முகப்பு
தினமணி கதிர்

மிஸ்டர் பாரத்...

'இந்தியா' என்று சொல்லாமல் 'பாரத்' என்று சகஜமாக தனது படங்களில் 1960-களில் இருந்து கடைசி வரையில் பயன்படுத்தி வந்தவர் நடிகர் மனோஜ்குமார்.

Updated On : 13 ஏப்ரல், 2025 at 12:06 AM
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2025 at 6:58 PM

'இந்தியா' என்று சொல்லாமல் 'பாரத்' என்று சகஜமாக தனது படங்களில் 1960-களில் இருந்து கடைசி வரையில் பயன்படுத்தி வந்தவர் நடிகர் மனோஜ்குமார்.

இவரது படங்களில் நாட்டுப்பற்று அடித்தளமாக அமைந்திருப்பதோடு, பெரும்பாலான படங்களின் கதாநாயகர்களின் பெயரும் பாரத் என்பதே அமையும். சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் வாழ்க்கையை அவர் படமாக்க, மிகச் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது.

பிரிக்கப்படாத இந்தியாவின் அப்போதாபாத் (இப்போது வடக்கு பாகிஸ்தான்) நகரத்தில் பிறந்த ஹரிகிருஷ்ணன் கோஸ்வாமி. இவரது குடும்பம் இந்தியா பாகிஸ்தான் என பிரிந்தபோது, தில்லி அகதிகள் முகாமில் வாழ்க்கையைத் தொடங்கியது.

Advertisement

கோஸ்வாமியின் அப்பாவுக்கு அன்றைய பிரபல கவிஞர் அல்லாமா இக்பாலின் நெருங்கிய நட்பும் கிடைத்தது. கோஸ்வாமி தில்லியில் பட்டம் படிக்கும் போது நடிகர் திலீப்குமார் நடித்து வெளியான 'ஜுக்னு' படம் பார்த்தார்.

இதனால், 'எப்படியாவது நடிகராக வேண்டும்' என்ற தீர்மானத்துடன் கோஸ்வாமி மும்பைக்கு வந்து சேர்ந்து, தெருவோரம் தூங்கி திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். இரவில் காவலர்கள் அடித்து துரத்தியதும் உண்டு. வாழ்க்கைப் போராட்டத்தில் வென்று, கோஸ்வாமி நடிகராக 1957இல் 'ஃபேஷன்' படத்தில் அறிமுகமானார்.

Updated On : 12 ஏப்ரல், 2025 at 6:58 PM

தனக்குப் பிடித்த நடிகர் திலீப் குமார் 'ஷப்னம்' படத்தில் 'மனோஜ்குமார்' என்ற பாத்திரத்தில் நடித்திருந்ததால், கோஸ்வாமி, தனது பெயரை 'மனோஜ்குமார்' என மாற்றிக் கொண்டார். 1961இல் 'கான்ச் கி குடியா' படத்தில் கதாநாயகன் ஆனார். மனோஜ்குமார் நடித்த 'ஹரியாலி அவுர் ராஸ்தா' சூப்பர் ஹிட் படமானதைத் தொடர்ந்து வாய்ப்புகள் மனோஜ்குமாருக்குக் கிடைத்தன.

'விவசாயம், கூட்டுக் குடும்பம் குறித்து படம் தயாரியுங்கள்' என்று அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கேட்டுக் கொள்ள மனோஜ்குமார் அதற்கான கதையைத் தேடினார். அப்போது தமிழில் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்து வெளியான 'பழநி' படம் குறித்து மனோஜுக்குத் தெரிய வர, அந்தப் பட உரிமையை வாங்கி, கொஞ்சம் மாற்றம் செய்து 'உப்கார்' எனும் படத்தை கிராமப்புறத்தில் தயாரித்து இயக்கி வெளியிட்டார். 'உப்கார்' அமோக வெற்றி பெற்றது.

'கிராமங்கள் இந்தியாவின் உயிர்நாடி' என்றும் கிராமங்களின் முக்கியம் குறித்தும் வர்ணிக்கும் 'மேரே தேஷ் கி தர்த்தி..' பாடலுக்கு இணையான பாடல் இன்றைக்கும் வரவில்லை என்றே சொல்லலாம். அவ்வளவு பொருள் பொதிந்தது.

நடிகராக இருந்த மனோஜ் குமார் தயாரிப்பாளர், இயக்குநர், திரைக்கதையாளர், பாடலாசிரியராகவும் இருந்தார். ஊழல் குறித்து மனோஜ் தயாரித்த 'ரோட்டி கப்டா அவுர் மகான்' இன்றும் பேசப்படும் படம். அவரது கடைசி வெற்றிப் படமாக 'கிராந்தி' 1981இல் வெளியானது. திலீப்குமார், ஹேமமாலினி, மனோஜ்குமார் ஆகிய மூவரின் நடிப்பு பலராலும் போற்றப்பட்டன.

'ஷோர்' என்ற படம் ஜெயா பாதுரியின் நடிப்புடன் வெளியானது. மகனின் காது கேளாமையைப் போக்க எடுக்கும் முயற்சியே படத்தின் கதை. தமிழில் 'ஓசை' என்று தயாரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.