பிரணாப் முகர்ஜி 
தினமணி கதிர்

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 210

சோனியா காந்தியிடம் இருந்தோ, அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்களிடம் இருந்தோ ஜெனரல் சுந்தர்ஜியின் பேட்டிக்கு எந்தவித மறுப்பும் வெளிவரவில்லை.

கி. வைத்தியநாதன்

சோனியா காந்தியிடம் இருந்தோ, அவரது குடும்பத்துக்கு நெருக்கமானவர்களிடம் இருந்தோ ஜெனரல் சுந்தர்ஜியின் பேட்டிக்கு எந்தவித மறுப்பும் வெளிவரவில்லை. அந்தச் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹெச்.ஹனுமந்தப்பா சோனியா காந்தியை சந்தித்தார் என்கிற செய்தி எனக்குக் கிடைத்தது. எனது அதிர்ஷ்டம் அடுத்த நாளே நான் அவரை காங்கிரஸ் தலைமையகத்தில் சந்தித்தேன்.

ஆஸ்கர் ஃபெர்னாண்டஸின் அறையில் அவருக்காகக் காத்திருந்த ஹனுமந்தப்பாவிடம் நான் பேச்சுக் கொடுத்தேன்.

'சோனியா காந்தியை சந்தித்ததற்கு ஏதாவது தனிப்பட்ட காரணம் இருந்ததா?''

'தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. அவர் தனது தனிமையைத் கலைத்து, கட்சியை வழிநடத்த முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காகத்தான் சந்தித்தேன். ராஜீவ்ஜி குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்க எனக்கு அனுமதி வேண்டும் என்று கோரினேன்.''

'ஜெனரல் சுந்தர்ஜி கூறியிருப்பது குறித்து சோனியா காந்தி என்ன சொன்னார்?''

'அவர் எதுவும் சொல்லத் தேவையில்லை. வீண் அவதூறு பரப்புகிறவர்களுக்கு அவர் ஏன் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? 1987-ஆம் ஆண்டு 6-ஆம் தேதி மக்களவையில், 'போஃபர்ஸ் பேரத்தில் தானோ, தனது குடும்பத்தைச் சேர்ந்த யாருமோ எந்தவித சலுகைகளையும் அடையவில்லை' என்று பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.''

'அதைத்தானே இப்போது கேள்வி கேட்கிறார்கள். சுவிட்சர்லாந்திலிருந்து ஆவணங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.''

'ராஜீவ்ஜிக்கும் அவரது நற்பெயருக்கும் ஏற்பட்டிருக்கும் களங்கத்தைப் போக்கி அவர் குற்றமற்றவர் என்பதைக் காங்கிரஸ் கட்சியும், ராஜீவ்ஜியின் சந்ததியினரும் நிரூபிப்போம். இதற்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருக்கிறது...''

'ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகும் அவர்கள் ஏன் சதியில் ஈடுபட வேண்டும்?''

'காரணம் இருக்கிறது. நேரு குடும்பத்தின் மீது எல்லோருக்குமே காழ்ப்புணர்ச்சியும், பயமும் இருக்கிறது. அந்தக் குடும்பத்தின் மீது இந்திய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கையும் தகர்த்துவிடத் துடிக்கிறார்கள். ராஜீவ் காந்தி குடும்பத்தார் அரசியலில் இருந்து விலகிப் போகவும், ராஜீவ் காந்தியின் குடும்பப் புகழுக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கத்திலும் இத்தகைய அவதூறுகள் பரப்பப்படுகின்றன...''

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ் அறைக்குள் நுழைந்துவிட்டார். எங்களது பேச்சை நிறுத்திக் கொண்டோம். நாங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்று விசாரித்தார் ஆஸ்கர்.

'சுந்தர்ஜியின் குற்றச்சாட்டுகள் குறித்தோ, தேவே கெளடா அரசு சிபிஐ மூலம் நடத்தும் விசாரணைகள் குறித்தோ நாம் எதுவும் பேச வேண்டாம் என்று சோனியாஜி நினைக்கிறார். அதனால், ஹனுமந்தப்பா சொல்வதை நீங்கள் செய்தியாக்க வேண்டாம்'' என்று என்னிடம் தெரிவித்தார் ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ்.

நான் தெரிந்து கொள்ள விரும்பிய தகவல் எனக்குக் கிடைத்துவிட்டது. ஹனுமந்தப்பாவின் பேட்டியாக இல்லாமல், எனது கருத்தாகக் கட்டுரையாக்கலாம் என்கிற எண்ணத்தில் அங்கிருந்து நான் விடைபெற்றேன்.

