார்.''
'எதற்காக?''
'அருண் நேருவும், பிரதமர் ராஜீவ் காந்தியும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாகப் பிரிந்துவிட்டனர். பாதுகாப்புத் துறை இணையமைச்சராக இருந்த அருண் நேரு, அமைச்சரவையில் இருந்து அகற்றப்பட்டிருந்தார். போஃபர்ஸ் விவகாரம் குறித்த முழுமையான உண்மைகளை அவர்தான் அருண் சிங்கிடம் தெரிவித்தார் என்று நினைக்கிறேன்.''
'அருண் சிங் உங்களிடம் இது குறித்து ஏதாவது தெரிவித்தாரா?''
'பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்தவித பதிலும் வராத நிலையில், பதவி விலகப் போவதாகத் தெரிவித்தார். அமைச்சரவையில் இருந்து விலகிய பிறகு என்னை சந்தித்தார்.''
'அந்த சந்திப்பின்போது என்ன சொன்னார்?''
'ஒரே ஒரு மனிதரைக் காப்பாற்ற மூடி மறைக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. தனது குடும்பத்தினரின் பேராசை காரணமாக அவர் மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்றார் அவர்.''
'யார் அந்த ஒரே ஒரு மனிதர்?''
'வேறு யார், பிரதமர் ராஜீவ் காந்திதான். போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கை மூடி மறைத்ததில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அலுவலகத்துக்குத் தொடர்பு இருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மறைந்த ராஜீவ் காந்தியைச் சிக்கலில் இருந்து காப்பாற்றுவதற்காகத்தான் கமிஷன் விவகாரம் மூடி மறைக்கப்படுகிறது என்று என்னிடம் தெரிவித்தார் அருண் சிங்.''
'வேறு எதாவது சொன்னாரா?''
'சொன்னார். பிரதமர் ராஜீவ் காந்தி அவரது குடும்பத்தினரிடம் சிக்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலைக் கைதி என்றும் சொன்னார்.''
'நீங்கள் என்ன சொன்னீர்கள்?''
'நான் எதுவும் சொல்லவில்லை...''
'உங்களை சிபிஐ விசாரிக்கும்போது இதையெல்லாம் சொல்லப் போகிறீர்களா?''
'அவர்கள் கேட்டால் சொல்வேன்.''
பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் நாங்கள் கிளம்பினோம். கடைசி நபராக நான் அவரை அணுகி விடைபெறும்போது, ஜெனரல் சுந்தர்ஜி சொன்ன வார்த்தைகள் இப்போதும் எனது காதில் எதிரொலிக்கின்றன -
'அரசியல் முதிர்சியுடைய ஆர்.வெங்கட்ராமனோ, பிரணாப் முகர்ஜியோ அவருடன் இருந்திருந்தால் ராஜீவ் காந்தி இதுபோன்ற ஒப்பந்தத்தை மேற்கொள்ள அவர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள். அப்படியே மேற்கொண்டிருந்தாலும், சிக்கலில் அவரை மாட்டிவிட்டு இருக்க மாட்டார்கள்...''
இந்த இடத்தில் அருண் சிங் குறித்த சில செய்திகளைச் சொல்ல வேண்டும். போஃபர்ஸ் பேர ஊழல் வெளியானதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு எழத் தொடங்கிவிட்டது. பிரதமர் ராஜீவ் காந்தியின் உறவினர் என்பதாலும், நண்பர் என்பதாலும் மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்ட அருண் நேரு நேரடியாகவே ராஜீவ் காந்தியுடன் கருத்து வேறுபாட்டைத் தெரிவித்தார். அவர் அமைச்சரவையில் இருந்து அகற்றப்பட்டார்.
அருண் நேருவைத் தொடர்ந்து, சட்ட அமைச்சராக இருந்த அசோக் குமார் சென், சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த ஆரிஃப் முகம்மது கான் ஆகியோர் ராஜிநாமா செய்தனர். கடைசியாக, போஃபர்ஸ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்போது நிதியமைச்சராக இருந்த, பாதுகாப்புத் துறை அமைச்சர் வி.பி.சிங்கும் பதவி விலகினார். பதவி விலகிய அனைவருமே, இந்திரா காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து, ராஜீவ் காந்திக்கு மிகமிக நெருக்கமானவர்கள்.
அவர்கள் அனைவரும் ஓர் அணியாக "ஜன் மோர்ச்சா' என்கிற அமைப்பை ஏற்படுத்தி, ஜனதா தளம், பாஜக, இடதுசாரிகள், மாநிலக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கைகோத்து "தேசிய முன்னணி' என்கிற கூட்டணியை அமைக்க முற்பட்டனர்.
கடைசியாக அருண் சிங்கும் தனது இணையமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், அவர் மட்டும் மற்றவர்களுடன் இணையவில்லை. அரசியல் தொடர்பில்லாத அவரை ராஜீவ் காந்திதான் அரசியலுக்கு அழைத்து வந்து, மாநிலங்களவை உறுப்பினராக்கி பாதுகாப்புத் துறை இணையமைச்சராகவும் நியமித்தார். போஃபர்ஸ் பிரச்னையில் ராஜீவ் காந்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்த அருண் சிங், மிகவும் கௌரவமாக அரசியலில் இருந்தே ஒதுங்கி விட்டார்.
பாதுகாப்புத் துறை இணையமைச்சராக இருந்தும், அவரைக் கலந்தாலோசிக்காமலும், அவருக்குத் தெரியாமலும் போஃபர்ஸ் பீரங்கிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்று கூறப்படுகிறது. அவருக்குப் பல உண்மைகள் தெரியும் என்பதால் அவர் மௌனமானாரா அல்லது தனது நண்பர் ராஜீவ் காந்திக்கு மற்றவர்களைப்போல தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததால் மௌனமானாரா என்பது தெரியவில்லை.
ராஜீவ் காந்தியுடனான தனது நட்பு முறிந்தது குறித்து அவர் தெரிவித்த கருத்து இதுதான் -
'போஃபர்ஸ் ஹோவிட்சர் பீரங்கி எங்களது நட்பைத் தகர்த்துவிட்டது!''
எதிர்பார்த்தது போலவே, ஜெனரல் சுந்தர்ஜி
யின் பேட்டி காங்கிரஸ் வட்டாரங்களில்
கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அதற்கு சோனியா காந்தி தரப்பில் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.
காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியைத் தொடர்பு கொண்டபோது, 'இதற்கு சோனியாஜிதான் மறுப்புத் தெரிவிக்க வேண்டும். அவரது அனுமதியோ, வேண்டுகோளோ இல்லாமல் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்க முடியாது'' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
சோனியா காந்தி என்ன சொல்லப் போகிறார் என்பதை காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக்
காத்திருந்தது...
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.