என் பால்ய சினேகிதர் பழ.கருப்பையா நான் சென்னையில் வாழ்வதற்குப் பெரும் உதவியாக மாதம் எனக்கு 75 ரூபாய் மணியார்டரில் அனுப்பி வைப்பார். அப்போது நான் 52, பெரிய தெரு, திருவல்லிக்கேணியில் மாதம் 75 ரூபாய் வாடகைக்கு இரண்டு பேர் தங்கும் அறையில் தங்கி இருந்தேன்.
அப்போது சட்டக் கல்லூரியில் படிக்க வந்த ரகுபதி என்னுடன் தங்கினார். என் அறை நண்பராக மூன்றாண்டு காலம் இருந்த ரகுபதியை என் நாடகங்களுக்கு கூட்டிச் செல்வது பழக்கம். அன்று கன்வேயன்சாக 10 ரூபாய் எல்லோருக்கும் தருவார்கள். அதை ரகுபதிக்கும் வாங்கி கொடுப்பேன். அந்த ரகுபதி வேறு யாரும் இல்லை. இன்றைய சட்டத்துறை அமைச்சர்தான். என்னை அண்ணன் என்பார்.
அந்த நேரம் நடிகர் ஸ்ரீகாந்தின் நண்பராக இருந்த பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனை சந்திப்பேன். அவர் ஆழ்வார்பேட்டை பஸ் ஸ்டாப்பில் நின்று பஸ்ஸில் ஏறுவார். நான் 'கார் இருக்கிறதே ஏன் பஸ்ஸில் போக வேண்டும்' என்று கேட்டேன். அதற்கு அவர் 'பஸ்ஸில் போனால் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கலாம். காரில் போனால் ட்ராபிக் போலீஸைத்தான் பார்க்க முடியும்' என்று சொன்னார்.
அவர் பத்திரிகை உலகில் இருந்து திரைத்துறைக்கு எடுத்த படம் அவர் எழுதிய 'உன்னைப் போல் ஒருவன்'. அந்த படத்தைப் பார்க்க கம்யூனிஸ்ட் தலைவர் பால தண்டாயுதமோ, காமராஜரைக் கூட்டி வந்தார்கள். அதைப் பார்த்த பிறகு காமராஜர் 'இந்த மாதிரி படங்கள் வராததற்கு காரணம் மக்களின் ரசனை கெட்டுப் போனதுதான்' என்று சொன்னதையும் ஜெயகாந்தன் சொன்னார். காமராஜரின் கலை ரசனை என்னை மிகவும் கவர்ந்தது.
நான் ஏவி.எம். ராஜன், புஷ்ப லதா திரை உலகில் கொடி கட்டிப் பறந்த நிலையில் அவர் நாடகங்கள் லிட்டில் ஸ்டேஜில் அரங்கேற்றமாகிப் படமாகிக் கொண்டிருந்த காலத்தில் 1967 - 68 - இல் 'பாச தீபம்' என்ற நாடகத்தை எழுதினேன்.
தினமணி, கல்கி போன்ற புகழ் பெற்ற பத்திரிகைகள் நாடகத்தைப் பாராட்டி எழுதின. அந்த நாடகத்தின் அரங்கேற்றம் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நடந்த அன்று பழ. கருப்பையாவும், விஜயராகவனும் முதல் தடவையாக மதுரையிலிருந்து விமானத்தில் வந்தார்கள்.
அப்போது நடந்த பொதுத் தேர்தலில் 1967-இல் பெருந்தலைவர் காமராஜர் தோல்வி அடைந்தார் என்ற வரக் கூடாத செய்தி எங்களை வாட்டி எடுத்தது.
உலகின் 50 நேர்மையானவர்களின் பட்டியலில், இந்தியாவின் ஒரே நபர், என்று அமெரிக்கர்களால் பாராட்டப்பட்டவரா தோல்வி அடைந்தார். அவரைச் சந்திக்க நாங்கள் அங்கே அவர் வீட்டிற்குச் சென்றோம். வெளியே காவலுக்குக் கூட யாரும் இல்லாத நிலையில் உள்ளே சென்றோம்.
நாங்கள் அந்த அறைக்குள் உட்காருவதற்குள் சட்டைக் கூட போடாமல் வேட்டி மட்டும் உடுத்திய நிலையில் எங்களிடம் வந்தார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று வணங்கினோம். ' அய்யா இது உங்கள் தோல்வி அல்ல.
தமிழ்நாட்டின் எதிர்காலத் தோல்வி' என்று அவரிடம் கருப்பையா சொன்னார். உடனே அவர் ' இதைச் சொல்லவா இங்கே வந்தீங்க. ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம். எங்களை வந்து பாக்குற நேரத்தில் உங்க பொழப்ப பாருங்க' என்று சொல்லி விட்டுச் சர்வ சாதாரணமாக இன்னொரு காந்தியாக போனார்.
இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.