சோனியா காந்தியின் மெளனத்துக்கும் ஒரு முக்கியமான காரணம் இருந்தது என்பது அன்று மாலையில் யு.என்.ஐ. கேன்டீனுக்கு காபி சாப்பிடச் சென்றபோது தெரிந்தது. பத்திரிகையாளர்கள் ஓன்கார் சிங், ராஜீவ் சுக்லா, பிரவீண் கோஸ்லா உள்ளிட்டவர்கள் அங்கே இருந்தனர். அவர்கள்தான் அந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

பிப்ரவரி 18-ஆம் தேதி ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்திக்கும், 'ஆர்டெக்ஸ்' என்கிற நகைக் கடை வைத்திருக்கும் ராபர்ட் வதேராவுக்கும் 10, ஜன்பத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது என்பதுதான் அவர்கள் தெரிவித்த செய்தி. அந்தத் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் தேவையில்லாமல் ஊடக விவாதத்தில் சிக்கிக்கொள்ள சோனியா காந்தி விரும்பாததைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஜனதா தளத்தில் இருந்து ராமகிருஷ்ண ஹெக்டே நீக்கப்பட்டிருந்தார். தான் விலக்கப்பட்டது குறித்தும், புதிய கட்சி தொடங்குவது குறித்தும் தெரிவிக்க, அவர் நிருபர்கள் கூட்டம் நடத்த இருக்கிறார் என்கிற தகவலையும் அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். ஹெக்டேயின் வீட்டைத் தொடர்பு கொண்டபோது, அடுத்த நாள் மாலையில்தான் நிருபர் கூட்டம் என்று தெரிவித்தார்கள்.

அஜீத் சிங்கை சந்தித்தால் பல தகவல்கள் கிடைக்கும் என்று நினைத்து துக்ளக் ரோடிலுள்ள அவரது பங்களாவுக்கு சென்றேன். பார்வையாளர்கள் யாரும் இருக்கவில்லை. அவர் பங்களாவுக்கு பின்புறம் உள்ள புல்வெளியில் அமர்ந்திருந்தார்.

அவர் சொல்லித்தான் இரா.செழியன் தில்லி வந்திருப்பதும், மக்களவையின் முன்னாள் தலைவர் ரபி ரேயின் வீட்டில் தங்கி இருப்பதும் எனக்குத் தெரிய வந்தது. செழியன் வந்திருக்கிறார் என்று தெரிந்த பின்னும் நான் ஏன் அஜீத் சிங்குடன் பேசிக் கொண்டிருக்கப் போகிறேன்? ஆட்டோ பிடித்து ரபி ரேயின் பங்களாவுக்கு விரைந்தேன். அப்போதுதான், எங்கேயோ வெளியில் சென்றுவிட்டு இரா.செழியனும் திரும்பி இருந்தார்.

'ஜனதா தளத்தில் இருந்து விலக நீங்கள் முடிவெடுத்துவிட்டீர்கள் போலிருக்கிறதே...''

'ஹெக்டேவுக்காக நான் ஜனதா தளத்தில் இருந்து விலகவில்லை. நான் கட்சியிலிருந்து விலகி ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தக் கட்சியின் தொடக்க காலத் தலைவர்களில் ஒருவன் நான். கட்சியின் கொள்கைகளை வகுத்ததில் எனக்கும் பங்குண்டு. ஆனால் ஏட்டளவில் அவை இருந்ததால் நான் கட்சியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டேன்.

'கட்சியின் மீது உங்களுக்கு அதிருப்தி ஏற்பட என்ன காரணம்?''

'ஜனநாயகம், அதிகாரப் பரவல் போன்றவற்றை உபதேசிக்கிற ஜனதா தளம், கட்சி நிர்வாகத்திலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அது இல்லாததால் எனக்கு அதிருப்தி ஏற்பட்டது.''

'இனிமேல் மாநிலக் கட்சிகளுக்குத்தான் எதிர்காலம், தேசியக் கட்சிகளின் தேவை முடிந்துவிட்டது என்று திமுகவினர் கூறுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

'அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போதுகூட, தேசிய கட்சிகள்தான் 80% வாக்குகள் பெற்றிருக்கின்றன. மாநிலக் கட்சிகள் வென்றிருக்கும் இடங்கள் காரணமாகவும், தேசிய கட்சிகளின் செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்பட்டிருப்பதாலும் அப்படியொரு தோற்றம் காணப்படுகிறது. தேசியக் கட்சிகள் இல்லாத இந்தியா என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை.''

'இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் கருதவில்லையா?''

'மத்தியில் கூட்டாட்சி நிலவினாலும், பெரும்பாலான மாநிலப் பிரச்னைகள் தேசிய அளவில்தான் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதுதான் நிலைமை. மாநில உரிமைகளை மதிக்கும் கூட்டாட்சி முறை அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. மக்கள் பிரச்னைகளில் தேசியக் கட்சிகள் கவனம் செலுத்தாததாலும், மாநில உணர்வுகளை மதிக்காததாலும் மாநிலக் கட்சிகள் தலையெடுத்தன.''

'ஹெக்டே தலைமையில் அமைய இருக்கும் கட்சி எந்த விதத்தில் வித்தியாசமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''

'உள்கட்சி ஜனநாயகத்தைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கும். தேர்தலில் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து, மாநிலத் தலைவர் நியமனம்வரை மத்திய அமைப்பின் தலையீடு தவிர்க்கப்படும். கூட்டாட்சி முறையில் கட்சியும் செயல்படும்.''

இந்தியாவின் பிரதமராக இருப்பதற்குத் தகுதியான தலைவர்கள் ராமகிருஷ்ண ஹெக்டேவும், ஜோதிபாசுவும்தான் என்று தெரிவித்தார் இரா.செழியன். பிரதமர் தேவே கெளடாவின் வற்புறுத்தல் காரணமாக ராமகிருஷ்ண ஹெக்டே ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்குப் புறம்பான செயல் என்றும் சொன்னார் அவர்.

ஏனைய முன்னணி நாளிதழ்கள், செய்தி நிறுவனங்களை முந்திக்கொண்டு, ஹெக்டேயின் 'லோக் சக்தி' கட்சி குறித்து வெளியான முதல் பேட்டி என்னுடையதாகத்தான் இருந்தது. அடுத்த நாள் ஹெக்டே நடத்திய செய்தியாளர் சந்திப்புக்கு அடித்தளமாக அமைந்தது எனது இரா.செழியன் பேட்டி.

எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்தது பிரியங்கா - ராபர்ட் வதேரா திருமணம். மிகவும் நெருக்கமான சிலர் மட்டும்தான் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். 10, ஜன்பத் விழாக்கோலம் பூண்டிருந்தது என்றாலும், எந்தவித பகட்டோ ஆடம்பரமோ காணப்படவில்லை.

அன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட சிலரிடம் இருந்து, அந்தத் திருமணம் குறித்து நான் கேட்டுத் தெரிந்துகொண்ட தகவல்களை எல்லாம் எனது டைரியில் குறித்து வைத்திருக்கிறேன். தகவல் பதிவாக இருக்கட்டும் என்பதற்காக அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ராபர்ட் வதேரா கிறிஸ்தவர் என்றாலும்கூட, பிரியங்கா - ராபர்ட் திருமணம் ஹிந்து முறைப்படி 10, ஜன்பத் இல்லத்தில் 1997 பிப்ரவரி18-ஆம் தேதி நடந்தது. ஹோமம் வளர்த்து, பத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட் பிரிவைச் சேர்ந்த பிராமணப் புரோகிதர்களால் திருமணச் சடங்குகள் நடத்தப்பட்டன.

ராபர்ட் வதேராவின் தந்தை ராஜேந்திர வதேராவும், தாயார் மெளரீன் வதேராவும் வந்திருந்தனர். திருமணச் சடங்குகள் முடிந்ததும் ராபர்ட்டும், பிரியங்காவும் அவர்களது காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர்.

பின் மாலைப் பொழுதில் நடந்த திருமணத்தைத் தொடந்து விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இந்திய, இத்தாலிய வகை உணவுகள் இடம் பெற்றிருந்தன. தாவர, புலால் உணவு வகைககள் பரிமாறப்பட்டன.

திருமணத்துக்குப் பிறகு, விருந்து முடிந்தபின், ராபர்ட் வதேராவின் நியூ ஃபிரண்ட்ஸ் காலனி வீட்டுக்குத் தம்பதிகள் கிளம்பினார்கள். அவர்களைக் கொண்டுவிட ராகுல் காந்தியும் அந்தக் காரில் இணைந்து கொண்டார்.

மணமக்கள் காரில் ஏறிய பிறகு, வடநாட்டு வழக்கப்படி கூடியிருந்தவர்கள் அந்தக் காரைத் தள்ளி ஆரவாரத்துடன் வழியனுப்பினார்கள்.

திருமணம் நடந்த அன்று 10, ஜன்பத் இல்லத்தின் எல்லா அறைகளிலும் ராஜீவ் காந்தியின் விதவிதமான புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. தனது மகளின் திருமணத்தை நேரில் பார்க்க முடியாத ராஜீவ், புகைப்படமாக இருந்து கண்டுகளிக்க வேண்டும் என்று சோனியா காந்தி விரும்பியதாகச் சொன்னார்கள்.

அடுத்த சில நாள்களில் ராபர்ட்டும், பிரியங்காவும் தேநிலவுக்கு வெளிநாடு செல்ல இருந்தனர். அவர்கள் திரும்பி வந்தால் தங்குவதற்கு, 35, லோதி எஸ்டேட் பங்களாவை அரசு ஒதுக்கி இருந்தது. அதில் தேவையான மாற்றங்களையும், பழுதுபார்ப்புகளையும் மத்திய பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டனர்.

மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே திருமண நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பிரதமர் தேவே கெளடா, காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, தனது மனைவி ஜெயா பச்சனுடன் அமிதாப் பச்சன், கேப்டன் சதீஷ் சர்மாவும் மனைவியும், உறவினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஷீலா கெளல் குடும்பத்துடன், பம்பாயில் இருந்து ஃபெரோஸ் காந்தி குடும்பத்தினர், இத்தாலியில் இருந்து சோனியா காந்தியின் தாயார், சகோதரி, மாமா உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மிக முக்கியமான குடும்ப உறுப்பினர் ஒருவர் அழைக்கப்பட்டிருக்கவில்லை. அதைப்பற்றி யாரும் பேசவில்லை என்றாலும், அந்த விடுபடல் எல்லோர் மனத்திலும் கேள்விக் குறியாகத் தொக்கி நின்றது...!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT